Skip to main content

கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வருடத்தில் அவர் ஆட்களை இனம்கண்டு சிரிப்பார். நான்காம் வயதில் முழுமையாகப் பேசத்தொடங்குவார். பத்துவயதில் சில்மிஷங்கள். பதினேழு வயதில் முதற்காதல். இருபத்தொரு வயதில் முதன்முதலாகத் தனியாகச் சென்று மேற்படிப்போ, வேலையோ செய்யலாம். இருபத்தைந்து வயதில் தன்னுடைய வாழ்க்கைத்துணையைத் தேடலாம். முப்பது வயதில் காலம்முழுதும் நினைவுகூறும்வகையில் அண்ணர் எதையாவது சாதிக்கவுங்கூடும். இப்போது அண்ணர் அந்த எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் நித்திரை கொண்டுகொண்டிருந்தார். அந்தத் தூக்கமும் சுவாசத்தில் ஏறியிறங்கும் நெஞ்சும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும் இமைகளும் விரல்களும் நிம்மதி என்னும் சுகந்தத்தை அந்த வார்டு முழுதுமே நிறைத்துக்கொண்டிருந்தது.

மீண்டும் நண்பியினைக் கவனித்தேன். தலை சரித்து குழந்தையைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். இதுநாள் வரையும் உள்ளே இருந்தவன். இப்போது அவனுடைய முகம்பார்க்கக் கிடைக்கையில் ஒரு சந்தோசம். இனிவரும் அவளுடைய பொழுதுகளை சந்தோசங்களாலும் கிலேசங்களாலும் நிரப்பப்போகின்றவன். அதே சமயம் உடலோடு இத்தனைநாள் ஒருங்கேயிருந்தவன் இனி தனிமனுசனாகிவிடுவான் என்ற நினைப்பில் சிறு கவலையும் தோன்றியிருக்கலாம். ஒரு தாயுக்கு குழந்தை பிறக்கும்போதே அந்த எண்ணம் தோன்றிவிடுகிறதோ? நானறியேன். இனி இப்படியொரு அனுபவம் நிகழப்போவதில்லை என்ற எண்ணமும் கூடியிருக்கலாம். அல்லது இது எல்லாவற்றையும் பிரசவம் கொடுத்த அயர்ச்சி போர்த்து மூடியிருக்கலாம். அறியேன். ஆனால் அயர்ச்சியாக இருந்தார். அதிகம் பேசவில்லை. கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒரு பதில். சிரிப்பு. சமயத்தில் எதுவுமே இல்லை. குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தார். இன்னுஞ்சில நிமிடங்களில் அவன் விழித்தெழுந்தால் மாரோடு அணைத்து பாலூட்டவேண்டும். அந்தக் கணங்களை அவள் தன்னுள்ளே கணக்கிட்டுக்கொண்டிருக்கலாம். அவளைக் குழப்பவேண்டாம்.

எழுந்து வெளியே சென்றுவிட்டேன்.

சென்ற செப்டம்பரில் யாழ்ப்பாணத்தில் “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” வாசகர் அரங்கு நிகழ்ந்தபோதே கவிஞர் கருணாகரனைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் புத்தகம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. புத்தக வெளியீடும் விநியோகமும் கொடுத்த அயர்ச்சி, இலக்கிய உலகில் இடம்பெற்ற குத்துவெட்டுகள் எல்லாமே அடுத்தபுத்தகத்தைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் வைத்திருந்தது. ஆனால் வெளியிடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் சோ.ப அவர்கள். ஆனால் எனக்கு யாரை அணுகுவது என்று தெரியவில்லை. கோமகன் அண்ணாதான் கருணாகரனோடு தானே தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசியிருக்கிறார். பின்னர் நான் பேசினேன். இந்தியப் பதிப்பாளரோடு செய்யலாம் என்று கருணாகரன் சொன்னார். எனக்கு அதிலே அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. இந்தியாவிலே என் எழுத்துகள் பற்றி ஓரிருவருக்குத்தான் தெரியும். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஊடாக ஒரு புத்தகம் போட்டால் அது எடைக்குப்போட்ட கவிதைத்தொகுப்பு ஆகிவிடும் என்றேன். பின்னர் நாமே செய்வோம் என்று அவர் சொன்னவுடனேயே நம்பிக்கை பிறந்தது. 

இரண்டாவது புத்தகம் அமுதவாயனா, கந்தசாமியும் கலக்சியுமா என்ற குழப்பம் வந்தது. கந்தசாமியும் கலக்சியும் என்னுடைய பெர்சனல் பேவரைட். ஏற்கனவே எழுதியதைக் கொப்பி பண்ணினால் தொண்ணூறு பக்கங்கள் வந்தன. ஆங்காங்கே தொடர்ச்சிகள் இல்லை. தூக்கிக் கிடப்பில்போட்டுவிட்டு மீள ஆரம்பித்தேன். காலை நாலரை ஐந்துக்கு ஆரம்பித்தால் ஏழு ஏழரைவரைக்கும் எழுத்து. எழுத்து. எழுத்து. எழுத்து. எல்லாவற்றையும் மறக்கடித்த இயக்கமது. சமயத்தில் வசனங்கள் எல்லாம் அலுவலகத்தின் மீட்டிங்குகளில்கூட வந்துவிழும். உடனேயே பாத்ரூம்போய் போனில் நோட் பண்ணி... ப்ச்.., தாமரை எழுதினாரே,
“முன்னும் இதுபோலே - அனுபவம்
கண்டேன் என சொல்லும்படி - நினைவிலை
இன்னும் எதிர் காலத்திலும் - வழியிலை
மறவேனே”
அதே. இடையில் படலையில் சிலகாலம் எழுதவேயில்லை. முகநூல் ரிஷெயார்களில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருமாதிரி எழுதிமுடித்து நிமிர்ந்தால் நாவல் இருநூறு பக்கங்களைத்தாண்டிவிட்டது. உடனேயே கேதா, வீணா, ஜீவி மூவருக்கும் கொடுத்து பிழை திருத்துங்கோ என்றேன். திருத்தங்கள் சொன்னார்கள். பல இடங்களில் ஸ்மைலிகள் போட்டார்கள். டொக்டர் ஸ்கான்பண்ணி குழந்தை சுகதேகிதான் என்று சொல்லுவதற்கு ஒப்பானது அது. அப்புறம் போர்மட்டிங். அது முடிந்ததும் கவர். யார் யாரையோ தொடர்புகொண்டு, ஒருவரோடும் சிங் ஆகமாட்டாமல், கடைசியில் ஹேராமுக்கு மீண்டும் இளையராஜாவிடமே போன கமல்போல கஜனின் காலில் போய் விழுந்தேன். அப்போது அவன் டெல்லி, லண்டன் என்று சுற்றிக்கொண்டிருந்த சமயம். அலுக்காமல் செய்துகொடுத்தான். எல்லாம் முடித்துப் பிரிண்டுக்கு அனுப்பினாலும் நிறைய தாமதங்கள். பிரசவவலி மூன்று நாளில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள். புத்தகம் முடித்துக்கொடுத்து பதிப்பித்து வரும்வரைக்கும் எதுவுமே ஓடாது. ஓடவில்லை. வெறுத்துப்போய்விட்டது.

ஆனால் விடியாத இரவு என்று எதுவுமில்லை.

சென்றவாரம் கருணாகரன் “எல்லாம் சுபம், வந்து எடுக்கலாம்” என்றார். பிரசவம் நிகழும்போது குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தும் பாக்கியம் தாய்க்குக் கிடைப்பதில்லை. அது செவிலித்தாய்க்கே கிட்டும். என்னுடைய செவிலித்தாய் ஞானசுகந்தன். படலையில் முதன்மை வாசகர்களில் ஒருவர். “ஒருக்காப் போய் எடுக்கமுடியுமா?” என்று கேட்டதும்தான் தாமதம், ஆள் அச்சகத்துக்கே ஓடிப்போயிட்டுது. புத்தகத்தை கையிலெடுத்து படம் பிடித்து அனுப்பியதும் உடனே கைவிரல்கள், கால், காது, மூக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன். மூக்கு கொஞ்சம் சப்பையோ? ஐயையோ. நமக்கு என்றைக்குத் திருப்தி வந்தது? சரி விடுவம்.

“கந்தசாமியும் கலக்சியும்” கைகளில்.

சில நாட்களாக இந்த எண்ணத்தையே மனதில் சுமந்தபடி அயர்ச்சியாகத் திரிகிறேன். பயங்கர மகிழ்ச்சி. பயங்கரக் கவலை. இரண்டுமே மாறி மாறி வருகிறது. இந்த நாவல் எழுதிய கணங்கள், ஏறி நின்று முழங்கிய அந்த புளோ, இனி எந்த நாவலில் வருமென்று தெரியாது. ஆனால் பெரிய பாரத்தை இறக்கிவிட்டாயிற்று. இறக்கிய வேகத்தில் இரண்டு சிறுகதைகள் எங்கிருந்தோ வந்து விழுந்தன. சென்றவருடம் ஆரம்பித்த சிறுகதை ஒன்று நேற்றையத்தினம் தன்னை எழுதி முடித்தது. மகிழ்ச்சி.

வெகு விரைவில் முறையான அறிவிப்புடன் இணைய முன் பதிவுகளை ஆரம்பிப்பதாக இருக்கிறோம்.

இனி என் வேலை இதனை ஒரு போர்வையில் சுருட்டி ஆற்றில் விடுவதுதான். யாராவது எடுத்து வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை. அதுவரை,

தொட்டிலை அயர்ச்சியுடன் பார்த்தபடியே இருக்கிறேன்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட