Skip to main content

வழிகாட்டிகளைத் தொலைத்தல்ஒரு மழை நாள் இரவில் வேதாளத்தைத் தோளில் போட்டவாறு வீடு திரும்புகையில் அது கேட்ட கேள்வி இது.

இலக்கியம் என்பது சமூகத்தினுடைய வழிகாட்டி, அது மானுடத்தை மேம்படுத்துகிறது. இலக்கியமே அகவயமான ஈடேற்றங்களுக்கு வழிகோலுகிறது. நம்மைச் செழுமைப்படுத்துகிறது. காலவோட்டத்தில் அறம் என்பதன் புறவரைவினை மீள்பார்வை செய்து சீர்திருத்துவதும் அதுவே. இவையெலாம் உண்மை எனின் இத்தகைய அற்புதமானதொரு சமூகக்கருவி ஏன் பொதுப்புத்தியில் அதிகம் தாக்கம் செலுத்தத் தவறுகிறது? இலக்கியங்களின் இருப்புக்கு மத்தியிலும் எப்படி நம் சமூகம் இப்படி வன்முறைப்போக்கோடு முழித்துநிற்கிறது? பொதுப்புத்தியைக்கூட விலத்திவைப்போம். இலக்கியம் அதனைப் படைப்பவரைக்கூடச் செழுமைப்படுத்துவதாகத் தெரியவில்லையே? போட்டியும் பொறாமையும் கோபமும் வன்மமும் பொய்யும் இகழ்வும் இன்னும் பல தீக்குணங்களும் இலக்கியவாதிகள் உட்பட எல்லோர் மத்தியிலும் வியாபித்து நிற்கிறதே? அறத்தின் உபாசகர்கள் பலரிலும் அறம் பொய்த்து நிற்பது பரவலாக இடம்பெறுகிறதே? இது முரண் அல்லவா? இலக்கியத்தின் நோக்கம் மீதான பிம்பம் அதன் உபாசகர்களால் அவர்களுடைய இருத்தலுக்காக அபரிமிதமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா? இக்கேள்விக்குச் சரியான பதிலை நீ கூறாவிட்டால் உன்தலை...

லத்தீன் வார்த்தையான “literatura” என்பது “எழுத்துக்களால் வரையப்படுவது” என்று பொருளையே கொடுக்கிறது. ஆனால் அதன் வரைவிலக்கணம் காலத்தோடும் அளவுகோல்களோடும் எப்போதும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. தமிழில் இலக்கியம் என்பது பொதுவாகப் புனைவினுள்ளும் புனைவுசார் கட்டுரைகளுக்குள்ளும் சுருங்கிவிடுகிறது. இங்கே கம்பராமாயணம் இலக்கியம். திருக்குறள் நீதி நூல். புதுமைப்பித்தன் இலக்கியவாதி. நாவலர் சமயக்குரவர். தாஸ்தாவஸ்கி இலக்கியவாதி. கார்ல்மார்க்ஸ் கோட்பாட்டாளர். ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கில உலகம் academic literature என்று அழைத்தாலும் தமிழிலக்கியம் அவற்றைத் தள்ளியே வைக்கிறது. தமிழிலக்கிய உலகம் எழுத்துகளுக்கு உச்சி பிரித்து, தனது சார்ப்புக்கோணத்தில் ஓரளவுக்கேனும் கலைநேர்த்தியும் அழகியலும் உள்ளவற்றை ஒருபுறம் வைத்து ஏனையவற்றை அப்பால் தள்ளி விடுகிறது. பெரும்பாலும் இலக்கியக்கோட்டுக்கு இப்பாலே புனைவுகளே எஞ்சி நிற்கின்றன. அதிலும் ஒன்றிலிருந்து இன்னொன்று என்ற சங்கிலியை அறுத்து உருவாகும் பரிசோதனைப் புனைவுகளை அவற்றின் சமகாலத்தில் தமிழ் உலகம் இலகுவில் அங்கீகரித்துவிடாது. அபுனைவுகளிலும் ஏதாவது ஒரு அகம்சார் தேடல் தொக்கவேண்டும். போனால் போகிறது என்று புனைவுகளுக்கான விமர்சனங்களுக்கும் புனைவுக்கட்டுரைகளுக்கும் குறுகலான இலக்கிய இடம் கிடைக்கிறது.

மேற்சொன்ன இவ் இலக்கிய வரையறைக்குள் நின்று இந்தக்கேள்விக்குப் பதில்காண முயலலாம்.

இலக்கியத்தின் சாத்திய வெளி மிகப்பரந்தது என்பது சந்தேகத்துக்கிடமில்லாதது. பல நூற்றாண்டுகளாக அதனை உள்வாங்குவோருக்கு அது கொடுக்கும் எழுச்சியும் தேடலும் சொல்லிலடங்காதது. ஆனால் அப்பயனைப் பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. அவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே சில ஆயிரங்களுக்குள் அடங்கிவிடக்கூடியது. இலக்கியத்தினுள்ளே நுழைவது என்பது எல்லோருக்கும் சாத்தியமான ஒரு செயற்பாடு கிடையாது. அலைசினுடைய அதிசய உலகத்துக்குள் நாம் நுழைவதற்கு எலிவளை வாசலாக இருப்பதுபோல இலக்கியத்தின் வாசல் மிகத் தூரத்திலும் மிகக்குறுகலாகவும் உள்ளது. ஒரு இலக்கியத்தின் நுண்ணிய கூறுகள் அதன் ஆகச்சிறந்த வாசகருக்கேகூட போய்ச்சேருவதில்லை. சமயத்தில் எழுதப்பட்டபின்னர் அது விஸ்வரூபமெடுத்து தன்னை எழுதியவருக்கே புரியாப்பொருளாய்ப் போய்விடுவதுமுண்டு. தவிரத் தலைமுறை தலைமுறையாய் அது வாசிக்கப்பட்டு, பகிரப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வருகையில், தலைமயிரில் பொடுகும் ஈரும் சிக்கலும் சேர்வதுபோல இலக்கியத்திலும் பல படைகள் சேர்ந்து அந்த மிகக் குறுகிய வாசலையும் அடைத்துவிடுகிறது. அதனால் அதன் நிஜமான மறைபொருளை அறிவது என்பது சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஒரு மொழியின் செவ்வியல்தன்மை சமயத்தில் அதன் வளர்ச்சிக்கே தடையாகப் போய்விடுவதன் காரணமும் அதுவே. பெருநிறுவனங்களின் இயங்காநிலை வீழ்ச்சி போன்றது அது.

தமிழின் அற்புதமான சங்கப்பாடல்களை மாத்திரமே படிப்பதன்மூலம் ஒருவர் தன்னிலை அறியக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் எவரும் அப்படி சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து படித்ததாகத் தெரியவில்லை. கம்பராமாயணம் அதன் உள்ளீடுகளைத் தாண்டி வெறும் ஆரியத் திராவிடப் பிரிவினைக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கிறது. திருக்குறள் பொதுமறையாகியதில் ஒன்று பள்ளியில் மனனம் செய்கிறார்கள். அல்லது பிற்போக்கு என்று சொல்லி எள்ளி நகையாடுகிறார்கள். அதிகம் வேண்டாம். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலில் வருகின்ற பண்டாரத்தின் கதையை உள்வாங்கினால் மாத்திரமே போதுமானது. கனகாவுக்குப் பிரசவவலி வந்ததும் மருத்துவச்சியைக் கூட்டிவர பண்டாரம் ஓடுகின்ற சமயம் பார்த்து, அந்த நீலகண்டம் என்கின்ற நாய் திடீரென்று தன் பயணத்தை ஆரம்பிக்கிறது. நாய்க்குப்பின்னால் போவதா அல்லது வலியில் துடிக்கும் தன் மனைவிக்கு சம்சாரியாக கடமையைச் செய்வதா என்று தள்ளாடுகின்ற பண்டாரம் இறுதியில் நாய்க்குப்பின்னாலேயே சென்றுவிடும். பண்டாரம் ஏன் அப்படி எல்லாவற்றையும் புறந்தள்ளி நாய்க்குப்பின்னாலே ஓடியது? ஒரு அடிப்படை மனிதநேயம்கூட அதற்கு இல்லையா? என்று அதன்மீது பெருத்த கோபம் வரும். பின்னர் ஆழ யோசிக்கையில் நாமும் ஏதோ ஒரு நீலகண்டத்துக்குப் பின்னாலே தினமும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறோம் என்கின்ற அதிர்ச்சி சடாரென்று மனதில் தோன்றும். இலக்கியம் கொடுக்கக்கூடிய அதியுயர் அகவேழுச்சி நிகழும் புள்ளி இது. இப்படியான ஆயிரக்கணக்கான புள்ளிகளை இலக்கியம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. கேள்வி, வாசகர்கள் அப்புள்ளிகளை எதிர்கொள்வதிலேயே தங்கியிருக்கிறது.

வரலாற்றில் வெகு சிலருக்கே இலக்கியம் கோடிகாட்டும் அப்புள்ளிகளை எதிர்கொள்ளும் சாத்தியம் கிட்டியிருக்கிறது. வெகுசிலரே நெடுந்தூரம் கடந்து எலியிலும் சிறிதாய்த் தம்மை ஒடுக்கி அலைசின் அதிசய உலகத்துக்குள் நுழையும் சந்தர்ப்பத்தை எட்டியவர்கள். அவர்களே இலக்கியத்தின் அடைமொழிகளை எல்லாம் உருவாக்கியவர்கள். இலக்கியம் மானுடத்தை மேம்படுத்தும் என்பதை அவர்களே அறிந்து கூறுபவர்கள். அந்த ஒரு சிலரே வெளியில் வந்து ஊருக்குள் இருக்கும் ஏராளம் பேர்களுக்கும் தம் தரிசனத்தைப்பற்றிக் கூறவேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். ஊராரும் அவ்வதிசய உலகம் நோக்கித் திரும்பவேண்டும். இது நிகழ்ந்தால் மாத்திரமே இலக்கியம் மூலம் ஒரு முழுச் சமூகமும் ஈடேறமுடியும். ஆனால் இது எவ்வகையில் சாத்தியம்?

புத்தகங்கள் அடர்ந்த காடுகள் போன்றவை. சிலர் காட்டை எட்ட நின்று தரிசிப்பர். சிலர் காட்டு எல்லையில் விறகு பொறுக்குவர். சிலர் தேன் எடுப்பர். ஒரு சிலர் மாத்திரமே அடர் காட்டுக்குள் திக்குத்திசை பற்றிய பிரக்ஞை இன்றி அலைவார்கள். கேள்வியையும் பதிலையும் ஒருசேர்த்துத் தேடுவார்கள். தால்ஸ்தாயின் ஒரு சிறுகதையில் எமெல்யான் தேடிப்போவதுபோல. "To go there, don't know where, and to get that, don't know what?"'. இப்படி அலையும் திறனும் அதிட்டமும் எல்லோருக்கும் அமைவதில்லை. சொல்லப்போனால் இப்படி அலைபவர்கள் நாட்டுக்குத் திரும்பி வருவதுமில்லை. அவர்கள் அப்படியே தனியராகக் காட்டுக்குள் சுற்றித்திரிவார்கள். இலக்கியம் ஒருவரை மிகவும் தனிமைப்படுத்தும். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூலை இருக்கையில் அமர வைக்கும். திருவிழாக்கூட்டங்களைப் புறக்கணிக்கவைக்கும். தாஸ்தாவஸ்கி இதற்குச் சிறந்த உதாரணம். அந்த மனிதரின் தனிமை அவரின் நாவல்பூராகப் புலப்படும். அவரால் கூட்டத்தோடு ஒன்ற முடியாது. செயற்படமுடியாது. எல்லாமே அபத்தமெனின் எப்படித்தான் கலப்பது? அதனாலேயே அவர்கள் தனியராகிறார்கள். தீவிர இலக்கியம் ஒருவரை அந்நிலைக்கு இட்டுச்செல்லும்.

இப்படித் தீவிர இலக்கியவாதிகள் (எழுத்தாளர்கள், வாசகர்கள்) தனித்தனிக் கோள்களாக அலைந்து திரிவதால் இலக்கியத்தை அது சாராதவரிடம் கொண்டுசெல்வது கடினமான வேலையாகிறது. அப்படிக் கொண்டுபோகிறவர்களும் விறகையும் தேனையும்தான் காட்டிலிருந்து எடுத்துச் செல்வதால் இலக்கியம் பொதுமக்களிடையே எரிக்கவும் ருசிக்கவுமே மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியவாதியின் குரல் என்பது தனித்து ஒலிப்பது. அதுவும் காட்டின் மத்தியில் ஒலிப்பது. அதிதீவிர இலக்கியம் ஒருவரை அகவிசாரணைக்கு உட்படுத்தி செயலற்றதாக்கிவிடுகிறது. அவருக்கு மக்களைத் திரட்டி ஒன்றிணைப்பதோ, கோட்பாட்டுச் செயற்பாடுகளை முன்னின்று மேற்கொள்வதோ இயலாத காரியமாகிறது. பல செயற்பாட்டாளர்கள் இலக்கியவாதிகளைப் புறக்கணித்ததன் காரணமும் இதுவே.

வரலாற்றுரீதியாகச் சமூக அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் கோட்பாட்டாளர்களும் செயற்பாட்டாளர்களும்தான். காந்தி, கார்ல் மார்க்ஸ், அலெக்சாண்டர், பெரியார் என எல்லோருமே செயற்பாட்டுத்தளத்தில் பங்குபற்றியவர்கள். இவர்களே மாற்றங்களை உருவாக்குபவர்கள். இவர்களூடாகவே மாற்றங்கள் உருவாகின்றன. இலக்கியவாதிகள் எவரும் பெரும் சமூக மாற்றங்களை முன்னின்று நிகழ்த்தியதற்கான சந்தர்ப்பங்கள் அரிது. உச்சபட்சமாக சமூகப்போராட்டங்களில் கருத்துத் தெரிவிப்பார்கள். ஆனால் அபத்தங்களையும் வழுக்களையும் கொண்ட பொதுப்புத்தியை வழிப்படுத்தி, ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச நோக்கங்களைக் கருத்திற்கொண்ட, சமரசங்கள் நிரம்பிய ஒரு போராட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டுசெல்ல இலக்கியவாதிகளின் சிந்தனை வடிவம் ஒத்துழைப்புக் கொடுக்காது.

“The success of any kind of social epidemic is heavily dependent on the involvement of people with a particular and rare set of social gifts” என்பார் மல்கம் கிளாடுவெல். “கருத்தியல்களை உருவாக்குவது”, “மக்களை ஒன்றிணைப்பது”, “கருத்தியல்களை வெற்றிகரமாகக் கடத்துவது”, இந்த மூன்றையும் செய்யத் தகுதியுடையோர் ஒன்றிணையும்போதே ஒரு சமூகச் செயற்பாடு வெற்றியடைகிறது. இலக்கியவாதி கருத்தியல்களை உருவாக்கினாலும் பெரும்பாலும் அவர் தனித்து ஒலிப்பதால் பொதுமக்களிடையே அவை நேரடியாகப் போய்ச்சேராமல் தேங்கிவிடுகின்றன. நிகிலிசம், இருத்தலியம், பின்நவீனத்துவம் என்பவை வெறுமனே இலக்கிய மட்டத்துக்குள் சுருங்கியமைக்கும் இவையே காரணம். அதே சமயம் மார்க்சியம், முதலாளித்துவம் போன்ற கருத்தியல்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டமைக்கு உருவாக்கல், ஒருங்கிணைத்தல், ஏற்றுக்கொள்ளவைத்தல் என்ற மூன்று அம்சங்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைந்தமையே முக்கிய காரணம். மார்க்சும் ஏன்ஜெல்சும் உருவாக்கிய சித்தாந்தங்களை முயற்சிசெய்வதற்கேனும் லெனின் போன்றவர்கள் முனைந்தார்கள். அவர்களைப் பின்னர் பலர் பின்பற்றினார்கள். அயன்ராண்ட் மீது இலக்கியவாதிகள் எவ்வகை விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரின் சிக்கலான தனியார்மயப்படுத்த முதலாளித்துவ சிந்தனைகள் மேற்குலகம் பூராகப் பரந்துவிரிந்தமைக்குக் காரணம் அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மக்களை வசப்படுத்தக்கூடிய இடத்தில் இருந்தமையே. அலெக்சாண்டருக்கும் அரிஸ்டோட்டலுக்குமிடையிலிருந்த உறவைக்கூட இங்கே குறிப்பிடலாம். அடம்ஸ் ஸ்மித் தன்னுடைய பொருளியல் சிந்தனைகளை ஐரோப்பா முழுதும் விரிவுரைகள் மூலமும் தலைமைத்துவ தொடர்புகள் மூலமும் கொண்டுசேர்த்தார். டோல்ஸ்டாய், ஹென்றி டேவிட் தரோ போன்றோரின் ஒத்துழையாமை பற்றிய கோட்பாட்டுச் சிந்தனை காந்தியின் அகிம்சைச் சிந்தனைகளுக்கு தூண்டுகோலாக இருந்தது.

இங்கே, கார்ல்மார்க்ஸ், அடம்ஸ் ஸ்மித், அரிஸ்டோட்டல், டோல்ஸ்டாய், தரோ, அயன்ராண்ட் போன்ற கோட்பாட்டாளர்களின் எண்ணங்களை பரிசோதித்துப்பார்க்க மக்கள் செயற்பாட்டாளர்கள் கிடைத்தார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளுக்கு அப்படி செயற்பாட்டாளர்கள் அமைவது அரிதாகவே நிகழ்கிறது. தாதாவஸ்கிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பாரதிக்கும் வாசகர்கள் கிடைத்தார்கள். ஆனால் தன் தீவிர வாசகர்களை இலக்கியம் மேலும் தேடலுக்குள் தள்ளித் தனித் தீவுகளாக்கிவிடுவதால் அவர்களின் மக்கள் செயற்பாடு மட்டுப்படுத்தப்படுகிறது. இலக்கியம் என்பது தனித்த செயற்பாடு என்ற வகையில் கூட்டம் கூடுவதும் குழுவாகச் செயற்படுவதும் அவ்வகை மனிதர்களால் இயலாத காரியமாகிறது. அதனால் மார்க்சியத்துக்குக் கிடைத்த அதிட்டம் இருத்திலியத்துக்கு எட்டவில்லை. எட்டியவை எல்லாம் சிறு குழுக்களும் சிறு பத்திரிகைகளும் அவர்களாக தமக்கென உருவாக்கிக்கொண்ட சிறு நீர்க்குமிழிகளும்தாம்.

அபூர்வமாக சில பொதுமக்கள் தொடர்பாளர்களும் தலைவர்களும் இலக்கிய வாசகர்களாக அமைந்துவிடுவதுண்டு. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு சீரிய இலக்கிய வாசகர். நவீன இலக்கியவாதிகளான ஜூகும்பா லாகிரி, கொல்சன் வைட்ஹெட் போன்றோரின் எழுத்துகள் ஒபாமாவின் சிந்தனைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது உண்மையே. அவருடைய பிரியாவிடை உரையின்போதுகூட ஹார்ப்பர் லீயின் அத்திக்கஸ்பிஞ் கதாபாத்திரத்தை மேற்கோள்காட்டியிருப்பார். ஆனால் மிகச்சக்தி வாய்ந்த ஒரு பதவியில் அமர்ந்திருந்த தேர்ந்த வாசகரான ஒபாமாவால்கூட சமூக விஞ்ஞானப்போக்கில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியவில்லை என்பது பெரும் சோகம், அவருக்குப்பின்னே சமூகநீதிக்கு எதிரான ஒருவரை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நிலைமை போனது மிகப்பெருஞ்சோகம்.

ஆக இலக்கியத்தின் தாக்கம் மிக மெதுவாகவே சமூகத்தின்மீது நிகழ்கிறது. புரட்சி போன்ற மேலோட்டமான, உடனடித்தீர்வுகள் இலக்கியத்தினூடு இடம்பெறுவதில்லை. மிகமெதுவான கூர்ப்புச் செயற்பாட்டில் இதுவும் ஒரு அங்கமே. சிந்தனைக்கான விதைகளை அது எப்போதுமே பரப்பிக்கொண்டிருக்கும். சிலரை அவை எப்போதாவது சென்றடையலாம். மிக மெதுவாகவே நூற்றாண்டுகளூடு இப்பரம்பல் இடம்பெறும். இலக்கியங்கள், மதங்கள், சமூக அமைப்பு, தற்செயல்கள், இயற்கை அழிவுகள் என எல்லாமே ஏதோ ஒருவிதத்தில் கூர்ப்புச்செயற்பாட்டுக்குத் துணைபோகின்றவைதான். ஒரு கட்டத்தில் அவற்றின் தேவை அற்றுப்போகையில் அவை இல்லாமலும் போய்விடலாம். மற்றும்படி இலக்கியத்துக்கு என சிறப்பான கொம்பு ஒன்றும் கிடையாது. அதுவும் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு அங்கம். சிறு துரும்பு. அதனிலுஞ் சிறிது. அற்பப் புழு.

இன்னுமொன்று இலக்கியத்தால் உருவாகும் ஞானம் சுடலை ஞானமாகவும் போய்விடுவதுண்டு. ஒரு மரண ஊர்வலத்தோடு சுடலைக்குப் போகும் ஒருவருக்கு பலவித எண்ணங்கள் எழும். அன்றிலிருந்து நல்லராய் வாழ்தல், உடல் நலத்தைக் கவனித்தல், வாழ்வைக் கொண்டாடுதல் என்று பல தீர்மானங்களை அவர் எடுப்பார். ஆனால் அவற்றின் ஆயுள் அவர் சுடலை தாண்டி வீடு திரும்பும் வரையிலும்தான். பின்னர் எல்லாமே வழமைக்குத் திரும்பிவிடும். இலக்கிய வாசிப்பும் அப்படியே. ஒவ்வொரு இலக்கியமும் ஏதோ ஒரு விதத்தில் நம் வாலை நிமிர்த்தவே செய்கிறது. ஆனால் வாசித்து முடித்து சில நாட்களில் வால் மீண்டும் சுருண்டுவிடுகிறது.

