அன்றைக்கு அவளுக்கு இரசாயனவியல் பரீட்சை நாள். தனியே எம்.ஸீ.கியூ மாத்திரமே என்பதால் பதினோரு மணிக்கெல்லாம் பரீட்சை முடிந்துவிடும். பரீட்சைத் தாள்களைக் கொடுத்துவிட்டு, நண்பிகளுடன் கதைப்பட்டு, சைக்கிளை எடுத்து உருட்டிக்கொண்டு, ஆடி அசைந்தபடி அவள் பாடசாலை கேற்றடிக்கு வந்துசேரும்போது மணி பதினொன்று இருபது ஆகிவிடும். பதினொன்று இருபத்திரண்டுக்கு அவளது சைக்கிள் பழைய பூங்கா வீதிக்குள் நுழையும். அது ஒரு பச்சை வண்ண ஏசியா சைக்கிள். அவள் அந்தச் சைக்கிளில் செல்லும் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். அதன் ஹாண்டிலை பிடிக்கின்ற விதமோ அல்லது இயல்பாகவே அவளிடமிருந்த ஒரு எடுவைக் குணமோ தெரியாது, சைக்கிள் ஓடிக்கொண்டு போகும்போது அவளது உடலும் தலையும் ஏதோ அணிவகுப்பில் செல்வதுபோல நிமிர்ந்தே நிற்கும். எதுவுமே அழகுதான். சைக்கிள் உழக்கும்போது. காற்றில் பறக்காதவாறு தன் பாடசாலைச் சீருடையை ஒருகையால் பக்குவமாக அடக்கும்போது. அவ்வப்போது தலை திருப்பாமலேயே பின் கரியரில் புத்தகப்பை நழுவாமல் இருக்கிறதா என்று கையால் செக் பண்ணும்போது. மழை நாளில் ஒரு கையால் குடை பிடித்தபடியே மறுகையால் இலாவகமாக ஹாண்டில் பிடிக்கும்போது. பக்கத்தில் கூ...