நாவலோ நாவல் - சுட்ட பழமா? சுடாத பழமா?

 

MRS-SUDESH

பாலர் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்த கதை இது.

முருகனும் கிருஷ்ணாவும் சந்தையிலே வியாபாரம் செய்யும் சிறுவர்கள். முருகன் காய்கறி, பழங்கள் விற்பவன்; கிருஷ்ணா தேங்காய்க்கடை. ஒருநாள் மாலை, வியாபாரம் முடிந்து சந்தை கலையும் சமயம்; ஒரு பெரியவர் சாமான் வாங்க வருகிறார்.  முருகனுடைய  கடையில் எல்லாமே விற்றுத்தீர்ந்து ஒரேயொரு முலாம்பழம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு பெரிய முலாம்பழம். பெரியவருக்கு பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.

"அடடா நல்ல பெரிய பழமாக இருக்கிறது .. என்ன விலைடா தம்பி?"

முருகன் எந்த தயக்கமுமில்லாமல் சொன்னான்.

"அந்த முலாம்பழத்தில் பழுது இருக்கிறது ஐயா "

நாவலோ நாவல் : சகுந்தலாவின் வெருளி

 

Vikram-aur-betal-sanjayhumania.com_

தன் முயற்சியில்  சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை இழுத்து, தன் தோளில் போட்டபடி, அடர்ந்த காட்டினூடே மௌனமாக திரும்பி  நடக்கத்தொடங்கினான்.

சற்றுநேரத்தில் தோளில் தொங்கிய வேதாளம் பேசத்தொடங்கியது.

“மன்னனே … உன்னைப்பார்த்தால் திறமைசாலி போல இருக்கிறாய். ஆனால் யாருடனோ விவாதம் செய்து தோற்றுப்போய், இந்த தேவையில்லாத வேலையை செய்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது. அப்படியே நீ என்னைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாலும், அவர்கள் கதையை மாற்றி மீண்டும் உன்னை தோற்கடிக்கவே பார்ப்பார்கள். சுதந்திரபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சகுந்தலா போன்று விவாதம் செய்திருந்தாயானால் உனக்கு இந்த நிலை வந்திருக்காது. … அவளின் கதையைக் கேள் சொல்கிறேன்..”

என்று வேதாளம் தன் கதையை சொல்ல ஆரம்பித்தது.

நாவலோ நாவல் : பைனரி பிரைவேட் லிமிடட்

 

FabienMerelle7

“எனக்கு பைனரி பிரைவேட் லிமிடடில் வேலை கிடைத்துவிட்டது… feeling excited”

முகநூலில் ஸ்டேடஸ் போட்டு ஒரே மணித்தியாலத்தில் எழுநூறு லைக்குகள். எண்பத்தியேழு வாழ்த்துக்கள். அதில் இருபது போட்டோ கொமேண்டுகள். பின்னே? பன்னிரண்டு வருடமாக ஒரே வேலைக்கு, ஒரே கொம்பனிக்கு இண்டர்வீயூவுக்கு போன, இன்டர்வியூவுக்கு போவதற்காக சம்பளம் வாங்கிய பேர்வழி, திடீரென்று வேலை கிடைத்துவிட்டது என்று ஸ்டேடஸ் போட்டால், லைக் அள்ளுவானா இல்லையா? ஆனால் ஒரேயொரு உறுத்தல் மாத்திரம். மியூச்சுவல் பிரண்ட்ஸ் இல்லாத ஒரு நண்பியிடமிருந்தும் ஒரு கொமெண்ட் வந்திருந்தது.

“ரெஸ்ட் இன் பீஸ்”

யாரென்று கண்டுபிடிக்கவேண்டும்.

நாவலோ நாவல் : கோட்டைப் பிரச்சனை

 

nieuhoff1

புங்கைதேவனை பறங்கியர் சிறைப் பிடித்துவிட்டனர். இம்முறை காட்டிக்கொடுத்தவன் சாவகசேனன். நல்லகாலம். நான் மட்டும் இல்லாதிருந்தால் புங்கைதேவன் செத்தே இருப்பான்.

யாழ்ப்பாணக் கோட்டையின் மத்தியில் உள்ள மைதானம். அதன் நடுவே புங்கைதேவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலைகுனிந்தபடி நிற்கிறான்.  அன்றைக்கு மைதானத்தைச் சுற்றி, யாழ்ப்பாணப் பட்டினமே குவிந்திருந்தது. விசேட விருந்தினருக்கென இரண்டு கொட்டகைகளைக் கொண்ட பார்வையாளர் மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்துக் கோட்டைக் கொமாண்டர்கள், வைஸ் கொமாண்டர்கள், கப்பித்தான்கள், அவர்களின் மனைவிமார், பாதிரியார்கள் என்று ஒரு கொட்டகை வெள்ளைக்காரத் துரைமார்களால் நிரம்பியது. மற்றக்கொட்டகையில் வன்னிமைகள், முதலியார்கள், சிறாப்பர்கள் என உள்ளூர் துரைமார். சாவகசேனனுக்கு மூன்றாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாண்டு வாத்திய அணிவகுப்பு தயாராக நிற்கிறது. எல்லோரும் யாழ்ப்பாணக் கோட்டையின் கொமாண்டர் ரோட்ரிகோ டி சொய்சாவின் வரவுக்காக காத்திருக்கிறார்கள். 

புங்கைதேவன் மெதுவாக தலை நிமிர்த்தி, சுற்றிவர நோட்டம் விடுகிறான்.

“மரியா எங்கிருக்கிறாள்?”

நாவலோ நாவல் : குண்டர் கூட்டம்

 

விசாரணைக்காக அழைத்து வந்திருந்தார்கள். நாலாம் மாடி. 

கூட வந்தவர்கள் ஏறவில்லை. லிப்ட் இருந்தது. கண்ணாடி. வெளியே ஒன்றும் தெரியவில்லை. உள்ளே லிப்டில் பட்டன்கள் எதுவும் இருக்கவில்லை. நுழைந்ததும் தானாகவே நான்காம் மாடிக்கு லிப்ட் போய் நின்றது. கதவு திறந்துவழிவிட, ஒரு பெண் “ஆய்புவன்” என்று வரவேற்றாள். தொடர்ந்து சிங்களத்தில் பேசினாள். புரிந்தது.

“என் பெயர் சந்திரிகா, உங்களை விசாரணை செய்யப்போகும் அதிகாரி நான்தான்”

சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்ததில் அவள் முன்புறத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. பின்புறம். உயர்த்திப்போட்ட கொண்டை, முதுகு பரந்து தெரியும் பிளவுஸ் என்று கீழே கமராவை பதித்தால், இடுப்பு ஒரு இஞ்சி வெளியே தள்ளுப்பட்டு இறுக்கிக்கட்டிய சேலை. இடுப்பின் பின்புறம் அது தொங்கியது. அட இவளுக்கும் கூடவா குண்டு?

உள்ளே ஒரு ஹோலில் இருக்கை ஒன்றில் அமரச்சொல்லி சைகை காட்டினாள்.

விசாரணைக்கு அரை மணிநேரம் இருக்கு. சிறிது நேரத்தில் ஸ்ரீலங்கன் தேநீர் வரும். குடியுங்கள். மலசலகூடத்துக்கு போகவேண்டுமா? ”

இல்லை என்று நான் தலையாட்டினேன். சடாரென்று ஏதோ ஒரு இலத்திரனியல் கருவியை கையில் ஒட்டிவிட்டாள்.

நாவலோ நாவல் : கந்தரோடை கலகம்

 

கந்தரோடை என்ற ஊரின் பெயரைச்சொன்னாலே யாழ்ப்பாண இராசதானி முழுதும் கொஞ்சம் மரியாதையாக பார்க்கும். காரணம் கந்தரோடையில்தான் அதிகம் கற்றுத்தேர்ந்த ஞானச்சித்தர்கள் இருக்கிறார்கள். அதிலும் அங்கேயிருக்கும் பரந்துவிரிந்த ஒரு நாவல் மரம் யாழ்ப்பாண இராசதானி தாண்டி வன்னியிலும் பெயர்போன நாவல் மரம். காரணம் அந்த நாவல் மரத்துக்கு கீழேதான், தினந்தோறும் ஞானமார்க்கத்தில் உள்ளவர்கள் அறிவுப்போர்களை நடத்துவார்கள். பொதுவாக சுதுமலை, கோண்டாவில், கந்தரோடை போன்ற பிரதேசங்களில் வசித்தவந்த தமிழ் பௌத்தர்களுக்கும், நல்லூர், பூநகரி, மாவிட்டபுரம் பகுதிகளில் வசித்த தமிழ் சைவர்களுக்குமிடையிலேயே கடும் விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களில் அவ்வப்போது சில நாத்திகர்களும் பங்குகொள்ளுவதுண்டு.

நாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்

 

Alice in a Flood of Tears

அப்போது சிவகாமிக்கு நான்கு வயது. ஒருநாள் பின்னேரம் அவள் அப்பாவோடு காலிமுகத்திடல் கடற்கரைக்குப் போனாள். வெள்ளவத்தையிலிருந்து நூறாம் இலக்க பஸ்ஸில் ஏறினால் அரை மணித்தியாலத்தில் காலிமுகத்திடலுக்கு போய்விடலாம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கடற்கரைக்கு ஐந்து நிமிட நடை. இறால்வடை வாங்கிச்சாப்பிட்டுவிட்டு, படிக்கட்டுகளால் கீழே இறங்கினால், மணல் கடற்கரை. அன்றைக்கு சிவகாமி தகப்பனோடு சேர்ந்து கடலில் குளித்தாள். அவள் கடலில் குளிக்கவென்று ஒரு பொம்மை பலூன் டயரை அப்பா வாங்கிக்கொடுத்திருந்தார். அதை இடுப்பில் கொழுவியபடியே தகப்பன் பிடித்திருக்க அவள் கடலில் மிதந்தாள். ஆனாலும் முதல் அனுபவம். தெரியாத்தனமாக கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட, தலையில் புரையேறிவிட்டது. 

“ச்சிக் கெட்ட உப்பு” என்று அன்று முழுக்க சிவகாமி சொல்லிக்கொண்டிருந்தாள்.

நாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்

 

images32

அந்த ஊரின் மத்தியிலே ஒரு மலை இருந்தது. அடிவாரத்தைச் சுற்றிவர குடியிருப்பு, வயல்வெளி, வெட்டவெளி என்றிருக்க, நட்ட நடுவிலே இருக்கும் தனி மலை. மலையின் உச்சியில் ஒரு பிள்ளையார் கோயில். கோயில் என்றால், ஒரு சின்ன பனையோலைக் கொட்டில். உள்ளே ஒரு பிள்ளையார் படம். முன்னாலே திருநீறுத் தட்டு. குட்டி உண்டியல். எப்போதாவது தவறிப்போய் ஒதுங்குகின்ற ஆட்டுக்குட்டிகள் போடும் புழுக்கை. அவ்வளவுதான். கோயிலின் வாயிலில் ஒரு மணி கட்டப்பட்டிருந்தது. மணி முழுதும் புறாப்பீ ஒழுகி காய்ந்து ஒட்டியிருக்கும்.

அந்த ஊரில் வசிக்கும் நமசிவாயம். ஒரு ஓய்வுபெற்ற ஓவசியர். அவர் ஒவ்வொருநாளும் அதிகாலை, மூன்றரை மணிக்கு "டாண்"  என்று எழும்புவார். எழும்பின நேரம்    தொட்டு பதட்டமாகவே இருப்பார். அவரின் பதட்டத்தை மனைவி முதற்கொண்டு பேரப்பிள்ளைகள் வரை எவருமே கணக்கெடுக்க மாட்டார்கள். அவர் தானே எழும்பி, தானே பிளேன்ரீ வைத்துக் குடித்துவிட்டு, ஒரு அரிக்கன் லாம்பை ஏற்றிக்கொண்டு, வீட்டிலிருந்து வெளியேறுவார். முற்றத்தில் படுத்திருக்கும் அவர்கள் வீட்டு நாய், இவரைக்கண்டதும் அடுத்தபக்கம் குறண்டிக்கொண்டு படுக்கும். கூடப்போகாது. வாலைக்கூட ஆட்டாது.

நமசிவாயம் இதையெல்லாம் கணக்கெடுக்காமல் வயல்வேளிக்குச்சென்று, துரவிலே குளிர்தண்ணியில் தலையில் குளிப்பார். பின்னர் ஈர வேட்டியோடு மலை ஏறத்தொடங்குவார். அவர் அப்படி ஏறத்தொடங்கவும், நேரம் நான்கு மணியாகவும் சரியாக இருக்கும். நமசிவாயத்தாருக்கு அப்போது பதட்டம் எகிறிவிடும். விறு விறுவென்று நடக்கத் தொடங்குவார். மலை உச்சியை அவர் அண்மிக்கும்போது நேரம் ஐந்து மணி ஆகியிருக்கும். அவர் முகத்தில் ஒரு இனம்புரியாத கவலை. ஏறத்தாழ ஓடவே தொடங்கியிருப்பார். 

நாவலோ நாவல் - ஏழு நாட்கள் ஏழு கதைகள்

 

Vandhiya-thevar-azhwarkadiyan

பண்டைய தமிழ் வரலாற்றில் ஒரு வழக்கம் உண்டு. ஏதாவது திருவிழா, கொண்டாட்டங்களில் மக்கள் கூட்டம் கூடினால், அங்கே அறிஞர்கள் பலர் கூடி தமக்குள்ளே வாதப்போர்களில் ஈடுபடுவர். எப்படி? என்றால் வாதப்போர் செய்ய விரும்புபவர் ஒரு நாவல் மரக்கிளையை தனக்கு முன்னே நட்டுவைத்துக்கொண்டு “நாவலோ நாவல்” என்று கூவுவார். உடனே அவரோடு வாதப்போர் செய்யவிரும்புவர் முன்னே வருவார். வாதப்போர் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். சைவ, வைணவ, சமண, பௌத்த விவாதங்களாக இருக்கலாம். கடவுள் இருக்கிறார் இல்லை என்ற வாதமாக இருக்கலாம். அறிவியல் வாதமாக இருக்கலாம். அல்லது மூல வியாதிக்கு காரணம் சோழ மகராசனா? என்ற அபத்தமான டொபிக் கூட பேசப்படும். ஏதோ ஒரு வாதம். வாதத்தில் தோற்பவர், தான் உடுத்தியிருக்கும் துணியைத்தவிர மிச்ச எல்லாவற்றையும் இழக்கவேண்டும். இறுதியில் வெல்பவர் அந்த நாவல் கிளையை பிடுங்கி உயர்த்தி “நாவலோ நாவல்” என்று கூவிவிட்டு மீண்டும் தனக்கு முன்னே நாட்டுவார். கிட்டத்தட்ட WWF கணக்கில் இந்த வாதப்போர் நடைபெறும்.