மெக்ஸிக்கோ

Feb 10, 2021


தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு.

பயணங்களை இந்த மனநிலையோடு அணுகும்போது உருவாகும் களம் அலாதியானது. பயணங்களில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி அவர்களோடு ஊடாடி, அவர்களின் வாழ்க்கைக்குள்ளும் சென்று கொஞ்சம் எட்டிப்பார்த்தல் என்பது ஒரு அனுபவம். அதனை எழுத்து அற்புதமாகக் கொடுக்கும். கூடவே நாம் ஏங்குகின்ற ஒரிரு இலட்சியப்பாத்திரங்களையும் சேர்த்துவிட்டால் அது கொடுக்கும் உவகை சொல்லி மாளாது. தோஸ்தாவஸ்கியின் பெண்கள்போல. அல்லது ஜேன் ஓஸ்டினின் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டியில் வரும் எலினோர், மரியானே சகோதரிகள்போல. பாலகுமாரனின் ஒரு சிறுகதையில் வரும், கடற்கரையில் அவரோடு கவிதை பாடும் ஈழத்துச் தமிழ்ச்செல்விபோல. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸிபோல. அல்லது எல்லோராபோல.
இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவலும் அத்தகையதே. ஈழத்தில் பிறந்து கனடாவில் வளரும் இளைஞன் ஒருவனின் மெக்சிகோவிற்கான பயணத்தைப் பேசும் நாவல் இது. அங்கே அவன் பலரோடு சேர்த்து தன் இலட்சியக் காதலியையும் காண்கிறான். அவளோடு பேசுகிறான். இருவரும் ஊரெல்லாம் திரிகிறார்கள். அவளை அணைத்துக்கிடக்கும் கணத்தில் செம்புலப்பெயல் நீரனார் பாடலை மொழிபெயர்த்துச் சொல்கிறான். இவன் சமைத்த உணவுப் பாத்திரங்களை அவள் கழுவிக்கொண்டிருக்கையில் பின்னால் சென்று அணைத்து அவள் காது மடல்களில் முத்தம் கொடுக்கிறான். இருவருமாய்ச் சேர்ந்து உலக இயல்புகளைப் பேசுகிறார்கள். பெண்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஈழத்து வாழ்க்கையை இவன் பேச அவள் போராட்டத்தில் இறந்த தாய்வழி மாமாவையும் ட்றாக்டரில் இறந்த உறவினர்களையும் நினைவுகூறுகிறாள். கண்டங்கள் வேறாகினும் போர்களும் அனுபவமும் வலியும் ஒன்றுதானே. அவனுக்கு அவள் சுப்பீரியர். அவளிடம் முழுதாய்ச் சரணடைந்து அவள் மடியிலேயே கிடந்து அவள் கதைகளை ரசிக்கும் ஆண்டாளாக மாறத்துடிப்பவன் இவன்.
ஒரு உறவின் முறிவிற்குப் பின்னர் அறிமுகமாகும் எட்டமாட்டாத உறவு ஒன்று கொடுக்கும் அலைக்கழிப்புத்தான் இந்நாவல். அது நிஜமாகத்தான் இருக்கவெண்டுமென்பதில்லை. நாவலின் ஆரம்பத்திலேயே அந்த இலட்சியக் காதலி யார் என்பது கொஞ்சம் புரிந்துவிடும். அது புரிந்தபிற்பாடு நிகழ்பவை யாவும் சற்று அபத்தமாகவே தெரியும். அதை இளங்கோ தெரிந்தே செய்திருக்கலாம். ஒருபக்கம் மெக்ஸிக்கோ பயணம். மறுபக்கம் அந்த இளைஞனின் அலையும் மனம். இரண்டுக்கும் நடுவே வாசிக்கும் நாமும் இழுபட்டுச்செல்லும் பயணம்தான் இந்நாவல்.
ஒரு பயணத்தின்போதுதான் இந்நாவலைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். இந்த நாவல் கொடுத்த மனநிலையோடுதான் என் பயணமும் கழிந்தது. தேர்ந்த சிவப்பு பினோட் நோயரை இரண்டு கிளாஸ் அதிமாக அருந்தினால் உருவாகும் போதையின் மிதப்பு இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில் இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. இளங்கோவிடம் அவ்வகை மென்போதை மொழி இருக்கிறது. கூடவே பதின்மங்களில் புலம்பெயர்ந்து திணை, மொழி, மனிதர்களைப் பிரிந்துவாழும் இளைஞனுக்கேயுரிய அடையாளச்சிக்கல்களும் இருக்கிறது. அதை அனுபவித்து எழுதும் ஆற்றலும் இருக்கிறது. இவையெல்லாம் இணைந்த ஒரு அற்புத படைப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கவைத்திருக்கிறது மெக்ஸிக்கோ.

000

Contact Form