Skip to main content

எழுத்தாளருடன் முரண்படுதல்



“நான் என்பது எனக்கு வெளியே இருப்பது” என்றார் ழாக் லக்கான். சிறு வயதில் எனக்கென்றிருந்த அறம் இப்போது என்னிடமில்லை. சிறுவயது நானுக்கும் இப்போதைய நானுக்குமே மிகப்பெரிய வித்தியாசத்தை "நான்" காண்கிறேன். சமயத்தில் அதனை வியப்போடு பார்த்துமிருக்கிறேன். நாளை இதுவும் மாறுமென்றே தோன்றுகிறது. இதில் எனக்கு கெட்டியான இரும்புப்பிடி கிடையாது.

எம்முடைய சுயங்கள் எல்லாமே மற்றமைகளால் கட்டமைக்கப்படுபவை. நல்லவர், கெட்டவர், அறம், பிரக்ஞை இவையெல்லாமே எமக்குள் “போடப்படுபவை”தாம். எழுதும்போது அவை பிரதிக்குள்ளும் கடத்திச் செல்லப்படுகின்றன. பிரதியை குழந்தை என்று சொல்வதன் காரணமும் அதுவே. எழுதுபவரின் டி.என்.ஏ கூறுகள் எங்கேயோ பிரதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். சமயத்தில் அதனை எழுத்தாளர் தெரிந்து வேண்டுமென்றே செய்வார். பல சமயங்களில் அறியாமற் செய்வார். 

ஆகவே ஒரு பிரதியை அணுகும்போது அந்தப்பிரதிக்குள் இருக்கும் எழுத்தாளரையும் அறிதல் பயனுள்ளதாக அமையலாம். அவரினூடாக "போடப்பட்ட" விடயங்களையும் அறிதல் அவசியம். அவற்றை எல்லாம் பிய்த்துப்போட்டு வகைபிரித்து, அதன் மையம் எது, விளிம்பு எது, இரண்டுக்குமிடையில் இருப்பவை எவை, அதிகாரம், மற்றமை என எல்லாவற்றையும் அறிவது வாசிப்பனுபவத்துக்கு வலுச்சேர்க்கும். இதனைக் கட்டவிழ்ப்பு என்று பின்நவீனத்துவம் சொல்லும். அதேசமயம் மையவாதத்தை எதிர்க்கிறோம் பேர்வழி என்று சொல்லியபடி பல எழுத்துகள் மையத்தை விளிம்பு நோக்கி நகர்த்திவைக்கும் வேடிக்கையை நிகழ்த்துவதுமுண்டு. மையம் எங்கிருந்தாலும் அது மையமே. அது மையவாதமே. ஒரு உண்மையான பின்நவீனத்துவப் பிரதி மற்றமைகளைக் கொண்டாடமாட்டாது. அதனால்தான் மார்க்சியவாதிகளோடு பின்நவீனத்துவம் ஆரம்பத்தில் உடன்பட்டு பின்னாளில் முரண்படவேண்டி வந்தது. ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு பின்நவீனத்துவப் பிரதிகளைக்கூட நவீனத்துமாக்கி, நேர்கோட்டாக்கி கிழித்து தொங்கப்போடலாம். 

இன்னும் சொல்லப்போனால் பின்நவீனத்துவ எழுத்து என்றே ஒன்று இல்லை என்கிறேன்.அது ஒரு வாசிப்பு முறையே. எழுத்து முறை அல்ல. "திருக்குறள்" தொட்டு "ஆதிரை"வரை சகல நூல்களையும் பின்நவீனத்துவ வாசிப்புக்குள் உட்படுத்தி பிரித்து மேயமுடியும். ஆதிரையில் சயந்தனிடம் இருக்கும் “குற்ற உணர்ச்சி” நாவலில் மற்றமைகள்மீதான ஒரு கரிசனையாக வெளிப்படும். அது அவர் தெரிந்து செய்வது. திருக்குறளில் தொனிக்கும் வர்ணாசிரம முறைமை வள்ளுவர் தெரிந்து வேண்டுமென்றே செய்ததாகக் கருதமுடியாது. அது அவருடைய சுயம், அக்காலத்தவருக்குரிய சுயம் என்றே கொள்ளவேண்டும். அதை வாசிக்கும் நாம் அவற்றுக்காக நியாயப்படுத்தல்களை செய்யாமல் இயல்பாகத் தாண்டிப்போவதே சிறந்தது. ஆனால் கடடவிழ்ப்பை நிகழ்த்துவது அவசியமானது. இவை எல்லாமே பின்நவீனத்துவ வாசிப்பு அணுகுமுறையின் பலாபலன்கள். இந்தப்பெயர் அறியாமலேயே பல வாசகர்களை காலம்காலமாக இதனைச் செய்துவரக்கூடும். தமிழினியின் "ஒரு கூர்வாளின் நிழலில்" நாவலை எல்லோரும் பக்க இலக்கத்தைக்கூட விடாமல் பிரித்து மேய்ந்தார்கள். அது ஒருவித "collective" பின்நவீனத்துவ வாசிப்பு. ஆனால் இன்றைக்கு பின்நவீனத்துவம் என்ற வார்த்தை எள்ளி நகையாடுதலுக்கே பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயம். விடுவோம்.

எல்லாவற்றையும்கடடவிழ்க்கும் இந்தவகை வாசிப்பில் ஒரு சிக்கலும் இருக்கிறது. “Read the literature for the pleasure of reading it என்று சொல்கின்ற ஹெமிங்வேயை நாம் புறக்கணிக்கலாகாது. எல்லாவற்றையும் பிரித்துப்போடுகையில் ஒருவித cynical புறக்கணிப்பு மனநிலை எம்மிடம் தொற்றிவிடும். எல்லாமே conspiracy ஆகத்தோன்றும். இது குப்பை என்று எல்லா எழுத்துகளையும் தூக்கிப்போட்டுவிடுவோம். எல்லோரையும் நிராகரிப்போம். வாசிப்பின் உன்னதமான அனுபவம் அப்போது கசக்க ஆரம்பித்துவிடும். ஆகவே இந்த புள்ளிகளுக்கிடையில் எங்கேயாவது ஒரு புள்ளியில் நாம் சமரசமாகவேண்டும். அல்லது பிரதி சமரசமாக்கவேண்டும். இருக்கட்டும்.

இதெல்லாவற்றையும் மனதிற்கொண்டு எழுதுபவருக்கு/எழுதும்போது இரண்டு எதிர் எதிர் நிலைகள் ஏற்படுகின்றன.

  1. ஒரு எழுத்தாளராக இயல்பாக தான் சொல்லவந்த விடயத்தை கட்டமைத்தல்.
  2. ஒரு வாசகராக தான் எழுதும் பிரதியை கட்டவிழ்த்தல்.
இவை இரண்டையும் ஒரே தடவையில்செய்துபார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது கதைசொல்லி, எழுத்தாளர், வாசகர் என்று மூன்று நிலைகளினூடு சிறுகதையை எழுதுவது. சிறுகதையில் மூன்றுபேரும் வந்துபோவது. எங்காவது கதைசொல்லியோடு, எழுத்தாளரோடு (ஜேகே என்ற எழுத்தாளர்), வாசகர் (ஜேகே என்ற வாசகர்) முரண்படுகையில் அதனையும் அப்படியே பதிவது. இது ஒரு பகடை ஆட்டம் போன்றது. முரண்பாடாக எழுதக்கூடாது என்பது ஜேகே என்ற எழுத்தாளரின் பிரக்ஞையாக இருக்கும். முரண்பாட்டைக் கண்டறிவது ஜேகே என்ற வாசகரின் பிரக்ஞையாக இருக்கும். ஒரு கட்டத்தில் இந்த ஆட்டத்தின் சுவாரசியம் காரணமாக இருவருமே சமரசம் செய்துகொள்வர். "நீ தவறு செய். நான் கண்டுபிடிக்கிறேன்". "நான் தவறு செய்கிறேன். எங்கே கண்டுபிடி பார்க்கலாம்!".

இந்த ஆட்டம் சூடு பிடித்ததில் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று சிறுகதைகள் தேறின. இவற்றை வெவ்வேறு படிநிலைகளில் முயன்றிருக்கிறேன். முழு விளக்கமும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் சில குறிப்புகள்.
  1. முதல் சிறுகதை “மெல்லுறவு”. புதிய சொல் மூன்றாவது இதழில் வெளிவந்துள்ளது. அதிலே ஜேகே என்ற எழுத்தாளரின் நேர்மைமீது சந்தேகம் வந்து அவரைக் கேள்விக்குட்படுத்தும் வேலை பிரதிக்குள்ளேயே இடம்பெறுகிறது.
  2. இரண்டாவது சிறுகதை “பொண்டிங்”. பதாகை இணைய இதழில் வெளிவந்தது. அதிலே வாசகரோடு, “நான் தவறு செய்கிறேன். எங்கே கண்டுபிடி பார்க்கலாம்.” என்கின்ற எழுத்தாளரின் “சேட்டை” இடம்பெறும். நேர்மையற்ற கதைசொல்லியும் நேர்மையற்ற எழுத்தாளரும் நிகழ்த்தும் கதை அது.
  3. மூன்றாவது சிறுகதை “மீசை வைத்த கேயிஷா”. எழுதி முடித்துவிட்டு எழுத்தாள நண்பர் ஒருவரிடம் கொடுத்திருக்கிறேன். ஒரு சஞ்சிகைக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதனை சஞ்சிகைகள் வெளியிடும் என்ற நம்பிக்கை இல்லை. அதன் போக்கு சற்று குழப்பமானது. ரொமாண்டிச யுகத்திலிருந்து இற்றைவரை உருவான அத்தனை எழுத்துவடிவங்களுக்கும் சிறுகதை வரிசையாகப் பயணிக்கும். யார் கதை சொல்லி, யார் எழுத்தாளர், என்ன கதை என்பது கதையின் போக்கிலே மாறிக்கொண்டுமிருக்கும். "மீசை வைத்த கேயிஷா" ஒரு தஞ்சாவூரு மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணியவிட்டு... சேர்த்துச் சேர்த்துச் செய்ததிந்த பொம்மை. ஆனால் கடைசியில் வெறும் களிமண் திட்டாக மாறியதோ நான் அறியேன். ஆனால் என்னளவில் நான் ரசித்து அனுபவித்து கற்றுக்கொண்டு எழுதிய கதை. எங்குமே வெளியிடப்படாவிட்டால் விரைவில் படலையில் ஏறும்.
இந்த மூன்று சிறுகதைகளும் எப்படி உள்வாங்கப்படப்போகின்றன என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

பி.கு "பின்நவீனத்துவம் என்றால் என்ன அண்ணே?" என்று வரப்போகும் கொமெண்டுகளுக்குப் பதில், எம். ஜி. சுரேஷ் எழுதிய "பின்நவீனத்துவம் என்றால் என்ன?" நூலில் எளிய தமிழில் இருக்கிறது. பூபாலசிங்கம் புத்தகசாலையில் பெற்றுக்கொள்ளலாம். 

படம் : பார்னட் நியூமன்

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .