அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

Mar 26, 2017 0 comments

நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

போவதே தெரியாமல் இரண்டரை மணிநேரம் நீடித்த இப்பயணத்தை முருகபூபதி தன்னோடு அசோகமித்திரனுக்கு இருந்த உறவையும், அவர் கைலாசபதி காலத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களையும் பகிர்ந்து ஆரம்பித்துவைத்தார். அதன்பிறகு அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை வாசிக்கப்பட்டது. அது முடிய அனைவரும் அசோகமித்திரனின் படைப்புகள் பற்றிப் பேசலானோம். பிராயணத்தில் ஆரம்பித்து, அப்பாவின் சிநேகிதர், புலிக்கலைஞன், ரிக்சா(!), எலி, முறைப்பெண், அம்மாவுக்கு ஒருநாள், ஐநூறு கோப்பை தட்டுகள், தண்ணீர் என்று அவரின் படைப்புகள் பலவற்றைப்பற்றிப் பேசினோம்.

எல்லோரும் திரும்பிப்போனபின்னர் வரவேற்பறையில் கிடந்த “தண்ணீர்” நாவலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அட்டைப்படத்து வறண்ட பாலை நிலத்தில் ஈரம் கசிந்ததுபோலத் தோன்றியது. இதைவிட வேறென்ன வேண்டும்?
Comments

Contact Form