Skip to main content

தங்க மகன்

 

 

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-91/gnakoothan1.jpg

இரணமடு குளத்துக்கட்டு
கரியரில கருக்கு மட்டை
பறியிரண்டு ஹாண்டிலில
பொரியுருண்ட வாயுக்குள்ள.

இரவி அயரும் நேரத்தில
கரியர் கூட்டம் வருமெண்டு,
புரவிபோல கடுகதியில்
துவியுருளி மிதிச்சானே.

வழித்துணைக்கு பாட்டிருக்கு
இளையராஜா மெட்டிருக்கு
இருமல் ஒண்டு எடுத்துவிட
எசப்பாட்டு கேட்டுடிச்சு.

கறுவலோட பாட்டுக்கு
எசப்பாட்டு ஏதென்று
பருவகுயில் குரல்வந்த
திசைதேடி பறந்தானே.

பாட்டுக்காரி யாரு எண்டு
பார்த்தகணம் அக்கணமே
கரண்டுகம்பி அறுந்துவிழுந்த
மரத்தபோல எரிஞ்சானே.

திறந்த துருவி(ல்) தண்ணியில
கறந்த பாலு நிறத்து மேனி
கச்சைவர குறுக்குக் கட்டி
பொச்சு தேச்சு குளிக்க கண்டு,

பிச்சை எடுக்க வந்தவனும்
எச்சி இலை குப்பையில
மிச்சமீதி தேடிப்பார்த்து
சொச்சத்தயும் விழுங்குவானே.

இளிச்சுகொண்டு நிண்டவனை
எட்டயில கண்டவளும்
பக்கத்தில கிடந்த கல்லை
ஹெட்டபோலில் அடிச்சாளே.

விரைந்து வந்த குறுனிக்கல்லு
மறந்து நிண்டு பாத்தவனின்
மண்டையில பட்டதால
மருண்டவனும் பறந்து போனான்.

வெட்டிப்பயல் விழுந்தடிச்சு
வீடுவந்து சேர்ந்தபோது
சொட்டையில சொட்டு ரத்தம்
கொட்டிக்கொண்டு நிற்ககண்டு,

கட்டினவள்  கையிருந்த
சட்டி விழுந்து உடஞ்சுபோச்சு.
பொட்டு வச்ச வட்டமுகம்
பெட்டி பாம்பா சுருங்கிப் போச்சு.

உச்சிமேல கத்தாழை
வச்சி பத்து போடடுக்கொண்டு
விட்ட இவ ஒப்பாரியில்
உப்பளமு தோன்றிப்புட்டு.

கணவனுக்கு கல்லெறிஞ்ச
கள்ளனை பிடிக்கவெண்டு
காவல்துறை போக அவ
காலில் செருப்பை மாட்டிட்டா.

மாட்டிப்புட்டா வண்டவாளம்
தண்டவாளம் ஏறிடுமே!
மண்டக்கதை தெரிஞ்சுபோனா
பங்கருக்குள் போகணுமே.

வாசல்படி போனவளை
புறத்தால கூப்பிட்டு.
பேசாமே குசுனிக்க
போடி எண்டு சொன்னானே.

சின்னபெடி ரெண்டு  சேர்ந்து
கல்லடிச்சு போட்டாங்கள்.
காவல்துறை கண்டறிஞ்சா
உள்ள தூக்கிப் போடுவாங்கள்.

பாவமெண்டு விட்டிடெண்டு
சொன்னவனை காதலுடன்
“எண்டபுருஷன் தங்கமெண்டு”
முத்தமொண்டு தந்திட்டாள்!

 

**********************

ஓவியம் : வென்னி மலை