நன்றே செய்க

Jul 29, 2016 0 comments
கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த கிழமை, அடுத்த கிழமை என்று பிற்போட்டுக்கொண்டேயிருந்தேன். நமக்குத்தெரிந்தவர்களை மரணம் அண்டாது என்கின்ற ஒரு ஆழ்மனது நம்பிக்கை எப்போதுமே எம்முள் இருக்கிறதோ என்னவோ. 

அந்த நம்பிக்கை அண்மைக்காலத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. பத்து, இருபது வயதுகளில் எனக்குத்தெரியாத தாத்தா, பாட்டிமார்களே அதிகம் இறந்துகொண்டிருந்தார்கள். முப்பதுகளில் இப்போது அங்கிள்களும் அன்ரிகளும் பிரியத்தொடங்கி இருக்கிறார்கள். சிறுவயதில் நான் ரசித்து வளர்ந்த ஆளுமைகள் இப்போதெல்லாம் ஒவ்வொருவராய் மறையத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பத்திருபது வருடங்களில் என் நண்பர்களும் பிரியத்தொடங்குவார்கள். ஆர்மிக்காரன் மூவ் பண்ணத்தொடங்கிவிட்டான். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த ஷெல்கள் நம்மூரையும் தாக்கி, அயலட்டத்தையும்தாக்கி இப்போது வீட்டுவாயிலிலும் விழுந்து வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒருநாள் அது என் கட்டிலிலும் விழுந்துவெடிக்கவே செய்யும்.

இந்த அங்கிளுக்கு மூளையில் கட்டி. சிகிச்சை ஏதும் கண்டறியப்படாத புற்றுநோய். நோய்முற்றி இனி வேறு வழியேதும் இல்லை என்று “Palliative Care” வோர்டிலே விட்டுவிட்டார்கள். “Palliative Care” க்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை. சிகிச்சை பலனில்லாத மரணத்தறுவாயில் இருக்கும் நோயாளிகளுக்கான விடுதி இது. இவர்களுக்கு மருந்தில்லை. வெறும் சேலைன்கூட இல்லை. மூச்சுச்சிரமம் என்றால் ஒக்சிஜன் கொடுப்பார்கள். உடல்பாகங்கள் உருக்குலைந்து வலி அதிகம் என்றால் மோர்பின் கொடுப்பார்கள். அவ்வளவுதான். “உங்கள் நோய்க்கு எம்மிடம் மருந்தில்லை, வேறு வழியில்லை, நீங்கள் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவீர்கள்” என்று கட்டிலில் அமர்ந்து கையைப்பிடித்து பண்பாக மன்னிப்புக்கேட்கும் தோரணையில் சொல்லிவிட்டு வைத்தியர் விலகிவிடுவார். அதன்பிறகு ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒருமாதமோ நோயாளி அதற்குள் இருக்கலாம். வெளியில் போவதென்றாலும் ஒகே. உள்ளேயே இருந்து புத்தகம் வாசிக்கலாம், சிகரட் பிடிக்கலாம். டிவி பார்க்கலாம். உறவினர்களுடன் பேசிக்கொள்ளலாம். நடந்து திரியலாம். எந்த உணவும் சாப்பிடலாம். ஆனால் அவற்றினால் வரும் சிக்கல்களுக்கு வைத்தியம் செய்யமாட்டார்கள். Care மாத்திரமே. Cure இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அங்கங்கள் செயலிழந்து, மூச்சு நின்று, இத்தனை வருடங்கள் பேசிப், பழகித், தொட்டு, உணர்ந்து, வாழ்ந்த ஒரு உயிர் பார்த்துக்கொண்டிருக்கையில் இறந்துவிடும். Just like that. இறந்துவிடும்.

“பொதுவாக பிரேதம் என்றால் ஒருவித பயம் வரும். ஆனால் இது என்னுடைய அப்பா. பக்கத்திலேயே எப்பவும் இருக்கோணும்போல இருந்துதுடா. கையைப்பிடிச்சு தடவிக்கொண்டே இருந்தன்” என்றார் அந்த அண்ணர். முகத்தில் அடித்தது.

அண்மைக்காலமாக வைத்தியசாலை அனுபவங்கள் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் வைத்தியசாலைக்குச் செல்லும்போது கார்பார்க்கிலும், நடைபாதையிலும், வைத்தியசாலைக் கூரை முகடுகளிலும் மரணங்கள் உட்கார்ந்துகொண்டு யாருக்கோ காத்துக்கொண்டிருக்கும் பிரமையை உணருவதுண்டு. தலையைக் குனிந்துகொண்டே செல்வதுண்டு. “Beautiful Mind” பேராசிரியர் நாஷைச் சுற்றி பிரமைகள் திரிவதுபோல மரணங்கள் நம்மோடு கூடவே திரிந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. ஏதோவொரு செய்தியை நமக்குச் சொல்லவிழைகின்றன

ஒவ்வொரு கணமுமே நமக்குக் கிடைக்கும் கொடை. அதை சரியாகப் பயன்படுத்தல் வேண்டும். “எப்பவெண்டு தெரியாது, ஆகவே இருக்கிற டைமை வேஸ்ட் பண்ணாமல் உனக்கு என்ன பிடிக்குதோ அத தயங்காமல் செய்” என்றே ஒவ்வொரு மரணமும் படித்துப் படித்துச் சொல்லி மாய்கின்றது. ஆனால் கேட்கமாட்டோம். கேட்கவே மாட்டோம். இரண்டே நாளில், இந்த மரணம் கொடுத்த அதிர்ச்சி மறைந்ததும் மீண்டும் நேரத்தினை வீணடிக்க ஆரம்பித்துவிடுவேன். ஷிட்.

யோசிக்கையில், உலகமே “Palliative Care” விடுதிபோன்றே எனக்குத்தோன்றுகிறது. நாமெல்லோருமே சிகிச்சையே இல்லாத மரணம் என்ற வியாதி தாக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்தானே.

நன்றே செய்க. அதனையும் இன்றே செய்க.

Comments

Contact form