"ஜெயக்குமரன்" என்கின்ற...

May 4, 2017


என் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.

சிறுவயதிலிருந்தே எனக்கு என் பெயர் அவ்வளவாகப் பிடித்ததில்லை. எண் சோதிடம் பார்த்து வைத்தார்களாம். என் நண்பர்களுக்கு எல்லாம் கவர்ச்சியான சிறிய பெயர்கள். பிரஷாந்த், ஸ்ரீரங்கன், மயூரதன் என்று ஐந்து அல்லது ஆறு எழுத்துப்பெயர்கள். என் பெயர் நீளமானது. அப்பாவின் பெயரோடு சேர்த்தால் “சந்திரசேகரம் ஜெயக்குமரன்” என்று அது இன்னமும் நீளமாகிவிடும். ஜெயக்குமரனில் அப்படி என்ன இருக்கிறது? கௌதம், பிரதாப் என்று ஸ்டைலான பெயர் இல்லை. மயூரஜித் என்றொருத்தன் வகுப்பின் இருந்தான். ஏன் எனக்கு அப்படியொரு பெயரை வைக்கவில்லை என்று அம்மாவிடம் குறைப்பட்டிருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு ஷ கூட பெயரில் இல்லை. 

பெயர் பிடிக்காமல் போனமைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. பாலர் பாடசாலையில் படிக்கும்போதே என் பெயர் என்னை விட்டுப்பிரிந்துபோய் இன்னொருவனுடன் ஒட்டிக்கொண்டுவிட்டது. இரண்டாம் வகுப்பில் எங்கள் வகுப்பில் ஜெயக்குமார் என்று ஒருவன் படித்தான். ஜெயக்குமார் படிக்கமாட்டான். அந்தவயதிலேயே படு கொசப்பன். கழிசான் சிப் அறுந்துபோய் எந்நேரமும் பின் குத்தியிருப்பான். மதிய இடைவேளைக்குப்பின்னர் அவன் சேர்ட்டுப் பின்பக்கம் வெளியே இழுபட்டிருக்கும். கவனிக்காமல் திரிவான். சப்பாத்தே போடமாட்டான். எந்த நேரமும் பெட்டைகளோடு தனகிக்கொண்டே இருப்பான். அதுகளும் சும்மா இராமல் இவனோடு பதிலுக்குத் தனகும். டஸ்டர் எடுத்து மூஞ்சிக்கு எறியுங்கள். இவன் முகம் முழுதும் சுண்ணாம்புப்பூச்சாக இருக்கும். நான் ஒருபோதும் பெட்டைகளுக்கு டஸ்டர் எடுத்து எறிந்ததில்லை. ஆசை இருந்தது. ஆனால் ஏனோ அந்தரமாகவும் இருந்தது. அது தவறு என்று தோன்றியது. அப்படியெல்லாம் செய்தால் ராதிகா ரசிக்கமாட்டாள் என்று நம்பியிருந்தேன். வீட்டில் சொல்லிக்கொடுத்துவிட்டால் அம்மா விறகு எடுப்பார். வாத்தியிடம் கோள்மூட்டிவிட்டால் அதைவிட வில்லங்கம். ஆனால், ஓருநாள் இல்லை ஒருநாள், அதுகளில் ஒன்று டஸ்டரால் அடிவாங்கி, அழுது, வாத்தியிடம் கோள்மூட்டி, அந்த ஜெயக்குமாரை வாத்தி சீமைக்கிளுவையால் இரண்டு இழு இழுக்கும் என்று எதிர்பார்த்தேன். சம்பவம் இடம்பெறவேயில்லை. பெட்டைகள் ஒருபோதும் அவனை மாட்டிவிட்டதில்லை. தவிர அவனோடு நெருங்கிப்பழகிக்கொண்டு இருந்துதுகள். ஜெயக்குமார் என்று அதுகள் கூப்பிடும்போது என்னைத்தான் என்று நினைத்து பலமுறை திரும்பி ஏமாந்திருக்கிறேன். “டேய் ஜெயக்குமார் லூசன்” என்று ராதிகா கத்திய பொழுதுகளில் எல்லாம் நிஜ ஜெயக்குமார் திரும்பவேமாட்டான். ஜெயக்குமரன் எதற்காக திரும்பவேண்டும்? ராதிகா வேண்டுமென்றே என்னைப்பார்த்து ஜெயக்குமார் என்று கூப்பிட்டிருக்கலாம். எனக்கு என் பெயர் பிடிக்காது என்று அவளுக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது அவளுக்கு ஜெயக்குமாரைப் பிடித்திருக்கலாம். பெண்கள் எப்போதுமே கற்றலின் மிகக்கடினமான பகுதியாக எனக்கிருந்திருக்கிறார்கள். அரிவரி படிக்கையில் “இ” எழுதுதல்போல. சமயபாடத்தில் திருமுறைகள்போல. வரலாற்றில் கொன்ஸ்தாந்தினோபல்போல. கணிதத்தில் நிகழ்தகவுபோல. இரசாயனத்தில் அசேதனம்போல. கணினி விஞ்ஞானத்தில் எம்பிஐபோல. இலக்கியத்தில் வெண்முரசுபோல. ஒவ்வொரு பருவத்திலும் அவர்களை அறிதல் எனக்கு இலகுவானதாகவே இருந்ததில்லை.  

பல்கலைக்கழகத்தில் நுழைந்ததும் ஜெயக்குமரனுக்கு புதுவிதமான சிக்கல் ஆரம்பித்தது. சிங்களத்தில் ஜெயக்குமரன் என்றொரு பெயர் பாவனையில் இல்லை. ஜயக்குமாரன் என்பார்கள். ஜயக்குமார என்பார்கள். ஜயாக்குமார என்பார்கள். அது "ஜய" அல்ல "ஜெய" என்றால் அது அவர்களுக்கு நுழையாது. என் நல்லகாலம் மூன்றாம் ஆண்டோடு என் பெயரை ஜேகே என்று ஒரு விரிவுரையாளர் அழைக்க ஆரம்பித்துவிட்டார். பதினைந்து வருடங்களாகிவிட்டன. எல்லோர் வாயிலும் "ஜேகே" நிலைத்துவிட்டது. "ஜேகே" எனும்போது என் முகம் ஓரளவுக்கு நினைவுக்கு வருகிறது. வீட்டில் "குமரன்" என்பார்கள். "ஜெயக்குமரன்" என்னைவிட்டுப் எங்கேயோ தூரப்போய் விட்டது. யாராவது பாடசாலை காலத்து நண்பர்கள் "ஜெயக்குமரன்" என்று கூப்பிடும்போதும் அது என் அருகில் வருவதில்லை. இதுபோல "ஜேகே" ஒருநாள் என்னைவிட்டுப் பிரிந்துபோய்விடலாம் என்று நினைக்கிறேன். காலப்போக்கில் அழைப்பவரின் இயல்பு பெயரோடு கலந்துவிடுகிறது. போகப்போக என் இயல்புகளைவிட, என் இயல்புகள் என்று அழைப்பவர் கருதுபவையே பெயரோடு ஒட்டிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் எனக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பெயராக என் பெயர் மாறிவிடும். இது "ஜேகே" இல்லை என்று புறந்தள்ளவேண்டி வந்துவிடும். பெயரை அடிக்கடி மாற்றுவது தேவையாகிறது. பெயர்கள் யாருக்குச் சொந்தமானவை என்ற சந்தேகம் வருகிறது. வைத்திருப்பவருக்கா? அழைப்பவருக்கா? 

தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கம் குழப்பமானது. தமிழர்களின் வழக்கில் முழுப்பெயர் என்ற ஒன்றே நடைமுறையில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். கம்பர், கபிலர், திலகவதியார், ஔவை, ராமானுஜர் முதல் பாரதியார்வரை நாமறிந்த பலரும் தனிப்பெயர்களையே பயன்படுத்திவந்துள்ளார்கள். குடும்பப்பெயரைப் பயன்படுத்தும்முறை காலனித்துவம் கொண்டுவந்த நடைமுறையாக இருக்கலாம். ஊரையும், இனக்குழுவையும், சமூக அந்தஸ்தையும் அறிவதற்காக உருவாக்கப்பட்ட முறை அது. வருணாச்சிரமமுறைக்கு அது பொருந்திவர, இந்தியர்கள் பலரும் அதனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டுவிட்டனர். அதுதான் சரி, அதைத்தான் நம் முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள் என்று நட்டுப்பிடிக்க ஆரம்பித்தார்கள். எனினும் தமிழர்கள் அதனையும் முழுமையாகப் பின்பற்றவில்லை. குடும்பப்பெயர் ஒன்று வேண்டும் என்பதற்காக அப்பாவின் பெயரை குடும்பப்பெயராக்கிக்கொண்டார்கள். எப்போதுமே அப்பாவின் பெயர்தான். அதிலும் அப்பாவின் பெயரை முதலில் எழுதி தம்முடைய பெயரை இறுதியில் எழுதுவார்கள். பெரியோரை மதித்தல் பண்பு ஆகுமாம். அந்தக் கண்டறியாத பண்புதான் ஜெயக்குமரனுக்கு நிரந்தரமாகச் சமாதி வைத்தது. The last nail in the coffin.

பெயர் வைக்கும் விடயத்தில் சீனர்கள் கவித்துவமானவர்கள். அவர்களுக்குக் குடும்பப்பெயரும் உண்டு. முதற்பெயரும் உண்டு. கூடவே பரம்பரைப் பெயர் என்றும் ஒன்று உண்டு. அவர்களின் குடும்பத்தினருக்கு என்று ஒரு கவிதை இருக்குமாம். ஒவ்வொரு பரம்பரையினரும் வரிசைக்கிரமமாக கவிதையின் ஒவ்வொரு சொல்லையும் தம் பெயரில் பயன்படுத்தல் வேண்டும். உதாரணத்துக்கு “நீ காற்று, நான் மரம்” என்ற கவிதை ஒரு குடும்பத்தின் பரம்பரைக்கவிதையாக இருக்குமென்றால், முதல் பரம்பரையின் அத்தனை நபர்களும், அதாவது அண்ணன், தம்பி, தங்கச்சி, அக்கா, மச்சான், மச்சாள், ஒன்றுவிட்ட உறவுகள் எல்லோருமே தம் பெயரில் "நீ"யைச் சேர்க்கவேண்டும். “கவிதா நீ கந்தசாமி”. “சுரேன் நீ கந்தசாமி” என்று அந்தப் பரம்பரை போகும். அவர்களின் பிள்ளைகள் "காற்று" என்ற சொல்லைச் சேர்ப்பார்கள். "ரேஷ்மா காற்று கந்தசாமி". "விதேஷ் காற்று கந்தசாமி". பரம்பரைக்கவிதை தீர்ந்துவிட்டால், அந்தச்சமயத்தில் குடும்பத்தில் யார் மூத்தவரோ, அவர் மீண்டும் புதிதாக ஒரு கவிதை எழுதுவார். "மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்". பின்னர் "தன்யா மூங்கில் கந்தசாமி", "சைலேந்திரன் மூங்கில் கந்தசாமி"   என்று பெயர்கள் போகும். இப்படி, சீனாவில் ஒருவரின் முழுப்பெயரை வைத்துக்கொண்டே அவர் எந்த ஊர், எந்தச் சாதி, எந்தக்குடும்பம், குடும்பத்தில் எந்தத்தலைமுறை என்று எல்லாவற்றையும் அறிந்துவிடுவார்கள். என்னுடைய அலுவலகத்து  சீன இனத்து நண்பரிடம் இதுபற்றிக்கேட்டேன். அவர் ஒரு இந்தோனேசியச் சீனர். தாங்கள் கவிதையைத் தொலைத்துவிட்டார்கள் என்றார்கள். இந்தோனேசியாவில் அறுபதுகளில் பிரஜைகள் எல்லோரும் இந்தோனேசியப் பெயர்களைத் தாங்கியிருக்கவேண்டும் என்பது எழுதப்பட்டாத சட்டமாகியிருக்கிறது. அந்தச்சமயத்தில் சிறுபான்மைச் சீனர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இந்தோனேசியப் பெயரைக் கொண்டிருக்காவிட்டால் வாய்ப்புக்கள் மறுக்கப்படலாம் என்று சீனர்கள் அஞ்சினார்கள். விளைவு லுக் என்பவர் லுக்மன் ஆனார். பெலிஸ் என்பவர் பெலிஸ் கர்நாடி ஆனார். இப்போது இந்தோனேசியச் சீனர்கள் பலருக்கு பரம்பரைக்கவிதை என்ற ஒன்று இருப்பதே தெரியாது.  பலருக்கு  மன்டரின் மொழியே தெரியாது. எல்லோருமே  நாட்டின் தேசிய மொழியான பஹாசாவையே கற்கிறார்கள் .

ஸ்பானியர்கள் தம் பெயரில் அப்பாவின் குடும்பப்பெயரையும் அம்மாவின் முதற்பெயரையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஸ்பானியப் பெண்கள் திருமணம் முடிக்கையில் தம்பெயரில் உள்ள தாயின் பெயரைத் தூக்கிவிட்டு கணவனின் பெயரைச் சேர்த்துவிடுகிறார்கள். பெண்கள் தம் பெயரைத் திருமணத்துக்குப்பின்னர் மாற்றும் முறை பிரான்சிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. பின்னர் அது இங்கிலாந்துக்குப் பரவி, அங்கிருந்து உலகம் முழுதும் பரவிவிட்டது. சமீபகாலமாக அந்த நிலை மாறிவருகிறது. இப்போதெல்லாம் பல பெண்கள் தம் பெயரைத் திருமணத்துக்குப்பின்னர் மாற்றுவதில்லை. என் மனைவி மாற்றவில்லை. என் அக்கா தன் பெயரில் அம்மாவின் பெயரையும் சேர்த்துவிட்டார். வித்தியாசமாக, என்னுடைய அலுவலகத்து நோர்வேஜிய நண்பன் தன்னுடைய மனைவியின் பெயரையும் தன் பெயரில் சேர்த்திருக்கிறான். புதிது.

பிரேசிலியர்கள் பெயர் விடயத்தைக் கையாளும் முறை எனக்குப் பிடித்தமானது. அவர்களுக்கு எல்லாமே ஒரே ஒரு பெயர்தான். அம்மா, அப்பா, கணவன், மனைவி என்று எவருடைய பெயரையும் அவர்கள் தம்மோடு சேர்த்துச் சொல்வதில்லை. ரொனால்டினோ, ரொனால்டோ, காகா என்று அவர்கள் முதற்பெயரை மாத்திரமே பயன்படுத்துவார்கள். குடும்பப்பெயர் நிரலிலும் முதற்பெயரையே மீள நிரப்புவார்கள். காலனித்துவத்துக்கு முன்னரான தமிழர் அமைப்புபோல. நாம்தான் மாறிவிட்டோம். 

மீள ஜெயக்குமரனுக்கு  வருவோம்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவம் நிரப்பும்போது எது கடைசிப்பெயர் (Last Name), எது வேறு பெயர்கள் (Other Names) என்ற குழப்பம் வந்தது. நான் அப்பாவின் பெயரை முதலில்போட்டு “சந்திரசேகரம் ஜெயக்குமரன்” என்று எழுதப்பழகியிருந்ததால், கடைசிப்பெயர் பெட்டிக்குள் "ஜெயக்குமரன்" என்று எழுதிவிட்டேன். “வேறு பெயர்கள்” பிரிவில் நிறைய இடம் இருந்ததால் அப்பாவின் முழுப்பெயரான “சின்னப்பு சந்திரசேகரம்” என்பதை நிரப்பிவிட்டேன். விளைவு, என்னுடைய முழுப்பெயர் “சின்னப்பு சந்திரசேகரம் ஜெயக்குமரன்” ஆகிவிட்டது. வெளிநாடுகளில் முதற்பெயர் சொல்லிக் கூப்பிடும் பழக்கம் இருப்பதால், எடுத்ததுக்கெல்லாம் என்னை  “சின்னப்பு” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அப்பாவுக்கு நான்கு வயதாக இருக்கையிலேயே சின்னப்புவை யாரோ சூனியம் வைத்துக் கொன்றுவிட்டார்கள் என்று அப்பா கவலைப்படுவதுண்டு. சின்னப்புவின் புகைப்படமே எங்கள் வீட்டில் இல்லை. ஆனால் அந்தச் சின்னப்பு எப்படியோ என் பெயரில் வந்து குந்திவிட்டார். இந்தக் குளறுபடியில், என்னுடைய அப்பாவின் பெயர் நடுப்பெயராகி விடுபட்டுப்போக, கடைசிப்பெயர் என்று நிரப்பப்பட்ட “ஜெயக்குமரன்” என் குடும்பப்பெயராகிவிட்டது. நானே எனக்கு அப்பனாகிவிட்டேன். ஜெயக்குமரன் என்றைக்குமே என்னை நிம்மதியாக இருக்கவிட்டதில்லை.

இந்த ஜெயக்குமரன் சின்னப்புவான கதையை யாருக்கேனும் விளக்க ஆரம்பித்தால் உடனேயே அவர்களுக்கு மண்டை காய ஆரம்பித்துவிடுகிறது. எதற்குக் குத்தி முறிவான்?

“Call me JK”

000

Contact Form