Skip to main content

குவாண்டம் கொம்பியூட்டிங்

quantum-computer-cat-box-ars

"I think there is a world market for maybe five computers."

1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை.

"மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே அது வினைத்திறன். அளவில் சிறுத்து வினைத்திறனில் இந்த கணனித் தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த வேகம் அபரிமிதமானது. இதே ரேட்டில் போனால் இன்னும் சில பத்து வருடங்களில் மூரேயின் விதிப்படி ட்ரான்சிஸ்டர் அணுவின் சைஸுக்கு போகவேண்டும். வினைத்திறன் பல மடங்கு அதிகமாகும். சொல்லப்போனால் ட்ரான்சிஸ்டர் என்ற தொழில்நுட்பமே பென்ஷன் எடுத்துவிடவேண்டும். மூரெயின் இந்த விதியைக்கூட பொய்யாக்க வந்திருப்பதுதான் குவாண்டம் கொம்பியூட்டிங். அந்த தொழில்நுட்பம் தற்காலக் கணனிகளின் வினைத்திறனைவிட பில்லியன் மடங்கு அதிகமானதாக இருக்கும். சைஸ்? எறும்பு தூக்கிக்கொண்டு போகுமே சீனி. அதைவிடச் சின்னதாக … நம்பமுடிகிறதா?

அதென்ன குவாண்டம்?.

எம்மைச்சுற்றி மூன்றுவிதமான பௌதீகங்கள் இருக்கின்றன. ஒன்று சாதாரண நடைமுறைப் பௌதீகம் (Classical Physics). நியூட்டனின் விதிகள், ஆர்முடுகள், ஈர்ப்பு விசை, திணிவு என்று நாங்கள் சாதாரண தர விஞ்ஞானத்தின் படித்த பௌதீகம். ‘புத்திக்கு’ எட்டுகின்றன பௌதீகம். இரண்டாவது பௌதீகம் அண்டவியல் (Cosmic Physics).  அண்டவியலில் எல்லாமே கிராண்ட் ஸ்கேலில் நடக்கும். கருந்துளை, பிக்பாங், சிங்குலாரிட்டி என்ற எமக்கு எட்டாத தூரத்தில் இடம்பெறுகின்ற ஆச்சரியங்கள். மூன்றாவது குவாண்டம் பௌதீகம் (Quantum Physics). அணுவுக்குள் நடக்கும் விடயங்கள். ஒளியின் பண்புகள். மிகச்சிறிய சைஸில் நடைபெறும் சாகசங்கள். நடைமுறைப் பௌதீகத்துக்கும் குவாண்டம் மற்றும் அண்டவியல் பௌதீகத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. நம்முடைய பல பௌதீக விதிகள் இங்கே செல்லுபடியாகாது. இங்கிருக்கும் பல விதிகள் நடைமுறையில் யோசித்தால் கோமாளித்தனமாகவிருக்கும். மூன்று விதிகளுமே அவையவற்றின் சட்டங்களில் இடம்பெறுகின்றன. இந்த மூன்றையும் ஒரே விதிக்குள், ஒரே கோட்பாட்டுக்குள் விளக்கவே ஐன்ஸ்டீன் தன்னுடைய இறுதி நாற்பதாண்டுகளையும் செலவழித்தார். ஆணியே புடுங்கமுடியவில்லை. இன்றுவரைக்கும் விஞ்ஞானிகள்  ஐடியாவே கிடைக்காமல் தவிக்கிறார்கள். அதிலும் ஆச்சரியமானது குவாண்டம். நமக்குள்ளே, நம்மோடு இருக்கின்ற இந்த அணுவுக்குள் இடம்பெறும் விசயங்களையே காரணப்படுத்த முடியாமல் இருக்கிறதென்றால், நம் விஞ்ஞானம் இன்னமும் தவழ்ந்துகொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.

பௌதீகத்தில் அளக்கப்படக்கூடிய ஆகக்குறைந்த விஷயத்தை(entity) குவாண்டம் என்கிறோம். ஒளி என்பது அலைகளாலும் துணிக்கைகளாலும் ஆன ஒரு ஆச்சரியம். ஒளி சமயத்தில் துணிக்கையாக இருக்கும். சமயத்தில் அலையாக மாறிவிடும். “ஒரு” ஒளி அலகை, குவாண்டத்தை, போட்டோன் என்று அழைக்கிறோம். போட்டோன்கள்தான் ஒளியின் வெளிச்சத்தைத் தருகின்றன. ஒளி அலையாக இருப்பதால் அது பிரபஞ்சம் முழுதும் பயணிக்கவும் செய்கிறது. அணுவின் ஆச்சரியம் என்னவென்றால் அதனால் ஒளிச்சக்தியை, போட்டோன்களை உள்வாங்கவும் முடியும். துப்பவும் முடியும். தெளிவாகச் சொல்வதென்றால் அணுவினால் குவாண்டம் சக்திகளை உள்ளிழுக்கவும் முடியும். வெளியிடவும் முடியும். அதனால்தான் பல்ப் எரிகிறது. எங்கள் விழித்திரையில் ஒளிக்கதிர் உள்வாங்கப்பட்டு பார்வை புலப்படுகிறது. அணுவுக்குள்ளும் கரு, கருவைச் சுற்றி இலத்திரன்கள் துள்ளித்திரிகின்றன (இன்னொரு அபத்தமான விவரணம்) என்றெல்லாம் படித்திருக்கிறோம். அது ஏன் அப்படித்துள்ளுகிறது. ஒரு இத்துனூண்டு அணுக்கரு எப்படி இலத்திரன்களை விடாமல் பிடித்து வைத்திருக்கிறது. எப்படி ஒளியை வெளிவிடுகிறது, உறிஞ்சுகிறது என்று தேடத்தேடத்தான் குவாண்டம் பிஸிக்ஸ் விரிவடைந்துகொண்டே போகும்.

இதற்குமேல் விவரிக்காமல் குவாண்டம் கொம்பியூட்டிங் அடிப்படையை மட்டும் பார்ப்போம்.

அணு, அதற்குள் இருக்கும் கரு, இலத்திரன்கள், அவற்றின் இயக்கம் என்பவை சாதாரண கொமன்சென்ஸ், அனுபவ அறிவு விளக்கங்களுக்குள் அடங்காதவை. அதிலும் இரண்டு குவாண்டம் விதிகள் மண்டையைக் கிறுகிறுக்க வைப்பவை. அவை சார்ந்த பரிசோதனை பெறுபேறுகள் எந்த நடைமுறை பௌதீகத்துக்குள் அடங்காதவை. குவாண்டம் அளவில் மாத்திரமே அவை இடம்பெறக்கூடியவை. அவற்றை அந்த லெவலிலேயே வைத்து, கொஞ்சம் நமக்கேற்றபடி "கொன்றோல்" பண்ண பழகிவிட்டோமானால் சாத்தியாங்கள் ஏராளம். குவாண்டம் கொம்பியூட்டிங்கும் அப்படியே. அந்த விதிகளை கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம்.

 

நிச்சயமின்மைத் தத்துவம் (Uncertainty Principle)

நம் நடைமுறை வாழ்க்கையில் எல்லா விசயமும் எங்கே, எப்படி இருக்கின்றன என்பதை நிச்சயமாக சொல்லமுடியும். இந்த வரியை எழுதிக்கொண்டிருக்கும்போது நான் பேரூந்திலே ப்ரெஸ்டன் ஸ்டேஷன் தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறேன். பக்கத்திலே ஒரு இளம்பெண் தன்னுடைய போனைக் கண்ணாடியாகப் பாவித்து லிப்ஸ்டிக் பூசிக்கொண்டிருக்கிறாள். நான், அந்த இளம்பெண், முன்னால் இருக்கும் முதியவர், இந்த பேரூந்து, மெல்பேர்ன் நகரம், ஆஸி … ஏன் உலகம் கூட இங்கே இப்படித்தான் இருக்கிறது என்று என்று எம்மால் நிச்சயமாகக் கணிக்கமுடிகிறது. எதிர்வு கூறல்களும் போதுமான தகவல்கள் இருந்தால் சாத்தியமே. எதேச்சையாக, ரண்டமாக ஒன்று இடம்பெறுகிறது என்பது நடைமுறையில் இல்லை. எல்லாவற்றையும் எதிர்வுகூறலாம். போதுமான தகவல்கள் இருந்தால் சொல்லமுடியும். ஒரு சீட்டுக்கட்டில் எதேச்சையாக எடுபடும் சீட்டு என்ன சீட்டு என்பதை அந்த சீட்டு எந்த வரிசையில் அடுக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் கண்டுபிடிக்கமுடியும். ஆனால் சீட்டை மிக வேகமாக குலுக்குவதால் அது எந்த வரிசையில் அடுக்கப்படுகிறது என்ற தகவலை எமது மூளை அறிவதற்கு முடியாமல் போகிறது அவ்வளவே. தவிர நிச்சயமின்மை என்பது நடை முறை பௌதீகத்தின் சாத்தியமில்லை.

Uncertainty_Principle ஆனால் அணுவுக்குள் நிச்சயமின்மையே ஆதாரம்.

ஒரு போட்டோனின் நிலை எது என்பதை நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாது. அதன் முனைவு எது என்பதைக் கண்டறியமுடியாது. அப்படி அதனைக் கூர்ந்து பார்த்தோமென்றால், அப்படிப்பார்ப்பதாலேயே அதன் நிலை மாறிவிடும். நாம் பார்க்காதபோது அது தன்னுடைய எல்லா நிலைகளிலுமே இருக்கும். அந்த நிலைகளை சுப்பர் பொசிசன்கள் என்பார்கள். ஏக சமயத்தில் அத்தனை சாத்தியமான நிலைகளையும் அது எடுக்கும். நேராகவும் இருக்கும். எதிராகவும் இருக்கும். ஆனால் அவதானிக்கும்போது அந்த அவதானிப்பினால் ஒரேயொரு நிலைமட்டும் எமக்குத் தெரியவருகிறது. அதற்காக அது ஏனைய நிலைகளில் இல்லை என்று அர்த்தமில்லை. நம்மால் அவதானிக்க முடிவதில்லை. அவ்வளவுதான். நாம் பார்க்கும்போதும் அது எந்த நிலையை எடுக்கும் என்பதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. அனுமானமாக மாத்திரமே சொல்லலாம்.

It is in all the possible states simultaneously, as long as we don't look to check. It is the measurement itself that causes the object to be limited to a single possibility.

ஒரு கறுப்புப் பெட்டிக்குள் ஒரு பூனை இருக்கிறது. அந்த பூனை உயிரோடு இருக்கிறதா இல்லையா என்ற இரண்டு நிலைகளும் சுப்பர் பொசிஷன்கள். திறந்து பார்த்தால்மட்டுமே பூனை உயிரோடு இருக்கிறதா இல்லையா என்ற நிச்சயமான முடிவை எடுக்கமுடியும். திறக்கமுதல் பூனை உள்ளே உயிரோடும் இருக்கிறது. இறந்தும் கிடக்கிறது.  இதனை நிரூபித்திருக்கிறார்கள். பூனையைக் கொண்டல்ல. போட்டோன்களைக்கொண்டு. டபிள் ஸ்ப்லிட் பரிசோதனை என்று அதை விளக்க ஆரம்பித்தால் இருக்கும் கொஞ்சப்பேரும் எஸ்கேப்பாவர்கள் என்பதால் அடுத்த ஸ்டெப்.

superposition

அணுவுக்குள் இப்படி இருக்கும் நிலைகள் நடை முறை வாழ்வில் ஏன் இல்லை என்ற கேள்வி வருகிறது. இதே கேள்வியை ஐன்ஸ்டீன் முதற்கொண்டு ஹோக்கிங் வரை கேட்டு மாய்ந்துவிட்டார்கள். 1957ம் ஆண்டு கியூஜ் எவரெட் என்ற விஞ்ஞானி அதற்குக் கொடுத்த விளக்கம் மிரட்டலானது.

நாங்கள் இந்த பிரபஞ்சத்துக்குள்ளேயே இருந்து இந்த பிரபஞ்சத்தை அவதானிப்பதால் அதன் நிலையை மட்டுமே  அவதானிக்கிறோம். என் கண், உங்கள் கண், நம் மூதாதையரின் கண், கருவிகளின் கண், பரிசோதனைகள் இவையெல்லாமே ஏராளமான சுப்பர் பொசிஷன்களின் ஒரு செர்மானத்தை மாத்திரமே பார்க்கின்றன. நாமெல்லாம் அதைப்பார்ப்பதால் அது ஒரு சேர்மானம் ஆகிறது. ஆனால் இதே பிரபஞ்சத்துக்கு இன்னமும் ஏராளமான சுப்பர் பொசிசன் நிலைகள் இருக்கின்றன. அவதானிப்புகளைப் பொறுத்து அது மாறுபடலாம். அந்த ஆங்கிளில் யோசிக்கும்போது எண்ணற்ற பிரபஞ்சங்கள் சமாந்தரமாக உலாவும் சாத்தியம் இருக்கிறது. அவர்கள் நாங்கள் நிர்ணயித்த கடவுள்களையெல்லாம் தாண்டிய சக்தி படைத்தவர்கள். இந்த சிந்தனை வெறுமனே இருபதாம் நூற்றாண்டு சிந்தனை அல்ல. ஆழ்வார்களும் மாணிக்கவாசகரும் இறைவனை விவரிக்கமுடியாமல் திணறியமைக்கான காரணம், அவர்களின் சிந்தனை அவ்வளவு பரந்துபோயிருந்தமைதான்.

சரி இந்த விதியை கணனியில் எப்படி பயன்படுத்தலாம்? ட்ரான்சிஸ்டரில் வோல்டேஜைக் கொண்டு பைனரி டேட்டாவை பிட்(bit) மூலம் கணிப்பதுபோல, குவாண்டம் கணனியில் குபிட் கொண்டு கணிக்கலாம். குபிட் போட்டோனின் முனைவாக்கங்களைக் கொண்டு அளக்கப்படுகிறது.   போட்ட்டன்களுக்கு இரண்டு முனைவாக்கங்கள் உண்டு. நேர் மற்றும் எதிர். இரண்டுமே சுப்பர் போசிஷன்கள். "பிட்" இலே ஒன்று அல்லது பூச்சியம் என்கின்ற இரண்டு சாத்தியங்கள்தான். குபிட்டிலே நான்கு சாத்தியமான பெறுமானங்கள் வரும். நாம் அவதானிக்கும் நேர். அவதானிக்காத எதிர். அவதானிக்கும் எதிர். அவதானிக்காத நேர். ஆயிரம் குபிட்கள் என்றால் 2^1000. எவ்வளவு சாத்தியங்கள். அதுவும் ஆயிரம் போட்டோன்களின் சைஸ் எவ்வளவு குறுகியதாக இருக்கும். குபிட்டுகளைக்கொண்டு ஒரு ட்ரான்ஸ்டரை அமைத்தால் அது தற்போது பாவனையில் இருக்கும் கணணிகளைவிட மில்லியன் மடங்கு சிறியதாகவும் மில்லியன் மடங்கு வேகமானதாவும் இருக்கும் இந்த குவாண்டம் கொம்பியூட்டர்.

ஆனால் இது வெறும் ட்ரெயிலர்தான். மெயின் பிக்சர் அடுத்தது.

 

குவாண்டம் எண்டாங்கில்மெண்ட்(Quantum Entanglement)

ஆரியாவும் சூரியாவும் ரெட்டைக் குழந்தைகள். பிறந்து, வளர்ந்தது எல்லாமே ஒரேமாதிரி. ஒரே சாப்பாடு. ஒரே படிப்பு. ஒரே உடை. எல்லாம் ஒன்று. இப்போது ஆரியாவை பூமியிலும் சூரியாவை செவ்வாய்க்கிரகத்திலும் கொண்டுபோய் விடுவோம். இருவருக்குமிடையில் எந்த தொடர்பாடலும் கிடையாது. தொடிசல் கிடையாது. இப்போது ஆரியா சிரித்தால் சூரியாவும் சிரிக்கிறான். ஆரியா அழுதால் சூரியாவும் செவ்வாய்க்கிரகத்தில் அழுகிறான். ஆரியா “காசலீனா” என்ற லேட்டஸ்ட் பாட்டு பாடினால் சூரியாவும் பாடுகிறான். சுருதி பிசகாமல் ஏக சமயத்தில் பாடுகிறான். எப்படி சாத்தியம்? நாமறிந்த பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை எந்தக்கொம்பனும் தாண்டமுடியாது. அந்த ஒளியே பூமியிலிருந்து செவ்வாய்க்குப் போய்ச்சேர சில நிமிடங்கள் எடுக்கும் என்ற நிலையில், எப்படி ஆரியா பாடுகின்ற அதே கணத்தில் சூரியாவாலும் அந்தப்பாட்டு பாட முடிகிறது? எப்படி தகவல் பறக்கிறது? 

அதுதான் குவாண்டம் எண்டாங்கில்மெண்ட்.

entangled_sm

குவாண்டம் துணிக்கைகள் தமக்குள்ளே எப்போதுமே ஒரு தொடர்பைப் பேணுகின்றன. ஒரே மாதிரியான சோடித்துணிக்கைகளில் ஒன்றைப்பிரித்து இன்னொரு இடத்தில் வைத்திருந்தாலும் அவை தமக்குள் எப்படியோ ஒரு தொடர்பைப் பேணுகின்றன. இது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி ஏலவே ஒரு வியாழமாற்றத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கும்போது என்னுடைய எண்டாங்கில்ட் சோடி ஏதோ ஒரு பிரபஞ்ச மூலையில் எழுதிக்கொண்டுமிருக்கலாம்.  

இப்போது யோசியுங்கள். சுப்பர் பொசிஷன்களால் குவாண்டம் கொம்பியூட்டரின் வேகம் பன்மடங்காகிறது. குவாண்டம் எண்டாங்கில்மெண்டால் அதனை வைத்து மல்டி பரலே அடிக்கலாம். அதாவது அதி உச்ச வேகமான கொம்யூட்டரை ஏக சமயத்தில் பல இடங்களில் வைத்து தொழிற்படுத்த முடியும். அவற்றுக்கிடையே தொடர்பாடல் செய்யமுடியும். இது தற்போதைய தொழில்நுட்பத்தில் சாத்தியமா என்றால் மூன்று குயூபிட்டுகளை வைத்து இதனை பரிசொதித்திருக்கிறார்கள். இன்னமும் ஒரு முப்பது வருடங்களில் குவாண்டம் கொம்பியூட்டர் சாத்தியமே. ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர் மாதிரி எவனாவது பிறந்து இப்போது கிட்டிப்புல்லு விளையாடிக்கொண்டிருந்தால், இன்னமும் பத்து வருடங்களிலேயே அது சாத்தியமாகும் சந்தர்ப்பமும் இருக்கிறது.

சென்றவாரம் எழுதிய “பச்சை மா” சிறுகதைக்கு வருவோம்.

கதையின் இன்ஸ்பிரேஷன் “Quantum Theory Doesn’t Hurt”  என்ற புத்தகம்தான். சிக்கலான விஞ்ஞானத்தை சமன்பாடுகளைக் காட்டி மிரட்டாமல் விளங்கப்படுத்தும் புத்தகம். என் பிறந்தநாளுக்கு மனைவி பரிசாக வாங்கித்தந்தவள். சென்ற வாரம் வாசித்துக்கொண்டிருக்கையில் வந்த ஐடியா இது. அதிலே ஒரு குட்டிக்கதை சொல்லியிருந்தார்கள்.

Capture

ஒரு சிறுவன் தன் கணணியிலே ஒரு கட்டளையைக் கொடுக்கிறான். அது குவாண்டம் கணணி. அது தன்போல ஆயிரக்கணக்கான கணணிகளை உருவாக்கி, தனித்தனியாக தொழிற்பட்டு கடைசியில் பதிலைக்கொடுக்கிறது. அப்படி அது கொடுத்த பதிலை தற்காலக் கணனிகள் எல்லாமே சேர்ந்து கொடுப்பதற்கு ட்ரில்லியன் வருடங்கள் எடுக்கும். இதுவோ கண்ணிமைக்கும் கணத்தில் கொடுகிறது.

இதுதான் “பச்சை மா” கதைக்கான பொறி. “பச்சை மா” வில் இதையே கொஞ்சம் விலாவாரியாக சமாந்தர பிரபஞ்சங்கள், எண்டாங்கில்மென்ட் என்று சேர்த்திருக்கிறேன். இப்படி தேடலுக்காக மனித அமைப்புகளை கணணி பயன்படுத்துவது ஏலவே “கந்தசாமியும் கலக்சியிலும்” நாவலிலும் கூட வந்திருக்கும். சிறுவன் உலகத்தைப் படைக்கும் விஷயம் “இரண்டாம் உலகம்” சிறுகதையிலும் வந்திருக்கும்.

“பச்சை மா” வின் விதிகளைப் பார்ப்போம்.  

கதையின் முடிவில் கோமதி என்பவள் ஒரு சின்ன தேடலை குவாண்டம் கணனியில் செய்கிறாள். “ரொட்டி சுடுறதுக்கு பாவிக்கிறது எந்த மா?”. நானே இதைத் தேடியிருக்கிறன் எண்டது வேற விஷயம். அவள் அப்படித்தேட, உள்ளே பல்லாயிரம் சுப்பர் பொசிஷன்களின் கொம்பினேஷன்கள் இணைந்து இந்தத் தேடலை விரிவுபடுத்தும். குபிட்களின் சேர்மானங்கள் (Combinations of qubits) விரிவடைந்து தனித்தனி மனிதர்களாகவும் மாறலாம். ஒவ்வொரு சுப்பர் போசிசனும் ஒவ்வொரு பிரபஞ்சம் என்ற அளவில், ஒவ்வொரு நித்தியானந்தன்களும் ஒவ்வொரு பிரபஞ்சத்தில் ரொட்டிக்கு எந்த மா? என்று தேடுகிறார்கள். அவர்களுக்கு அந்த holistic picture தெரியவேண்டிய தேவை இல்லை.

இப்போது நித்தியானந்தன் “பச்சை மா” என்ற பதிலைக் கண்டறிந்தவுடன் குவாண்டம் எண்டாங்கில்மெண்ட் மூலம் ஏனைய பிரபஞ்சங்களில் தேடும் நித்தியானந்தன்களுக்கு தகவல்கள் பறக்க, அவர்கள் தேடலை நிறுத்திவிட்டு மீண்டும் கணணி வலையமைப்பின் தளத்துக்கு, லேயருக்கு வருகிறார்கள். செத்துத்தான் வரவேண்டுமென்பது புனைவுக்காக செய்தது என்பதை சொல்லத்தேவையில்லை.

அந்த அறையின் மணிக்கூடு மிகவேகமாக சுற்றுகிறது. நெருங்கிப் போய் உற்றுக்கவனித்தால் சுற்றுவதை நிறுத்தி நேரத்தைக்காட்டுகிறது. விலகினால் மீண்டும் வேகம். ஒவ்வொருவருடைய வாழ்க்கை, ஏன் பிரபஞ்சத்தின் வாழ்க்கை எல்லாமே அணுவின் ஒரு பொசிசன் மாற்றத்துக்குள், கண் மூடித்திறப்பதற்குள் நடந்துவிடுகிறது என்று சொல்கின்ற விசயம்தான் அது. அதில் கொஞ்சம் ஷ்ரோடிங்கர் பூனையும் இருக்கிறது.

கோமதி என்ற பெயரை இரண்டுமுறை பயன்படுத்தியிருக்கிறேன். நித்தியானந்தனின் மனைவியாக, இறுதியாக ரொட்டி மா பற்றி சேர்ச் பண்ணுபவளாக. இருவரும் ஒருவராகவும் இருக்கலாம். ஆனால் வேண்டியதில்லை. முதலில் நித்தியானந்தனே தேடுவதாகவும் முடித்தேன். மனைவிதான் “கதை சும்மாவே மண்டை காயுது .. இதில அதுவேறவா” என்றாள். கோமதியாக மாற்றிவிட்டேன்.

இப்படியான கதைகளில் உள்ள விஞ்ஞானத்தை  மிக அதீதமாக எளிமைப்படுத்தும்போது அந்த விஞ்ஞானத்தின் சுவாரசியம் கெட்டுவிடும். என்னைப்பொறுத்தவரையில் கதையின் சுவாரசியமே அதனுடைய சிக்கல்தான். அண்மையில் நோலனின் இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படம் பார்த்தேன். வோர்ம் ஹோல், சிங்குலாரிட்டி போன்ற சிக்கலான கொஸ்மிக் தத்துவங்களை மையமாக வைத்து நோலன் ஒரு முழு நீள திரைப்படத்தையே எடுத்திருக்கிறார். தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. “லைப் ஓப் பை” திரைப்படம் சொல்லும் கடவுள் தத்துவம் பார்க்கும்போது புரியாவிட்டாலும் பின்னர் யோசிக்க யோசிக்க சிக்கல் வெளிக்கிறது. டான் பிரவுன் தன்னுடைய முதல் நாவலான “Digital Fortress” இல் சிக்கலான பப்ளிக் கீ, பிரைவேட் கீ அல்கோரிதத்தை விரிவாக விளக்குகிறார். இவர்களைப் பார்த்து ஒரு குருட்டு நம்பிக்கையில் ஆடிய வான் கோழி ஆட்டம்தான் “பச்சை மா”. ஏன் நடக்கிறது என்று புரியாவிட்டாலும் சம்பவங்களாவது ஒரு சுவாரசியத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும் என்று நம்பினேன். வாசிப்பவருக்கு ஒரு வியப்பை ஏற்படுத்தினாலே கதையின் நோக்கை நிறைவேறுகிறது. அதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியமுற்படுவதெல்லாம் போனஸ்.

ஆனால் கதை அவ்வளவாக வாசகர்களைப் போய்ச்சேரவில்லை என்பது புரிகிறது. இப்படி எழுதுவது ஒரு விளையாட்டு. சிலவேளைகளில் எடுபடும். சமயத்தில் சொதப்பிவிடும். அதற்காக எக்ஸ்பெரிமெண்டை விட்டுவிடமுடியாது. இப்படியே தொடர்ந்து எழுதி உங்களையும் துரத்தி நானும் மண்டை காயவும் மாட்டேன். ஸோ நோ டென்சன்.

வரும் வெள்ளி இரவு “லிங்காவோடு” சிந்திப்போம். See you soon!

Linga-Movie-Latest-Photos-1

&&&&&&&&&&&&&&&&

பச்சை மா சிறுகதை.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக