விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களைக் கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாகக் கமம் செய்து வருபவர்கள். பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும்தான் அவர்கள் வாழ்வு. அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைத்தே ஆகவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும் உழைப்பார்கள். பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்குப் போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளைகளில் வெள்ளம் பயிரை மேவிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றது. அடிக்கடி பஞ்சப்பாடு. ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை தவறாமல் அரசனுக்கு திறை செலுத்துவார்கள். மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள். விருத்தேஸ்வரம் நல்லவர்களைக் கொண்ட தேசம்.