Skip to main content

ஏர் எழுபது


ஒரு சின்ன தேடலின்போது ‘ஏர் எழுபது’ எனும் வேளாண் நூலைப்பற்றி அறிய முடிந்தது. வாழ்த்துப்பாடலோடு ஆரம்பித்து பின்னர் கமத்தொழிலின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றி இந்த நூல் பேசுகிறது. சிறப்புகள் என்றால் வெறும் புகழுரைகள் என்றில்லாமல் மிக நுணுக்கமான விடயங்களைப்பற்றியெல்லாம் இந்நூல் குறிப்பிடுகிறது. உழுகின்ற எருதின் பூட்டுக்கயிறு, கழுத்துக்கறை முதற்கொண்டு எவ்வாறு நாற்று நடுவது, போர் அடிப்பது, நெற்கூடை என அத்தனை விசயங்களையும் பாயிரங்களாக எழுதிவைத்திருக்கிறது இந்நூல்.

உதாரணத்துக்கு.
"பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே"
பொருள்:
பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட
உழும் கலப்பை உயர்வானது.
உழவர் பெருஞ்சிறப்புக்கு உரியவர்.
இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில்
உலகம் செல்லும்.
படைச்சாலில் விதை இடுவர்
அது விளையும்
விளைவைப் பெற வழிச் செல்வர்.
"காற்றுமேல் வருகின்ற கார்விடினும், கடல்சுவறி,
யாற்றுநீர் அறவெள்ளி அரசனும்தெற் காயிடினும்,
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. "
பொருள்: காற்று வந்து கார்மேகம் பெய்யாமல் போனாலும்
ஆற்றுநீர் வறண்டு போனாலும்
ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை
"கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே! "
பொருள்: சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்.
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது
மாட்டின் கழுத்தில்
ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.
"ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. "
பொருள்: அன்னம் நீங்காக் கழனி
கழனி உழவர்
உழவர் களத்தில் ஏற்போர் கூடை
கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால்
அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான்
அவன் யானைக்கு ஓடை பொலியும்
இந்த “ஏர் எழுபது” நூலை எழுதியது கம்பர் என்கிறார்கள். இராமாயணம் எழுதிய கம்பர்தான் இவர் என்று சொல்பவர்களும் உண்டு. இல்லை, ஔவைமாதிரி கம்பரும் ஒரு பொதுப்பெயர். அவர் வேறு இவர் வேறு என்றும் சொல்கிறார்கள். ஆனால் இது 12ம் 13ம் நூற்றாண்டு சோழர்காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஓரளவுக்கு உறுதிப்படுத்தமுடிகிறது.
தமிழிலக்கியம் ஒரு ஜீவ நதி.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.