Skip to main content

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்



ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.

எப்பவுமே எனக்கு முதல் பிடிச்ச வேலையென்றால் சமையல் தான். சோறு கறிகள் எண்டு இல்ல, விதம் விதமா பலகாரங்கள், பேக்கிங் ஐட்டம்ஸ், வேற வேற நாட்டுச் சாப்பாடுகள் என்று எப்பவும் செய்யிறதுதான். (வீட்டில நாலு சோதனை எலிகள் இருக்கேக்க என்ன குறை சொல்லுங்கோ!) இப்பவோ...சரசு மாமிக்கு எப்பிடி விளமீன் வாசனையோ அப்பிடித்தான் எனக்கு சமையல் பலகார வாசனையா கிடக்கு. அதில இருந்து என்னை மீட்க நானே பெரும் போராட்டம் நடத்த வேண்டிக்கிடக்கு.

கிட்டத்தட்ட மூன்று கிழமைகள் பயணம் செய்து வந்த புத்தகம். கடந்த இரண்டரை மாதங்களாக இதோ இப்பவரை என் கண்பட கணனிக்குப் பக்கத்தில் இருக்கு. 'எப்ப நீ என்னை முடித்து மற்றபுத்தகங்களோடு சேர்த்து அந்த புத்தக அலுமாரிக்குள் வைப்ப?' என்று கேளாமல் கேட்டபடி. இதோ விளமீன் வாசித்து முடித்து புத்தகத்தின் ஆசைக்கு வழி செய்துவிட்டேன்.

சிலவருடங்களுக்கு முதல்தான் எனக்கு 'படலை 'அறிமுகமானது. அதுவும் உஷாந்தியால் . அதன் பிறகு வாசிக்கும் எண்ணம் வந்தால் அங்குதான் போவேன். ஏதோ ஊரில் சென்று நிற்கும் உணர்வு தரும் இடம் அது .

அங்கிருக்கும் கதைகள், கட்டுரைகள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்தவைதான். இருந்தாலும் இப்புததகத்தில் உள்ள ஒவ்வொரு சிறுகதையையும் மீண்டும் வாசிக்கையில் முதல் தடவை போன்றதொரு தாக்கம் ஏற்பட்டதை உணரமுடிந்தது.

'கனகரத்தினம் மாஸ்டர்', நம்மில் பலர் இப்படித்தான்.பலமும் அதிகாரமும் இருந்துவிட்டால் சற்றேனும் நம்மைவிட பலம் குறைந்த இடம் என்று பட்டால் பிரயோகித்து மகிழ்வோம். அதுவே நமக்கு என்று வருகையில்? வெளிநாட்டுவாழ் நம்மவர் வாழ்வின் ஒரு பக்கம் கதையின் போக்கில் மிக்க இயல்பாக விரிகின்றது.

'உஷ்...இது கடவுள்கள் துயிலும் தேசம்', மூன்று நான்கு தடவை முன்னர் வாசித்த கதை. இம்முறையும் கண்களில் நீரோடு வாசிக்க வைத்தது. அதன் பிறகு இரண்டு கிழமைகள் நான் சமாதானத்தின் கதைப்புத்தகம் தொடவில்லை. எத்தனை தடவை வாசித்தாலும் மறையா வலிதரும் கரு அது. ஜேகேயின் எழுத்தில் உயிர்ப்போடு எம்முன் வலம் வருகின்றது. இழப்புகளின் வலியை அனுபவித்தாலே முழுமையாக உணரமுடியும் என்றில்லை , தத்ரூபமான எழுத்தாலும் இழப்பின் வலியைத் துல்லியமாக உணரச் செய்ய,ஏங்கிட வைக்க முடியும்.

சந்திரா என்றொத்தி இருந்தாள், விசையறு பந்து, நகுலனின் இரவு கதைகள் பற்றி சொல்லுமளவுக்கு எல்லாம் என்னிடம் அறிவு இல்லை. ஜேகேயில் மிக்க பொறாமை வரவைத்த கதைகள். ஆழ்ந்து வாசித்து அனுபவிக்க வேண்டியவை. பல இடங்களில் மனத்தைக் கனக்க வைத்த வாசிப்பு. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்கள் பல .

'விசயறுபந்து' OMG! முதன் முதல் வாசிக்கையில் டப்பென்று எனக்கு அந்த பந்து விசயம் விளங்கேல்ல. இரண்டாம் தடவை வாசிச்சுத் தான் விளங்கிச்சு. இடையில உஷாட்ட கூட கேட்ட நினைவு. இப்படியெல்லாம் எழுத உங்களால்தான் முடியும் ஜேகே. என்னோவோ ஒன்று என்று விட்டுவிட்டுச் செல்லாது எப்படியாவது அது என்ன என்று அறிந்திட வேணும் என்று வைக்கவும்.
மதுவந்தியில் பரிதாபம் கொள்ளவும் பயமாக இருந்தது.

'நகுலனின் இரவு' நிறைய இடங்கள் மனத்தாங்கல், ஆதங்கம் கூடவே இயலாமை எல்லாம் கலந்து கட்டி நகர்கின்றது. copy paste செய்யமுடிந்திருப்பின் நிறைய இடங்கள் இங்கே வந்திருக்கும் .

'சைக்கிள் கடை சாமி', பாக்கியம் சாமி ஹா...ஹா...நான் முதல் தடவை வாசித்துவிட்டு ஜேகேக்கு நீண்ட கமெண்ட்ஸ் எழுதி அனுப்பியிருந்தேன். அவருக்கு நினைவிருக்கோ தெரியாது . அப்பா அப்போது பைபாஸ் சேர்ஜரிக்கு தியேட்டருள் இருந்தார். இருந்தும் ஜேகே பதில் அனுப்பியிருந்தார். என்னதான் சொல்லுங்க ஜேகே, சாமிக்கு மட்டும் மரியாதை குடுத்து எழுதி இருப்பதை இப்பவும் நான் கோபத்தோடுதான் பார்த்தேன். பாக்கியத்துக்கும் அந்த மரியாதை கொடுத்திருக்கலாம் ஹே ஹே

'துங்காத இரவு வேணும்', மீண்டும் கலங்க வைத்த கதை. அன்று பெருவிரலில் சின்ன அடிபட்டத்துக்கே அவ்வளவு வருந்திய பெண், இன்று, இத்தனை வேதனைகளையும் சகித்துக்கொண்டிருந்தது கணவன் மகனை அரைகுறையாவேணும் உணர்ந்து, முடியும் மட்டும் அதை அனுபவிக்க எண்ணியோ என்ற எண்ணம் என்னுள். வைத்தியர் அறை நோக்கிச் சென்ற சிவலிங்கம் அப்படியே திரும்பிவந்து மனைவியின் அருகில் அமர்ந்து கொள்ளமாட்டாரோ என்றிருந்தது எனக்கு. திரும்பவும் சிலகிழமைகள் புத்தகம் என் கைக்கு வரவில்லை.

'சமாதானத்தின் கதை', சமாதானத்திட்ட எப்படிப் போறது? என்ற கேள்வியோடே நம் காலம் போயிரும். அதைக் கூட நம்மளால் உணர முடியுமோ என்னவோ!

'மறைசாட்சி' மரியதாஸ் மீது பரிதாபம் கொள்வதா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எத்தனை எத்தனை மரியதாஸ்கள் தங்களை ஒரு பரிதாபகரமான நிலையில் நிறுத்திக்கொண்டு தம் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு தன்னைச் சேர்ந்தவர்களை அளவிட்டுக்கொண்டு என்று வாழ்வைக் கடத்துகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் இருந்தாலும் இதே நிலைதானோ என்றும் இருந்திச்சு.

வெம்பிளி ஓஃப் ஜஃப்னா அரசியலாட்டம் என்றால் 'விளமீன்' புத்தகத்தில் இப்போ வாசித்த்ததோடு 3 தடவைகள் வாசித்த கதை.

அன்று சரசு மாமி திருமணத்தின் பின்னர் 8 வது நாள் சமைத்த மீன் வாசனையே அவரோடு கூடவே இருந்திருந்தால் என்று எண்ணாதிருக்க முடியவில்லை. நம்மிடையே சரசு மாமிகள் மலிந்து கிடக்குகிறார்கள். அதில் எத்தனை பேருக்கு எப்பாடுபட்டேனும் கொஞ்சநாளேனும் விரும்பியதைச் செய்திரவேணும் என்ற முனைப்பு வரும்? பெரிய கேள்வி!

இன்னும் எத்தனை தடவை வாசித்தாலும் ஒத்த சொல்லும் தட்டாது வாசிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் !

உள்ளிருக்கும் கதைகளோடு கைகோர்த்து நிற்கும் அட்டைப்படம் புத்தகத்துக்குத் தனியொரு களை தருகின்றது.

ஜேகேயின் கொல்லைப்புறத்துக்காதலிகள், கந்தசாமியும் கலக்சியும் புத்தகங்களோடு சமாதானத்தின் கதையும் சேர்ந்திருக்கு, புத்தக அடுக்குகளில். இருந்தாலும், சமாதானத்தின் கதை ஒரு படி அதிகமாக பிடித்த புத்தகம். காரணம், கேட்டு வாங்கியிருந்தாலும் முதல் பக்கத்தில் கையெழுத்து இருக்கே!

அடுத்த புத்தகத்துக்கு ஆவலோடு காத்திருக்கிறேன் ஜேகே. அன்பான வாழ்த்துகள்!

இக்கதைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் முன்னரே நான் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வாசித்திருப்பீர்கள். இப்போது படலையில் இப்புத்தகத்தில் உள்ள கதைகள் இருக்காது என்று தான் நினைக்கிறன். அவை தவிர மேலும் பல சிறுகதைகள், கட்டுரைகள், கதைகள் அங்குண்டு. விரும்பியவர்கள் வாசிக்கலாம்.

வாசிப்பு, ஒவ்வொருவரின் விருப்புக்கு ஏற்ப மாறுபடும். என்றாலுமே படலை உங்களை நிச்சயம் ஏமாற்றாது. சிறப்பான வாசிப்பு அனுபவம் கிட்டும் என்பதை மிகுந்த பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன்.

-- ரோஸி கஜன்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக