Skip to main content

சப்புமல் குமாரயாவின் புதையல்

 

259498_420603644678365_683213013_o

குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார்.

"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு"

கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்" என்கின்ற ஒற்றை  வாக்கியத்தோடு தாரணி காணாமல் போய்விடுவாள். பின்னர் கிளைமாக்ஸில் ஒரு ரீ-என்ட்ரி, அவளுக்குபோய் அத்தனை அனட்டமி டீடெயிலிங் தேவையில்லை.

இரண்டாவது காரணம், இந்தக்கதை சப்புமல்குமாரயாவின் புதையல் சம்பந்தப்பட்டது.

ஈரச்சாறத்தோடு, வேண்டுமென்றே, நெஞ்சு தெரியட்டுமென, துவாயால் ஈரமில்லாத தலையை துவட்டியபடி முற்றத்துக்கு வந்தேன். தாரணி சிரிக்கவில்லை.

"உம்மளை ஒருக்கா பிகே சேர் வரச்சொன்னார்"

“எதுக்கு?, உள்ளுக்க வாருமேன், டீ குடியுமேன்” என்றெல்லாம் சொல்ல சந்தர்ப்பம் தராமல் தாரணி சைக்கிளை திருப்பிக்கொண்டு வெடுக்கென்று கிளம்பிப் போய்விட்டாள். பிகே சேரின் வீட்டுக்கு முன்வீடுதான் அவளுடையது. அவளை அடிக்கடி கிளாசுக்கு போகும்போது நான் .. வேண்டாம், விட்டுவிடுவொம்.

யாரிந்த பிகே சேர்?

“P.கோடீஸ்வரன்”. சுருக்கமாக பி.கே. அக்காமாருக்கு 'அவன்' ஒரு பெட்டைக் கள்ளன். எனக்கோ 'அவர்' கடவுள். இரசாயனக்கடவுள். யாழ்ப்பாணத்தில் மணியம், நாகர், மகாதேவா, குட்டி மக்கர் என்று நிறைய இரசாயன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் பி.கே இவர்களிடம் இருந்து நிறைய வித்தியாசப்படுவார். செய்முறை இல்லாத இரசாயன படிப்பு, சரோஜாதேவி புத்தகம் வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியைப் போன்றது என்பார். அவர் வீட்டில் சோதனைக் குளாய் முதல் டிஸ்டில்லர் வரை எல்லாவிதமான இரசாயன உபகரணங்களும் இருக்கும். மாட்டுக்கொழுப்பை வைத்து சவர்க்காரம் செய்ய முயல்வார். அசெற்றிக் அமிலத்தின் நடுநிலையாக்க வெப்பவுள்ளுறையை காண்பதற்கு பரிசோதனை செய்வார். அவருடைய டியூஷனில் அடிக்கடி ஏதாவது வெடித்து, எரிந்து சுவர் முழுதும் கறுப்பு ஒட்டிக்கிடக்கும். பிகே சேரின் வாயின் இடதுபக்கம் பெரிய ஒரு தழும்பு இருக்கிறது. காரணம் பொட்டாசியம் காபனேற் எனறு 97 பட்ச் அண்ணாமார் சொல்வார்கள். மக்னீசியப்பால் என்று 95 பட்ச்காரர் சொல்வார்கள். 93 பட்ச் அக்காமாரிடம் கேட்டுப்பாருங்கள். ஏகொபித்தகுரலில் ஒன்றையே சொல்லுவார்கள்.

"பிகே என்றால் பெட்டைக்கள்ளன்".

பிகே சேர்  ஏன் என்னை அழைக்கிறார்? என்று ஓரளவுக்கு ஊகிக்கமுடிந்தது. நேற்றுத்தான் எனக்கு ஏ/எல் ரிசல்ட் வந்திருந்தது. உதயன் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்திருக்கும். “கோண்டாவில் இராமகிருஷ்ணா  கல்லூரி மாணவன் அறிவுக்குமரன் அகில இலங்கையில் முதலிடம்” என்று முதல்பக்கத்தில் செய்தியும், அருகே போஸ்டல் ஐடென்டிட்டி கார்ட் பால்குடி படமும் பிரசுரமாகியிருக்கும். அந்த அறிவுக்குமரன் வேறு யாருமில்லை. சாட்சாத் நானே. ஷோர்ட்டாக "அரி". நான்கு பாடங்களுக்கும் “ஏ”. மொத்த மதிப்பெண்கள் 399. மெய்தான். 400க்கு 399. நம்பமுடியவில்லையா? எனக்கும்தான். மண்டை விறைத்துப் போய்விட்டது. எப்படி அந்த ஒரு மார்க் தவறியது? ரி-கரக்‌ஷன் போடப்போகிறேன்.

