Skip to main content

பச்சை மா

670px-Make-Chapati-Step-3

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?”

“இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்”

“சரியான டைம் சொல்லுங்கோ”.

இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு.  மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,


“எட்டு மணியளவில நாக்கு தள்ளினது ஞாபகம் இருக்கு .. அதுக்குப்பிறகு என்னண்டு தெரியேல்ல … இஞ்ச வந்திட்டன்.. “

எல்ஸீடி திரையில் இன்னமும் நித்தியானந்தன் தூக்கில் தொங்கிய படுக்கையறை தெரிந்தது. கோமதியும் மகள் தூரிகாவும் அழுதுகொண்டிருந்தனர். காரிகன் இன்னமும் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருக்கலாம். முன்வீட்டு கமலநாதன் பொலீசுக்கு கோல் பண்ணிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி மோகனாதேவி கோமதியை கட்டியணைத்து ஆறுதல் படுத்தியும் அழுதுகொண்டுமிருந்தாள். நித்தியானந்தனுக்கு தன் பிணத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை. ஒடுங்கிய சிறு கால்கள். பெரிய வண்டி. சின்னதான வட்டத்தலை. கழுத்தில் இன்னமும் சுருக்குக் கயிற்றின் தடம் தெரிந்தது. கயிறு இறுக்கி தலைக்கு இரத்தம் போகாமல் தலை வெளிறிப்போய் இருந்தது. சனியன் பிடிச்சனான். சரி சாவதென்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் கயிற்றில் தொங்காமல் பிரிட்டோன் குடித்திருக்கலாமே. நூறு குளுசை. விடிந்தால் மரணம். ஏன் இப்படி அசிங்கமாக. சகிக்கவில்லை.

கோமதி கதறிக்கொண்டிருந்தான்.

“என்ர நித்தா …. என்னை இப்பிடி அம்போண்டு விட்டிட்டுப் போக எப்பிடி மனம் வந்துது? அப்பிடி நான் உங்களுக்கு என்ன குறை வச்சன்? … ஒருநாளும் இல்லாத திருநாளா இண்டைக்கு நீங்களே ரொட்டி சுடப்போறதா சொன்னீங்களே .. இப்பிடி அவுக்கெண்டு தொங்கீட்டீங்களே”

கோமதிக்கே உரித்தான இயல்பான நக்கல் புருஷன்காரனின் செத்தவீட்டில் அழும்போதும் அவளிடம் இருந்தாற்போல் தோன்றியது. அந்தக் காட்சியைப் பார்க்கவே தலையிடித்தது.

நித்தியானந்தன் திரையிலிருந்து கவனத்தைத் திருப்பி இப்போது அவனிருந்த மண்டபத்தைக் கவனித்தான். நூறுக்கு நூறு அடி விசாலமான மண்டபம் அது. அதற்கு மேலும் இருக்கலாம். மண்டபம் முழுதும் கதிரைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. இவன் நான்காவது வரிசையின் நடுவில் உட்கார்ந்திருந்தான். சுவர்கள் முழுக்க எல்சிடி திரைகள் ஆயிரத்துக்கும் அதிகமாகப் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றில்தான் நித்தியானந்தன் நாக்கு தள்ளிப்போய்க் கிடந்தான். ஏனையவை இயங்கவில்லை. மண்டபத்தின் ஒரு பக்கம் கதவு ஒன்று. அதற்கு நேர் மேலே தொங்கிய சுவர் மணிக்கூடு படுவேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இப்போது என்ன நேரம் என்று நெருங்கிப்போய் உற்றுக் கவனித்தான். மணிக்கூடு ஓடுவது நின்றுவிட்டது. ஒன்பது மணி. செத்து ஒரு மணித்தியாலம் ஆகிவிட்டதா? விலகிவந்தான். மீண்டும் மணிக்கூட்டு முள்ளு வேகம் பிடித்தது. நெருங்கிப்போனான். வேகம் குறைந்து சின்ன முள்ளு இப்போது இரண்டு என்று காட்டியது. நித்தியானந்தனுக்கு எதுவும் புரியவில்லை. செத்து உண்மையிலேயே எத்தனை நிமிடங்கள் ஆகிவிட்டன? அல்லது மணிகளா? நாட்களா? ஆண்டுகளா? புரியவில்லை.

தனக்கு டைம் சரியில்லை என்று புறுபுறுத்தான்.

திடீரென்று பளிச்சிட்ட இன்னொரு எல்சீடி திரை நித்தியானந்தனின் கவனத்தைத் திசை திருப்பியது. திரையில் ஒரு இளம் ஆணும் பெண்ணும். அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. இடம் கோடைக்கானல் லவ்வர்ஸ் பொய்ண்ட்.

“நாங்க சாகத்தான் வேணுமா? எங்காவது ஓடிப்போய் யாருக்குமே தெரியாம சந்தோசமா வாழமுடியாதா?”

அந்தப்பெண்ணின் கேள்வியிலேயே புரிந்தது, இந்த தற்கொலை முடிவில் அவளுக்கு துளியும் சம்மதமில்லை என்று. அவன் அவளுடைய தோள்களை இறுக்கப்பிடித்தான்.

“எங்கள எவருமே நிம்மதியா வாழ விடப்போறதில்ல …சொன்னாக்கேளு ..  நீ வராவிட்டாலும் நான் செத்தே தீருவேன்”

அந்த குரலை எங்கேயோ முன்னமேயே கேட்ட ஞாபகம். நித்தியானந்தன் துணுக்குற்றான்.

“அப்புடி சொல்லாத சுந்தர் … நீயில்லாமா எப்படி நா..”

“வன் … ”

சுந்தர் எண்ண ஆரம்பித்தான்.

“டூ …”

அவள் சுந்தரின் கைகளை இறுக்கிப் பற்றியபடி கண்களை மூடினாள். “த்ரீ” சொல்லமுதலேயே அவளையும் தள்ளியவிழுத்தியபடி சுந்தர் மலையிலிருந்து பாய்ந்தான். இடை நடுவில் அவளைக் கைவிட்டு, நடு நடுவே அவ்வப்போது மலை முகடுகளில் மோதி, சின்னா பின்னப்பட்டு அடிவாரத்தை அவசர அவசரமாக சென்றடைந்தான். சதக்.

“நான் எங்கிருக்கேன்”

அதே குரல். சுந்தர்தான். நித்தியானந்தன் சத்தம் வந்த திசையில் திரும்பிப்பார்த்தான். இறுதி வரிசையில் ஹீனமாக காயங்களுடன் அரற்றிக்கொண்டிருந்தான். அவனை நெருங்கிய நித்தியானந்தன் அப்போதுதான் சுந்தரை தெளிவாகக் கவனித்தான்.

“எண்ட சிவபெருமானே, இது நானல்லவா?”

சுந்தரும் கவனித்தான்.

“… நான் .. நீ … சுந்தர் நீ எப்படி?”

“நான் நித்தியானந்தன் .. நானெப்படி … நீ எப்பிடி இங்க … “

இருவரின் கவனத்தையும் இன்னொரு எல்சீடி திரை திருப்பியது. திரையில் ஏதோ ஆய்வுகூடம் போல ஒன்று தெரிந்தது. ஆய்வுகூடத்தின் நடுவில் யாரோ ஒருவன் ஒட்டுத்துணியில்லாமல் அம்மணமாக நின்றிருந்தான். பளிச்சென்று கறுப்பாக, பின் பக்கத்தை மட்டும் காட்டியபடி . கையில் ஒரு ஊசி மாதிரி ஒன்றை காதுக்குள் குத்திக்கொண்டு அலறினான். ஆருடா இவன்.

“நீ ஆருடா?”

திடுக்கிட்டு குரல்வந்த திசையை நோக்கி திரும்பியா நித்தியானந்தன் மீண்டுமொருமுறை திடுக்கிட்டான். இவனும் சாட்சாத் நித்தியானந்தனேதான். இப்போது திரையில் கண்ட அதே பேர்வழி. ஒட்டுத்துணிகூட இல்லாமல், வண்டியையும் தொந்தியையும் காட்டியபடி செத்தது செத்தபடியே வந்திருந்தான், நித்தியானந்தன் எதையோ சொல்ல வாயெடுக்கமுன்னம் அம்மணம் இடை மறித்தது.

“கருமம் … என்னடா இப்பிடி சட்டை எல்லாம் போட்டு அசிங்கமாய் வந்திருக்கிறாய்?”

நித்தியானந்தனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. செத்தால் சொர்க்கம், நரகம், திரிசங்கு, ஆகக்குறைந்தது மறுபிறவியாவது வேண்டாமா. இப்படி ஒரு ரூமுக்குள் அடைத்துவைத்திருக்கிறார்கள். இவங்கள் வேறு என்னைப்போலவே இருக்கிறார்களே. செத்தால் எல்லோரும் ஒரேமாதிரித்தான் இருப்பார்களா? யாரோ ஒரு இளம் பெண் கீச்சென்று கூச்சலிட்டுக்கேட்டது. அந்த எல்ஸீடி திரையில் அந்த அம்மண நித்தியானந்தனின் பிரேதத்தைக் கண்டு அவனுக்கும்போய் ஒருத்தி அழுதுகொண்டிருந்தாள். அழகாகவேறு இருந்தால், கோமதியைவிடவும். கோவணம் கூட கட்டாதவனுக்குப் போய் இப்படியொரு... 

நித்தியானந்தன் யோசித்துக்கொண்டிருகையிலேயே இன்னொரு திரை ஒளிர்ந்தது. அதிலே ஒரு கிழவன் கிணற்றுக்குள் குதித்துக்கொண்டிருந்தான். அடுத்த கணம் அதே கிழவன் அறையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தான். கிழடுதட்டிய நித்தியானந்தன். சிறிதுநேரத்தில் இன்னொரு திரை ஒளிர்ந்தது. அதிலே பள்ளிபோகும் நித்தியானந்தன். இன்னொன்றில் நித்தியானந்தன் மோட்டார் சைக்கிளைக் கொண்டுபோய் மரத்தோடு மோதி, பிளைட்டை விழுத்தி, பேரூந்து முன்னால் குதித்து, சிங்கத்திடம் சிக்குப்பட்டு .. பலவிதமாக தற்கொலை செய்ய ஆரம்பித்தான். தகப்பன் மாம்பழம் தரவில்லை என்ற கோபத்தில் ஒரு சிறுவன் இமயமலையிலிருந்து மயிலோடு சேர்ந்து ஸ்வெட்டர் கூட போடாமல் குதித்ததில் குளிரில் விறைத்து உயிரை விட்டான். இப்படி ஒவ்வொன்றாக எல்ஸீடி திரைகள் ஒளிர ஆரம்பிக்க, அந்த மண்டபம் பூராகவும் கதிரைகளை நித்தியானந்தன்கள் நிரப்ப ஆரம்பித்தார்கள். ஆளாளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். விசாரித்தார்கள். சிலர் அழுதார்கள். சிலர் சிரித்தார்கள். சிலர் கண்ணாடித்திரையை உடைக்க முயன்றார்கள். சிலர் நுழைய முயன்றார்கள். சிலர் தங்களுக்குள் அடிபடவும் தலைப்பட்டனர். இந்த அல்லோகல்லோகத்தினால் அறைக்குள் சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்திருந்தது. எல்லோருக்கும் ஒரே ஒரு குழப்பம். ஏன்? எதற்கு? எப்படி?

கதவு திறந்தது.

உள்ளே வந்தவனும் நித்தியானந்தனே. சாறம், வெறும் மேல், தோளில் ஒரு சின்னத்துவாய். நரை கலந்த சரியாக சவரம் செய்யாத முகம். அடச்சே இவனா. கதவுக்கு அப்பால் கடவுளை எதிர்ப்பார்த்தவர்களுக்கு தானே அப்படி நடந்துவந்தபோது, அதுவும் அந்தக்கோலத்தில் வந்தபோது அதிருப்தியாக இருந்தது. 

“வணக்கம் ‘நான்’களே … என் பெயர் பொன்னையன். இவ்வளவு குவிக்கா நான்கள் சந்திப்போம் என்று நினைத்தே பார்க்கவில்லை”

7886529494_15e98561cf_z நித்தியானந்தன்கள் அனைவருமே புரியாமல் விழித்தனர்.

“சொல்லுங்கள் … யாரிடம் பதில் இருக்கு”

புரட்சி உடையிலிருந்த ஒரு நித்தியானந்தன் குரல் கொடுத்தான்.

“நாங்கள் எல்லாம் ஆரு? … ஏன் இப்பிடி இஞ்ச அடைச்சு வச்சிருக்கிறீங்கள்?”

பொன்னையன் குரலைச் செருமிவிட்டு பேச ஆரம்பித்தான்.

“பெரிய கதை … சொல்லுறன் …  இஞ்ச நித்தியானந்தன், சுந்தர், ரெங்கசாமி, சுரேஷ், பீட்டர், டிமிட்ரி, கொஸ்நோவ் பல பெயரில இருக்கிறம். எல்லாருமே சுந்தர்கள்தான். நித்தியானந்தன்கள்தான். ரெங்கசாமிக்கள்தான். பேசிக்கலி நாங்கள் எல்லோருமே பொன்னையன்கள்தான் … இது ஒராளாகத் தேடிக்கண்டு பிடிக்கிற விஷயம் இல்லை. அதாலதான் தனித்தனியாக பிரிஞ்சு ஏக சமயத்தில தேடினோம். ஏக சமயத்தில் சாத்தியமான அத்தனை பிரபஞ்சங்களிலும். இப்பிடி ஒவ்வொரு அறை அறையாக, அறைகளின் வரிசைமாற்றம் சேர்மானம் என்று எல்லாத்திக்குகளிலும் தேடல் நடந்தது. எண்ட லக் … என்னாலதான் பதில் கண்டுபிடிக்க முடிஞ்சது .. அதாவது நீங்களாகப் பிரிஞ்சுதேடிய என்னால.”

“அப்பிடி எண்டா வேற அறைகளும் இருக்கா?”

“அறைகளா? அடுக்கடுக்காக இருக்கு. ஒண்டுக்க கோமதிகள். இன்னொன்றுக்குள் சமந்தாக்கள். ஒன்றுக்குள் இராஜ இராஜ சோழன்கள். மற்றையதுக்குள் கிளின்டங்கள். ஒன்றுக்குள் ஹிலாரி. பின்னர் கோமதி அறையும் கிளிண்டன் அறையும் சேர்ந்து ஒரு அறையாக … இன்னொன்றுக்குள் … இப்பிடி இரண்டு அறைகள் சேர்ந்து ஒரு அறை. அந்த அறை இன்னொரு அறையோடு சேர்ந்து …இப்படி சேர்ந்து சேர்ந்து சேர்ந்து .. கடைசியில் தேவையான பதில் கொடுக்கப்படும் … பேசிக்கலி நாங்கள் எல்லாருமே ஒரு கொம்பியூட்டர் சேர்ச் எஞ்சினுக்கு உள்ளே வேலை செய்யும் ஆட்கள்.  … ”

“கூகிள் மாதிரியா … அது வெறும் இலத்திரனியல் தேடல்பொறிதானே”

நித்தியானந்தன் கேட்டான்.

“ஆ .. அந்த பிரபஞ்சத்தில வெறும் இலத்திரனியல் தேடல்தானா… பாவம் .. நான் சொல்லுறது .. குவாண்டம் கொம்பியூட்டிங் … உள்ளுக்குள்ள ஒவ்வொரு சாத்தியமான சுப்பர் பொசிசனையும் பயன்படுத்தி ஏக சமயத்தில சாத்தியமான அத்தனை பிரபஞ்சத்திலும் ஆளாளுக்குப் பிரிஞ்சு தேட வெளிக்கிட்டனாங்கள். நாங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான சுப்பர் பொசிஷன். இதுக்குள்ள ஒருத்தருக்கு பதில் கிடைச்சதில, எல்லோருக்கும் குவாண்டம் எண்டாங்கில் மூலம் அத்தனை பொன்னையன்களுக்கும் தகவல் அருட்டப்பட, ஆளாளுக்கு தங்கட தேடலை இடை நிறுத்தி இப்போ திரும்பீட்டன். நான் ரீசெண்டா தேடினதுக்குள்ளேயே இதுதான் சுப்பர் பாஸ்ட். கண் திறந்து மூடுவதற்குள் கண்டுபிடித்தாயிற்று.”

அப்போதுதான் நித்தியானந்தன் கவனித்தான். அங்கு வந்திருந்ததிலிருந்து அவனுடை இமை மூடவேயில்லை. அவனுடையது மட்டுமல்ல. ஏனைய அவங்களின் கண்களும் மூடாமலேயே இருந்தன. மூடவும் முடியவில்லை. செத்தால் கண் மூடாமல் கிடப்பது ஏன் என்று இப்போது அவனுக்கு புரிந்தது. பொன்னையன் அவசரப்பட்டான்.

அந்தப் பதிலைச்சொல்லுற டைம் வந்திட்டுது .. குவிக் .. நித்தியானந்தன்.. முதன்முதலில விடையைக் கண்டுபிடித்த சுப்பர் பொசிஷன். அதனாலதான் முதலில் இந்த அறைக்கு வந்தவன். அவன் கண்டுபிடித்ததாலேயே மற்றைய பொன்னையங்கள் தேடாம செத்தவங்கள்”

எல்லோரும் நித்தியானந்தனை ஏக சமயத்தில் திரும்பிப்பார்த்தார்கள். நித்தியானந்தன் தயங்கினான். கடவுளே பதில் சரியாகவே இருக்கவேண்டும். அல்லது தேடலே தோற்றுவிடும். மெதுவாக முணுமுணுத்தான்.

“பச்.. சை … ”

“கிளியர் இல்ல”

“பச்சைக் கோதுமை மா”

நித்தியானந்தன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே சுந்தர், ரெங்கசாமி, பொன்னையன் என்று அந்த மண்டபத்துக்குள் அமர்ந்திருந்த எல்லோருமே ஒவ்வொருவராக நித்தியானந்தனோடு இணைந்து ஒன்றாகி, இறுதியில் தனியொருவனாக கதவைத்திறந்து நித்தியானந்தன் தொலைந்து போனான், கண் திறந்து மூடுவதற்குள்.

“ரொட்டி சுடுவதற்கு பயன்படுத்தவேண்டியது அவித்தமாவா? பச்சை மா.….”

கோமதி அவசரம் அவசரமாக கேள்வியை டைப் பண்ணி முடிக்கமுன்னமேயே பதில் பிளிங் பண்ணத்தொடங்கியது..

“பச்சை மா”

கோமதி “ஓ, ஸோ குயிக்” என்று கண் சிமிட்டினாள்.

***********************

இந்தச் சிறுகதையின் விஞ்ஞானத்தை “குவாண்டம் கொம்பியூட்டிங்” என்ற பதிவில் இயலுமானவரை விளக்கியிருக்கிறேன்.

Comments

  1. What a confusing story :(
    Why this kolaiveri!!!!!!!!!
    Nisha

    ReplyDelete
  2. என்ன ஜேகே, எல்லோரையுமே பொன்னயன்கள் ஆக்கிர எண்ணமோ?? :) Uthayan

    ReplyDelete
  3. Hahaha! Ungada Humour ukku Quantum Physics thevappaduthu? :P

    ReplyDelete
  4. ஓரளவுக்கு இந்தக்கதையின் விஞ்ஞானத்தை விளக்க முயன்றிருக்கிறேன். நன்றி.
    http://www.padalay.com/2014/12/blog-post_7.html

    ReplyDelete
  5. உங்களுக்கு எக்ஸ்பரிமென்டால் தான் என்றாலும் குறிப்பிட்ட சலரையாவது கதையை 2 தரமாவது படிக்க வைத்ததே வெற்றி தானே. நான் கதை படித்து >>> குவாண்டம் தியறி படிச்சு >>> கதை படிச்சு >>> குவாண்டம் திருப்பி படிச்சிட்டு போறன் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .