நகுலனின் இரவுகாவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. 

நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில் அண்ணி. காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. காப்பது என் கடன் எனில் எவரிடமிருந்தெல்லாம் இவர்களைக் காத்துக்கொள்கிறேன்? நட்சத்திரங்களிடமிருந்தா? நிலவிடமிருந்தா? பறவைகளிடமிருந்தா? அடர்ந்து பரவிக்கிடக்கும் இரவிலிருந்தா? இரவுக்கு அப்பாலே வேட்டைக்குத் தயாராயிருக்கும் இரை தின்னிகளிடமிருந்தா? கெளரவர்களிடமிருந்தா? சோதரர்களிடமிருந்தா? 

அல்லது என்னிடமிருந்தா?

000

நல்ல மனிதர்களைத் தள்ளியே வைத்திருத்தல் சாலம் என்று படுகிறது. அவர்கள் என்னை நெருங்கும்போது நெஞ்சு படபடக்கிறது. அடிவயிறு கனக்கிறது. கால்களுக்கடியில் நெருப்பு சுவாலை பரப்பி எரிகிறது. அவர்களைக் கொன்று குவித்தாலேயே மனம் நிம்மதி அடையும்போலத் தோன்றுகிறது. எட்ட இருக்கும்போது அவர்களையே நினைந்து ஏற்றிக் கொண்டாடி மகிழ்ந்த மனதுக்கு, அவர்கள் கிட்ட வரும்போது மாத்திரம் அப்படி என்ன அழுங்கு? நல்ல மனிதர்கள் என்னைச் சிறுமைப்படுத்துகிறார்கள். அவர்கள் அருகாமையில் என் பிம்பம் மாடிக்கட்டடத்திலிருந்து விழுந்து சிதறும் நிலைக்கண்ணாடியாய் உரு அழிகிறது. விழும்போது அவர்களையும் கூட இழுத்துக்கொள்ளவேண்டும். சிதறித் துண்டு துண்டுகளாகி, உன்னுடல் என்னுடல் எதுவென்று தெரியாவண்ணம் பரவி. பத்தோடு பதினொன்றாகி. 

நகுலனாயிருத்தல் எப்போது எனக்குச் சாபமாகிப்போனது? 

000