இலக்கியத்தை அதன் அறப்பயன் கருதி எவரும் பின்பற்றமுடியாது. அது சாத்தியமும் இல்லை. இலக்கியத்தை அது கொடுக்கும் ஈர்ப்பின், தவிப்பின் நிமித்தம் படிக்கிறோம் என்பதே உண்மையாக இருக்கும். அதை ஒரு தேடலாக, வடிகாலாகப் பயன்படுத்துபவர்களே அதனூடு சிக்கிக்கிடப்பர். இலக்கியம் என்பது ஒரு கலை எனின், அதனைத் திறன் சார்ந்து பின்பற்றுவோரும் உண்டு. எழுத்து என்கின்ற கலைத்திறனை பலர் கூர் பார்பார்கள். அத்திறன் உள்ளோரால் மிகச்சிறந்த இலக்கியங்களைப் படைக்கவும் இயலுகிறது. அதற்காக அவர்களை அவ்விலக்கியங்கள் அறநெறிப்படுத்தும் என்று கருதுவது முட்டாள்தனம். ஒரு சிறந்த இசைக்கலைஞர் ஒருவரால் ஆண்டாள் பாசுரத்தை நெட்டுருகிப் பாடிவிடமுடியும். ஆனால் அதற்காக அவர் ஆண்டாள்போல இறைவனைக் காதலிக்கவேண்டும் என்றில்லை. அவர் ஒரு நாத்திகராகக்கூட இருக்கலாம். எழுத்தாளர்களும் அப்படியே. எழுத்து என்பது அவர்களுக்கு வசப்பட்ட ஒரு கலை. அவ்வளவும்தான். வாசகர்கள் இலக்கியங்களை மாத்திரமே எதிர்கொள்ளவேண்டும். அதை இயற்றியவர்களை தலை உயர்த்திப்பார்ப்பதை அறவே தவிர்த்துவிடவேண்டும். எழுத்தாளர்களைப் பின்தொடர்வதுகூடத் தேவையற்றது. இலக்கியங்களை மாத்திரமே பின்தொடருக. கோடு அத்தோடு நின்றுவிடுகிறது. எழுத்தாளருக்கு இலக்கியத்தை எழுதினார் என்பதைவிட வேறு சிறப்புகள் ஏதுமில்லை. புதுமைப்பித்தன் என்ற தனிமனிதர் எப்படியானவர் என்பது எமக்கு அவசியமில்லை. பிரம்மநாயகம்பிள்ளையும் செல்லம்மாளும்தான் எமக்கு உறவு. இன்றைய சமூகத்தளங்களின் சூழ்நிலையில் எழுத்தாளர்மீது விழும் நேரடி வெளிச்சமும் அவருடனான நேரடித்தொடர்பும் இலக்கியத்தை அணுகுவதற்கு வாசகருக்குப் பெருந்தடையாக இருக்கிறது. எழுத்தாளர்களும் பீடங்களைக் கட்டமைப்பித்து தம் நிரந்த இருத்தலுக்கான செயற்பாடுகளைச் செய்வதால் நவீன பிரம்மநாயகம் பிள்ளையையும் செல்லம்மாளையும் நெருங்கும்போது கூடவே அங்கிருக்கும் நவீன புதுமைப்பித்தன்கள் விளக்கொளி பாய்ச்சி கண்களைக் குருடாக்கிவிடுகிறார்கள். 

தவிரப் போலிகளும் உண்டு. இலக்கியம் சார்ந்தவர்கள் அறிவாளிகள் என்ற பிம்பத்துக்காக, அது கொடுக்கும் அங்கீகாரத்துக்காக, அது ஏற்படுத்தும் குழு மனநிலைக்காக இயங்குபவர்கள் பலர் இங்குண்டு. துரதிட்டவசமாக இலக்கியக் கலைஞர்களும் போலிகளுமே பொதுத்தளத்தில் உரத்து ஒலிப்பவர்கள். காட்டிலே விறகும் தேனும் கிடைக்கும் என்று கூவித்திரிபவர்கள். இலக்கியம்மீது போலியான புரட்சிகரமான அளவுக்கதிகமான விம்பத்தைத் ஏற்படுத்துபவர்கள். இலக்கியத்தைச் செயற்பாட்டுத் தளத்துக்கு கொண்டுவருவதிலும் அவர்களே முன்னிற்கிறார்கள். அவர்களே காட்டுக்குள் மக்களைச் செல்லவிடாமல் மறித்து பற்றைகளுக்கு வழி காட்டுபவர்கள். அவர்களைப் புறந்தள்ளி காட்டுக்கு உள்ளே செல்வது என்பது வாசகருக்குப் பெரும்பாடு.

அடர்காட்டுக்குள் திக்குத்திசை இன்றி அலையவேண்டுமானால் வழிகாட்டிகளைத் தொலைத்துவிடவேண்டும்.

&&&&&&&&&&&&&&

இக்கட்டுரை உவங்கள் இணைய சஞ்சிகையின் மாசி, 2017  இதழில் வெளியாகியது.

படம் : கதரின் ஷூமேக்கர் (http://macl.sites.olt.ubc.ca/files/2012/05/MACLHomepageImage.jpg)

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக