மழை துமிக்க ஆரம்பித்தது. கம்பாலாவுக்கு வடமேற்கே இருநூற்றைம்பது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் புடொங்கா என்கின்ற அடர்த்தியான மழைக்காடு அது. வரும் வழியில் ஒரு மலைப்பகுதியில் வண்டியை நிறுத்திப் பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் காடுதான் தெரிந்தது. விமானத்தின் யன்னலூடே பார்க்கையில் வானமெங்கும் விரித்துக்கிடக்கும் முகிலைப்போலக் காடு நிலமெங்கும் பச்சையாய்ப் படர்ந்திருந்தது. எங்கள் குழுவில் பதினைந்து பேரளவில் இருந்தார்கள். பச்சை, சாம்பல் நிறங்களில் நீர்புகா உடைகளும் மலையேறும் சப்பாத்துகளும் தொப்பியும் அணிந்திருந்தோம். வனக்காவலர்கள் எங்களுக்கான பயண அறிவுறுத்தல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.