ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் முகம் கழுவி, சாமி கும்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் தயாராகிவிடவேண்டும். உயர்தரம் படிக்கும் அக்காவுக்கு என்று தனியாக ஒரு எண்ணெய் விளக்கும் அறையும் கொடுக்கப்பட்டிருந்தது. மீதி எல்லோருக்கும் என்று பொதுவாக ஒரு மேசையும் விளக்கும் இருந்தது. அவரவர் தத்தமது விளக்குச் சிமினிகளைத் துடைத்தல் வேண்டும். சிமினியைத் துடைப்பது என்பது பிறந்த இரண்டு நாள் குழந்தையை ஈரத்துண்டால் குளிப்பாட்டுவதுபோல. மிகக் கவனமாகத் துடைக்கவேண்டும். அதிலும் மேசை லாம்புச் சிமினி மிக மென்மையானது. எப்பன் என்றாலும் வெடித்துவிடும். அதற்குள் கையை விட்டுத் துடைப்பதும் சற்றுச் சிரமமானது. அதன் வாய்ப்பகுதியின் விளிம்பு கையைப் பதம் பார்த்துவிடும். கூடவே திரியையும் உயர்த்தி சீராகக் கத்தரித்துவிடவேண்டும். இல்லாவிடில் தீபம் ஒரு பக்கத்தால் எரிய ஆரம்பித்து சிமினியில் புகை படிந்துவிடும். எண்ணெய் தீர்ந்துபோயிருந்தால் அதையும் நிரப்பி மேசையில் வைத்துத் தீபத்தை ஏற்றி, அது செட்டில் ஆனபின்னர் சிமினையைப் பொருத்தினால் அன்றைய இரவின் படிப்பு ஆரம்பிக்கும்.