Skip to main content

“நிலவும் மலரும் பாடுது”


raja2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM  இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா? இல்லை பாடகர் என்று கூறுவீர்களா? இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB,  ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர்.

am-rajahஆம், இந்த வாரம்  “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொகுப்புகளையும் சில சுவாரசிய தகவல்களையும் பார்ப்போம்.

படம் குலேபகாவலி, இசை MSV என்றாலும், இந்த மெட்டு K V மகாதேவனுடையது என்று MSV ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார். ராஜாவும் அவருடைய மனைவி ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல். ஐம்பதுகளின் திரையிசை ஜாம்பவான்களான MSV, KV மகாதேவன், A M ராஜா மூவரும் இணைந்த பாடல் என்றால் சும்மாவா. 


மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

பாடலின் ஆரம்ப வீணை இசை, “கலையே என் வாழ்க்கையின்” என்று ராஜா பாடிய இன்னொரு பாடலின் மெட்டை அடியொற்றி இருக்கும்.
“பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே”
என்று ஜிக்கி பாடும்போது அதில் இருந்த காதல் நிஜம் என்று தோன்றியது. அப்புறம் வரும்
“புன்னை மரங்கள் அன்பினாலே போடும் போர்வை தன்னாலே”
என்னும் போது பூக்கள் சொரியும் பாருங்கள். கண்ணதாசன் வரிகள். கொன்றுவிடும் போங்கள்.

அடுத்த பாடல். தலைவரே இசையமைத்து பாடிய பாடல். இம்முறை சுசீலாவுடன் இணைகிறார். படம் தேனிலவு. இயக்குநர் ஸ்ரீதரின் படம். முதல் படம், நண்பர் ராஜாவை இசையமைப்பாளாராய் போட்டு எடுத்த படம். காஷ்மீரில் படமாக்கப்பட்டது. பாடல்கள் எல்லாம் இம்மை மறுமை இல்லாத சூப்பர் ஹிட்ஸ். பாட்டு பாடவா, துள்ளாத மனமும் துள்ளும், காலையும் நீயே, ஓஹோ எந்தன் பேபி, நிலவும் மலரும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எதை எடுக்க எதை விட?

நிலவும் மலரும்

ஒரு மழை இரவு. மின் விளக்கெல்லாம் அணைத்துவிடுங்கள். ஒரு மெழுகுவர்த்தி மட்டும் போதும். ஒரு சின்ன டேப் ரெக்கார்டரில் இந்த பாட்டை கண்ணை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள். இப்படியும் தாலாட்ட முடியுமா? A M ராஜா பியானோ வாத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர். அது இந்த பாடலில் நன்றாகவே தெரியும். பியானோ தான் பாடலின் அடி நாதமே.
“சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா?
மனம் துடித்து துடித்து உறவு வந்தால் தோல்வி காணுமா?”.
இப்படியொரு மயக்கும் இசை, குரல்கள் மத்தியிலும் தனித்து தெரிய கண்ணதாசனால் மட்டும் தான் முடியும். பலே. கிராதகன்.

தென்றல் உறங்கிய போதும்
அடுத்த பாடல் கொஞ்சமே lullaby பாணியிலானது. MSV இசை. “பெற்ற மகனை விற்ற அன்னை” படம். மீண்டும் சுசீலா கண்ணதாசன் கூட்டணி. இந்த பாடல் 90களிலே யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்றது, பல உள்ளூர் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டது. எனக்கு உறவினர் முறையும், யாழ்ப்பாணத்தில் பிரபல chemistry ஆசிரியருமான சிவத்திரன் தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியவர். இன்னும் மறக்கவில்லை!




வாடிக்கை மறந்தது ஏனோ?
அடுத்த பாடல், கல்யாணபரிசு. ராஜாவே இசையமைத்தது. பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்ஸ். “உன்னை கண்டு நான் வாட” என்ற பாடலை யார் மறக்க முடியும்? இங்கே நான் தரும் பாடல் “வாடிக்கை மறந்தது ஏனோ” தான். ஒரு peppy பாடலுக்கு என்ன ஒரு மேலோடியஸ் மெட்டு! அதிலும் நோட்ஸ் எல்லாம் முடியும் இடங்களில் பியானோ டச்சஸ். ராஜாக்கள் என்றும் ராஜாக்கள் தான். பட்டுக்கோட்டையின் வரிகள்.


அடுத்தது மெஸ்ஸியம்மா. அட இந்த பாடல் இல்லாமல் ஒரு A M ராஜா பதிவா? தெலுங்கு இசையமைப்பாளர் ராஜேஸ்வரராவ் இசையமைத்தது. P லீலாவுடன் தலைவர் பாடிய ஒரு ஜெம் என்று சொல்லலாம். மிஸ்ஸியம்மா ஒரு தெலுங்கு ரீமேக் என்று நினைக்கிறேன். நான் சந்தித்த தெலுங்கர்களுக்கும் இந்த பாடல்கள் நன்றே தெரிந்திருக்கின்றன.

வாராயோ வெண்ணிலாவே!

மீண்டும் மீண்டும் பியானோ அடி நாதம். என்னத்த சொல்ல. கொஞ்சம் நகைச்சுவையான பாடல்.
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
என்று அவன் சொல்ல
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
என்று அவள் சொல்வாள். சாவித்திரி ஜெமினி காம்பினேஷன் … சான்சே இல்லை!
 
அடடா … நீண்டு விட்டது … இன்னும் ஒரே ஒரு பாடல் தான்….. அதை போடாவிட்டால் அம்மா அடிக்க வரும். நான் குழந்தையாய் இருக்கும்போது அம்மா மடியில் வைத்து என்னை தூங்க வைக்க பாடும் பாட்டாம் இது. அதனால் தானோ என்னவோ A M ராஜாவில் எனக்கு எப்போதுமே ஒரே கொள்ளை ஆசை. மிஸ்ஸியம்மா தான் இந்த படமும். சுசீலாவுடன் மீண்டும்.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
“ஏனோ ராதா இந்த பொறாமை? யார் தான் அழகால் மயங்காதவரோ”
ஐயோ .. இந்த பாட்டுக்கெல்லாம் விளக்கம் வேறு வேண்டுமா? பியானோ, புல்லாங்குழல், வீணை என்று இசை அதகளம் செய்து இருக்கும். சுசீலாவின் இளமைக்கால குரல், ராஜாவின் வசீகர குரலை தொடரும்போது அப்படியே கிருஷ்ணன், ராதா என்று கண்களில் மதுரா நகர் காட்சிகள் விரியும்.

kalyanaparisuA M ராஜாவின் திரை வாழ்க்கை ஒரு பத்து பன்னிரண்டு வருடங்களில் எழுச்சி அடைந்து அடங்கிவிட்டது. அவர் ஒரு முன் கோபக்காரன் என்றும் இயக்குனர்களுடனும் இசையமைப்பாளர்களுடனும் முரண்படும் குணம் உடையவர் என்றும் சொல்வார்கள். தேன்நிலவுக்கு பின்னணி இசை கோர்க்கும்போதே ஸ்ரீதருடன் மோதல். மீண்டும் “நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்துக்கு கேட்ட போதும் இசையமைக்க மறுத்துவிட்டாராம். KV மகாதேவன், MSV என எல்லோருடனும் சண்டை. ஜிக்கியை கூட திருமணத்துக்கு பின்னர் மற்றைய இசையமைப்பாளர்களிடம் பாட அனுமதிக்கவில்லை என்று கூறுவார்கள். எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. 1989 இல் ஓடும ட்ரெயினில் ஏற முயன்ற போது தடுக்கி விழுந்து ரயில் சில்லில் அகப்பட்டு இறந்து போனார். பின்னாளிலே ஜிக்கி “நினைத்தது யாரோ”, “வண்ண வண்ண சொல்லெடுத்து” என்று பாடத்தொடங்கிவிட்டார்.

அடடே “துயிலாத பெண்ணொன்று கண்டேன்”, மாசிலா உண்மை  போன்ற பாடல்களை மிஸ் பண்ணி விட்டேன். பதிவு நீண்டு விட்டால் நம்ம பசங்க வாசிக்கிறாங்க இல்லை!!
A M ராஜா…. எனக்கென்னவோ KV மகாதேவன், MSV, இளையராஜா, ரகுமான் வித்யாசாகர் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர் என்றே தோன்றுகிறது. கொஞ்சமே எழுதினாலும் பட்டுக்கோட்டையை நாம் கொண்டாடவில்லையா? அது போல …A M ராஜாவை இன்னும் இன்னும் கொண்டாடுவோம்!

என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா?  மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்!
சென்ற வார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪




Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக