தங்க மகன்

 

 

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-91/gnakoothan1.jpg

இரணமடு குளத்துக்கட்டு
கரியரில கருக்கு மட்டை
பறியிரண்டு ஹாண்டிலில
பொரியுருண்ட வாயுக்குள்ள.

இரவி அயரும் நேரத்தில
கரியர் கூட்டம் வருமெண்டு,
புரவிபோல கடுகதியில்
துவியுருளி மிதிச்சானே.

வழித்துணைக்கு பாட்டிருக்கு
இளையராஜா மெட்டிருக்கு
இருமல் ஒண்டு எடுத்துவிட
எசப்பாட்டு கேட்டுடிச்சு.

கறுவலோட பாட்டுக்கு
எசப்பாட்டு ஏதென்று
பருவகுயில் குரல்வந்த
திசைதேடி பறந்தானே.

பாட்டுக்காரி யாரு எண்டு
பார்த்தகணம் அக்கணமே
கரண்டுகம்பி அறுந்துவிழுந்த
மரத்தபோல எரிஞ்சானே.

திறந்த துருவி(ல்) தண்ணியில
கறந்த பாலு நிறத்து மேனி
கச்சைவர குறுக்குக் கட்டி
பொச்சு தேச்சு குளிக்க கண்டு,

பிச்சை எடுக்க வந்தவனும்
எச்சி இலை குப்பையில
மிச்சமீதி தேடிப்பார்த்து
சொச்சத்தயும் விழுங்குவானே.

இளிச்சுகொண்டு நிண்டவனை
எட்டயில கண்டவளும்
பக்கத்தில கிடந்த கல்லை
ஹெட்டபோலில் அடிச்சாளே.

விரைந்து வந்த குறுனிக்கல்லு
மறந்து நிண்டு பாத்தவனின்
மண்டையில பட்டதால
மருண்டவனும் பறந்து போனான்.

வெட்டிப்பயல் விழுந்தடிச்சு
வீடுவந்து சேர்ந்தபோது
சொட்டையில சொட்டு ரத்தம்
கொட்டிக்கொண்டு நிற்ககண்டு,

கட்டினவள்  கையிருந்த
சட்டி விழுந்து உடஞ்சுபோச்சு.
பொட்டு வச்ச வட்டமுகம்
பெட்டி பாம்பா சுருங்கிப் போச்சு.

உச்சிமேல கத்தாழை
வச்சி பத்து போடடுக்கொண்டு
விட்ட இவ ஒப்பாரியில்
உப்பளமு தோன்றிப்புட்டு.

கணவனுக்கு கல்லெறிஞ்ச
கள்ளனை பிடிக்கவெண்டு
காவல்துறை போக அவ
காலில் செருப்பை மாட்டிட்டா.

மாட்டிப்புட்டா வண்டவாளம்
தண்டவாளம் ஏறிடுமே!
மண்டக்கதை தெரிஞ்சுபோனா
பங்கருக்குள் போகணுமே.

வாசல்படி போனவளை
புறத்தால கூப்பிட்டு.
பேசாமே குசுனிக்க
போடி எண்டு சொன்னானே.

சின்னபெடி ரெண்டு  சேர்ந்து
கல்லடிச்சு போட்டாங்கள்.
காவல்துறை கண்டறிஞ்சா
உள்ள தூக்கிப் போடுவாங்கள்.

பாவமெண்டு விட்டிடெண்டு
சொன்னவனை காதலுடன்
“எண்டபுருஷன் தங்கமெண்டு”
முத்தமொண்டு தந்திட்டாள்!

 

**********************

ஓவியம் : வென்னி மலை


18 comments :

 1. தங்க மகன் மங்கமாட்டான்................

  அஜந்தன்

  ReplyDelete
 2. வைரமுத்துவின் 'அம்மா' கவிதை மெட்டு
  கடுகதியில் துவியுருளி - எங்கள் ஈழ டச்சு!
  Uthayan

  ReplyDelete
 3. Very nice. Liked the reality potrayed in this.

  ReplyDelete
 4. நல்ல கவிதை.. பொரியுருண்டை கரியர் குசினிக்க என்று பல நம் வட்டார வார்த்தகளைப் பாவித்திருக்கிறீர்கள்.
  ஒரு சந்தேகம்: தங்கமகன் என்னடாவெண்டால் கரியர் கூட்டம் வருமென்று மிதிச்சுக்கொண்டு இருக்கிறார். அவவெண்டால் யானை தண்ணி குடிக்க வாற துருவில பாட்டுப் பாடிக்கொண்டு பொச்சு தேச்சுக் குளிச்சுக்கொண்டிருக்கிறா. இது எப்ப சாத்தியம்? ஒருவேளை அவ வன்னி மகள் யானை பல கண்டவள். உவர் யாழ்ப்பாணத்தால இடம் பெயர்ந்து போய் அங்க கவிதை எழுதிக் கொண்டு திரிந்த அந்த ஆளோ ?
  இது நனைவிடை தோய்தல்லத்தானே?

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. நீங்கள் வன்னியில் வசித்தீர்களோ தெரியவில்லை. நீர் குடிக்க வரும் யானைகள் அண்டும் பகுதி குளத்தின் கிழக்குக்கரை.அங்கேயே விறகு எடுக்கும் காடு இருக்கிறது. கட்டிக்கொண்டு கட்டு ஏறினால், துருவில் குளத்துக்கு வடக்கே வயல்கள் நோக்கி இருக்கும். யானைகள் கட்டு தாண்டுவதில்லை. அதனால் அவள் குளித்தது ஆச்சரியமில்லை. அவன் பயத்தில் ஒடுவதும் இயல்பே. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டு சிறியது. லத்திகளை அங்கேயும் காணமுடியும். புனைவுகள் பல உண்மை சம்பவங்களை கோர்த்து செதுக்கும் கற்பனையே. அதில் என்னதும் இருக்கும். உங்களதும் இருக்கும்.

   Delete
 5. "அதில் என்னதும் இருக்கும். உங்களதும் இருக்கும்" - கடைசியில எனக்கும் என் மனைவிக்குமிடையில கோள் மூட்டுறீங்களே!

  ReplyDelete
 6. u use all rare words. Catta Pult. Parri (Bag).
  ur writing is amazing.

  ganesh ( I am known as siva as well)

  ReplyDelete
 7. அந்த கல் ஏறி வாங்கினது நீங்கதானோ தெரியல .....................................

  சும்மாதான் நன்றாக இருக்கிறது .

  ReplyDelete
 8. என் புருஷன் தங்கமெண்டு
  முத்தமொன்று தரும்முன்னே
  சின்னப்பொடி ரெண்டு சேர்ந்து
  அடிச்ச கல்லு போலில்லை
  என்ற அவள் பார்வையிலே
  தங்கமும் தகரமாச்சே

  ReplyDelete