வேலை முடித்து நடைப்பயிற்சிக்கு நாங்கள் தயாரானபோது ஏழுமணி ஆகியிருந்தது. கொஞ்சம் காற்றும் சேர்ந்த மரணக்குளிர். ஊரடங்கு எட்டு மணிக்கு என்றாலும் வீதிகள் எல்லாமே அப்போதே வெறிச்சோடிக்கிடந்தன. சனத்துக்கும் வெளியே போவதற்கான தேவைகள் ஏதுமில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. வேலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. பலசரக்குக் கடைகள் தவிர்ந்த ஏனையவை மூடப்பட்டுவிட்டன. மாவும் சீனியும் வாங்கக்கூட ஐந்து கிலோமீற்றரைத் தாண்டக்கூடாது என்று சட்டம். உடற்பயிற்சிக்கும் ஒருமணி நேரம்தான் அனுமதி. உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த இடம் என்று கொண்டாடப்பட்ட மெல்பேர்னில் இப்போது தெருவில்கூட நடமாடமுடியாதபடி கிருமி எம்மை ஒடுக்கி வைத்திருக்கிறது.