Skip to main content

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது. 

நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலா. ஒவ்வொரு இரவும் பிறிதொரு நிலா. 

ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்வையும் அதன் நிறை குறைகளோடு கொண்டாடியவர் விசாகன். தமிழில், அதுவும் ஊர்த்தமிழில் கவனமாக இருப்பார். ஏதோ ஒரு கட்டுரையில் நான் “சிதைக்கவோ” என்று இங்கிதம் கருதி எழுதிவிட்டேன். இல்லை அதைச் “சிரைக்கவோ” என்றே எழுதவேண்டும் என்று இன்பொக்சில் சொல்லி மாற்றவும் வைத்தார். ஒரு கட்டுரையில் வெரித்தாஸ் வானொலியின் ஒலிபரப்பு நேரத்தை மாற்றி எழுதிவிட்டேன். திருத்தினார். இந்தப்பதிவிலும் நிறையத் தவறுகளை விட வேண்டும்போல் உள்ளது. அவருடைய திருத்தங்களால் என்னுடைய இன்பொக்ஸ் நிரம்பி வழியட்டும்.

இந்த அஞ்சலி நிஜமாகவே வேலிகளைத் தொலைத்த ஒரு படலையின் கதைதான். விசாகன் கிடுகுவேலி இணையத்தளத்தில் நம் வாழ்வின் சின்னச் சின்ன அன்புகளை வரலாறாக எழுதியவர். நிறையச் சாத்தியங்களைச் சுமந்துதிரிந்த எழுத்தாளர். இப்போது அந்த இணையத்தளத்துக்குள் நுழையமுடியவில்லை. கிடுகுவேலி முடங்கிக்கிடப்பது வருத்தத்தையும் கூடவே அச்சத்தையுமே ஏற்படுத்துகிறது. 

காலையில் செய்தி அறிந்ததிலிருந்து விசாகனுடைய டைம்லைனில் அலைந்துகொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய ஸ்டேடஸ் ஒன்று இப்போது ஏற்படுத்துகின்ற முரண்நகையை எதிர்கொள்ளமுடியவில்லை.

“யாராவது உயிரோடு இருக்கிறீங்களா என்பது இன்று கேலியாகப் பார்க்கப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் வலி மிகக் கொடுமையானது.”

அதற்கு நண்பர் ஒருவர் போட்டிருக்கும் கொமெண்ட் கொடுக்கும் வலி இன்னமும் கொடூரமானது.

“உயிரோடு இருக்கிறீங்களா?”

விசாகனுக்கு அஞ்சலிகள்.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.