பிகே சேர் என்னை விஷ் பண்ணுவதற்குத்தான் அழைத்திருக்கவேண்டும். அவரே வீட்டுக்கு வந்திருக்கலாம். பரவாயில்லை. போவோம். போகும் வழியில் கே.கே.எஸ் ரோட்டில் சேருக்கு பரிசாக மிக்ஸர் வாங்கிக்கொண்டு போனேன். அல்பா மிக்ஸர் அல்ல. KMnO4 மிக்ஸர். தட்டாதெருச்சந்தியடியில் அவர் வீடு இருக்கிறது. கேற்றுக்குள் நுழையும்போது  பிளாங் நடுமுற்றத்தில் குட்டையை சொறிந்தபடி கிடந்தது.  என்னைக்கண்டு குரைக்கவில்லை. வீணி வடித்தது. அது வகுப்பு  இல்லாத நேரம். வீடும் வளவும் வெறிச்சோடிப்போய் இருந்தது. எந்த அசுமாத்தமும் இல்லை. சேரின் மனிசி கடந்த பதினைந்து வருடங்களாக அவரோடு கூட இல்லை. தனிக்கட்டை. வேலைக்காரி, தோட்டக்காரன், படிக்கிற பெடி பெட்டையள், அடிக்கடி அவர் வீட்டுக்கு வரும் ஒரு அன்ரி, மேனன் அந்த அன்ரியைப்பற்றி தேவையில்லாமல் கதைப்பான். சேரின் வட்டம் மிகவும் குறுகிய வட்டம். பிகே சேர் ஒரு தீவிர படிப்பாளி. எந்த நேரமும் எதையாவது ஒன்றை வாசித்துக்கொண்டே இருப்பார். பக்கத்திலே ஒரு கொப்பி பேனா எப்போதும் கூடவே இருக்கும். காலநேரம் கிடையாது. தட்டாதெருவால் நடுச்சாமத்தில் போகின்றபோதும்கூட சேரின் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்த்தால், உள் அறையில் லைட், கரண்ட் போனால் பெட்ரோல் மக்ஸ், என்று ஏதாவது ஒன்று எரியும். படித்துக்கொண்டே இருப்பார். மேனன் வேறு ஏதோ சொல்லுவான். இங்கே வேண்டாம். ஒன்று மட்டும் நிச்சயம். சேரிடம் ஒரு தேடல் இருக்கிறது. தன்னுடைய டபிள் லென்ஸ் கண்ணாடியை கழட்டும் சமயங்களில் அவருடைய கண்களை கூர்ந்து கவனித்தால் தெரியும். எதைத் தொலைத்தோம் என்றே தெரியாமலேயே தேடுபவரின் கண்கள் அவை.

வாசல்படிக்குப்போனேன். வீட்டுக்கதவு கதவு திறந்துகிடந்தது. எட்டிப்பார்த்தேன். நாச்சார்வீடு. உள்ளே பழைய ஈசிச்சேரில் படுத்துக்கிடந்த ஷிரோடிங்கர் என்னைக்கண்டு மியாவ் என்றபடி மீண்டும் குறண்டியது. வேறு அரவம் எதுவும் இல்லை. கூப்பிட்டேன்.

“சேர்”

எந்தச்சிலமனும் இல்லை.

“சேர்…”

உள் அறை ஒன்றில் கதிரை அரக்கப்படும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிடங்கள் காத்திருப்பு. அடுத்த “சேர்” க்கு தயாராகையில் கதவைத்திறந்தபடி பிகே சேர் வெளிவந்தார். வெறும்மேல். சாறம். அதே பழைய டபிள்   லென்ஸ் கண்ணாடி. தலையின் மேல் வெட்ட வெளியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்தமிழன் போல அடங்காமல் பறக்கும் நரைமுடிகள் என்று சேர் எங்கள் வகுப்பறையில் இருக்குமாப்போலவே இப்போதும் இருந்தார்.

"வாடா அரி.. தனியத்தானே வந்தனி?"

ரிசல்டுக்கு வாழ்த்துவார் என்று எதிர்பார்த்தேன். வாழ்த்தவில்லை. அவசரமாக வாசலுக்குப்போய் கதவைப்பூட்டி “பார்”த்தடியை போட்டார். பின்வாசல் பூட்டியிருக்கா? என்று செக் பண்ணினார். பின்னர் என்னை அந்த அறைக்குள் அழைத்துப்போனார். கூடவே ஷ்ரொடிங்கரும் உள்ளே நுழைய முயற்சிக்க, “அங்கால போ சனியனே" என்று அதைத்துரத்தி கதவை உள்தாழ்ப்பாள் போட்டார். உள்ளூற எனக்கு பயம்பிடித்தது. பி என்றால் பெட்டையா? பெடியனா?

"இப்பிடி இரு"

அப்போதுதான் அந்த அறையைப் பாரத்தேன். கலவரத்தில் சூறையாடப்பட்ட புத்தகக்கடை போல அந்த அறை இருந்தது. யன்னலைத் தவிர மிகுதி இடம்பூராக புத்தகங்களும் பேப்பர்களும். ஒரு பக்க சுவரில் யாழ்ப்பாண இராசதானி வரைபடம் மாட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே குட்டி குட்டி ஸ்டிக்கர் துண்டுகள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு புத்தக அலுமாரிகள். அதற்குள்ளே, வெளியே, முன்னே, பின்னே என்று எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். ஆங்கிலம், தமிழ், சிங்களம், மலையாள்ம் என்று பல மொழிப் புத்தகங்கள். தரை முழுதும் கொப்பிப் பேப்பர்கள். கசக்கி கிழித்துப் போடப்பட்டிருக்கும் பேப்பர்கள். சிலது அறைக்குள்ளேயே குவித்து எரிக்கப்பட்டிருக்கவேண்டும். கரி குவிந்து கிடந்தது.

யாழ்ப்பாண வைபவமாலை, மகாவம்சம், சூள வம்சம் போன்ற புராதன நூல்கள் முதல் சமீபத்தில் வெளியான “The Code Book” வரை மேசையில் கிடந்த புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டேன்.

“உன்னை ஏன் வரச்சொன்னனான் எண்டு தெரியுமா?”

சேரை இப்போது நன்றாக நான் நிமிர்ந்துபார்த்தேன்.

“ரிசல்ட்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்கள் சேர் … நானே வந்து நன்றி சொல்லோணும் எண்டு …”

“எண்ட ஐம்பது வருட டீச்சிங் அனுபவத்தில உன்னை மாதிரி ஒரு மத்ஸ் மண்டையை நான் கண்டதே இல்ல அரி”

“நன்றி சேர் .. எல்லாம் உங்கட .. ”

நான் பேசி முடிப்பதற்கும் சேர் இடை மறித்தார்.

“உனக்கு நான் ஒரு புதையல் பரிசா தருவம் எண்டு பாக்கிறன்.”

“புதையலா? .. என்ன சேர் புதிர் போடுறீங்கள்?”

“புதையல் … தங்கம் வெள்ளி … ஏன் வைரம் வைடூரியம் கூட இருக்கும்”

“என்ன சேர்… விளங்கேல்ல”

“திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு
பங்கர் கயிலாய மாலைக்குத் -துங்கச்
சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச்
சயிலமுகத் தோன்துணைய தரம்”

சேர் திடீரென்று வெண்பாவோ விருத்தமோ ஏதோ ஒன்றை இடறாமல் விறுவிறுவென்று ஒப்புவித்தார். “பிகே ஒரு அலுக்கோசு” என்று மேனன் அடிக்கடி சொல்லும்போது நான் நம்பியதில்லை. இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.

“என்ன சேர் திடீரென்று சங்க இலக்கியம் .. ”

“இது எங்கட ஆக்கள் தம்பி .. கைலாயமாலை .. எழுதினது முத்துராசக்கவிராயர் .. அவரோட மகன் ஆர் தெரியுமா?”

“நீங்களா சேர்?”

சேர் என்னுடைய நக்கலை கவனித்ததாக தெரியவில்லை.

“மொக்குப் பணியாரம்.. முத்துராசக்கவிஞர் முன்னூறு வருஷத்துக்கு முன்னைய ஆள். அவருடைய மகன், கதிரையப்பர், அவர் மகன் செந்தியப்பன், அவர் மகள் செண்பகநாயகி, செண்பகநாயகியோட மகன் பரமேஸ்வரன். பரமேஸ்வரன் மகன்தான்..”

“கோடீஸ்வரன் .. பி.கே .. பரமேஸ்வரன் கோடீஸ்வரன்”

“அதேதான்”

“இந்த வரலாறு இப்ப என்னத்துக்கு சேர்?”

சேர் அலுமாரிக்குப்பக்கத்து குவியலுக்குள் முழுகி, ஒரு பெரிய தும்மல் தும்மி, சாறத்தை தூக்கி சளியை சீறி இழுத்து, காறியபடி, கையில் ஒரு புத்தகத்தோடு மீண்டார். என் கையில் தரவில்லை. பக்கங்களைப் புரட்டியபடியே கதை சொல்லத்தொடங்கினார்.

“சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை
கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
தரையரச னின்றித் தளம்ப”

பதினேழாம் நூற்றாண்டு. யாழ்ப்பாண இராசதானி சரியான தலைவன் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம். அந்த சுதந்திர நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர கோட்டே மன்னனான ஆறாம் பராக்கிரமபாகு விரும்பினான்.  அதுதான் தகுந்த சந்தர்ப்பம் என்று அறிந்தான். போர் தொடுத்தான். படைத்தளபதியாக சப்புமல்குமாரயாவை அனுப்பினான். அவன் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்து ..

”அவன்தானே செண்பகப்பெருமாள்? .. வரலாறு பாடத்தில படிச்சிருக்கிறன்”

சிங்களத்தில் சப்புமல்குமாரய. தமிழில் செண்பகப்பெருமாள். யாழ்ப்பாண இராசதானியை ஆக்கிரமித்தான். சூறையாடினான். அவனுக்கு உள்ளுக்க இருந்து உளவு பார்த்து உதவி செய்தது எங்கள் மூதாதையரான முத்துராசக்கவிஞர்தான்.

“காட்டிக்குடுத்திருக்கிறார்கள்” என்று எனக்கு வாய் உன்னியது. பிச். யார்தான் துரோகி இல்லை? 

“ஒகே சேர் இந்தக்கதையை இப்ப ஏன் எனக்கு சொல்லுறீங்க?”

சேர் பதில் சொல்லாமல் தன் கதையை தொடர்ந்தார்.

அதுக்கு பிரதியுபகாரமாக செண்பகப்பெருமாள் முத்துராசக்கவிஞருக்கு, மாதோட்டத்தில் கொள்ளையடித்த அத்தனையும் அவருக்கே என்று பட்டயம் எழுதிக்கொடுத்தான். முத்துராசக்கவிஞர் ஓவர் நைட்டில் முதலாளி ஆனார். சொத்து என்றால் சொத்து. ஊர் காணாத சொத்து. கவிஞருக்கு புளுகம் தாங்கமுடியவில்லை. செண்பகப்பெருமாளை துதி பாடத்தொடங்கினார். நல்லூர் கோயிலை இடித்து நாசமாக்கினதே செண்பகப்பெருமாள்தான். ஆனால் நல்லூரை அவனே திருத்தியமைத்தான் என்று மாற்றி எழுதினார்.கவிதை புல் புஃளோ.

இலக்கிய சகாப்த மெண்ணூர், றெழுபதா மாண்ட தெல்லை,
அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகவாகு,
நலமிகும் யாழ்ப்பாண நகரி,கட்டுவித்து நல்லைக்,
குலவிய கந்தவேட்குக், கோயிலும் புரிவித்தானே

“இதெல்லாம் எப்பிடி சேர் உங்களுக்கு தெரிஞ்சது? .. நீங்கள் கெமிஸ்ட்ரி மாஸ்டரல்லோ?”

நான் பொறுமையில்லாமல் கேட்க, சேர் “பொறு .. சொல்லுறன்” என்று தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் மாதோட்டம் வெறும் மீனவக்கிராமம் என்றே செண்பகப்பெருமாள் நினைத்திருக்கிறான். ஆனால் பல வருடங்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, மாதோட்டத்தில் ஒரு பெரும் வணிகத்துறைமுகமே இருந்தது என்று. இந்தவிஷயத்தை செண்பகப்பெருமாளிடம் மறைத்து, முத்துராசரும் ஆண்டுக்கணக்கில் நன்றாக முத்துக்குளித்துவிட்டார். விஷயம் கேள்விப்பட்ட செண்பகப்பெருமாள் நெருப்பெடுத்துவிட்டான். உடனேயே மொத்த குடும்பத்தையும் கழுவேற்றிவிட்டு, அனைத்துப் பெறுமதிகளையும் மீட்டுவருமாறு ஆணை பிறப்பித்தான்.

“அடக்கடவுளே .. அப்புறம் எப்படித் தப்பினார்கள்?”

“முத்துராசர் தான் வைத்திருந்த தங்க நகைகள். வைரம் வெள்ளி என்று அத்தனையையும் ஒன்றாக சேர்த்து எங்கேயோ பதுக்கிவைத்துவிட்டு வன்னிக்கு தப்பியோட முயன்றிருக்கிறார்”

“ஆ..”

“ஆனா பூநகரியில் பிடிபட்டுப்போனார். அடுத்தநாளே நல்லூருக்கு கொண்டுவரப்பட்டு, மறுநாள் காலை கோண்டாவில் பக்கம், பிலாமரம் ஒன்றில், தலைகீழாக தொங்கினார். பிணமாக, பக்கத்தில் பிலாப்பழமும் ஒன்று தொங்கியது. பாட்டு இருக்குது”

“அதுக்கும் பாட்டா? யார் எழுதினது”

“சேகராயர் … முத்துராயரின் மச்சான். அவர்களுக்குள் தொழில்போட்டி. முத்துராயரை காட்டிக்கொடுத்தது சேகராயர்தான்”

அப்படியென்றால் நிச்சயம் இது ஈழத்துக்கதைதான். சேர் சொல்வதை நம்பலாம் போலிருந்தது. கதை என்னவோ சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் எதற்கு சேர் என்னை அழைத்தார்? என்று எந்த இழவும் விளங்கவில்லை.

“இதெல்லாம் சரிதான் சேர் .. எனக்கெதுக்கு இந்த வரலாறு? நான் எஞ்சினியரிங் செய்யப்போறன்”

பிகே சேர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு இப்போதுதான் என்னை வடிவாகப் பார்த்தார். கொஞ்சம் நக்கல் சிரிப்பும் வந்தது.

எஞ்சினியர் ஆகி? … உழைச்சு ..தெரியாமக் கேக்கிறன் …  எவ்வளவு உழைப்பாய்?”

“சேர் .. வெள்ளவத்தைல ஒரு பிளாட் கட்டினா, கையில ரெண்டுகோடி சும்மா வருதாம்.. நான் சிவில் செய்யிறதா?”

“இண்டைக்கே நானூறு கோடி … உனக்கு கிடைக்கப் பண்ணுறன்”

முதன்முதலில் என் பேச்சில் மரியாதை குறைந்தது.

“சேர் சும்மா பேய்க்கதை கதைக்காதீங்க”

“இல்ல அரி .. இது உண்மைதான், முத்துராயரின் புதையலின் மதிப்பு இன்றைய திகதிக்கு நானூறு கோடி ..அதுபற்றி கதிரையப்பருக்கு பட்டயம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார்”

“எப்படி?”

“அது ஒரு பெரிய பட்டயம் .. சாம்பிளுக்கு ஒன்று சொல்கிறேன்”

“செம்பொன் மகுடமணி செப்பு குடம் எட்டு அணை
சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப்
பட்டுமணி வைரவை டூரியமும் மட்டுவுமே
பொன்னினங்கி சாத்திபுகா, காற்று அது தோற்றிடுமே”

“தளை தட்டுது சேர்”

“மரண பயத்தில எழுதியிருக்கிறார். அவசரமா. அதில தளை தட்டியிருக்கும்.”

“இதை நம்பச்சொல்லுறீங்களா? இதல்லாம் எங்கட வரலாற்று நூல்களில இருக்கா?”

“இப்படி சுமார் ஆயிரம் பாட்டுகள் இருக்கு. ஆனா ஒருத்தருக்கும் எங்கட பரம்பரை மூச்சுக்கூட விடேல்ல. ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு நகை, நட்டு பற்றி சின்ன சின்ன டீடைலிங்கூட. இன்றைய மார்க்கட் நிலவரப்படி ஒரு பவுன் எண்ணாயிரம் ரூபா கணக்குப்போட்டேன்.  நானூறு கோடி. சிம்பிளா வரும். அவ்வளவு பெரிய புதையல்.”

“செண்பகப்பெருமாள் தேடி எடுக்காம விட்டிருப்பானெண்டோ?”

“போட்டு மெழுகி சாறி இருக்கிறான் .. முத்துராயரிண்ட வீடு மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் எல்லாமே, சொந்தக்காரர் எல்லாரையும் கழுவேற்றியிருக்கிறான். கதிரையப்பர் மாத்திரம் உச்சிட்டார். மாதொட்டத்துக்குச்சென்று இந்தியாவுக்கு தப்பீட்டார். அன்றைக்கு தொடங்கின வேட்டை இது”

“இவ்வளவு தகவல் எழுதின முத்துராயர் அந்தப்புதையல் எங்கே இருக்கும்? எண்டு எழுதிவைக்க இல்லையா?”

“அங்கதான் ஒரு பிசகல். தகவலை அப்படியே எழுதினா செண்பகப்பெருமாள் கைக்கு அது போயிடும் என்று, புதையல் எங்கே இருக்கு என்ற விஷயத்தை சங்கேத பாசையில் எழுதிவிட்டார். கிரிப்டோகிராபி .. கேள்விப்பட்டிருக்கிறியா?”

“ஓ .. கேள்விப்பட்டிடுக்கிறன்..  அதை உடைக்க ட்ரை பண்ண இல்லையா?”

“அதை உடைக்கிறதுக்கு ஒரு கீ … இன்னொரு சங்கேத வார்த்தை வேண்டும். அதை முத்துராயர் தன்னுடைய வேலைக்காரனான நல்லதம்பியிடம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய உயிர்போனால், செண்பகப்பெருமாள் இறந்தபிறகே அந்த சங்கேத வார்த்தையை தன் குடும்பத்திடம் சேர்க்கவேண்டும் என்ற உத்தரவோடு”

“நல்லதம்பி செண்பகப்பெருமாள் இறந்தவுடன் அந்த சந்தேக வார்த்தையை கதிரையப்பர் குடும்பத்திடம் செர்த்தானா?”

“ம்ஹூம் .. முத்துராயர் பிலாப்பழத்துக்கு பக்கத்து பிலாப்பழமே நல்லதம்பிதானே”

“அடக் கருமாந்திரமே .. அப்ப அந்த புதையலுக்கு என்னதான் ஆச்சுது?”

“பிறகென்ன .. வெளியில இத சொல்லவும் முடியாது. அந்த புதையல் எங்கட குடும்ப சொத்து. அதால பரம்பரை பரம்பரையா நாங்களே அந்த சந்கேத வார்த்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். அவ்வப்போது கணிதத்தில் மண்டைக்காய்கள் உருவானா, அவையிண்ட ஹெல்ப் கேப்பம் .. வானதி, உதயசங்கர், ஹம்சாநந்தினி என்று பலர். ஒரு புல்லைக்கூட தூக்கிப் போட முடியாமல் போச்சுது”

எனக்கு இப்போது புரியத்தொடங்கியது. சேர் என்னிடம் அந்த கிரிப்டோகோடைக் கொடுத்து உடைக்கச்சொல்லப்போகிறார். ஒரு கை பார்த்திடவேண்டியதுதான்.

“உங்களிட்ட அந்த கோட் இருக்குதா சேர்?”

சேர் எழுந்து மீண்டும் அலுமாரி புதைகுழிக்குள் விழுந்தார். மீண்டும் சாறத்தை பிடித்து சீறினார். இம்முறை ஒரு புராதன பெட்டி போன்று எதையோ எடுத்தார். திறந்துபார்த்தால் உள்ளே. அட ஓலைச்சுவடி. வாங்கிப்பார்த்தேன். முதல் பக்கம், தமிழில் இருந்தது.

கருநாக கந்தகத்து பெருமாளை துதிபாடி
புகழெலாம் துறந்தேனே, பொருளெலாம் புதைத்தேனே

புதைகுழியில் எழுந்திட்டு போராடும் மறவன்போல்
சிதைமீண்டு வருவேனே சிறைமீட்டுத் தருவேனே.

சேரை நான் நிமிர்ந்துபார்த்தேன்.

“ஆள் இதிலதான் சும்மா வீரம் பீறிட்டு வெண்பாவுல சீறியிருக்கிறார். ஆனால் செண்பகப்பெருமாள் முன்னாலே காலில விழுந்திருக்கிறார். அவன் மசியேல்ல”

“அதில்ல சேர் .. தமிழில விளக்கமாதானே இருக்கு .. என்ன பிரச்சனை?”

“ஓ அதக் கேக்கிறியா? .. மேல வாசி..”

“ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குறு தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே.
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

“விளங்கேல்ல .. ஆனா இதுவும் தமிழ்தானே”

“அடுத்த பக்கத்தை திருப்பு”

“480 13 400 550 54 1 300 23 43 234 23 43 13 9 555 54 80 104 87 509 234 23…”

எல்லாம் இலக்கங்கள். குழம்பிப்போனேன்.

“என்ன சேர் இது?”

“இதிலதான் விஷயம் இருக்கு … மூன்று தலைமுறைகளா குத்தி முறிஞ்சும் ஒரு மண்ணும் விளங்கேல்ல… நீ கண்டுபிடி பார்ப்பம் .. நானூறு கோடி ரூவா…”

“அதில்ல சேர்..”

“நீ எல்லாம் ஐலண்ட் பர்ஸ்ட் எண்டு எண்ணத்துக்கு சொல்லிக்கொண்டு திரியிறாய்”

சேர் அடுத்த ஆயுதத்தை வீசினார். இது இப்போது ஒரு தன்மானப் பிரச்சனையாகிவிட்டது. காட்டிக்கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் இலக்கங்களைப் பார்த்தேன், கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து, லொக் எடுத்து, வகையிட்டு, தொகையிட்டு, தூய கணித அறிவு எல்லாமே பாவித்துப்பார்த்தாலும் ம்ஹூம்.  இதற்கான கீ நல்லதம்பியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவன் மண்டையப்போட்டிட்டான். அவனிடம் இருந்த சங்கேத வார்த்தையை முன்னூறு வருடங்களுக்கு பின்னர் எங்கே போய்த் தேடுவது? இவ்வளவும் பக்காவாக செய்த முத்துராயர் ஒரு பக்அப் ப்ளான் பண்ணாமலா போயிருப்பார்? மீண்டும் முன்பக்கத்தை புரட்டினேன்.

“கருநாக கந்தகத்து பெருமாளை துதிபாடி
புகழெலாம் துறந்தேனே, பொருளெலாம் புதைத்தேனே
புதைகுழியில் எழுந்திட்டு போராடும் மறவன்போல்
சிதைமீண்டு வருவேனே சிறைமீட்டுத் தருவேனே”

நிச்சயமாக இது இளவயது மகன் கதிரையப்பருக்கு எளிமையாக அவன் வயதுக்கு ஏற்ற தமிழில் முத்துராயர்  எழுதியிருக்கிறார். “பயப்படாமால் தனியே போய்த்தப்பு மகனே, நான் வந்து உன்னை மீட்பேன்” என்கிறார். “சிறைமீட்டு தருவேனே” என்பதுதான் விளங்கவில்லை. எது சிறை? கதிரையப்பர் இந்தியாவுக்கு தப்பி ஓடினதாக சேர் சொன்னாரே. ஆனால் முத்துராயரோ அதை சிறை என்கிறாரே. அப்படி என்றால் இப்போது போலவே அப்போதும் இந்தியாவுக்கு தப்பியோடும் தமிழன் சிறைப்பிடிக்கப்பட்டானா? தேவையில்லாத இடத்தில் எதற்கு முத்துராயர் அரசியலை புகுத்தினார். இதுதான் அவர் டச்சோ? ..

அடுத்தபாடலுக்கு போனேன். சேர் டீ என்ற பெயரில் ஒரு களனித்தண்ணி ஊற்றிக்கொண்டுவந்து தந்தார்.

”ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

இந்த தமிழ் கடினமாக இருக்கிறது. சிறுவனான கதிரையப்பருக்கு எழுதியதாக தெரியவில்லை. பெரியவருக்கான கவிதை இது. “ஐந்திரம் நிறையோனின்”. யாரது அந்த ஐந்திரம் நிறையோன்? சேரிடம் கேட்டேன்.

“தெரிஞ்சா நான் ஏண்டா இப்பிடி இருக்கிறன் .. ஐந்திரம் என்றால் எந்திரம் .. அந்தக்காலத்தில எந்திரம் என்றால் குதிரைவண்டில் .. அல்லது உழவு கருவி, வண்டிலில் நிறையோன் யாரு … ”இல்லாட்டி எந்திரம் என்றால் கொம்பியூட்டரா? அந்தக்காலத்தில எங்கடா கொம்பியூட்டர்?”

“இல்ல சேர் .. ஐந்திரம் என்றால் வேற என்னவோ .. இந்திரனாக இருக்கலாம்”

“சந்திரனாக கூட இருக்கலாம்”

சேர் சொல்லிவிட்டு கண்ணடித்தார். சேருக்கு மூடு கொஞ்சம் மாறுமாப்போல இருந்தது. இதற்குமேல் தாங்காது. சேரிடம் அந்த பாடல்களை நகல் எடுக்கலாமா? என்று கேட்டேன். மறுத்துவிட்டார். “ஒருவருக்கும் சொல்லமாட்டேன்” என்று அம்மாவான சத்தியம் செய்தேன். இலக்கங்களை மாத்திரம் எழுதிக்கொண்டுபோக அனுமதித்தார். முதலாவது பாடல் தேவையில்லை போன்று தோன்றியது. இரண்டாவதை மனப்பாடம் செய்தேன்.

”ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

“ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்’ .. 480 13 400 .. எல்லாமே கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்க, ஷ்ரோடிங்கருக்கும் பிளாங்குக்கும் கைகாட்டிக்கொண்டு சேரிடமிருந்து விடைபெற்றேன்.

“உன்னை ஒரு மத்ஸ் மண்டைக்காய் எண்டு நினைச்சன்

சேர் நக்கலடிக்க அவமானத்தோடு வெளியேறினேன். பெடலில் கால்வைத்து சைக்கிள் சீட்டில் உட்காரும்போது முன்வீட்டில் தாரணி பூங்கன்றுக்கு ஹோர்ஸ் பைப்பால் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். நான் அவளை கண்டு அலட்டிக்கொள்ளும் மூடில் இல்லை.480 13 400 .. ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில் … 480 13 400 .. இப்போது தாரணி வீட்டு கேற்றடி தாண்டுகிறேன். என்னைக்கண்டும் காணாமல் பூங்கன்றுக்கு தண்ணீர் விட்டபடி .. ச்சே இவளைப்போய் ..  143 சொன்னேனே .. 143 .ஆ. மூளைக்குள் எதுவோ பளிச்சிட்டது. அப்படியென்றால் ஒவ்வொரு இலக்கமும் ஒவ்வொரு எழுத்து. புரிந்துவிட்டது.

மீண்டும் ஒற்றையை புரட்டினேன். முதல் எழுத்து 480இல் ஆரம்பிக்கிறது. ஆகக்கூடிய இலக்கம் 555. முன்னிரு பாடல்களின் எழுத்துக்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டாது. எனவே சங்கேத வார்த்தை அந்தப்பாடல்களில் இல்லை. வேறு எங்கேயோ இருக்கிறது. நல்லதம்பியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் முத்துராயர் முட்டாள் கிடையாது. இன்னொரு பிளானும் வைத்திருக்கவேண்டும். அந்த இரண்டாவது பாடல். ஏதோவொன்று அதிலே இருக்கிறது அரி. கண்டுபிடிடா. அந்த  “ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்”.. ஆயிரம் பாயிரம். பாயிர வரிகள். ஐந்திரம் நிறையோனின் பாயிர வரிகள். எவன்டா அந்த ஐந்திரம் நிறையோன்?.

சைக்கிள் அரசடிச்சந்தி, ஆலடிச்சந்தி என்று அலைபாய்கிறது. வீடு போகும் மனமில்லை. ஐந்திரம் நிறையோன் யார்? கம்பனா? வள்ளுவனா? ஒட்டக்கூத்தனா? நேரே சைக்கிள் பொன்னுச்சாமி மாஸ்டர் வீட்டுக்குப்போகிறது. போகும் அவசரத்தில் பொன்னுச்சாமி மாஸ்டர் பற்றிய ஒரு இன்ட்ரோ கொடுக்கும் மூடில் நானில்லை. நேரே விஷயத்துக்கு வருகிறேன்.

“சேர் .. ஐந்திரம் நிறையோன் என்றால் யார்?”

சேர் யோசிக்காமல் பதில் சொன்னார்.

“தொல்காப்பியர்”

“என்ன?”

“மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று சிறப்புப்பாயிரம் சொல்லுது.”

எல்லாமே கணத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

”ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி, அக்குற என்றால் எழுத்து. லக்குணு என்றால் இலக்கம். இரண்டுமே சிங்களச் சொற்கள். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருமொழியும் தெரிந்தவர் முத்துராயர் மாத்திரமே. ஆரியன் என்று அவர் செண்பகப்பெருமாளை குறித்திருக்கலாம். சிங்கள அரசனையும் குறித்திருக்கலாம். காதிரு இணைப்பீர் என்றால் காதும் காதும் வைத்தபடி. அப்படி என்றால், தொல்காப்பியவரிகளில் உள்ள எழுத்து வரிசையின் இலக்கம் கண்டறிந்து, செண்பகப்பெருமாள் சாகும்வரை பொறுத்திருந்து, பின்னர் புதையலை தேடிப்போய் எடுக்கச்சொல்கிறார். நானூறு கோடி ரூபாய்.ஐசலக்கா.

“சேர் உங்களிட்ட தொல்காப்பியம் இருக்குதா?”

கொண்டுவந்தார். “எழுத்து எனப்படுப அரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து …” 50, 51 … 478, 479, 480 ..”உட் பெறு புள்ளி உரு ஆகும்மே”. ஆகவே சங்கேத வார்த்தைகளின் முதல் எழுத்து எழுத்து “மே”. அடுத்தது 13வது எழுத்து “”. … 400வது எழுத்து .. “அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே”  “லை” … மேகலை. அடடா. 400 கோடி. இவ்வளவு ஈசியாக கிடைக்குமா? விறுவிறு என்று மிகுதி இலக்கங்களையும் கோர்த்தேன்.

“480(மே) 13(க) 400(லை) 550(க்) 54(கு) 1(அ) 300(மு) 23(து) 43(த) 234(ந்) 23(து) 43(நா) 13(க) 9(ரு) 555(க்)   54 (கு) 80(பு) 104(வி) 87(உ)509(வ) 234(ந்) 23(து) 43(நா)298(லு)354(ம)567(ணி) ..”

கவிதை கவிதை…

“மேகலைக்கு அமுதுதந்து நாகருக்கு புவிஉவந்து”

யாரு மேகலை? .. முத்துராயருமா? அடக்கடவுளே!

“நாலுமணி பல்லவத்து தீவினுக்குள் வாவியொன்று”

மேகலை, நாலு மணிபல்லவத்து, அட எங்கட மணிமேகலை. மேகலைக்கு அமுது .. அமுதசுரபி, நாகருக்கு புவி, நாடு கொடுத்து, அது எது? நாகதீவு. எங்கட நயினாதீவு. நயினாதீவில் எங்கே?

பூசணிக்கு நாலுகாதம் கீழ்திசையில் இருக்குதாம்.
பாசனத்து நீரகற்ற காரிருளும் அகழுமாம்.

பூசணி, நாகபூசணி அம்மன் கோயில். அதற்கு கீழ் திசை .. கிழக்கு ..கோயிலுக்கு கிழக்கே கடல் அல்லவா இருக்கிறது? நாலு காதத்துக்கு எங்கே போவது? கடலுக்குள்ளா?.

“சேர் கீழ் திசை என்றால் கிழக்கா?”

“சில நேரங்களில் தெற்கு திசையையும் கீழ் திசை எனலாம்”

“கடவுள் சேர் நீங்க .. உங்களுக்கு ஒரு வீட்டையே எழுதித்தாறன்”

உற்சாகத்தில் குதித்தேன். அப்பாடி. தெற்கால, நான்கு காததூரம். பாசனத்து நீரகற்ற. பாசனத்து நீரை எங்கே அகற்ற? அதற்கு குளம் வேண்டும். நயினாதீவில் எங்கு குளம்? இருக்கிறதே. ஒன்றே ஒன்று. கண்ணே கண்ணு. கிராய்க்குளம். நயினாதீவு கிராய்க்குளத்தில்தான் புதையல் இருக்கிறது. முதலைக்குளம். ஒருவரும் நீந்தப்போகமாட்டார்கள். கண்டுபிடிக்கவே முடியாது. முத்துராயரின் மாஸ்டர் பிளான். ஜீனியஸ். பிகேயிடம் போய்ச்சொல்லுவோமா? 400 கோடி. “அவன்” கிடந்தான். அவனுக்கு எதற்கு? மூன்று தலைமுறையாக குத்திமுறியிறதை, வானதி அக்கா, உதயசங்கர் அண்ணா, ஹம்சாநந்தினி அக்கா என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாததை இந்த அரி கண்டுபிடித்திருக்கிறான் என்றால், .. மீண்டும் பாடலை வாசித்துப்பார்த்தேன். பெருமையாக இருந்தது.

மேகலைக்கு அமுதுதந்து நாகருக்கு புவிஉவந்து
நாலுமணி பல்லவத்து தீவினுக்குள் வாவியொன்று
பூசணிக்கு நாலுகாதம், கீழ்திசையில் இருக்குதாம்.
பாசனத்து நீரகற்ற காரிருளும் அகழுமாம்.

அதற்குள் பொன்னுச்சாமி மாஸ்டரின் பெஞ்சாதி டீ கொண்டுவந்தார். குடிக்க நேரமில்லை.

“கோயிக்காதீங்கோ… நேரமில்லை … குறிகட்டுவான் கடைசி லோஞ்சிக்கு நேரம் போட்டுது”

“இப்பத்த பெடியளுக்கு இதே வேலையாப் போட்டுது …. பயங்கர கெட்டிக்காரர் எல்லாருக்கும் என்ன நடக்குதோ தெரியேல்ல”

சேர் புறுபுறுத்தார்.

“என்ன சொல்லுறீங்க சேர்?”

“இப்பிடித்தான் முந்தி வானதியும் .. ”

“வானதியும் .. ?”

அடிவயிற்றை கலக்கியது.

“ஏ/எல் ரிசல்ட் வந்து அடுத்தநாளே தொல்காப்பியம் படிக்க வந்தா…”

“வந்து?”

“ஏதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டு நயினாதீவுக்கு கும்புடுறதுக்கு ஓடிட்டா”

நான் அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் நின்றேன்.

“என்ர அம்மாளாச்சி .. நானூறு கோடி போயிட்டுதா”

அரற்றியபடி அயர்ச்சியில் மதிலோடு சாய, பொன்னுச்சாமி மாஸ்டர் ஆச்சரியத்தோடு சொன்னார்.

“அட உப்பிடித்தான் உதயசங்கரும் சாஞ்சவன்!”:

***********************

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக