Skip to main content

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது






அது என்னவோ தெரியாது, கடந்த ஒரு சிலமாதங்களாகவே அசோகமித்திரன் புராணம்தான். ஒலிப்புத்தகத்தில் அவருடைய சிறுகதைகளைக் கேட்டு, அது பற்றிப் பேசுவதற்குத் துணை வேண்டுமென்று சொல்லிக் கேதாவையும் கேட்கவைத்துப் பின்னர் நித்தமும் காலையில் வேலைக்குப்போகையில் ஒரு மணிநேரம் தொலைபேசியில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்.

புத்தகங்களை நான் என்றைக்குமே தேர்ந்தெடுத்ததில்லை. மாற்றாக அவையே என்னைத் தேர்ந்தெடுக்கின்றன. வாசிக்குமளவுக்கு என்னைத் தயார்பண்ணிவிட்டே தம்மை அவை என் கையில் ஒப்படைக்கும். எல்லாப்புத்தகங்களுமே தமக்கான வாசகர்களுக்காக இப்படி அலைந்து திரிகின்றன என்றே நினைக்கிறேன். தயாரில்லாதவர் மடியில் அவை போய் விழுவதில்லை. வலுக்கட்டாயமாக அவற்றைப் பலாத்காரம் செய்யவும்முடியாது. அசோகமித்திரனை தொண்ணூறுகளிலும் வாசித்திருக்கிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தண்ணீர் வாசித்திருப்பேன். ஆனால் அவையெல்லாம் நான் தேடிப்போய் எடுத்து வாசித்தது. கடந்த சில வருடங்களாகவே அசோகமித்திரன் எழுத்துகள் என்னைத் தேடிவருகின்றன. நான் விலகிப்போனாலும் நெருங்கிவருகின்றன. வாசிக்கவே நேரம் இல்லை என்று சொன்னாலும் ஒலிப்புத்தகத்தில் திருப்பூர் கிருஷ்ணன் அற்புதமாகக் கதை சொல்லிக்கேட்க வைக்கிறார். அசோகமித்திரன் எழுத்துகள் அவதார் படத்தின் இராட்சத டிராகன் பறவை போன்றது. தன் துணையோடு கொழுவும்வரைக்கும் அது முரண்டு பிடிக்கும். கொழுவிவிட்டால், அப்புறம் அது டிராகன் இல்லை. அன்றில்.

சாலையோரம் சாதாரணமாகக் கிடக்கும் ஒரு சிறு துகளை எடுத்து அதை அற்புதத்தருணமாக்கி, எவருமே எதிர்பாராத விதத்தில் சிறுகதையை முடிப்பதில் அசோகமித்திரன் ஒரு விண்ணர். சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கைப்பொழுதுகளை இலக்கியமாக்கியவர் அவர். புலி காளிங்கேயன், எலி, அப்பாவின் சிநேகிதர், சில்வியா என்று அவருடைய சிறுகதைகளின் மனிதர்கள் பலவிதமானவர்கள். நாம் அறியாத செகந்திரபாத்தையும் சென்னையையும் காட்சியில் வடித்தவர்.

“பிரயாணம்” என்ற சிறுகதை. வாசிக்கையில் நாமே குருவாகி, நாமே சீடனுமாகி, நாமே ஓநாய்களுமாகி நாமே அணையும் தீப்பந்தங்களாகி கதை முடிவின் அற்புதத்தருணத்தை நம்பமாட்டாமல் திரும்பத்திரும்ப வாசித்து என்று ஒரே கதையிலேயே தலைவர் அவ்வளவு அனுபவங்களைக் கொடுத்திருப்பார். இப்படி இருநூறு சிறுகதைகள். இந்தாளுக்கெல்லாம் சாவே கிடையாது. ஒரு கதையில் ஒரு வரியை வாசித்தாலே போதும், மரணச்செய்தி வெறும் வதந்தி என்பது புரிந்துவிடும்.

உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஏதோ ஒரு புள்ளியில் அபத்தங்களைக்கண்டு விசனமுற்று நையாண்டி செய்தேயிருப்பார்கள். நிக்கோலே கோகல், தோஸ்தாவஸ்கி, டக்ளஸ் அடம்ஸ், ஜோர்ஜ் ஒர்வல், தெரி பிரச்சட் என்று எல்லோரிடமுமே நக்கல் தலைவிரித்தாடும். தமிழில் அதனை ஆரம்பித்துவைத்தவர் புதுமைப்பித்தவன். அடித்து விளையாடியவர் அசோகமித்திரன். இப்போதுகூட "தமிழின் அற்புதமான முதன்மைக் கதை சொல்லிகள் அவர்கள் இருவரும்தான்" என்று சொன்னால், “நல்லவேளை, நான் செத்துத் தொலைஞ்சிட்டேன்.” என்பார்.

“அசோகமித்திரன் சிறுகதைகள்” என்று ஒரு கூட்டம் போட்டு, ஐந்துபேர் சுற்றியிருந்து அவருடைய சிறுகதைகளைப்பற்றி மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பது ஒரு நீண்டநாளைய ஆர்வம். இந்தத்தருணத்தைவிட அதனைச் சிறப்பாகச் செய்வதற்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது. மரணச்செய்தி அவரை மீள்வாசிப்புச் செய்யும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. எதுக்கு ஆறப்போடுவான்?

நாளை மறுதினம் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு இங்கே மெல்பேர்ன் எப்பிங்கிலிருக்கும் எங்களுடைய வீட்டு குட்டி நூலகத்துக்கு முன்னே உட்கார்ந்து அசோகமித்திரனோடு அளவளாவலாம்.

எழுத்தாளர் முருகபூபதி அசோகமித்திரனோடு அவருக்கிருந்த நட்புப்பற்றியும் அவருடைய வாழ்வுபற்றியும் பகிர்ந்துகொள்கிறார். கேதாவும் நானும் அசோகமித்தரன் கதைகள் எமக்குக் கொடுத்த அனுபவங்கள்பற்றிப் பகிரப்போகிறோம். கூடவே அவருடைய சிறுகதை ஒன்றை வாசிப்பதாகவும் எண்ணம். இன்னும்பலவும் செய்யலாம்.

அசோகமித்திரனோடு ஒரு ஞாயிறு மாலைப்பொழுதை செலவு செய்ய ஆர்வமிருப்பின் அறியத்தாருங்கள்.

மகாகலைஞனுக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .