Skip to main content

மலரோ நிலவோ மலைமகளோ

 

indian-figurines-banjara-musician-statues

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வீட்டு நிகழ்வு ஒன்றில் பிரபல கர்நாடக சங்கீத பாடகனும்  நெருங்கிய நண்பனுமான அகிலன் வந்திருந்தான். நிகழ்ச்சியில் அவனுடைய பேச்சும் இருந்தது. ஆனால் சச்சினை அழைத்து டெனிஸ் விளையாடு என்றால் அரங்கு மன்னிக்குமா? அவன் பேசி முடித்ததும் பாடக் கேட்பது என்று முடிவானது. எதை பாடக் கேட்பது? மெல்லிசைப் பாடலைக் கேட்டால் அவனுக்கும் சங்கடம். கர்நாடக சங்கீதப் பாடலை பாடலாமென்றால் அந்த அவை அதற்குரியதல்ல. ஆகவே இரண்டையும் சரிசெய்யும் ஒரு பாடல். எது அது?

அது பரியோவான் கல்லூரியின் 175ம் ஆண்டு நிகழ்வுக்கொண்டாட்டம். பதினெட்டு வயது அகிலன் பீட்டோ மண்டபத்தில் தனிக்கச்சேரி செய்கிறான். ஒருபுறம் மிருதங்கம் எங்கள் கஜன். மறுபுறம் வயலின் அகிலனின் அக்கா சுகன்யா. கர்நாடக சங்கீத தனிக்கச்சேரி. வர்ணம், சுரம், ராகம் என்று அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க, நாமெல்லோருமே மண்டபத்தின் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்த கிருஸ்தவ பாதிரியார்கள் போல அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிவடையும் தறுவாய். ஒரு பாட்டு பாடி முடித்தவுடன் அகிலன் தண்ணீர் குடித்தான். அவனுக்கேயுரிய நக்கல் சிரிப்போடு, தலை சாய்த்து கஜனுக்கு ஏதோ சமிக்ஜை செய்தான். சற்று செருமிவிட்டு அடுத்த பாடலை ஆரம்பித்தான்.

"மலரோ நிலவோ மலைமகளோ".

அடுத்த ஐந்து நிமிடங்கள் ஒரு தேவசபையில் உட்கார்ந்திருந்த அனுபவம். அகிலனுடைய பாட்டுக்கு கஜனின் மிருதங்கமும் சேர்ந்து உருண்டோட, அன்றைக்கு அதை கண்டு கேட்டு ரசித்தவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் தருணம். அதே பாட்டை பாடச்சொல்லி நான்கேட்க அகிலன் மெல்பேர்னில் அவையை மீண்டுமொருமுறை வசப்படுத்தினான்.

.

அடிமையை மறக்காதே
அடுத்ததை நினைக்காதே

இந்தப்பாட்டு ஒரிஜினலாக குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் ஜெயச்சந்திரன் பாடியது.  ராகம் இந்தோளம்.  எனக்கு இந்த ராகத்தின் சுரங்கள், கட்டுகள் போன்ற சங்கீத பக்கங்கள் தெரியாது. ஆனால் அந்த ராகத்தின் ஆதாரமான ஜீவனை பல பாடல்களில் தொடர்புபடுத்த முடிகிறது. ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களை இனம்கண்டு, அட இது அதுதானே? இதுதானோ? என்று அலசுவதில் ஒரு சந்தோசம். அதற்கு ராகமோ சங்கீத அறிவோ தேவையில்லை. “மலரோ நிலவோ” கேட்டுக்கொண்டிருக்கும்போது அகிலனே அடிக்கடி பாடுகின்ற தியாகராஜ கீர்த்தனை ஒன்று ஞாபகம் வரும். "சாமஜ வர கமனா" என்கின்ற பாடல். அகிலன் இந்த பாடலை அடிக்கடி கச்சேரிகளில் பாடுவதுண்டு. அவனுடைய ஆஸ்தான ராகம் என்றே இந்தோளத்தை சொல்லலாம். கொழும்பு கம்பன் கழக இசைவேள்விகளில் முன்னர் இதை பாடி கேட்டிருக்கிறேன். அண்மையில் இங்கே தியாகராஜா உற்சவத்தில் பாடினான். டிவைன்.

 

"மலரோ நிலவோ", "சாமஜ வர கமனா" இந்த இரண்டு பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்க, ஏதோ ஒரு பொதுவான அம்சம் உணர்வுக்கு புலப்படும். ஒரு பொதுவான மெட்டு. மனதுக்குள் இரண்டையும் மாறி மாறி ஹம் பண்ணும்போது உறுத்தாமல் இரண்டு பாடல்களுமே இணைந்து பிணைந்துகொள்ளும். அதுதான் அந்த ராகத்தின் ஆதார மெட்டு. இப்போது இதே ராகத்தை கொண்டமைந்த ஏனைய சில திரை இசை பாடல்களை பார்ப்போம்.

“சாமஜ வர கமனா” என்று பாடிக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் “ஓம்”.. “ஓம் நமச்சிவாய…” .. “தங்க நிலாவினை அணிந்தவா.. ஆடுகிறேன் பூலோகய்யா அருளில்லையா” …”சாமஜ வர கமனா..” சேருகிறதல்லவா? இந்தோளம்.

 

இந்தோளத்தில் இளையராஜா இமயம் கண்டவர். ஒருநாள் பூராக இருந்து இந்த ராகத்தை இளையராஜாவில் தேடினால் குறைந்தது ஒரு நூறு பாடல்களாவது ஞாபகத்துக்கு வரும். “ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் புரிவாய்”, இதன் சரணம் ஆரம்பம் அப்படியே “மலரோ நிலவோ” வின் “நானோடு பூசாரி” யை ஞாபகப்படுத்தும்.

 

இப்படி காதலியை காணவில்லையே என்று ஆண் தேடுகின்ற பாடல்களில் இளையராஜா இந்தோளத்தை பயன்படுத்துவாரோ என்னவோ. அடுத்த பாடல் தரிசனம் கிடைக்காதா? வும் அதே ராகமே.

 

ரகுமான் இந்தோளத்தில் பக்காவாக ஒன்று தந்திருக்கிறார். தொண்ணூறுகளில் நாங்கள் ரெக்கோர்ட் பண்ணிய எந்த கசட்டிலும் இந்தப்பாடல் இருக்கும். ஆரம்பத்தில் சுப்ரபாதத்துடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலை பாடியவர் ஷோபா. அதற்குப் பிறகு வேறு பாடகள் எதுவும் பாடினாரா? என்று தெரியவில்லை. மார்கழிப்பூவே பாடிவிட்டு அமேரிக்கா போய்விட்டார் என்று அப்போது பத்திரிகைகளில் எழுதினார்கள். ஒருமுறை இலங்கை வானொலியில், ராஜேஸ்வரி சண்முகமாக இருக்கவேண்டும், “இந்தப்பாடலில் “மார்கழிப்பூவே” என்கிறார்கள். ஆனால் பாடல்காடசியில் ஒரு பூவைக்கூட காட்டவில்லை” என்றதும் ஞாபகம் வருகிறது.

 

“உன்மடி சேர்ந்தால் கனவுகள் தொல்லை” என்று பாடி முடிக்கும்போது ஒரு சங்கதி விழும். முடித்தவுடன் “மார்கழிப்பூவே” என்று மீண்டும் எடுக்காமல் “ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே” என்று பாடுங்கள். அச்சுவார்த்தாற் போல சேரும். இது ராஜாவின் இன்னொரு வைரம். மலேசியா வாசுதேவனும் சைலஜாவும் பாடியது. இந்தோளம்.

 

“மான்கள் தேடும் பூவை அவளோ, தேவி சகுந்தலையோ?” என்று மலேசியா பாடும் இடம் இருக்கிறதல்லவா? மீண்டும் மீண்டும் கேளுங்கள். பரிச்சயமாகிவிட்டதா? அப்படியே “Nothing but wind” க்கு வாருங்கள். இது ஒருவித தொடர்ச்சி இசை. “ஆனந்த தேன்காற்றின்” ஆலாபனை போலவே இருக்கும். இந்தோளத்தை இளையராஜா எங்கெல்லாம் கொண்டுபோயிருக்கிறார். 

 

இப்படி ராஜாவின் பாடல்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். நீண்டுகொண்டே போகும். அப்படி எழுதிக்கொண்டு போகும்போது முத்தாய்ப்பாய் ஒரு பாடல் வந்தமரும். ராஜாவின் “மாஸ்டரி” காட்டப்படும் பாடல். ஆரம்ப ஆலாபனை சொல்லிவிடும் பாடலின் முகவரியை. அது “நான் தேடும் செவ்வந்திப்பூவிது”.

பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

*****************

தொடர்புடைய பதிவுகள்

இருவர்
ஏகன் அனேகன்
சகியே நீ என் துணையே
சின்னக்கண்ணன் அழைக்கிறான்