Skip to main content

ஊக்கி“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் வெறும் பதினான்கு வீதத்தினரே பல்கலைக்கழக அனுமதியைப்பெறுகிறார்கள். அப்படி அனுமதி பெறுபவர்களிலும் வெறும் ஏழு வீதமானவர்களே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான பட்டப்படிப்பு நெறிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுள் வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமானது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். குடித்தொகைப் பரம்பலின் விகிதத்துக்கமைய இத்துறையின் வீச்சு இலங்கை முழுதும் இன்னமும் பரவவில்லை. இந்தக்குறைபாடுகளை நிவர்த்திசெய்து நீண்டகாலத் தீர்வுக்கு வழிவகுக்காமல், இத்துறைக்கு ஆட்கள் போதாது என்று இந்தியாவிலிருந்து தகவல் தொழில்நுட்ப மனிதவளத்தை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

“ஊக்கி” பயிற்சிநெறியானது தகவல் தொழில்நுட்பத்துறையின் தொழில்சார் மனிதவளத்தை வடமாகாணத்தில் அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
  
தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பலவிதமானவை. நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்பச் செயற்பாடுகளை அந்நிறுவனத்தின் வணிக நோக்கங்களோடு ஒன்றுபடுத்திக் கட்டமைக்கும் செயற்பாடு (Enterprise Architecture), நிறுவனத்தின் மென்பொருள் கட்டமைப்புகள் (Solution Architecture), மென்பொருள்/வணிக பகுப்பாய்வு (Software/Business Analysis), திட்ட முகாமைத்துவம் (Project Management/Agile Master), மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் (Software developers), மென்பொருள் பரிசொதனையாளர்கள் (Software testers), மென்பொருள் மராமத்துப் பணியாளர்கள் (DevOps) என்று மென்பொருள் வடிவமைப்பைச்சுற்றியே நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் உண்டு. இவற்றில் பலவற்றைப் பல்கலைக்கழகம் சென்று நான்கு வருடங்கள், நாற்பது செமிஸ்டர் அசைன்மெண்டுகள், இலத்திரனியல் சமன்பாடுகள், உயர்கணிதம் என எல்லாம் படித்துப் பட்டம் பெற்றால்தான் செய்யலாம் என்றில்லை. பல வேலைகளை அடிப்படை உயர்தரக்கல்வி, அவ்வவ் துறைகளில் நேர்த்தியான பயிற்சியினூடு அடைகின்ற சிறப்புத்தேர்ச்சிமூலமே செய்துவிடமுடியும். உதாரணத்துக்கு மென்பொருள் அபிவிருத்தியை எடுத்துக்கொண்டால், அதற்குள்ளேயே பல தொழிற்றுறைகள் உண்டு. வடிவமைப்பு, அடிப்படைக்கட்டமைப்பு, திட்டமிடல், நிரல்களை எழுதுதல், வழுக்களை நிவர்த்திசெய்தல் என்று அவை நீண்டுகொண்டே செல்லும். இதில் நிரல்களை எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட கணினிமொழியில் பரிச்சயமும் அனுபவமும் இருந்தாலே போதுமானது. மீதியைத் தொடர்ச்சியான மேற்பார்வைமூலமும் மீளாய்வுமூலமும் செப்பன் செய்துகொள்ளலாம். கணினிமொழியில் ஆரம்பகட்டப் பரிச்சயம் கிடைக்க ஒரு மூன்று மாத அடிப்படைப்பாடநெறி, அனுபவத்துக்கு இன்னொரு மூன்றுமாத முழுநேர பயிற்சியே வேலையை ஆரம்பிக்கப்போதுமானது. அதன்பிறகு சித்திரமும் கைப்பழக்கம். மென்பொருளும் கீபோர்ட் பழக்கம். எழுத எழுத, தினம் தினம் சிறு சிறு வழுக்களைத் தீர்த்துப்பழக அதுவாகப் படிந்துவிடும். அப்புறம் சிறிய அளவில் ஒரு சிரேஷ்ட மென்பொருளாளருடன் பிரச்சனைகளைத் தீர்க்கப்பழகலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முழுநேர சுதந்திர மென்பொருள் அபிவிருத்தியாளராகி அத்துறையிலே காலப்போக்கில் மிளிர ஆரம்பித்துவிடலாம்.

இது எம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அடிப்படை உயர்தரத்தோடு, ஆர்வமும் கொஞ்சம் தேடலும் சிறந்த வழிநடத்தலும் இருந்தாலே எவருமே மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் ஆகிவிடலாம் என்கின்ற சூட்சுமம் பெருநகரங்களின் இளைஞர்களைச் சென்றடைவதைப்போல ஏனைய பிரதேச இளைஞர்களைச் சென்றடைவதில்லை. உயர்தரத்தில் தோற்றியவர்கள், சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடியாதவர்கள், அடுத்தது என்ன என்று பெரும் கேள்விக்குறியோடு திரிபவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான நிதிநிலைமை இல்லாதவர்கள் எனப்பலருக்கும் இப்படியொரு துறை அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்று பெரிதாகத் தெரியவருவதில்லை.
ஒருபுறம் நிறுவனங்கள் தகுந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்காமல் வேறு நாடுகளைத் தேடிச்செல்கின்றன. இன்னொருபுறம் திறமையும் ஆர்வமும் இருந்தும் வழிகாட்டல்கள் இல்லாமல் வேலைவாய்ப்பு நிறைந்த இத்துறைக்கு வரமுடியாமல் இளைஞர்கூட்டத்தில் ஒரு பகுதியினர் தனித்துவிடப்படுகினர். இந்த இடைவெளியை எப்படி நிவர்த்திசெய்வது?

Credits: Andela

இந்தப்பிரச்சனைக்கு ஆப்பிரிக்கர்கள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு தீர்வு என்பது நமக்கெல்லாம் ஒரு பாலபாடமாகிவிடக்கூடியது. அங்கேயும் இதே பிரச்சனைதான். திறமையிருந்தும் பல்வேறு சமூகக்காரணங்களால் வாய்ப்பும் வசதியுமில்லாத இளைஞர்கள். அதே சமயம் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்துவரும் தொடர்ச்சியான பணிவெற்றிடங்கள். இந்த இடைவெளியை நிரப்ப சிலர் ஒன்று சேர்ந்து அண்டேலா (www.andela.com) என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள். ஆப்பிரிக்க இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்துறைக்குத் தேவையான குறைந்தபட்ச பயிற்சியையும் அனுபவத்தையும் கொடுப்பதுதான் அவ்வமைப்பின் நோக்கம். பரவலாக எல்லாப்பாடங்களையும் கற்பிக்காமல், ஒரு குறிப்பிட்ட துறைக்கு எது தேவையோ அதற்கான அடிப்படைக் கல்வியை மாத்திரம் கொடுப்பது. கூடவே தொடர்பாடலுக்கு அவசியமான அடிப்படை ஆங்கிலம், நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதன்மூலம் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிந்து, அதற்கேற்ப பயிலுனர்களை தயார்பண்ணி, சிறப்பாகச் செய்தால் வேலைவாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதுதான் அண்டேலா அமைப்பின் வேலை. இந்தத்திட்டம் வசதியில்லாத, திறமையிருந்தும் வாய்ப்புக்கிடைக்காத ஒரு இளைஞர்கூட்டத்துக்குத் தகவல் தொழில்நுட்பத்துறைக்குள் நுழையும் சிறந்த சந்தர்ப்பத்தை ஆபிரிக்காவில் ஏற்படுத்திக்கொடுத்தது. கொடுத்துக்கொண்டிருக்கிறது. பேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்களும் இந்த முயற்சிக்குக் கைகொடுக்கின்றன.

“Yarl IT Hub” நிறுவனத்தினரின் “ஊக்கி” செயற்திட்டமும் அத்தகைய நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டதே. உயர்தரப்பரீட்சையில் தோற்றியவர்கள், சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள், தனியார் உயர்கல்வியைத் தொடரும் வசதி இல்லாதவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், குறிப்பாக மென்பொருள் அபிவிருத்தியில் ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் அத்துறைக்குள் நுழைவதற்கான வாசலைத் திறந்துவிடுவதே “ஊக்கி” செயற்திட்டத்தின் நோக்கமாகும். இச்செயற்திட்டத்துக்கு “Yarl IT Hub” நிறுவனத்தோடு “SERVE Foundation” அமைப்பினரும் இணைந்து ஆதரவளிக்கிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் ஆரம்பச் செயல்நெறியாக, மாணவர்களுக்கு மென்பொருள்துறையில் சமகாலத்தில் பெரிதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் “Java”, “Node JS”, “Maria DB”, “GIT”, “ReactJS” போன்ற தொழில்நுட்பங்களையும் அவற்றின் துறைசார் பாவனைகளையும் செயன்முறைகளையும் ஆறுமாதங்களுக்குக் கற்பித்துத் தரப்போகிறார்கள். இத்தொழில்நுட்பங்களை நாளாந்தம் பயன்படுத்தும் சிறப்புத்தேர்ச்சியுள்ள மென்பொருள் அபிவிருத்தியாளர்களே இப்பயிற்சியைத் தரப்போகிறார்கள். பயிற்சிநெறி ஒரு பாடவகுப்பு போன்று அல்லாமல் மென்பொருள் நிறுவன செயற்பாட்டு வடிவிலேயே அமைந்திருக்கும். இந்த தொழில்நுட்பப் பயிற்சியோடு ஆங்கில மொழித் தொடர்பாடல், அடிப்படை தொழில்முனைவு சம்பந்தமான அறிவு, துறைசார் சுய முன்னேற்றங்கள் போன்ற மென்திறன்கள் பற்றியும் இப்பயிற்சிநெறியில் போதிக்கப்படும். இதனைச் சிறப்பாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிலுனர் வாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வுகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியும். 

இந்த “ஊக்கி” திட்டத்துக்கான அனுமதி முற்றுமுழுதாகப் புலமைப்பரிசிலினூடாகவே மூலமே செயற்படுத்தப்படுகிறது. உயர்தரத்துக்குத் தோற்றிய ஆனால் பல்கலைக்கழக அனுமதியையோ அல்லது ஏனைய உயர்கல்வி வாய்ப்புகளையோ அடையமுடியாதவர்கள் எவரும் இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் அத்தனை மாணவர்களுக்கும் பயிற்சிநெறி முழுவதும் இலவசமாக வழங்கப்படும். இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கான உசாத்துணைகள் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேண்டுகோள். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான நல்ல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் பற்றிய செய்தி, அது யார் யாருக்குச் சென்றடையவேண்டுமோ அவர்களைச் சென்றடைவதில்லை. இக்கட்டுரையும் இதனால் பயனுறக்கூடிய மாணவர்களை சென்றடையாமல் தவறிவிடும் சந்தர்ப்பம் இருக்கிறது. திட்டங்கள் யாருக்காக உருவாக்கப்படுகின்றனவோ அவர்களுக்கு இந்தத்தகவல்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் கடப்பாடு நம்முடையது. அதனால் உங்களுக்குத் தெரிந்த, தகுதிவாய்ந்த ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட, சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துங்கள். அல்லது அப்படியான மாணவர்களை அறிந்திருக்கக்கூடியவர்கள் என்று நீங்கள் நம்புபவர்களிடம் இச்செய்தியைக் கொண்டுசெல்லுங்கள். பெற்றோர்கள் ஆசிரியர்களிடமும் இதனைத் தெரியப்படுத்துங்கள். உங்களுடைய ஒரு தொலைபேசி அழைப்போ, சிறு மின்னஞ்சலோ, ஒரு வட்ஸ்அப், வைபர் செய்தியோ யாரோ ஒரு இளைஞரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும். யார் அறிவார்?

பெரு விருடசமோ, சிறு நுணலோ அது நம் கையில் இல்லை. ஆயினும் விதைப்பதாவது நாமாகட்டுமே.

நன்றி.

&&&&&&&&&&&&&&

விண்ணப்பிக்க : http://uki.life/apply

செயற்திட்ட விவரம்  : 

மின்னஞ்சல் : info@uki.life

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட