Skip to main content

வானிசை நேர்காணல்

சிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார்! சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா?” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார்.

சென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் "அழைத்துவந்த அறிவிப்பாளர்", "இளைய சக்தி" போன்ற நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன. ஆனால் எமிலுடன் பேட்டி எப்படிப்போகும் என்பதில் எனக்கு அவ்வளவாக ஆரம்பத்தில் சுவாரசியம் இருக்கவில்லை. என்ன வேலை, பிடித்த திரைப்படம் என்று கேட்டு அறுக்கப்போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் என் கணிப்பு பொய்யானது.

எமில்ராஜா நேர்காணலை மிகச்சிறப்பாகவே கையாண்டார். ஐந்தாறு வருடங்களி்ல் பல நேர்காணல்கள் செய்துவிட்டேன். எனக்குப்பேட்டி என்றால் கமல் விஸ்கிப்போத்தலோடு தகிட தகமி ஆடுவார். ஆனால் இது ஒகே போலப்படுகிறது. எவருமே ஆங்கில வாசிப்பு, எழுத்துப்பற்றி அதிகம் கேட்டதில்லை. எமில் லாகிரி பற்றி அதிகம் கேட்டார். “The Namesake” பற்றி மாத்திரம் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்போம். திருப்தியாக இருந்தது. கேட்பவர்களுக்கு எந்த பிரயோசனமுமல்லாத என்னுடைய படிப்பு, தொழில் பற்றிய கேள்விகளைத்தவிர்த்து ஏனைய கேள்விகள் நன்றாகவே அமைந்தன. சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்க இடம்கொடுக்காமல் நான் பதில்களை இழுத்துவிட்டதால் நிகழ்ச்சிக்குரிய நேரம் இடக்கு முடக்கு இடம்பெறாமலேயே முடிவடைந்துவிட்டது. மகிழ்ச்சி.

அறிமுகத்தின்போது நான் சமூகத்தொண்டுகள் செய்பவன் என்று நானே அறியாத விடயத்தைச்சொன்னார்கள். எழுத்தாளர் என்றால் சமூகத்தொண்டும் செய்வார் என்கின்ற default சிந்தனையாக இருக்கலாம். நான் செய்கின்ற மிகப்பெரிய சமூகத்தொண்டு சும்மா இருப்பது மாத்திரமே. அறியற்க!

எமில்ராஜாவுக்கும் குமாருக்கும் நன்றிகள். மீண்டுமொரு நிகழ்ச்சியை புத்தகங்களுக்காக மாத்திரமே எமில்ராஜாவுடன் செய்யலாம் என்று நம்புகிறேன்.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.