Skip to main content

Disgrace


அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன்.
246645-booksவெண்மேக கூட்டம்!
சூரியன் மெதுவாய் நோட்டம்!
வெள்ளைக்காரி வெட்கம்!
கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five?
நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends என்று இப்போது தெரியும். சாப்பிட்டு முடிய நான் ஓடும இடமும் தெரியும்! அன்றைக்கும் அப்படித்தான். நடாலியாவை தேடி ஓடினேன்! அவள் அன்றும் இல்லை, but as usual a book did chose me again! This time அந்த புத்தகத்தின் பெயர் Disgrace!
DSC_3075
1999 ம் ஆண்டு புக்கர் பரிசு கிடைத்த நாவல்.  J.M.Coetzee என்ற எழுத்தாளர். அவருக்கு சிலவருடங்களுக்கு பின்னர் நோபல் பரிசும் கிடைத்தது. என்னடா இது நோபல் பரிசு நாவல் எல்லாம் அஞ்சு டாலரா. மச்சம்டா உனக்கு என்று வாங்கிவிட்டேன்! ஒரு வாரம் பத்து நாள், ட்ரெயினில், எவள் எந்த காட்டு காட்டினாலும் கவனிக்காமல் புத்தகத்தை மட்டுமே கவனித்து வாசித்து முடித்தும் விட்டேன்!
கதையை சொல்லமுதல் களத்தை சொல்லவேண்டும்! தென் ஆபிரிக்காவின் Apartheid க்கு பின்னைய காலம். Apartheid என்பது தென் ஆப்ரிக்காவின் வெள்ளையினவாத அரசு முறையை குறிக்கும். இந்த சிஸ்டம் 1993ம் ஆண்டுக்கு பின்பு தலைகீழாக மாறியது தெரிந்ததே. எங்கள் அனைவருக்கும் கறுப்பினத்தவர் சந்தித்த அடக்கு முறைகள் அநியாயங்கள் தெரியும். நெல்சன் மண்டேலா தெரியும்.  ஆனால் எங்களில் யாராவது கறுப்பின விடுதலையின் பின்னரான அந்த நாட்டு நிலைமையை சிந்தித்து பார்த்திருக்கிறோமா? அங்கே என்ன தான் நடக்கிறது என்று அறிய முற்பட்டு இருக்கிறோமா?
அதிகார மாற்றத்தின் பின்னரான தென் ஆபிரிக்க தேசத்தின் இனங்களின் நிலைகளை சொல்லும் நாவல் தான் இந்த Disgrace. அதிலும் வெள்ளையின மக்களின் உளவியல், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இதில் அதிகம். 
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். பிரிட்டிஷ் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை, கல்வித்தரம், ஆங்கில அறிவு எல்லாமே அவர்களுக்கு பெரும் பதவிகளை தேடித்தந்தது. இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இந்த சமநிலை மாறியது. சிங்களவர்களின் பொறாமை, மேலாதிக்கம், சிங்களம் மட்டும் சட்டம், நாட்டை எங்கே கொண்டு போய் விட்டது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த context ஓடு இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வாருங்கள்!
250px-Frederik_de_Klerk_with_Nelson_Mandela_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_19921993 ம் ஆண்டு கிளார்க்கும் மண்டேலாவும் ஒப்பந்தம் செய்து கொள்ளுகிறார்கள். நாட்டின் அதிகாரம் வெள்ளையர்களிடம் இருந்து கறுப்பர்களுக்கு மாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பர் ஆதிக்கம் பரவுகிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகம். திடீரென்று கிடைத்த அதிகாரம், வெள்ளையர் மீதிருந்த ஆவேசம், அங்கே இருக்கும் முதிய வெள்ளை தலைமுறை, இவர்களுக்குள் நடக்கும் ஒருவித சிக்கலான மன உணர்வுகள், கிலேசங்கள், கலாச்சார அதிர்வுகள், போராட்டங்கள் தான் இந்த கதை. அடடே இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கும் கதை.
கதை என்ன?
டேவிட் ஒரு வெள்ளை இன இலக்கிய பேராசிரியர். பெண் பித்தர். பெண்களை கொண்டாடுபவர். இரு முறை திருமணமாகி, விவாரத்தாகி, தொடர்ந்து ஒரே விலை மாதிடம் சென்று கொண்டிருப்பவர். அவளை கொஞ்சமாய் காதலிக்கவும் தொடங்கிய நேரம், அவளுக்கும் இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவர, அவர்கள் பிரிய நேரிடுகிறது. அப்போது தான் கல்லூரியில் தன் வகுப்பில் படிக்கும் மாணவி மீதே இச்சை கொண்டு அவளை தன் வயப்படுத்துகிறார். அவளுக்காக பாடத்தில் கூட தில்லு முல்லு செய்கிறார். பைரன் கவிதைகளை எக்ஸ்க்ளூஸிவ்வாக சொல்லிக்கொடுக்கிறார். இந்த விஷயம் பெரிதாக, விசாரணை கமிஷன் வரை போகிறது, இவர் மன்னிப்பு கேட்க மறுக்க வேலை போகிறது. எங்கேயோ தூரத்தில் கிராமத்தில் இருக்கும் தன் மகள் லூசியிடம் போக முடிவெடுக்கிறார்.
disgrace_stillஒரு கிராமம். லூசி ஒரு பூந்தோட்ட பண்ணை நடத்தி வருகிறாள். நண்பியோடு வாழ்ந்து வந்தவள், இப்போது நண்பி அங்கு இல்லை. அவள் ஒரு லெஸ்பியனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பண்ணையில் பணி புரியும் பெற்ராஸ், கறுப்பினத்தவன். அவன் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் பண்ணையை அபகரிக்க திட்டமிடுகிறான். ஒரு நாள் மூன்று கறுப்பர்கள் லூசியை பாலியல் வல்லுறவு செய்ய, லூசி கர்ப்பமாகிறாள். சிக்கல் வலுக்கிறது. அந்த கறுப்பர்கள் பெற்ராஸின் உறவுக்காரர்கள். ஒன்றுமே செய்ய முடியாது. பொலிஸ் கை விரித்துவிட்டது. லூசி இப்போது அந்த ஊரில் தனியாள். பெற்ராஸ் தன்னை லூசி திருமணம் செய்தால் தானே குழந்தைக்கு தந்தையாக இருக்க ஒப்புக்கொள்கிறான். ஆச்சரியம், லூசியும் ஆமாம் என்கிறாள். டேவிட்டுக்கு வெறுத்துப்போய் அந்த இடத்தை விட்டே போகிறார். மீண்டும் நகரத்துக்கு வர, அங்கே அவர் வீடு சூறையாடப்ப்ட்டு கிடக்கிறது.
disgraceகதை இப்படி போகிறது என்று வையுங்களேன். முழுக்க சொன்னால் ரங்கனுக்கு பிடிக்காது! மிக சிக்கலான நாவல் இது. தென் ஆபிரிக்க வெள்ளை கறுப்பினங்களுக்கிடையேயான எண்ணம் சிந்தனைகளில் உள்ள அடிப்படை வேறுபாடு ஒரு புறம். ஒரு குழப்பமான,  தார்மீக உணர்வுகள் இல்லாத, அதை கேள்வி கேட்க பிரியப்படாத டேவிட்டின் வாழ்க்கை. உன்னை போல பலர் செய்த கொடுமைகளுக்கு நாங்கள் பரிகாரம் சுமக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லும் லூசியின் வாழ்க்கை, எனக்கு விமர்சனம் எழுத தெரியவில்லை!
வாசிக்கும் போது ஒரே போக்கில் கதை போகாது. இது தான் சரி இது தான் பிழை என்ற ரமணிச்சந்திரன் கிடையாது. டேவிட் பீத்தோவன் பற்றி ஆராய்ச்சி செய்வார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு துடிப்பார். மகளின் திருமணமான நண்பி ஒருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வார். பைரன் கவிதைகளை காட்டி மாணவியை மயக்குவார். தான் செய்வது பிழை என்று தெரிந்தும், திருந்தும் வயதை தாண்டிவிட்டேன் என்கிறார். தப்பு செய்யும்போது அதற்கு சால்ஜாப்பு வைத்திருக்கிறார்.
நோபல் பரிசு நாவல். வதை தான் கதை. வதையின் பரிணாமங்கள் எங்குமே இறைந்து கிடக்கும் ஒரு black நாவல் என்று சொல்லலாம். ஆனால் ugly இல்லை. வாசிக்க சுவாரசியமான ரம்மியமான கதை ஓட்டம். கதையை ஒரு இழையில் சொல்லுவது எப்படி. ட்ரை பண்ணுகிறேன்!
டேவிட வெள்ளை இனத்தவர். பேராசிரியர்.
  1. விலை மாதுவிடம் செல்கிறார். அவள் பிரிகிறாள்
  2. மாணவியை மயக்குகிறார். படுக்கிறார். பிடி படுகிறார்.
  3. தென் ஆபிரிக்காவில், வெள்ளையின பேராசிரியர் செய்யும் தவறுக்காக வேலை போகிறது. நீக்குபவர்கள் பல்கலைக்கழகத்தினர். வெள்ளையினத்தவர். (அவர்களில் சிலரோடு கூட முன்னர் உறவு!)
  4. லூசி, அவர் மகள், கறுப்பர்கள் பாலியல் வல்லுறவு செய்கிறார்கள். கர்ப்பமாகிறாள்.
  5. போலீஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை. யார் இதை செய்தார்கள் என்றும் தெரிந்தும்!
  6. பெட்ராஸ் ஒரு கறுப்பன், லூசியின் பண்ணைக்காக குழந்தைக்கு தந்தையாகவும் தயார் என்கிறான். திருமணம் முடிப்பதாக சொல்கிறான்.
  7. லூசி சம்மதிக்கிறாள்.
  8. இறுதியாக டேவிட் தனியனாகிறார். No country for this old man!
பெட்ராஸ், கறுப்பு இனத்தவன், பண்ணை தொழிலாளி!
disgrace--john-malkovich-12020645
கொஞ்சம் யோசித்தால், ஆரம்பத்தில் வெள்ளையர்களிடம் இருந்த ஆதிக்கம் கறுப்பர்களிடம் இடம் மாறுகிறது இல்லையா? ஆனால் யாருமே இங்கே உத்தமர் இல்லை. எதுவுமே மாறப்போவதில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடம்பெயருகிறது என்பது தான் அந்த நூல்!
இது படமாக கூட வந்திருக்கிறதாம். நொட்டை அண்ணேயிடம் கேட்டு இருக்கிறேன். எப்படியும் எடுத்து தந்திடுவார்! பார்க்கவேண்டும்.

நண்பி அமுதா மீண்டும் மீண்டும் எனக்கு சொல்வது.
The world’s never been fair!