Skip to main content

புலம் (பெயர்) பொதுமைப்படுத்தல்கள்“புலம்பெயர் தமிழர்கள் நடைமுறைச்சாத்தியமில்லாத தமிழீழத்துக்கான தீர்வையும் தேவையேயில்லாத தேசியத்தையும் கள நிலவரங்கள் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்”
சமீப காலங்களில் இப்படியான அல்லது இந்தக்கருத்து சார்ந்த பலகருத்து நிலைகளைக் காணமுடிகிறது. என்னுடைய கேள்வி நடைமுறைச்சாத்தியங்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. நடைமுறைகள் என்றாலே அது காலத்துக்காலம் மாறுபவை அல்லது மாற்றப்படுபவைதான். அப்போது சாத்தியங்களும் மாறும். அதல்ல விசயம்.
விசயம் இதுதான்.

நான் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து கொழும்பு, சிங்கப்பூர், மெல்பேர்ன் என்று கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்துவிட்டேன். பல புலம்பெயர் தமிழர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பலதரப்பட்ட புலம்பெயர் தமிழர்கள். புத்தகங்கள், இணையத்தினூடு பல ஊர்த்தமிழர்கள் பற்றி அறியவும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னுடைய உய்த்தறிவு எதுவென்றால், எந்தளவுக்கு தமிழ்த்தேசிய ஆதரவு இத்தமிழர் மத்தியில் உள்ளதோ அந்தளவுக்கு இவ்விடங்களிலெல்லாம் எதிர்ப்பும் இருக்கிறது. மகிந்தவுக்கு மொட்டுக்காரர் கொடுக்கும் ஆதரவைவிட வெறித்தனமான ஆதரவைக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களைக் கண்டிருக்கிறேன். பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்று நம்புபவரையும் கண்டிருக்கிறேன். புலிகள், டெலோ, ஈரோஸ், ஈபி என்று பல்வேறு இயக்கங்களில் இருந்து இன்று குடும்பங் குட்டிகளோடு வாழ்பவர்களையும் தெரியும். புலி ஆதரவுக்கும் இங்கே கூட்டம் கூடும். எதிர்ப்புக்கும் கூடும். சிலபேர் இரண்டுக்கும் வருவார்கள். சிறு வயதில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து பின்னர் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் ஒருவரையும் மெல்பேர்னில் அடிக்கடி சந்திப்பதுண்டு. கறுவிக்கொண்டே இருப்பார். இங்கு கூட்டமைப்பு எம்.பி வந்தாலும் கூட்டம் கூடும். மனோ கணேசன் வந்தாலும் கூடும். சைக்கிள் வந்தாலும் கூடும். விஜய்டிவி கோபிநாத் வந்தாலும் கூடும். இலங்கை சுதந்திரதினத்துக்கும் கூடும். எல்லாத்துக்கும் ஒரு ஐம்பதுபேர் கூடுவார்கள். ஒரே கேள்விகளைக் கேட்பார்கள். இதிலே பெரிதாக வேறுபாடுகளை நான் கண்டதில்லை. ஊரில் ஒரு தேர்தல் வருகிறது என்றால் இங்கே கன்னை பிரித்துக்கொண்டு அடிபடுகிறார்கள். வீட்டுக்கு ஒரு கூட்டம். சைக்கிளுக்கு ஒரு கூட்டம். மா, பலா, வாழைக்கும் ஓரிருவர். வீணைக்கு ஒருவர். புறக்கணி என்று சொல்ல இன்னொருவர். எனக்குத்தெரிந்து புலி எதிர்ப்பைப் புலம்பெயர் தமிழர் அளவுக்கு ஈழத்தில் இருப்பவர் செய்ததில்லை. அதன் காரணமும் வெள்ளிடையானது.
உண்மையச்சொல்லப்போனால் இந்தக்கூட்டம் எல்லாமே மிகச்சிறிய சதவிகிதம்தான். நானறிந்து இங்கு பெரும்பாலானவர்கள் தாமும் தம்பாடுமாக இருப்பவர்கள். சத்தம்போடாமல் தம்மாலானவற்றைச் செய்துகொண்டிருப்பவர்கள். மிக எளிமையான லௌகீக வாழ்க்கைக்கு இசைவாக்கப்பட்டவர்கள். ஐந்து நாள் வேலை. தினமும் பிள்ளைகளோடு ஏழு மணிக்குத்தூங்கி அடுத்தநாள் அதிகாலை எழுந்து சோலியைப்பார்ப்பவர்கள். சனி ஞாயிறு நீச்சல், பியானோ, தமிழ், நடனம் என்று பிள்ளைகளோடு அலைபவர்கள். அவ்வப்போது இடம்பெறும் சனிக்கிழமை பிறந்தநாள் கொண்டாட்டங்களில்தான் அவர்களுக்கு அரசியல்பேச சந்தர்ப்பம் கிடைக்கும். அதுகூட காலையில் மறந்துபோய்விடும். இதுதான் கள நிலவரம். இதுதான் பொதுவான பரம்பல். புலம்பெயர் அன்றி உள்ளூர் சமூகத்தின் சிந்தனை, செயற்பாட்டுப் பரம்பலும் இதுவாகவே இருக்கமுடியும். எந்த இனக்குழுக்களுக்களிலுமே இந்தப்பரம்பல்தான் இருக்கும். சிரியாவில் நித்தம் குண்டு வெடித்து நான்கைந்து முனைகளில் நான்கைந்து குழுக்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றன. அங்கும் சிந்தனைப்பரம்பலை எடுத்துக்கொண்டால் இப்படியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே இயற்கையின் பரம்பலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கு வருவோம்.
“புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடி பிடிக்கிறார்கள்” என்பது எந்தளவுக்கு பொதுமைப்படுத்தலோ அதேயளவு பொதுமைப்படுத்தல்தான் “புலம்பெயர் தமிழர்களுக்குப் புலிக்காய்ச்சல் பிடித்துள்ளது” என்று சொல்வதும். “புலம்பெயர் தமிழர்கள் சைக்கிளில் சுற்றுகிறார்கள்” என்பதுபோலத்தான் “புலம்பெயர் தமிழர்கள் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார்கள்” என்பதும். ருத்திரகுமார் ஜெயரத்தினம் இருக்கும் இதே நாட்டில்தான் மைந்தன்சிவாவும் இருக்கிறார். இந்த நிலையில் குறிப்பிட்ட பொதுமைப்படுத்தல்களை மாத்திரம் எங்கிருந்து கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு செய்கிறார்கள் என்று யோசிக்கிறேன். இதனை ஒருவித “Confirmation Bias” ஆகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. என்னுடைய கருத்துக்கு ஒவ்வாதவர்களைத் தாக்குவதற்கு இப்படியான பொதுமைப்படுத்தல்களைத் தெரிவுசெய்து இப்படிச் சாயம் பூசுதல் எனக்குத் தேவையானதாக இருக்கிறது. ஒருவரின் அல்லது ஒத்த கருத்துள்ள சிலரைத் தாக்குவதற்கு அவர்கள் வாழும் இடத்தை பயன்படுத்தமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த insider/outsider dichotomy என்பதன் எல்லை வசதியைப்பொறுத்து வாழும்வீட்டின் அறைக்குள் இருக்கும் படுக்கும் பாய், தலையணை வரைக்கும் போகலாம் என்பதே உண்மை. இந்த வாதவழுவை “Ad Hominem” என்பார்கள் (நாவலோ நாவலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது). எதிர்வாதம் செய்பவரிடம் இல்லாத ஒன்றை வாதத்துக்கான தகுதியாக நிர்ணயம் செய்து அவரைத் தகுதியற்றவராக்குவது (நீ ஊரில் வாழவில்லை, பேசாதே, நீ என் சாதி இல்லை, பேசாதே, நீ பட்டதாரியில்லை, பேசாதே. இது என் தலையணை, என் பாய், என் அறை, என் வீடு, என் கிராமம், நகரம், தேசம், நாடு, உலகம் …. பிரபஞ்சம்… தகுதியில்லை, பேசாதே).
என் அன்பான வேண்டுகோள் இதுதான். ஒரு வாதத்தை மறுவாதம் செய்யும்போது இயலுமானவரையில் வாதவழுக்களை நீக்கப்பார்ப்போம். பொதுமைப்படுத்தல்கள், அதுவும் வாதம் செய்பவர் சார்ந்த பொதுமைப்படுத்தல்கள் தேவையேயில்லை. நீ இன்னான் பிள்ளை, நீ இன்ன சாதி, ஆகவே நீ இப்படித்தான் பேசுவாய் என்பதெல்லாம் மலினமான கைதட்டல் வாங்கும் உத்திகள். விவாதக் கருத்து சார்ந்துமாத்திரம் உரையாடலாம். இன்னமும் சொல்லப்போனால் கருத்து தெரிவிப்பவர்கள் இவற்றையெல்லாம் யோசித்துப்பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். இலேசில் தம் வாதவழுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இப்போதுகூட நான் சொல்லவந்த விடயத்தை விட்டுவிட்டு தீர்வுபற்றி விவாதம்செய்யக்கூட சிலர் இங்கே வரக்கூடும்.
ஆனால் வாசிப்பவர்கள், கேட்பவர்கள் வாதவழுக்களை இனம்காண ஆரம்பித்தாலே போதும்.
நன்றி.