Skip to main content

மச்சாங்

“ஐ,நா கோஷ்டியோடு சங்கமித்து ரோகிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இதே ஐநா கூட்டம்தான் இலங்கைக்கு எதிராகவும் “fake news” பிரச்சாரத்தை, நாம் தீவிரவாதத்தை முறியடித்துக்கொண்டிருக்கையில் நமக்கெதிராகக் கையாண்டது. நான் அந்த மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் இலகுவில் முடிவு செய்துவிடாதீர்கள்”

இதுதான் அதிகாரமையத்துக்கான சிந்தனை. இதே ரோகிங்கியா பிரச்சனையை நாம் எதிர்கொள்ளும்போது அந்த மக்கள்மீது பிரயோகிக்கப்படும், பிரயோகிக்கப்படக்கூடிய வன்முறை பற்றியேக் கவலை கொள்கிறோம். அவர்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் இடம்பெறக்கூடும் என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது ஒரு போலியான, பிரச்சார நடவடிக்கை என்று எம் மனம் எண்ணத்தலைப்படுவதில்லை. ஆனால் இதே விடயத்தை ஒரு சிங்களப் பெரும்பான்மைச் சிந்தனைவாதி பார்க்கும்போது அந்தக்கோணம் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கிறது. இது அவர் வேண்டுமென்றே செய்வதாக நான் எண்ணவில்லை. Ignorance என்று சொல்லலாம். அப்படித்தான் அவர்களின் எண்ணம் இயல்பிலேயே இருக்கும். தம்மை உயர்சாதியினர் என்று கூறிக்கொள்பவர்கள் சாதி அடக்குமுறை என்றே ஒன்று இல்லை என்று கூறுவது போன்றது அது. அவர்களில் பலர் அப்படித்தான் உண்மையிலேயே எண்ணிக்கொள்கிறார்கள்.

இந்த ரோகிங்கியா விடயத்தை எழுதியிருப்பவர் என்னுடைய அன்புக்குரிய முன்னாள் மேலதிகாரியும் விரிவுரையாளருமாவார். பழகுவதற்கு மிக இனிமையானவர். என்னுடைய துறையில் நான் ரசனையோடு இயங்குவதற்கும் அவரே முதற்காரணம். நட்புரீதியாக இன்றும் தொடர்பில் இருப்பவர். சுனாமி சமயத்தில் என்ன, ஏது என்றுகூட விசாரிக்காமல் ஐந்து லட்சம் ரூபாயை மொறட்டுவைத் தமிழ் சங்கத்துக்குக் கொடுத்தவர். நானும் என் நண்பனும் காசோலையை வாங்கிவர களுத்துறைவரைக்கும் போய்வந்தது ஞாபகம் வருகிறது. இதெல்லாம் இங்கே குறிப்பிடவேண்டிய தேவை இருக்கிறது. ஏன் என்று இறுதியில் விளங்கும்.

பலமுறை ஈழத்து அரசியல் விடயத்தில் அவரோடு நேரடியாக நான் நேரடியாக முரண்பட்டிருக்கிறேன். பல ஆண்டுகளாகத் தமிழர்களுக்கு சுயாட்சித் தீர்வு வேண்டும் என்ற வகையில் கட்டுரைகள் எழுதினார். ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் பெடரல் வகை சுயாட்சியே தமிழருக்குத் தேவை என்றும் எழுதியிருந்தார். 2009 இற்குப் பின்னர் அவரின் சுருதி அடியோடு மாறிவிட்டது. இதுபற்றி ஒருமுறை முகநூலில் பகிரங்கமாகவே அவரை “tag” பண்ணி ஆங்கிலத்தில் சிறு கட்டுரை எழுதியிருந்தேன். இம்முறை அப்படி ஒன்றும் செய்யவில்லை. இதைத் தமிழில் எழுதுவதற்கான காரணம், இங்கே செய்தி அவருக்கானதல்ல. நமக்கானது.

புலிகள் பலமாக இருந்தவரைக்கும் தமிழருக்குத் தீர்வு வேண்டும் என்று பெரும்பான்மை சிங்களரவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தமைக்கான காரணம் தமிழர்களின் உரிமைகளின்பால் அவர்களுக்கிருந்த கரிசனை அல்ல. “ஆயுத யுத்தம் வெல்லப்படமுடியாதது, ஆகவே கொடுத்துத் தொலைப்போம்” என்பதுதான் ஒரே காரணம். ஆயுத யுத்தம் முடிந்தபின்னர் எல்லோருடைய சுருதியும் ஒரேயடியாக மாறிவிட்டது. “கொடுக்கலாம், காணி, பாதுகாப்பு தவிர்த்து ஏனையவற்றைக் கொடுக்கலாம்” என்று ஆரம்பித்து, “கொடுக்கலாம், ஆனால் காணி, பாதுகாப்பு, கல்வி, உள்ளூராட்சி, சுகாதாரம், விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, விஞ்ஞானம், விளையாட்டுத் தவிர மீதி எல்லாவற்றையும் கொடுக்கலாம்”, “எல்லாவற்றையும் கொடுத்தாயிற்று”, “அதிகமாகக் கொடுத்தாயிற்று”, “கொடுத்தாலும் ஆளத்தெரியாது” என்று அவர்களின் எண்ணம் இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது. தமிழ் அரசியலும் அவ்வளவு உறுதியான நிலையில் இல்லாமையால் அவர்களுக்கு அது இன்னமும் வசதியாகிவிட்டது. இந்த நிலைமையை எல்லோரும் ஏகப்பட்ட தடவை எழுதித் தீர்த்துவிட்டார்கள். நான் மீண்டுமொருமுறை சொல்லத்தேவையில்லை.

என்ன ஒன்று, சிங்களவர்கள் என்னதான் இனிமையாகப் பழகினாலும், வாய் திறந்து மூடுவதற்குள் முந்நூறு தடவை “மச்சாங்” போட்டாலும், நட்பு எனும்போது உயிரைக்கொடுத்தாலும், நம்முடைய உரிமைப் பிரச்சனையில் அவர்களின் சிந்தனை என்றைக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதுதான் அந்தப் பேரினவாதச் சிந்தனை. அந்தப்பேரினவாத சிந்தனைதான் ரோகிங்கியா பிரச்சனையிலும் மியான்மர் அரசுக்கு ஆதரவாகச் சிந்திக்கவைக்கிறது. சரி தமிழர்களிடமோ, முஸ்லிம்களிடமோ பேரினவாதச் சிந்தனை இல்லையா என்றால், இல்லை, நிச்சயம் இருக்கிறது. சொல்லப்போனால் பேரினவாதச் சிந்தனை இல்லாத இனமே உலகில் இல்லை. நம் பேரினவாதச் சிந்தனையை விமர்சிக்கலாம். சீர்தூக்கிப் பார்க்கலாம். ஆனால் சிங்களப் பேரினவாதத்துக்கு முன்னாலே நம்முடையது சிறுபான்மைத் தேசியவாதம் என்பதை மறந்துவிடலாகாது. ஒரு சிறுபான்மைத் தேசியவாதத்தின் பலவீனமான குணாதிசயங்களைக் காட்டி சிங்களப் பேரினவாதச் சிந்தனையை நியாயப்படுத்துதல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சிறுபான்மைத் தேசியம் அல்லது ஒடுக்கப்படும் ஒரு தேசியம் என்ற குடைக்குள் நாம் ஒன்றுபடல் அவசியம். அந்த வட்டத்துக்குள்ளே சமகாலத்தில் நம்முடைய, நமக்கான சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தல் அவசியமானது. அதில் தமிழ்-முஸ்லிம், சாதியம், பிரதேசவாதம், மதம், பெண் உரிமை என்ற வகைகளும் அடங்கும். இந்த வட்டம் இப்போதைக்குத் தேவையானதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். எப்போது சிறுபான்மைத் தேசியம் என்பதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று, அதன் போராட்டத்துக்கான தேவை அற்றுப்போகிறதோ, அப்போது நம்முடைய குடை பிறிதொரு வடிவம் எடுக்கலாம். அப்போது சமயத்தில் தமிழ்ப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டிய நிலைகூட ஏற்படலாம். அந்தநிலைமை வராதவண்ணம் நாம் நம்மை இப்போதிருந்தே தயார்படுத்துதல் அவசியம். ஆனால் தற்சமயம் நாம் ஆகக்குறைந்தது இந்த ஒடுக்கப்படும் தேசியம் என்ற அளவிலாவது ஒன்றுபடுதல் அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் சிறு சிறு குடைகளைப் பிடித்துக்கொண்டு நமக்குள் முரண்டுபட்டுக்கிடக்கிறோம் அல்லது பேரினவாதக் குடைக்குள் அடைக்கலம் தேடுகிறோம். 
நிற்க.

சிங்களவர்களின் இந்த “மச்சாங்” வகை நட்புத்தான் காலம்காலமாகத் தமிழ் அரசியல்வாதிகளை ஏமாற்றிவருகிறதோ என்ற எண்ணம் வருகிறது. ஒவ்வொரு தலைமுறை அரசியல்வாதியும் தம்முடைய சிங்கள நட்புகளினூடாக தமிழருக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தந்துவிடலாம் என்று மனப்பூர்வமாகவே நம்பியிருக்கலாம். இராமநாதன் தொட்டு இன்றைய சுமந்திரன்வரை இதில் அடங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த அணுகுமுறையை அவர்கள் நேர்மையான நல்லெண்ணத்துடன் நம்பியிருக்கலாம். “மச்சாங்” வேறு, அரசியல் வேறு என்று அவர்கள் அறியும்போது காலம் கடந்துபோய்விடுகிறது. பின்னர் அடுத்த தலைமுறை வரும். அதுவும் பின்னர் நட்பிலிருந்து காய் நகர்த்த ஆரம்பிக்கும். இந்த விசயத்தில் மிகத்தெளிவாக இருந்த ஒருவர் பிரபாகரன். மனிசன் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

வரலாற்றிலிருந்து நாம் படிக்கக்கூடிய ஒரு பாடம் எதுவென்றால், எந்தப் பேரினவாதமும் மனமுவந்து ஒரு தீர்வை அடக்கப்படும் சமூகத்துக்குக் கொடுக்கப்போவதில்லை. அது எக்காலத்திலும் நடந்ததுமில்லை. இனியும் நடக்கப்போவதுமில்லை. அதை மீண்டும் மீண்டும் பட்டுத்தெளிய வேண்டிய தேவை இல்லை.

Comments

  1. எல்லாம் சரிதான் இது நடக்கின்ற காரியமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .