Skip to main content

மடுல்கிரிய


வார இறுதியில் மெல்பேர்னில் இடம்பெற்ற எழுத்தாளர் விழாவைப் பார்க்கச்சென்றிருந்தேன். விழாவுக்கு மடுல்கிரிய விஜேரத்ன வந்திருந்தார். மடுல்கிரிய என்ற பெயர் ஈழத்து வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமானது. அவர் ஒரு மொழியியல் நிபுணர். ஏராளமான தமிழ் நூல்களை சிங்களத்துக்கும், சிங்கள நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்த்தவர். சரளமாகத் தமிழில் உரையாடக்கூடியவர். அவருடைய பேச்சைக்கேட்பதற்காகவே ஏழு கடல், ஏழு மலை தாண்டி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 

அரை மணிநேரம்தான் அவருக்கு உரையாற்ற ஒதுக்கியிருந்தார்கள். பேச்சில் நிறைய தகவல்கள் நிறைந்திருந்தது. சிங்களம், ஈழத்தில் தமிழ் இவற்றின் வரலாறுகளை கடப்பதற்கே அரை மணிநேரம் அவருக்குப் போதவில்லை. அதனால் சமகால மொழிபெயர்ப்பு முயற்சிகளைப்பற்றி அவர் அதிகமாகக் குறிப்பிடவில்லை. தமிழினியின் கூர்வாள் மூன்று நான்கு பதிப்புகள் விற்றுத்தீர்ந்தன என்றார். சிங்களத்துக்கு எப்படி அனகாரிக தர்மபாலாவோ அப்படித் தமிழுக்கு நாவலர் என்றார். நாங்கள் அனகாரிகவை எப்படி எதிர்கொள்கிறோமோ அப்படித்தான் சிங்களவர்கள் நாவலரை எதிர்கொள்கிறார்களோ என்ற சிந்தனை வந்து போனது. 

பேச்சின் முடிவில் கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்றார்கள். நான் கையை உயர்த்தினேன். எனக்கு முன்னாலே இருந்தவர் கையை உயர்த்தாமலே எழுந்து கேள்வியைக் கேட்க ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து இன்னொருவர். இப்படியான நிகழ்வுகளில் கேள்வி கேட்பவர்களின் மனநிலையைப் பற்றித் தனியாகக் கட்டுரை எழுதலாம். பெரும்பாலானவர்கள் பதில்களை வைத்துக்கொண்டே கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒருவர் சிங்கள மொழி தமிழில் இருந்துதான் உருவாகியது என்றார். தமிழில் புழங்கும் பல சொற்கள் சிங்களத்திலும் இருப்பதைக் காரணம் காட்டினார். அவை சமஸ்கிருதத்து மூலச்சொற்கள், தவிர பிராந்திய அணுக்கம் காரணமாக மொழிகளில் பரஸ்பரம் தாக்கங்கள் வந்து சேர்ந்தன என்று மடுல்கிரிய எவ்வளவு விளக்கிச் சொல்லியும் கேள்வி கேட்டவர் அடங்கவில்லை. கடைசியில் “உங்களுக்குத் தெரியாது, வடிவா ஆராய்ச்சி செய்து பாருங்கள்” என்று கேள்வி கேட்டவர் மடுல்கிரியவிடம் கூறிவிட்டு உட்கார்ந்துவிட்டார். இன்னொருவர் காளிதாசனின் மேகதூதம்போல சிங்களத்தில் தூதுப்பிரபந்தங்கள் இருக்கின்றனவா? என்று out of the blue கேள்வி ஒன்றைக்கேட்டார். மடுல்கிரிய பதில் சொல்ல ஆரம்பிக்கமுதலேயே “நான் சலலகினி சந்தேஷய மாதிரியான நூல்களைப்பற்றிக் கேட்கிறேன்” என்று அவரே பதிலே சொன்னார். உனக்குப் பதில் தெரிகிறதல்லவா? பின்னர் என்ன ....த்துக்கு கேள்வியைக் கேட்கிறாய்? என்று எனக்கு வாய் உன்னியது. ஆனாலும் பேசாமல் தொடர்ந்து கையை உயர்த்திக்கொண்டிருந்தேன். என் வேளை வரும்வரைக்கும். அடுத்ததாக ஒரு பிரகிருதி “புத்தர் எங்கே பிறந்தார்? புத்தர் பிறக்கும்போது எந்த மதம்?” என்றார். “இந்துமதம்” என்று மடுல்கிரிய கூறியபோது கேள்வி கேட்டவருக்கு ஆனையிறவு அடிச்ச சந்தோசம். “ஆ, பார்த்தீங்களா, இந்துமதத்திலிருந்துதான் பௌத்தம் வந்தது”. இரண்டு கேள்விகளில் என்னமா தூள் கிளப்பிவிட்டார்கள்? “தமிழிலிருந்து சிங்களம் வந்தது. இந்து மதத்திலிருந்து பௌத்தம் வந்தது. மாட்டார் குளோஸ். நாங்கள் தமிழீழம் கேட்பதே தவறு. மொத்த ஈழத்தையுமே தா மக்கா”. 

மடுல்கிரிய தின்ற இஞ்சி தொண்டையில் சிக்கிக்கிடந்தது தெரிந்தது. நான் இன்னமும் கைகளை உயர்த்தி வைத்திருந்தேன். 

முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” சிறுகதையைபற்றி ஒரு பெண் உரையாற்றினார். தேர்ந்த வாசகர் என்று தெரிந்தது. இவ்வளவு காலமும் நம் கண்ணுக்கு மாட்டாமல் எங்கே இருந்தார் என்று ஆச்சரியப்பட்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் தேடிப்போய் வாழ்த்துகள் கூறினேன். ஜெயமோகன் பற்றிய பேச்சு வந்தது. “காடு” நாவலில் வரும் தேவாங்கு பற்றி காலையில் மனைவி கூறியதை அவருக்குச் சொன்னேன். “காடு பிடிக்கும் ஆனா கொற்றவைதான் பெஸ்ட், வெண்முரசு அதைவிட பெஸ்ட்” என்றார். “நும்மொடு அறுவர் ஆனோம்” என்றேன். “மெல்பேர்னில் எங்கள் அலைவரிசையில் ஒரு ஐந்து வாசகர்கள்தான் இருக்கிறோம். நீங்களும் சேர்ந்துகொண்டால் ஆறுபேர் சேர்ந்து பேரணிகள் வைக்கலாம்” என்றேன். கேதாவுக்கு மஹாகவியைப் பற்றி ஒரு வாசகர் வட்டக் கூட்டம் போடவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. வேண்டுமென்றால் சேரனை வைபரில் அழைத்தும் பேசவைக்கலாம். மஹாகவி வாழ்ந்த வாழ்க்கையைக் கேட்டுப்பார்க்கலாம் அல்லவா?

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய, ஈழத்தில் ஞானம் என்ற ஒரு சஞ்சிகையை நடத்தும் ஞானசேகரன் என்பவர் புலம்பெயர் இலக்கியவாதிகளைத் திட்டித்தீர்த்தார். யாரோ கனடா இலக்கியவாதி கொழும்புத் தமிழ் சங்கத்தில் வைத்து ஈழத்துச் சஞ்சிகைகளைக் குறை கூறினாராம். ஈழ இலக்கியத்தை இனி எடுத்துச்செல்லப்போவது ஈழத்தின் அடுத்த தலைமுறை உள்ளூர் இலக்கியவாதிகள் என்றார். So what? உள்ளூரோ, வெளியூரோ, ஆங்கிலமோ, தமிழோ, நன்றாக எழுதினால் வாசிக்கப்போகிறோம். இதில் பொதுமைப்படுத்தல்களுக்கான தேவை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. எழுத்தாளர் தனித்து ஒலிக்கவேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான். இதில் புலம்பெயர், உள்ளூர், விடத்தல்தீவு சனசமூகம் வகை குழு இயங்கியல்கள் ஏதோ ஒரு insecurity விளைவு என்றே தோன்றுகிறது. விமர்சனம் என்று வரும்போதும் குறிப்பிட்ட சஞ்சிகையின் குறிப்பிட்ட பிரதியை மாத்திரமே விமர்சிக்கலாம், கொண்டாடலாம், நிராகரிக்கலாம், whatever. அதற்குமேலே எதனைச் செய்தாலும் அதில் ஒரு பொதுமைப்படுத்தல் வந்து சேர்ந்துவிடும் என நினைக்கிறேன். 

நிகழ்ச்சிமுடிந்தபின்னர் பின்னால் இருந்த ஐயா ஒராள் கேட்டார்.

“தம்பி ஏன் கையைத் தூக்கி வச்சிருக்கிறீங்கள்”

என் கேள்விக்கான வேளை வரவேயில்லை என்று அப்போதுதான் விளங்கியது. பேசாமல் கையை உயர்த்திவைத்துக் காத்திருந்தால் காகம்தான் வந்து பீய்ச்சுவிடுமே ஒழிய எவருமே கவனிக்கமாட்டார்கள். மண்ணெண்ணெய் கியூவில் கால்போத்தல் கூடத் தேறாது. இங்கே எப்போதுமே குறுக்காலே புகுந்து உரத்துக் குரல் கொடுக்கவேண்டும். அல்லது மனேஜரிடம் சொல்லிவைத்தாலும் எண்ணை கிடைக்கும். அல்லது முத்துலிங்கத்தின் ஓடும் இரயிலில் பாய்ந்து ஏறவேண்டும்.

அந்தக் கேள்வியை இங்கேயே கேட்டுவைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

“சிங்களத்தில் சமகால (அல்லது Contemporary) இலக்கியங்களில் நாங்கள் தேடி வாசிக்கவேண்டியவை எவை என்று சொல்லமுடியுமா? அவற்றின் தமிழ், அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புகள் எங்காவது கிடைக்குமா?”

000

Comments

  1. நாங்கள் குறுக்கால போய்தான் கோவிலில் இருக்கும் இறைவனையே வழிபடுகிறோம்...மேடையை விட்டு வைப்போமா?என்ன....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட