Skip to main content

கொட்டம் - கலையின் எதிவுகூறல்


அந்தக் கிராமத்தை ஒரு இராட்சச அனல் கக்கும் மூன்று தலை டிராகன் ஒன்று ஆட்சி செய்து வந்தது. அது தனக்கான உணவினைத் தினமும் அந்தக் கிராமத்து மக்களை மிரட்டி அபகரித்துப் பெற்றுக்கொள்ளும். தவிர அந்த மக்கள் அதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணையும் தாரை வார்க்கவேண்டும். இது இன்று நேற்று அல்ல, நானூறு ஆண்டுகளாக அந்தக்கிராமத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வு.
ஒருநாள் அந்தக்கிராமத்து வழியாக லான்ஸ்லெட் என்கின்ற இளைஞன் வருகிறான். அங்குள்ள குடியானவர் ஒருவரது வீட்டில் தங்கி ஓய்வெடுக்கிறான். அப்போது பேச்சுவாக்கில் அவனுக்கு அந்தக் கிராமத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் டிராகன் பற்றித் தெரியவருகிறது. அதிலும், இம்முறை டிராகனுக்கு தாரை வார்க்கப்படவேண்டிய பெண்ணாக அவர்கள் வீட்டுப் பெண் எலிசா துரதிட்டவசமாகத் தெரிவுசெய்யப்பட்டுவிட்டாள் என்ற கொடுஞ்செய்தியையும் அவன் அறிய நேரிடுகிறது. எலிசாவின் வீட்டார் இதனால் மனமொடிந்து போயிருந்தார்கள். மகளைக் கொடுப்பதைத்தவிர தமக்கு வேறு வழியே இல்லை என்று லான்ஸ்லெட்டிடம் அங்கலாய்த்தார்கள். அத்தோடு டிராகன் ஒன்றும் அத்தனை மோசம் கிடையாது, அது மக்களுக்காகவே தன் வாழ்நாளைக் கழிக்கிறது, எழுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலரா தொற்று பரவியிருந்த காலத்தில் அந்தக் கிராமத்து நீர் நிலையையே தன் அனல் பெருமூச்சால் கொதிக்கவைத்து கிருமிகளைக் கொன்று மக்களைக் காப்பாற்றியது, அக்கம் பக்கத்திலிருக்கும் ஏனைய டிராகன்கள் நம்மை வந்து கொன்று புதைக்காவண்ணம் நம் கிராமத்தைக் காவல் செய்கிறது, அவ்வளவும் ஏன், அது சமயத்தில் தன் டிராகன் உருவைத் துறந்து சாதாரண மனித வடிவம் எடுத்து மக்களோடு மக்களாகக் கலந்து எளிமையாக உறவாடுகிறது. இப்படிப்பட்ட ஒரு டிராகனுக்கு எம் உணவையும் நாம் பெற்ற பிள்ளையையும் கொடுப்பதில் என்ன தவறு? இப்படி அவர்கள் தமக்குத்தாமே சொல்லி மனதை நிம்மதிப்படுத்தவும் செய்தார்கள்.

அடுத்த நாள் அந்த டிராகன் தன் பரிவாரத்தோடு கிராமத்தைச் சுற்றிப்பார்க்கவந்தது. அப்போது அங்கு நின்ற லான்ஸ்லட் தைரியமிருந்தால் தன்னோடு சண்டைபோட வருமாறு டிராகனைப் பார்த்துச் சவால்விட்டான். திடீரென்று யார் என்றே தெரியாத ஒருவன் தன்னைப் பார்த்து அறைகூவல் விடுத்ததும் டிராகன் சற்றுத் திணறிவிட்டது. ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் பின்வாங்கக்கூடாது என்று சண்டைக்குச் சம்மதம் தெரிவித்து நாளும் நேரம் குறித்துவிட்டுத் தன் இருப்பிடம் திரும்பியது. அதன்பின்னர் டிராகனின் கையாளான அந்த நகரத்தின் மேயர் லான்ஸ்லெட்டுக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கினான். ஆரம்பத்தில் டிராகனை வெல்லவே முடியாது, நீ தோற்று சின்னாபின்னமாகிவிடுவாய், அதனால் ஊரைவிட்டு ஓடிவிடு என்று மிரட்டிப்பார்த்தான். அது பலிக்கவில்லை என்றதும் கொலை மிரட்டல் கொடுத்துப்பார்த்தான். ஊர் மக்களை லான்ஸ்லெட்டுக்கு எதிராகத் திருப்பி அவர்களை விட்டே அவனைக் கல்லால் அடிக்க வைத்தான்.


ஆனாலும் லான்ஸ்லெட் பின்வாங்கவில்லை. என்ன நிகழ்ந்தாலும் சண்டையைப் பிடித்தே தீருவேன் என்று உறுதியாக நின்றான். அவன் துணிந்து டிராகனை எதிர்க்கிறான் என்று அறிந்ததும் இரகசியமாக ஊர்மக்களிடமிருந்து அவனுக்குச் சில ஆதரவுகள் கிடைத்தன. அவனுக்கென வாளும், பறக்கும் கம்பளமும் ஆளையே உருமறைப்புச் செய்யவல்ல மாய இரும்பு முகமூடியும் உள்ளூரில் சிலர் தயார்செய்து கொடுத்தார்கள்.

சண்டைக்கான நாளும் வந்தது.

அன்றைக்குமே மக்கள் டிராகனுக்கு ஆதரவாகவே கூக்குரல் இட்டனர். லான்ஸ்லெட்டை எள்ளி நகையாடினர். வந்தேறி, எம் இனத்தின் எதிரி நீ என்று வசை பாடினர். கடுமையான யுத்தம் ஆரம்பிக்கிறது. நிலத்தில் நிகழ்ந்த யுத்தம் ஆகாயத்துக்கு நகர்கிறது. மக்கள் ஆவென்று சண்டையை வேடிக்கை பார்க்கிறார்கள். டிராகனின் பிரசார ஊடகம் வெற்றிச்செய்திகளை அள்ளி வீசியபடியிருக்கிறது. சண்டை தொடர்ந்து நீடிக்கவும் ‘டிராகனுக்கு பின்னடைவு இல்லை, அது நினைத்திருந்தால் எப்போதோ லான்ஸ்லெட்டைக் கொன்றிருக்கலாம், ஆனால் விளையாட்டாகச் சண்டை செய்யும் ஆசையில்தான் அவனை விட்டுவைத்திருக்கிறது’ என்று பிரசாரம் நிகழ்ந்தது. திடீரென்று ஆகாயத்திலிருந்து அந்த மூன்று தலை டிராகனின் ஒரு தலை தரையில் வெட்டுண்டு வீழ்கிறது. அப்போதும் பிரசார செய்தியாளர் ‘நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, வெற்றி நமக்கே’ என்று பறைசாற்றுகிறார். இரண்டாவது தலையும் இப்போது வீழ்கிறது. அப்போதுதான் மக்கள் துணுக்குறுகிறார்கள். லான்ஸ்லெட்டுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதை அறிகிறார்கள். தம்மை அடக்கி ஆளும் டிராகன் தோற்கடிக்கப்படக்கூடியது என்பதை அறிகிறார்கள். லான்ஸ்லெட்டுக்கு ஆதரவு அதிகரிக்கிறது. ஈற்றில் மூன்றாவது தலையும் வீழ்ந்தபோது மக்களின் கொண்டாட்டத்துக்கு அளவேயில்லை. அந்த யுத்தத்தில் காயமுற்ற லான்ஸ்லெட்டும் வேறொரு கிராமத்தில் வீழ்ந்து அப்படியே காணாமற்போய் விடுகிறான்.

இது நிகழ்ந்து ஒரு வருடம் கழித்து, காயத்திலிருந்து மீண்ட லான்ஸ்லெட் மறுபடியும் அந்தக் கிராமத்துக்கு வருகிறான். டிராகன் இல்லாத ஊரில் நிம்மதியும் சுதந்திரமும் திரும்பியிருக்கும் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் அங்கிருந்த நிலையோ வேறு. டிராகன் கொல்லப்பட்டதும் டிராகனுடைய கையாளான அந்நகரத்து மேயர் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டுவிட்டான். பதவிக்கு வந்ததும் டிராகனின் மரணத்தை விசாரிக்கச் சிறப்பு ஆணைக்குழு ஒன்றை அவனே நியமித்திருக்கிறான். அந்த ஆணைக்குழுவும் பலவித விசாரணைகளுக்குப்பிறகு, போரிலே லான்ஸ்லெட் டிராகனை வெறுமனே காயப்படுத்தினான் என்றும் பின்னர் அந்த மேயர்தான் டிராகனுடன் போராடி அதனை வென்றான் என்றும் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. டிராகனை வதம் செய்த மீட்பர் என்று அந்த மேயருக்குப் பட்டமும் கிடைத்தது. இதனை நம்பமாட்டாமல் சில குடியானவர்கள் மேயரிடம் முறைப்பாடு செய்கிறார்கள்.

“இல்லை, டிராகனை தாங்கள் வதம் செய்யச் சந்தர்ப்பமேயில்லை. எம்மால் இதனை நம்பமுடியாது”

அதற்கு மேயர் சொன்ன பதில்.

“இல்லையே, நம்பலாமே. என்னாலே இதனை நம்பமுடியும் என்றால் உங்களாலும் நிச்சயமாக முடியும். முயன்றுபாருங்கள்”

இதனைத்தொடர்ந்து மேயரை எதிர்த்தோர் எல்லோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலரின் வாய் பணத்தால் மூடப்பட்டது. சிலர் பணத்திற்காக மேயரின் ஊதுகுழல் ஆகினர். எங்கும் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடத்தொடங்கியது. பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஏலவே பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அதிகாரம் டிராகனிலிருந்து மேயரின் கைக்குப் போனதுபற்றிப் பெரிதாக எந்தப் பிரக்ஞையும் இருக்கவில்லை. எலிசாவையும் அவளது பெற்றோர் மேயருக்குத் திருமணம் முடித்துக்கொடுக்கச் சம்மதிக்கிறார்கள். திருமணத்துக்கான நாளும் வந்தது.

இந்தச்சூழலில்தான் லான்ஸ்லெட் தான் அந்த ஊருக்குத் திரும்பியதை அனைவருக்கும் வெளிப்படுத்துகிறான். அவனைக்கண்டதுமே மக்கள் எல்லோரும் முறைப்பாடுகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். மேயரின் கொடுமையைச் சொல்லி அழுகிறார்கள். எலிசா அவனது கையைப்பிடித்து அழைத்துவந்து தன்னை அக்கொடியவனிடமிருந்து காப்பாற்றுமாறு இறைஞ்சுகிறாள். மேயரின் வலதுகையாகத் தொழிற்பட்டவன் திடீரென்று கட்சிமாறி மேயரின் குற்றங்களை வரிசைப்படுத்த ஆரம்பிக்கிறான். தான் மேயருக்குத் துணையாக நின்றது தன் தவறு இல்லை. தன்னுடைய மூளை அவ்வாறு தொழிற்படப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்கிறான். சரி அப்படியே பயிற்றுவிக்கப்பட்டிருந்தாலும் நீ அதிலும் முதல் மாணவனாக அல்லவா வளர்ந்துவிட்டாய் என்று லான்ஸ்லெட் எள்ளி நகையாடுகிறான். குடியானவர்களைப் பார்த்து ‘உங்களையெல்லாம் நான் என்ன செய்வது?’ என்று விரக்தியோடு கேட்கிறான். உடனே மேயரும் ‘இந்தத் துரோகிகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நீ இவர்களோடு மெனக்கடாதே, எலிசாவை அழைத்துக்கொண்டு உன் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடு’ என்று ஆசை காட்டுகிறான். லான்ஸ்லெட் குடிமக்களிடம் திரும்பி மேயரையும் அவனது கையாளையும் கைது செய்து சிறையில் அடைக்குமாறு சொல்ல அவர்களும் அவன் திரும்பிவந்த தைரியத்தில் குதூகலத்துடன் அவன் சொன்னதை அப்படியே செய்கிறார்கள்.

எலிஸா லான்ஸ்லெட்டை நெருங்குகிறாள். நான் உன்னை முன்னிலும் அதிகமாகக் காதலிக்கிறேன். நாம் திருமணம் முடித்து எங்கேயாவது சென்றுவிடலாம் என்கிறாள். லான்ஸ்லெட்டும் சம்மதம் தெரிவிக்கிறான். ஆனால் ஊரில் சிறு வேலை ஒன்று இன்னமும் இருக்கிறது என்கிறான்.

“இங்குள்ள ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு டிராகன் இருக்கிறது. அதற்கு அதிகாரம் கிடைத்தால் தலை விரித்தாடுகிறது. இல்லையேல் தலைவிரித்தாடுபவரிடத்தில் அடி பணிகிறது. நாம் அந்த டிராகன்கள் எல்லாவற்றையும் கொல்லவேண்டும்”

லான்ஸ்லெட் இதைச்சொல்லும்போது அருகில் நின்ற சிறுவன் ‘அப்படிக் கொல்லும்போது வலிக்குமா?’ என்று கேட்கிறான். ‘இல்லை உனக்கு வலிக்காது’ என்கிறான் அவன். ‘அப்படியானால் நமக்கு?’ என்று பெரியவர்கள் கேட்க, ‘கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும்’ என்று லான்ஸ்லெட் பதில் சொல்கிறான். இதனைக்கேட்ட ஒரு கமக்காரர் இப்படிச்சொல்கிறார்.

“அவசரப்படவேண்டாம் லான்ஸ்லெட். தானியங்களைச் சேமிப்போம். தகுந்த காலத்தில் விதைப்போம். நெருப்பை ஏற்றுவோம். வெம்மையான சூழல் வளர்ச்சிக்கு உதவும். அப்போது வளரக்கூடிய களைகளைக் கவனமாக அகற்றுவோம். நல்ல தாவரங்களின் வேர்களைச் சேதாரம் செய்யாமல் பார்த்துக்கொள்வோம். ஏனெனில் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் மக்கள் கவனமாகவும் பொறுமையாகவும் கையாளப்படவேண்டியவர்கள் என்பது புரியும். அவர்களைச் சரியான திசையில் வளர்த்தெடுப்பது என்பது எடுத்தார் கவிழ்த்தார் என்று செய்யக்கூடிய ஒன்று அல்ல”

லான்ஸ்லெட் அதற்குச் சம்மதிக்கிறான். அந்த நிகழ்வு இப்போது லான்ஸ்லெட்டுக்கும் எலிசாவுக்குமிடையில் நிகழும் திருமண வைபவமாகிறது. எல்லோரும் மகிழ்ச்சிக் களியாட்டம் செய்கிறார்கள்.

திரை மூடுகிறது.

***

‘டிராகன்’ என்ற இக்கதை 1944ம் ஆண்டு ரசிய எழுத்தாளரான எவ்ஜெனி சுவார்ட்ஸ் என்பவரால் நாடகமாக எழுதப்பட்டது. ஸ்டாலின் காலத்து சோவியத் ஒன்றிய ஆட்சியை விமர்சித்து இவ்வகை இலக்கியங்கள் உலகம் முழுதும் அக்காலத்தில் வந்துகொண்டிருந்தன. குறிப்பாக ஜோர்ஜ் ஓர்வெலின் ‘விலங்குப் பண்ணை’ அவற்றுள் முக்கியமானதொன்று. ஆனால் இந்த நாடகம் ஸ்டாலினுடைய ஆட்சியை எதிர்த்து உள்ளிருந்தே எழுப்பப்பட்ட குரல். நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் இப்படியான எதிர்ப்புக்குரல்களை குலாக் என்று அழைக்கப்படும் சோவியத் வதை முகாம்களில் ஸ்டாலினின் அரசு அடைத்துவிடுவதுண்டு. இதிலிருந்து தப்பிப்பதற்காக, அந்த டிராகன் நாடகம் ஹிட்லரையும் நாசிசத்தையுமே சுட்டுவதாக சுவார்ட்ஸ் குறிப்பிட்டார். கதையில் ஒரு நாடோடிக்கூட்டம் கூண்டோடு அழித்தொழிக்கப்படும் சந்தர்ப்பத்தை யூதர்கள் வதையோடு ஒப்பிட்டார். ஸ்டாலின்தான் அந்த லான்ஸ்லெட் என்ற மீட்பர் என்றார். ஆனால் அவர் சொன்னதை எவருமே நம்பத்தயாராக இருக்கவில்லை. சுவார்ட்சுக்கும் குலாக் சிறையில் வாடும் பல ரசிய இலக்கியவாதிகளுக்குமிடையேயான நட்பை பலரும் அறிந்திருந்தார்கள். இந்த நாடகம் வெளியாகிக் கொஞ்சக்காலத்திலேயே சோவியத் அரசு அதனைத் தடை செய்துவிட்டது. பின்னர் ஸ்டாலினின் மரணத்துக்குப் பின்னர் இந்த நாடகம் மீளவும் அரங்குக்கு வந்தது. அப்போது டிராகன் தலை ஸ்டாலினை ஒத்தும் அந்த மேயரின் தலை அப்போதைய அதிபர் குருசேவை ஒத்தும் இருந்தது. பின்னர் அதுவும் தடை செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு கொர்ப்பச்சேவ் காலத்தில் கருத்துச் சுதந்திரம் கொஞ்சம் கிடைக்கப்பெற்ற பின்னரேயே இந்த நாடகம் மீண்டும் ரசியாவில் மேடையேற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த நாடகத்தின் பல வடிவங்கள் உலகமெல்லாம் அரங்கேற்றப்பட்டுவிட்டன. ஒரு பிரித்தானிய மேடையில் இந்நாடகம் ஒரு ரசிய மேடையில் நிகழ்வதாகவே வடிவமைத்து அரங்கேற்றினார்கள். நாடகத்துள் நாடகம்போல. அங்கே அந்த நாடகம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே ரசியக் காவல்துறையினர் நாடகத்தின் ஒவ்வொரு நடிகர்களைக் கைது செய்வதாகவும் பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்படுவதாகவும் கதையைச் சித்தரித்திருந்தார்கள். ஆனால் இது உண்மையில் நிகழ்ந்த சம்பவம் அல்ல.



அதிகாரமும் அடக்குமுறையும் தலைவிரித்தாடும் உலகின் எந்தப் பகுதிக்கும் எக்காலத்துக்கும் இந்த டிராகன் கதை நன்றாகவே பொருந்திவருகிறது. அதிகாரம் எத்தனை நுட்பமாக மக்களை அடக்குமுறைக்கு இயைவாக்கி வைத்திருக்கிறது என்பதை ஓரிடத்தில் அந்த டிராகனே அழகாக விளக்கும்.

“மனித ஆன்மாக்களை உடைப்பது கடினம். நீ ஒருவரை இரண்டு துண்டாக்கிவிடலாம். எளிது. அது எளிது. ஆனால் அதனால் என்ன பயன்? நீ உடைக்கவேண்டியது அவர்களுடைய ஆன்மாவை. அவற்றை நீ கிழித்துவிட்டாயானால் பின்னர் அவர்கள் எந்தச் சுரணையுமின்றி உனக்கு அடிபணிவார்கள். சிந்திக்கவே மாட்டார்கள். ஒருமுறை அடி பணிந்துவிட்டால் பின்னர் மீட்சியே இல்லை. உலகின் எந்த மூலையிலும் அத்தகைய அடிமைகளை நீ காணமாட்டாய். என்னுடைய நாட்டு மக்களின் ஆன்மாக்களை நான் உடைத்து ஊனமாக்கி வைத்திருக்கிறேன். கையற்ற ஆன்மாக்கள். காலற்ற ஆன்மாக்கள். வாய் பேச முடியாத, காது கேளாத ஆன்மாக்கள். என்னுடைய அடிமை மேயர் ஏன் ஒரு அரக்கன்போல மக்களிடம் நடக்கிறான் தெரியுமா? தன்னுடைய ஆன்மாவை அடகு வைத்த குற்ற உணர்ச்சியை மறைக்கத்தான். எல்லாமே சந்தையில் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்ட ஆன்மாக்கள். அவ்வளவுதான்”

இதைத்தான் அதிகாரம் எக்காலத்திலும் செய்துவந்தது. ஹிட்லராக இருக்கட்டும். ஸ்டாலினாக இருக்கட்டும். மேற்கத்தியக் காலனித்துவ அரசுகளாக இருக்கட்டும். இன்றைய முதலாளித்துவ அரசுகளாக இருக்கட்டும். அடுத்தடுத்து வந்த ஈழத்து அரசுகளாக இருக்கட்டும். விடுதலைப்புலிகளாக இருக்கட்டும். ஏன், ஒரு சின்னஞ் சிறிய அரசியல் கட்சியாக இருக்கட்டும். இதுதான் நிகழ்கிறது. அவரவர் அதிகார வீச்சுக்கமைய டிராகனின் நெருப்பு பாயும். அவ்வப்போது அதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி எழுந்து வரும். லான்ஸ்லெட்டுகள் வருவார்கள். மேயர்கள் வருவார்கள். பெரும்பாலும் லான்ஸ்லெட்டுகள் அதிகாரத்தைக் கையிலெடுத்து இன்னொரு டிராகனாக உருமாற்றம் அடைவார்கள். இதுதான் ஆன்மாக்களை அடகு வைத்த மனித சமூகத்தின் வரலாறு. முன்னரும் இதுதான் நிகழ்ந்தது. இப்போதும் இதுதான் நிகழ்கிறது. இனியும் இதுவே நிகழும்.

***

இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் ஆண்டு மாசி மாதத்தில் யாழ்ப்பாணத்தின் வடக்கேயேருக்கும் பண்டத்தரிப்பு என்ற சிறு கிராமத்தில் இதே ‘டிராகன்’ நாடகத்தின் தமிழ் வடிவம் ‘கொட்டம்’ என்ற பெயரிலே அரங்கேற்றப்பட்டது. மக்கள் களரியின் வழிப்படுத்தலில் செம்முகம் ஆற்றுகைக்குழு இந்நாடகத்தைத் தயாரித்து வழங்கியிருந்தது. பண்டத்தரிப்பு மட்டுமன்றி புத்தூர் கிழக்கு, கிளிநொச்சி என மேலும் பல இடங்களில் இந்நாடகம் பொது மக்களிடையே இலவசமாக அரங்கேற்றப்பட்டது.

டிராகன் நாடகம் எப்படி உலகமெங்கும் அந்தந்த நாட்டு அரசியலை உள்வாங்கி மாற்றியமைக்கப்பட்டதோ அதேபோன்று கொட்டம் நாடகமும் நம்மூருக்கே அடிப்படையான அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு டிராகனின் தமிழ் வடிவமான வேதாளமும் அதன் மூன்று தலைகளும் ராஜபக்ச சகோதரர்களை நினைவுபடுத்தியது. எப்போதோ தான் அடைந்த போர் வெற்றியை வைத்து டிராகன் எப்படி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது என்றும் மக்களை அதன் கொடுங்கோல் ஆட்சிக்கு இசைவாக்கி அவர்களின் ஆன்மாவை ஊனப்படுத்தி வைத்திருந்தது என்றும் நாடகம் தெளிவாகக் கதை சொன்னது.

கொட்டம் நாடகம் பண்டத்தரிப்பு மேடையில் நிகழ்ந்து சில மாதங்களிலேயே நாடு முழுதும் அந்த நாடகம் நிஜத்திலேயே அரங்கேறியது. வேதாளத்தின் தலைகள் ஒவ்வொன்றாக வானிலிருந்து வீழ்ந்ததுபோல இராஜபக்ச சகோதரர்களின் பதவிகள் விழத்தொடங்கின. வேதாளத்தின் ஊதுகுழலாக இருந்த ஊடகம்போலவே ஈழத்தின் அரச ஊடகங்களும் தொழிற்பட்டன. அங்கே இலட்சக்கணக்கில் பேரணி செய்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிகழ்த்திய இளைஞர்கள்தான் அந்த லான்ஸ்லெட். ஆரம்பத்தில் இளைஞர்களின் எதிர்ப்பை பெரும்பான்மையான மக்கள் அசூயையாகவே பார்த்தார்கள். ஆனால் அவர்களின் சக்தி ஓங்க, ஓங்க அவர்களுக்கு வாளும் ஈட்டியும் முகக்கவசமும் பறக்கும் கம்பளமும் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் பக்கம் நிலைமை சாய ஆரம்பித்ததும் திடீரென்று அனைவருமே புரட்சியாளராகிவிட்டனர்.

சோகம் என்னவென்றால், இங்குமே டிராகன் நாடகத்தின் கதை அட்சரம் பிசகாமல் நிஜத்தில் இடம்பெற்றதுதான். டிராகனை லான்ஸ்லெட் வெற்றிகொண்டாலும் அவன் காயப்பட்டு அடங்கியிருந்த சமயத்தில் அந்த மேயர் ஆட்சியைப் பிடித்துவிட்டான் அல்லவா? அதேபோல இங்கும் இராஜபக்சகளைத் துரத்திய பின்னர் இயல்பாக எழுந்த தேக்க சூழலைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பிடித்துவிட்டார். கடும்போக்கு டிராகனிலிருந்து நாடு ஒருவித மென்போக்கு டிராகனின் கையில் சிக்கியது. ஆனால் மக்களின் நிலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா என்றால் அது இல்லை. அதிகாரத்துக்கு இசைவாக்கப்பட்ட மக்களும் மிக இயல்பாகப் புதுத்தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். அந்த மேயர் எப்படி லான்ஸ்லெட்டுக்குத் துணைபோனவர்களைக் கைது செய்து அடைத்தானோ அதுபோலவே ஈழத்தின் போராட்ட இளைஞர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டனர்.

டிராகன் நாடகத்தின் முடிவில் லான்ஸ்லெட்டும் அந்த கமக்காரரும் பேசுவதுதான் இயல்புக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் டிராகனை முதலில் வதம் செய்தல்வேண்டும். நல்ல வேர்களைக் காப்பாற்றியவாறு களைகளை அகற்றுதல்வேண்டும். புரட்சி என்பது எழுந்த வேகத்திலேயே அடங்கிவிடக்கூடிய ஒன்று. ஆனால் சமூக மாற்றம் என்பது நத்தைபோல நகருவது. அது சிறுகச் சிறுக செய்யப்படவேண்டியது. மேலிருந்து கீழன்றி மக்கள் எல்லோரையும் ஒரே நிலையில் நிறுத்தி அறிவுறுத்தப்படவேண்டியது. மக்களால் மக்களுக்குச் செய்யப்படவேண்டியது. அங்கே ஒவ்வொருவரும் லான்ஸ்லெட் ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அக்கூட்டத்திலிருந்து எழக்கூடிய டிராகன்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடக்கூடிய பக்குவமும் ஓர்மமும் அந்த மக்கள் கூட்டத்திடம் இருக்கவேண்டும். இது சாத்தியமான ஒன்றா? வரலாற்றில் இப்படி எங்காவது நிகழ்ந்திருக்கிறதா? இது இலட்சியப்போக்கு இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் டிராகன் நாடகத்தில் வருகின்ற சிறு பூனைக்கும் லான்ஸ்லெட்டுமிடையேயான உரையாடலில் பதில் கிடைக்கிறது. நாடகம் ஆரம்பிக்கும் இடமே இதுதான். லான்ஸ்லெட் அந்தக் கிராமத்துக்கு முதற்தடவையாக வருகிறான். அங்கே யாருமேயற்ற ஒரு வீடு திறந்துபோடப்பட்டுக்கிடக்கிறது. அதனுள்ளே ஒரு மூலையில் குளிருக்கு தீ வளர்க்கப்பட்டிருக்க முன்னேயிருந்த சாய்வுமனைக் கதிரையில் ஒரு பூனை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

லான்ஸ்லெட் பூனையிடம் கேட்கிறான்.

“என்ன இது? வீடு இப்படித் திறந்துகிடக்கிறது? நல்ல காலம். வேறு யாராக இருந்தால் திருடிக்கொண்டு போயிருப்பார்கள். நானென்றபடியால் ஓய்வெடுக்க வந்தேன். இங்கே யாருமேயில்லையா? ஏய் பூனையே, நீ என்ன ஊமையா? பேசமாட்டாயா?”

“பேசமாட்டேன். என்னைத் தொந்தரவு செய்யாதே.”

“ஏன்?”

“குளிர்காலத்தில் சூடாக ஒரு இடம் கிடைத்தால் அப்படியே மல்லாக்கப்படுத்துத் தூங்கிவிடவேண்டும். தூங்கினால் நிம்மதியாகக் கனவு காணலாம்.”

இப்படிப்போகும் உரையாடல் ஒரு கட்டத்தில் டிராகன் பற்றித் திரும்புகிறது. டிராகனின் கொடுமைகளைப் பூனை லான்ஸ்லெட்டுக்கு எடுத்துரைக்கிறது. டிராகனின் உயரம் கோயில் கோபுரத்தையும் தாண்டியது. அது நெருப்பை உமிழ்ந்தால் காடே எரியும். வைரத்தால்கூட அதன் தோலைக் கீறமுடியாது என்றெல்லாம் சொல்லியது. அப்புறம் திடீரென்று கேட்டது.


“நீ அந்த டிராகனோடு போரிடுவாயா?”

“பார்க்கலாம்”

“தயவு செய்து போரிடு. எப்படியோ அதுதான் ஈற்றில் வெல்லப்போகிறது. அது உன்னைத் துண்டம் துண்டமாக வெட்டிப்போட்டுவிடும். அதில் சந்தேகமில்லை. ஆனால் கனவு என்று ஒன்றிருக்கிறதல்லவா? தப்பித்தவறி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், உலக மகா அதிசயமாய், அல்லது டிராகன் செய்யும் தவறு ஒன்றினால் நீ ஒருக்கால் வென்றுவிட்டால்?”

இதுதான் பிரச்சனை. நாமெல்லோரும் இப்படி மீட்பருக்காகக் காத்திருந்து எந்நேரமும் எவரையாவது உசுப்பேற்றிவிட்டுப் பின்னர் பழையபடி தூங்கப்போகும் பூனைகளாக இருக்கிறோம். அல்லது யாராவது ஒரு லான்ஸ்லெட் போராடிச் சிறு மீட்சியைக் கொடுத்தால் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு மேயராக வந்து பின்னர் டிராகனாக உருமாறிவிடுகிறோம். நமக்கு ஆபத்தில்லை, ஆதாயம்தான் என்று அறியும் கணத்தில் மாத்திரம் லான்ஸ்லெட்டுகளுக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம் நம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கிறோம். நம் எல்லோருக்குள்ளும் தூங்கும் பூனைகளையும் டிராகன்களையும் ஒழிக்கும்வரை சமூக மாற்றம் என்பது வெறுங்கனவுதான்.

எத்தனை லான்ஸ்லெட்டுகள் வந்தாலும்.

***

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக