Skip to main content

ஆதிரை வெளியீடுகள்


 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது.

ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.
'சமாதானத்தின் கதை’ வெளியாகிச் சில மாதங்களிலேயே ஏ.பி.எம் இத்ரீஸ் தொகுத்த ‘என்ட அல்லாஹ்’ எனும் இன முரண்பாட்டுக்கால முஸ்லிம்களின் பாடுகளைச் சொல்லும் சிறுகதைகளைக்கொண்ட நூல் வெளியாகியது. அதன் பின்னர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த சிங்களச் சிறுகதைகளின் தொகுப்பு ‘திருமதி பெரேரா’. பின்னர் சயந்தனின் ‘அஷெரா’. இப்போது மறுபடியும் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்த்த ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ எனும் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது.
எல்லாமே ஆதிரை வெளியீடு இந்த ஒரு வருடத்தில் பதிப்பித்த புத்தகங்கள்.
இதில் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்நூலின் இலங்கைப் பிரதிகள் இலங்கையிலேயே அச்சிடப்படுகின்றன. விலை வெறுமனே 390 ரூபாய்கள். எல்லாப்புத்தகங்களையும் ஓர்டர் பண்ணியாயிற்று. தபால்துறையின் தாமதம், இன்னமும் புத்தகங்கள் வீடு வந்தபாடில்லை.
‘ஊருக்கு உழைத்தல் யோகம்’ என்பதற்கு நண்பர் கேதா ஒரு அற்புதமான விளக்கம் கொடுப்பதுண்டு. ஊருக்கு உழைக்கும்போது ஒருவித யோக மனநிலையில் இருக்கவேண்டுமாம். யார் என்ன சொன்னாலும் சகித்துக்கொண்டு ஒரு யோகிபோல இயங்கினாலேயே இங்கே தப்ப முடியும். புத்தகங்களின் வெளியீடும் அப்படிப்பட்டதுதான். நாரி பிரியும் வேலை. பண இலாபம் என்று பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மன நிறைவுக்குச் செய்யும் வேலைதான் இது. அந்த உழைப்பின் அருமையை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற வகையில் ஆதிரை வெளியீட்டாளர்களுக்கும் விற்பனைக்கூடங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த அன்பும் நன்றியும். குறிப்பாக சயந்தனுக்கும் வைதேகிக்கும்.
ஒரு விசயம். புத்தகங்களுக்குக் கால்களோ இறக்கைகளோ தாமாக முளைப்பதில்லை. அவற்றை வாசகர்களே சுமந்து செல்லவேண்டும். இவை தகும் என்று அவர்கள் உணரும் நூல்களைப் பரிந்துரைக்கவேண்டியதும் வாசகர்களுடைய கடமையே. இன்றைக்குப் பிரபல பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் புத்தகங்களைத் தாமாகத் தேடிப்போய் வாசித்து விமர்சனம் செய்வதில்லை. தன்னைச் சார்ந்தவர்கள் எழுதிய, தன்னைத் தேடி வரும் புத்தகங்களையே அவர்கள் முன்மொழிவதுண்டு. இந்தச் சூழ்நிலையில் தாம் நம்பிக்கை வைத்து வெளியிடும் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் பெரும் பொறுப்பு பதிப்பாளர்களிடம் இருக்கிறது. அதற்கு உதவி செய்யவேண்டிய கடமை வாசகர்களாகிய எங்களிடம் இருக்கிறது. இதனை ஆதிரை முன்னின்று செய்வது மிகுந்த உவகையைக் கொடுக்கிறது.
வாழ்த்துகள்.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.