கள்ள மௌனம்

May 29, 2017 1 commentsஅலிஸ் மன்ரோவை ஓரிரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மன்ரோவின் சிறுகதைகளில் இனம்புரியாத ஒரு தனிமை சூழுந்திருக்கும். வன்கூவரின் குளிர் அதற்குக்காரணமாக இருக்கலாம். குளிர் மனிதர்களை ஒடுக்குகிறது. தனிமைப்படுத்துகிறது. சக மனிதருக்கு கைலாகு கொடுக்கக்கூட அது விடுவதில்லை. "பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப் பகலோரு யுகமாக் கழித்தாளே" என்று அசோகவனத்துச் சீதையைப்பற்றி அருணாச்சலக் கவிராயர் குறிப்பிடுவார். நம் சங்கக்கவிகளை வன்கூவரின் பனிக்காலத்தில் கொண்டுபோய் வசிக்கவிட்டிருந்தால் நமக்குப் புதிதாக ஒரு நிலம் கிடைத்திருக்கும். காதலைப்பற்றி மன்ரோவின் ஒரு பாத்திரம் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. பனியோடு அவை மிகவும் பொருந்தி வருகின்றன.
“love is not kind or honest and does not contribute to happiness in any reliable way. "
“இப்போது என்ன புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறீர்?” என்று சகுந்தலா அன்ரி கேட்டார். "அலிஸ் மன்றோ" என்றேன். “தமிழில் எது கடைசியா?” எண்டு கேட்டதுக்கு என்னிடம் பதில் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் சுந்தர ராமசாமியின் சிறுகதைத்தொகுப்பு ஒன்றை ஆரம்பித்தேன். பின்னர் கணையாழிச் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு. எதையுமே தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை. தொடர்ந்து எழுதுவதாலோ என்னவோ, தமிழ்ச் சிறுகதைகளின் போக்கைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அது அயர்ச்சியை வரவழைக்கிறது. தவிர எழுத்தாளர்களின் முகத்தைத் தவிர்த்து வாசிப்பது என்பது முடியாத ஒன்றாகிக்கொண்டிருக்கிறது. ஆங்கில வாசிப்பில் அந்த சிக்கல்கள் இல்லை. அலிஸ் மன்ரோவை எனக்கு முன்ன பின்ன தெரியாது. அவருடைய பீடம் எது, சகபாடிகள் யார், அவர் இலக்கியவாதியா இல்லையா என்கின்ற அலப்பறைகள் பற்றி எதுவுமே எனக்குத்தெரியாது. மன்றோவை வாசிக்கையில் எனக்கு நானறியாத வன்கூவரையும் அந்த மனிதர்களையும் சிருஷ்டிக்க முடிகிறது. அவருடைய பாத்திரங்கள் எல்லோரிடத்திலும் “நானும்” கொஞ்சம் தெரிவதால் அவை என்ன செய்யப்போகின்றன என்கின்ற ஆர்வம் மேலிடுகிறது. இதிலே அற்புதம் எதுவென்றால், மன்றோவுக்குமே அவை என்ன செய்யப்போகின்றன என்பது எழுதிமுடிக்கும்வரைக்கும் தெரிந்திருக்காது. அவர் எழுத்தில் அந்த curiosity எப்போதுமே ஒளிந்திருக்கும். மன்றோவை எப்படித் தேடிக்கண்டுபிடித்தேன் என்பது ஆச்சரியமானது.  தற்செயலாகத் தெரிவு செய்ததுதான். Granta வில் யாரோ மன்றோவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கவேண்டும். மிகச்சிறந்த நூல்கள் எல்லாம் என்னைத் தற்செயலாகவே வந்தடைந்திருக்கின்றன. மருதூர்க்கொத்தன், லாகிரி, கோயேட்ஸ், கீ.ரா என்ற நீண்ட வரிசை அது. மன்றோவைத் தேடி வாசிக்கலாமா என்று கேட்பவர்களுக்குப் பதில். நாடி நரம்பெல்லாம் உங்களுக்கு லாகிரியைப் பிடிக்குமென்றால் மன்ரோவை நம்பி வாசிக்கலாம். 

விட்டு விலகியிருத்தல் என்பதை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகவே செய்துவருகிறேன். முகநூலுக்கு வாரத்தில் ஒரிருமுறை மாத்திரமே வருகிறேன். அதுவும் எழுதிய ஆக்கத்தைப் பதிவிடுவதற்காக. மற்றும்படி முகநூலுக்குள் வரவேண்டிய தேவை பெரிதாக இருப்பதில்லை. எழுத்திலும்கூட புனைவின்மீதே நாட்டங்கள் அதிகரிக்கின்றன. பொதுக் கருத்துகள் சொல்லும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக நான் இழந்துவருகிறேன் என்றே நினைக்கிறேன். அல்லது எப்போதோ இழந்துவிட்டேன். அல்லது எப்போதுமே அத்தகுதி எனக்கு இருந்ததில்லை. காரணம் நம்முடைய கருத்துகள் சௌகரியமான, நமக்குப் பாதகமற்ற சூழ்நிலை உள்ளபோதே வெளிப்படுகின்றன. மற்றும்படி கள்ள மௌனம் சாதிக்கிறோம். நமக்குச் சரி என்று தோன்றுவதையும், தவறு என்று தெரிவதையும் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. சொன்னால் சிலர் எதிர்ப்பார்கள். வீண் பகை வரும் என்பதால் விலகியிருக்கிறேன். அதைப்போல ஒரு குள்ள நரித்தனம் வேறு இல்லை. ஹிப்போகிரிஸி வேறு இல்லை. வித்யா, கிருஷாந்தி கொலைகளுக்குக் குரல்கொடுத்துவிட்டு நம்மருகே நடைபெறும் சம்பவங்களைப்பற்றி ஒரு அரவுகூடக் கூறாமல் கடந்துபோவது என்பது திருட்டுத்தனம். முதுகெலும்பே இல்லாத புழுகூட அப்படிச்செய்யாது. எந்த வெட்கமும் இல்லாமல் நான் செய்கிறேன். காரணம் எனக்குப் பயம். சொன்னால் எதிர்வினை வரும். நிம்மதி குலையும். அடுத்த கதை எழுதுவதற்குரிய மனநிலை குழம்பிவிடும். அலுவலகத்தில் நிம்மதியாக வேலை செய்யமுடியாது. ஒரே தீர்வு, சத்தம்போடாமல் இருப்பது. கள்ள மௌனம்போல ஒரு பாதுகாப்பான விடயம் வேறெதுவும் உண்டோ.?

புனைவு என்னை அன்போடு அழைக்கிறது என்று நினைக்கிறேன். ஜீவி ஒரு லிங்க் அனுப்பியிருந்தாள். அதில் ஒரு நாவல் தனக்குரிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்று அருந்ததிராய் சொல்லியிருந்தார். புனைவும் அப்படித்தான். அது தனக்குரிய நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்மையில் விளமீன் என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். அச்சிறுகதை கிட்டத்தட்ட என்னுடைய மூன்று வாரங்களைத் தின்றது. “சமாதானத்தின் கதை” என்ற இன்னொரு சிறுகதை கிட்டத்தட்ட ஒருமாதம். அதை ஒரு எழுத்தாள நண்பரினூடாக விகடன் தடம் இதழுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அனுப்பிவைத்தேன். சிறுகதைகள் இப்போதெல்லாம் திருப்பி அனுப்பப்படுவதில்லை என்று நினைக்கிறேன். காணாமல் ஆக்கப்பட்டோரை சில ஆண்டுகளுக்குப்பின்னர் இறந்தவர் என்று அறிவிப்பதுபோல. முன்பெல்லாம் கோபம் வரும். இப்போதெல்லாம் வலிப்பதுகூட இல்லை. அடுத்த கதைக்கு மனம் தாவிவிடுகிறது.

புனைவு, புனைவு சார்ந்த கட்டுரைகள்தான் இனி எல்லாமே என்று வந்தபின்னர், என்னை எப்படி வாசகர்களிடமிருந்து தனியாக்குவது என்று தெரியவில்லை. இதில் ஓரளவுக்கு எஸ்.ராவைப் பின்பற்றலாம். அவர் வாசகர்களோடும் புனைவுபற்றியே உரையாடுகிறார். மேடைகளிலும் கதைகளையே சொல்கிறார். எஸ்.ரா என்ற பிம்பத்தின் உண்மை முகம் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. அவர் சமூகக்கருத்துகளுக்கு அவ்வப்போது குரல்கொடுத்து தன்னை ஒரு செயற்பாட்டாளராக முன்னிறுத்துவதில்லை. இலக்கிய சர்ச்சைகளிலும் ஈடுபடுவதில்லை. அசோகமித்திரனும் அப்படித்தான். அவர்கள் வாசகர்களோடு உரையாடும்போதும் தம்மை விலத்தி, கதைகளையே முன்னிலைப்படுத்துகிறார்கள். அக்கதைகளில் மூலைகளில் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். வாசகர்களும் கதைகளின் சுவாரசியத்தில் அவர்களைக் கண்டறிய முனைவதில்லை. இதைச் சற்று முயற்சி செய்துபார்க்கலாம். 

அதெப்படி வாசகர்களோடு கதைகளினூடு பேசமுடியும்? மன்ரோ அதற்குச்சொல்லும் பதில் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருநாள் மன்ரோ வீதிக்கரையோரம் ஒரு இளம்பெண்ணைக் காண்கிறார். அப்பெண் மிக இறுக்கமாக, மார்பகங்களின் பெரும்பகுதி வெளித்தெரிய படு கவர்ச்சியாக உடையணிந்திருந்தாள். அதைப்பார்த்த மன்ரோ சொல்லியது.

“I think that if I was writing fiction instead of remembering something that happened, I would never have given her that dress. A kind of advertisement she didn’t need.” 

இதுதான் என்று தெரியாமல் இதையே பெரும்பாலும் செய்துவந்திருக்கின்றேன். கொல்லைப்புறத்துக் காதலிகள் ஒரு புனைவு என்று சொன்னமைக்குக் காரணமும் இதுவே. புனைவுகள் கொடுக்கும் வசதி இது. புனைவுகளோடு இணைந்திருப்போம்.

Comments

  1. //வாசகர்களும் கதைகளின் சுவாரசியத்தில் அவர்களைக் கண்டறிய முனைவதில்லை. இதைச் சற்று முயற்சி செய்துபார்க்கலாம். //
    எங்களுக்கு குமரனை தெரியும் என்பது சாபம்

    ReplyDelete

Post a comment

Contact Form