Skip to main content

மருதூர்க்கொத்தன் கதைகள்
“மரையாம் மொக்கு”. ஒரு கடலோரக் கிராமத்தில் வாழும் வறுமை மீனவரான காத்தமுத்துவின் கதை. 
“முன்னங்கை பருமனனான நேரான வரசங்குத்திய சாணளவு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒரு பாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறதுதாண்டா மரையாம் மொக்கு” 
என்று கிழவர் ஆதம்பாவா “மரையாம் மொக்கு”வுக்கு விளக்கம் கொடுப்பார். மரையாம் மொக்கு என்பது வாவியில் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணம். சில்லி வலையை நீர்ப்பரப்பினுள் வளைத்துக்கட்டி நீரடியில் ஒளிந்துகிடக்கும் மீன்களை வெருட்டி வெளிக்கொணர்வதற்காக, நீரைத் தாம்தூம் என்று அடித்துக் கலக்குவதற்கு மரையாம் மொக்கு பயன்படும். 

காதர் பக்கென்று கேட்பான்.
“மரையாம் மொக்கைத் தூக்கிப்பிடித்தா தூரத்திலிருந்து பார்ப்பவனுக்கு ரொக்கட் லோஞ்சர் மாதிரிதானே தெரியும்?”
அதுதான் கதை. இந்த இரண்டு புள்ளிகளும் கதையில் ஈற்றில் அகோரமாகப் பிணைக்கப்படும். ஒரே சிறுகதை. அதற்குள் இயக்கப்பிரிவினைகள். முஸ்லிம்களின் எண்ணங்கள். வர்க்கப்பிரச்சினை. ஏழை மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பிரச்சனை, இப்படி எல்லா விசயங்களும் போகிறபோக்கிலே கொட்டப்பட்டுக்கிடக்கின்றன. அற்புதமான நிலமும் மொழியும் சிறுகதை முழுதுமே பரவிக்கிடக்கிறது. 

புத்தகங்கள் தமக்கான வாசகர்களுக்காக ஆயிரம் ஆண்டுகள்கூட காத்துக்கிடக்கின்றன. தம்முடைய வாசகர்களைத்தேடி மைல்கள்தாண்டிப் பயணிக்கின்றன. மூன்று வருடங்களுக்கு முன்னர் கவிஞர் மருதூர்க்கனியின் நூல்வெளியீட்டு விழாவிலே கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்ததும் ஆரிப் என்பவர் தன்னை அறிமுகப்படுத்தி “என் அப்பாவின் புத்தகத்தை உங்களுக்குத் தரவேண்டும், முகவரி தாருங்கள்” என்று கேட்டுவாங்கிக்கொண்டார். புத்தகமும் அவர் சொன்னதுபோலவே அடுத்தவாரமே வீடு தேடிவந்தது. ஆனால் நான் அதை வாசிக்கவில்லை. ஈழத்து நூல்கள் பிரிவுக்குள் அழகாக அடுக்கி வைத்துவிட்டேன். மூன்று வருடங்கள். முதிர்கன்னியாகி, நான் எப்போதாவது தேடி எடுத்து வாசிப்பேன் என்று இத்தனை நாள்களாய் அது ஏனைய புத்தகங்களுடன் குறண்டிக்கிடந்தபடி காத்திருந்திருக்கவேண்டும். வாசிக்கத்தொடங்கியதும்தான் தாமதம். வாரி அணைத்துக்கொண்டது.

“மருதூர்க்கொத்தன் கதைகள்”. 

மருதூர்க்கொத்தனின் இயற்பெயர் “வாப்பு மரைக்கார் இஸ்மாயில்”. கிழக்கு மாகாணம் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்தவர். முற்போக்கு இலக்கியவாதி. இறுதிக்காலத்தில் தன்னுடைய சிறுகதைகள் அத்தனையையும் தொகுக்கவேண்டும் என்கின்ற அவரின் ஆர்வம் இறந்து ஒரு வருடம் கழித்தே அவரின் பிள்ளைகளின் முயற்சியினூடாக சாத்தியமானது. தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகள் பலவற்றை இப்புத்தகத்தில் வாசிக்கமுடிந்தது. வாசித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு வகை வெட்கங்கள். இதுநாள்வரை மருதூர்க்கொத்தனை வாசிக்காமல் இருந்திருக்கிறோமே என்பது முதலாவது. இப்படி எல்லாம் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள், நாங்கள் என்னத்தை எழுதிக் கிழிக்கிறோம் என்பது இரண்டாவது.மருதூர்க்கொத்தனின் சிறுகதைகள், தெருவில் பயணிக்கும்போது நம்மைக் கடந்து செல்லும், நாம் கவனிக்கத்தவறும் மனிதர்களால் ஆனது. அந்த மனிதர்களின் பின்னால் களவாகச்சென்று அவர்களின் வாழ்க்கையை அப்படியே கண்டு சொல்ல முனைபவை. கதைகளின் களம் பொதுவாக கிழக்கிலங்கை. குறிப்பாக மருதமுனை என்கின்ற கடலோரக் கிராமம், கல்முனை, படுவான்கரை பிரதேசங்கள். புட்டும் தேங்காய்ப்பூவும் மனமொத்து சேர்ந்திருந்த அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளின் ஆரம்பங்களில் இடம்பெற்ற கதைகள் இவை. ஆயுதப்போராட்டம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல, அது ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கானது என்று பெரியவர்களுக்கு வகுப்பெடுக்கும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடிய காலம் அது. போராட்டம் கொண்டுவந்த சீரழிவுகளையும் விசனத்துடன் அவருடைய கதைகள் விமர்சிக்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வு, மீனவ-விவசாய பிரச்சனைகள் என்று பல்வேறு தளங்களில் கதைகள் விரிகின்றன. மருதூர்க்கொத்தனின் முற்போக்கு அவருடைய சமூகத்தை நோக்கி அதிகம் இருக்கிறது. “ஈரா”, “தாட்டாந்தம்” போன்ற சிறுகதைகள் மிகத்துணிச்சலாக சில விடயங்களைப் பேசுகின்றன. தலை போகும் விடயங்கள் அவை.

ஈரா என்பது கணவன் மவுத்தானதும் “தலக்கி எண்ண பூசாம, சர்வாங்கத்தில பூணாரம் போடாம, வெள்ளப்பொடவய உடுத்திக்கொண்டு” மனைவி “நாலு மாசமும் பத்தரப்பொழுதும்” பாயினால் சுற்றிக்கட்டப்பட்ட அடைப்புக்குள் "இத்தாவேலி" இருக்கும் சடங்கு. சடங்கு முடிந்து மனைவி வெளியே வரும்போதுதான் மவுத்தான கணவனுக்கு சொர்க்கவாசல் திறக்கும். இது ஐதீகம். இதன் இன்னொரு காரணம் நுணுக்கமானது. “புரிசன் மவுத்தான அண்டக்கி வேற புரிசனுக்கு வாழ்க்கப்படலாம் எண்டதுதான் மம்மதியா மார்க்கம்”. ஆனால் முதல் புரிசன் மவுத்தான அண்டைக்கும் “ஊடு” கூடியிருக்கலாம். இரண்டாம் புரிசனுக்கு வாழ்க்கைப்பட்ட அண்டைக்கும் “ஊடு” கூடியிருக்கலாம். இந்த நிலையில் குழந்தை யாருடையது என்ற குழப்பம் வந்து சேர்ந்துவிடும். இதனாற்றான் “இத்தா” இருப்பது. இந்த முடிச்சை வைத்துக்கொண்டு “ஈரா” சிறுகதையை விவகாரமாகக் கொண்டுசெல்வார் மருதூர்கொத்தன். 

மருதூர்க்கொத்தனின் விபரிப்புகள் புதுரகம். ஒரு கதையில் யோகிக்கு நிஷ்டை கலைகிறது. “தழையத் தூக்கிவிடாமல் குந்தினால் உடுத்திருக்கும் பழைய சாறன் ‘பராக்’ என்று கிழிவதுபோல யோகம் சட்டென்று கலைந்தது” என்பார். எச்சில் துப்பலை “கொஞ்சூண்டு சளியும் கனக்க உமிழ்நீருமான கலவை தெருவோரத்துக் குறுகிய புல்லிடைப் புணர்ந்தது” என்கிறார். கிழக்குமாகாணத்து மாந்தரின் மொழிவழக்கு அத்தனை சிறுகதைகளிலும் துள்ளி விளையாடுகிறது. அந்த வட்டாரப் பழமொழிகள் தனித்துவமானவை. “முந்தி வந்தது முழங்கால் மட்டு, பிந்தி வாறதும் பெருந்தொடை மட்டுமாகத்தான் இருக்கும்”. அவருடைய மாந்தர்பேசும் வார்த்தைகளும் கூரானவை.
"கச்சத் தொங்கல் வெளியே தெரியுதப்பு. வேட்டிய கொஞ்சம் இறக்கிக் கட்டுங்க"
"என்னோடொத்த கெழடுதட்டின தமிழனுக்கு அடையாளமே கச்சைதாண்டி"
எனக்கு கிழக்கிலங்கை அத்தனை பரிச்சயமான நிலமல்ல. ஆனால் புத்தகங்கள், எல்லா நிலங்களிலும் எல்லாக் காலங்களிலும் ஒரே மனிதர்களே பிறப்பெடுத்து வாழ்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. உமறுகத்தாவையும் நெய்னாவையும் சீனத்தையும் சவரக்கடை காசிப்பிள்ளையையும் நான் என்னுடைய ஊரிலும் பார்த்திருக்கிறேன். குணங்கள் ஒன்றே எனினும் அவரவர் மொழி வேறு. நிலம் வேறு. வாழ்க்கையும் வேறு. அவற்றை தரிசிக்கும் ஆவல் மேலிடுகிறது. மருதமுனையையும் படுவான்கரையையும் பாண்டிருப்பையும் கல்முனையையும் நீலாவணையையும் சுற்றிச்சுற்றி வரவேண்டும். நேரம் காலம் கரைவது தெரியாமல் சிறு குழந்தை மண் அளைவதுபோல அவற்றின் தெருக்களெங்கும் அலையவேண்டும். சுபைதா கையால் ஒரு பேணி தேநீர் வாங்கிக்குடிக்கவேண்டும்.

சீனி முகம்மது. காடு மேடுகளில் போடிமாரின் மாடு கட்டி கறந்து பிழைக்கும் ஏழை மனிதன். அவன் ஒருவன் உழைப்பில்தான் முழுக்குடும்பமும் பிழைத்து வந்தது. பிள்ளைகள் சுட்டிகள். அதுவும் மகனோ படு சுட்டி. எட்டு டி எடுத்து உயர்தரத்தில் பயோ படித்து டொக்டராகவும் வந்திருக்கக்கூடியவன். ஒருநாள் சீனி முகம்மது இனக்கலவரத்தில் கொல்லப்பட்டுவிட எல்லாமே தலைகீழானது. சீனி முகம்மதுவின் முதலாளிக்கோ அது "மீனிலே செகிள் கழண்ட மாதிரி". குடும்பத்துக்கோ "பிச்சப்பெட்டியும் பத்திப்போச்சுதுகா". மகனின் படிப்பு அத்தோடு தொலைந்தது. சீனிமுகம்மதுவின் மனைவியின் வார்த்தைகள் இன்னமும் ஓங்கி  ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
சட்டியோட போச்சுதாம் பிலால் நாத்தம். உட்டுட்டுப்போங்க வாப்பா. மனசெல்லாம் புத்தாகி, புத்தெல்லாம் பாம்பாகி, பாம்பெல்லாம் நஞ்சாகி, கடிக்கிறது எது. கடிக்காம உடுறது எது எண்ட எகன மோனையும் இல்லாம போச்சிதுகா வாப்பா. .
*********************

மருதூர்க்கொத்தன் கதைகளை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட