Skip to main content

அன்பில் அவன் சேர்த்த இதை!

 

ஐந்தாம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு. ரிசல்ட்ஸ் பார்க்கப்போன அப்பா திரும்பும் நேரம். சென்ஜோன்ஸ் கல்லூரி அனுமதிக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்கள். மொத்தமாக அறுநூறு மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் வெறும் முப்பத்தைந்து பேர்களை மாத்திரமே தெரிவு செய்வார்கள். வீட்டில் நம்பிக்கையில்லை. எனக்கோ அந்த கதீடறல் கட்டிடக்கலையும், பிரின்சிபல் பங்களோவும், ஐந்தடிக்கு ஒன்றாய் நிற்கும் மகோகனி மரங்களில் தெறிக்கும் ஒரு வித ஆங்கில வாசமும், இது தான் என் பாடசாலை என்ற எண்ணத்தை வேரூன்றவைத்துவிட்டது. வந்த அப்பாவின் முகம் சரியில்லை. இரண்டு புள்ளிகள். மயிரிழை .. அரும்பொட்டு என்று ஏதோதெல்லாம் சொன்னார். கத்த ஆரம்பித்து, அழுது கண்ணெல்லாம் சிவந்து படுக்கையறைக்குள் போய் போர்வையை மூடிக்கொண்டு, யாழ் இந்து கல்லூரியின் St.Johns-College-Jaffna_Voice-of-jaffna[3]நுழைவுத்தேர்வு விண்ணப்பபடிவத்தை அண்ணா கொண்டுவந்து தந்தபோது கிழித்து எறிந்தது இன்னமும் சன்னமாய் ஞாபகமிருக்கிறது. கடைசியில் அப்பா யார் காலையோ பிடித்து, டொனேஷன் ஐயாயிரம் ரூபாய் எங்கேயோ கடன் வாங்கி கொடுத்து, சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துவிடும்போது, முதல் நாள் வகுப்பை தவறவிட்டு இரண்டாம் நாள் தயக்கத்துடன் நுழைகிறேன். வகுப்பின் மிகுதி முப்பத்தைந்து பெரும் நீதானா அந்த கடைசி ஆள் என்று பார்த்தார்கள்.

முதல் அடி!

95இல் இடம்பெயர்ந்து இரண்டு வருடம் வன்னி வாசம். பாடசாலை இல்லை. அக்காவின் குட்டில், அக்கம் பக்கத்தில் இருந்த அண்ணாமார் தயவில் வீட்டில் இருந்தே படித்தது. ஒஎல் எடுத்துவிட்டு மீண்டும், இனிமேல் வன்னியில் இருக்கமுடியாது என்று யாழ்ப்பாணம் திரும்புகிறோம். திரும்பவும் சென்ஜோன்ஸ் கல்லூரி. எல்லோருக்கும் ரிசல்ட் வருகிறது. என் நண்பர்கள் பலருக்கு ஏழு டி. எனக்கு ரிசல்ட் இன்னமும் வரவில்லை. வரும்வரைக்கும் கணிதப்பிரிவில் சேர்க்கமுடியாது என்று மிரட்டல் வேறு. ரிசல்ட் ஒருவழியாக வன்னி பாடசாலையில் இருந்து வந்து, குமரன் மாஸ்டரிடம் தயங்கி தயங்கி, “சேர் எனக்கு ஏழு டி வந்திருக்கு” என்று சொல்ல அவர் சொன்ன பதில், “உனக்குமா .. ஏழு டி இப்பெல்லாம் மலிஞ்சு போயிட்டு”. 

இருபத்தினாலாவது அடி!

99ம் ஆண்டு ஏஎல் பரீட்சை முடிந்துவிட்டது. ஒரு நாள் இரவு ஞானபொன்ராஜா சேரும் நந்தகுமார் சேரும் வீடு தேடி வருகிறார்கள். பதறிப்போனேன். என்ன என்று கேட்டபோது, கம்பஸ் போகும் வரையிலும் தூய கணிதம்(Pure Maths), பிரயோக கணிதம்(Applied Maths) இரண்டும் படிப்பிக்கவேண்டும் என்றார்கள். அப்போது ரிசல்ட் கூட வரவில்லை. சந்தோஷம் கலந்த ஆச்சர்யம். பத்துவருட முடிவில் கிடைக்கும் முதல் அங்கீகாரம்.

ஓராண்டு கழிந்து, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் முல்லா லெக்சர்ஸ் கட் பண்ணிவிட்டு, ஸ்டாப் கண்டீனில் நானும் கஜனும் சமா. அம்மா என்னுடைய புதிதாக வாங்கிய எரிக்சன் T10 போனுக்கு அழைக்கிறார். குரலில் என்றுமில்லாத சிரிப்பு. என்ன? என்றேன். பிரின்சிபல் தனபாலன் சேர் கூப்பிட்டு அனுப்பினவர். நானும் அக்காவும் போனோம் என்றார். ஏன் என்றேன் அசுவாரசியமாக. “உனக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைச்சிருக்கு. ஒன்று வரப்பிரகாஷ்* ஞாபகார்த்த சிறந்த பொறியியல் பீடத்துக்கான மாணவன்” விருது. மற்றையது Scholastic Excellence பிரிவில் என்றார். அம்மாவின் குரலில் இருந்த பூரிப்பு நடுக்கத்திலேயே தெரிந்தது. 91இல் கடைசி மாணவனாக உள்ளே நுழைந்து பத்துவருட பள்ளிப்படிப்பில் முதல்மாணவனாக வெளியே வந்து, அடுத்த பத்து வருட வாழ்க்கையின் போக்கை நிர்ணயித்த இரண்டு தங்கப்பதக்கங்கள். மஞ்சள் ரிப்பனில் இரண்டையும் அணிந்து பார்த்தால் சும்மா ஜிவ்வென்று ஏறும்!

ஆருதி, அவள் சிரிக்கும் பொழுதுகளை விட அழும் தருணங்களே அதிகம். அவளை மசியவைப்பது கடினம். குருவி மாதிரி சீட்டி அடித்தால் திரும்பிப்பார்த்து அருமையாய் சிரிப்பாள். கொஞ்சம் நெடித்து காட்டினால் குஷி பிறந்துவிடும். கூடவே நெடிப்பாள். விதம் விதமாக சத்தம்போடுவாள். சுட்டிப்பெண்ணுக்கு முதலாவது பிறந்தநாள். போனபோது கேசி படமேடுத்துக்கொண்டிருந்தான். 18-55 லென்சுடன்! 55-200 லென்ஸ் எங்கே என்று கேட்க இல்லை என்றான். உடனேயே வீடு போய், என் கமராவை எடுத்துவந்து, கேதாவும் ஹர்ஷாலும் சமயம் கிடைக்கும்போது சொல்லிக்கொடுத்த நுட்பங்களை வெள்ளோட்டம் விட்டேன். தெரிந்த ஒரே மோட் ஆபேர்ச்சர் ப்ரியோரிட்டி தான். குறைத்து கூட்டி, ப்ளர் ஆக்கி பல கிளிக்குகள். பிள்ளை தான் கேக் சாப்பிட்டுவிட்டு அப்பாவுக்கு ஊட்டிவிட்ட கணம் ஒரு கிளிக்! அந்த கிளிக் தான். ப்ச்… ப்ரிவியூ பார்த்தபோது தான், கஜன் ஏன் பாசிர்-ரிஸ் போய் மூன்று மணித்தியாலம் ஒரு கொக்கு முகத்துக்காக காத்திருந்து படம் எடுக்கிறான் என்று புரிந்தது. 600D இல் படம் எடுப்பது ஒரு divine feeling!

உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம், குட்டி” எல்லாம் எழுதியபோது அதுவும் சேர்ந்து அழுதது. வியாழமாற்றங்களில் என்னோடு சேர்ந்து சிரித்தது. அவசரத்துக்கு டெவலப்மென்ட் என்றால் லினக்சுக்கு சலிக்காமல் மாறும். நான்கைந்து சேர்வர்கள் ரன் பண்ணினாலும் கன் மாதிரி நிற்கும். ஒரு சிறுகதை. யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் கியூவை வைத்து, அதில் நடக்கும் சம்பவங்கள் வாழ்க்கை எல்லாமே ஒரு கோர்வையாய், பரமேஸ்வரா சந்தியில் இருந்து நாச்சிமார் கோவிலடி வரை நிற்கும் கியூ. சொந்த அனுபவம். எழுதி எப்படி முடிப்பது என்பதில் ஒரு குழப்பம். எப்போதாவது பொறி தட்டும் அப்போது முடிப்போம் என்று விட்டுவிட, அது என் லப்டோபில் ஆறுமாசமாய் கிடந்தது. மூவாயிரம் பாடல்கள். அதில் கடைசியாக நான் டவுன்லோட் பண்ணிய ஒ ஒ மதுபாலா முதல் ரகுமானின் “People Like Us” வரை … எல்லாமே.

photo (3)[3]

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்த நண்பன். காலை எழுந்து அயர்ன் பண்ணும்போது “காதல் மயக்கம்” பாடும். தேநீர் குடிக்கும்போது David Letterman ஷோவில் Julia Roberts ஐ லொள்ளு பண்ணும். Toilet இல் Steve Jobs சுயசரிதம் வாசிக்கும். யாருமே இல்லை என்றால் நான் இருக்கிறேன் என்று “கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா” சித்ரா குரலில் சிணுங்கும். என் ஐபாட் சுஜாதாவின் ச்சோ ஸ்வீட்!

சின்ன வயதில் “ஒரு சைக்கிள் வாங்கித்தாங்க” என்றால் மறுபேச்சு இல்லை. Bat வேண்டுமென்றால் அப்பா வாங்கியது BDM. அப்போது அதன் அருமை தெரியாமல் டெனிஸ் போலில் விளையாடுவேன். சில நேரங்களில் கல்லை போட்டு கூட அடித்திருக்கிறேன். சென்றமாதம் தான், “டேய் சும்மா தானே வைச்சிருக்கிறாய். யாழ்ப்பாணம் போறன். செலவுக்கு தாவேன்” என்று அலுமாரியில் வைத்திருந்த அந்த ஆயிரம் டொலர்களை காட்டி கேட்டார். நான் கொடுக்கவில்லை. அது “கடன் திருப்பி குடுக்க வைத்திருக்கும் காசு” என்றேன். அப்பா முகம் கோணிவிட்டது.  நான் ஒரு வெறி நாய். ச்சே பணம் என்றால் ஏன் எனக்கு இப்படி ஒரு வெறி வருகிறது? ஒரு பொசசிவ்னெஸ். நான் மட்டுமே செலவழிக்கவேண்டும். மற்றவர்களுக்கு கூட நானே செலவழிக்கவேண்டும்.. எங்கிருந்து வரும் மனோபாவம் இது? தொலைந்து போ சனியனே!

என் வீடு. தனிமையில் இருக்கும் பொது செல்லம் கொஞ்சும். உரிமை கொண்டாடும். எதையும் போட்ட இடத்தில் போட்டபடி விட மனம் எண்ணாது. மேகலா சிறுகதையில் வரும் பியானோ தவிர மிகுதி எல்லாமே வீட்டில் இருக்கும். அந்த கனவும் தான். அலுவலகம் முடிந்து திரும்புகையில் கராஜ் கதவு திறக்கும்போது ஒருவித குதூகலம் எட்டிப்பார்க்கும். ஹோம் தியேட்டரில் “என் வீட்டு தோட்டத்தில்” கேட்டால் இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி சத்தம்போடாமல் சிரிக்கும் சிரிப்பு துல்லியமாய் கேட்டும். புத்தக வரிசையில் “Restaurant At The End Of The Universe” எடுத்து வாசித்துக்கொண்டே சாய்ந்தால், சாய்ந்து சாய்ந்து ராஜா இசை தூரத்தில்...

சொர்க்கம்!

இதெல்லாம் வெறும் இரண்டடி இரும்பு ஸ்க்ரூட்ரைவரால் திருகி பூட்டை உடைத்து, எல்லாவற்றையும் விசிறி எறிந்து, கிடைத்ததை எல்லாம் சூறையாடிக்கொண்டுபோன திருடனுக்கு எங்கே புரியப்போகிறது?

Sad smile

 

வரப்பிரகாஷ் : இவர் பல்கலைக்கழக ராக்கிங்கின் போது சீனியர்களால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சென்ஜோன்ஸ் பழையமாணவன்)

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட