Skip to main content

உயிரிடை பொதிந்த ஊரே!

 

pongal-celebrationஇந்த ஆண்டு பொங்கல்விழா கவியரங்கில் வாசித்த கவிதை(?) இது. கரும்பிடை ஊறிய சாறு என்ற தலைப்பில் என்னது “உயிரிடை பொதிந்த ஊரே” என்ற உபதலைப்பு.

சென்றமுறை கவிதை சொன்னபோது போது “அண்ணே சந்தம் சுட்டுப்போட்டாலும் அண்டுதில்ல” என்று வாலிபன் நங்கென்று குட்டியதால், இம்முறை சந்தம் கொஞ்சம் சேர்க்க ட்ரை பண்ணியிருக்கிறேன். ஓரிரண்டில் நேரிசை வெண்பா முயற்சிகளும் உண்டு. மாட்டருக்கு போவோம்!


மறப்போரில் மாண்டிட்ட புறத்திணைக்கு அஞ்சலிகள்
இருப்போரில் தமிழ் வளர்க்கும் உயர்த்திணைக்கு வந்தனங்கள்
அக்கப்போராம் என்கவிதை அதை சொல்ல அழைத்து வந்த
ஆராரோ அவராரோ அவர்க்கெல்லாம் வணக்கங்கள்

அல்லலுறும் தேசத்தில் அகதியாய் வளர்ந்தவன் நான்
ஆப்படிக்கும் தேசத்தை அருகினிலே கொண்டவன் நான்
அந்த நாட்கள் போதுமென்றே ஆஸிக்கு வந்தவனை
அவையடக்கம் பண்ணாட்டி திருப்பி எம்மை அனுப்புவரோ!

தலைவர் அவர் கவிதையிலே அவை முழுதும் சிலிர்க்கிறதே
கவியிருவர் அமர்ந்திடவே குரங்காட்டம் நடுங்கிறனே
கவி இல்லை என்றாலும் காலத்தின் கதையிதுவாம்
கடி கொஞ்சம் சுவைத்தாலே கரும்பினிலும் இனித்திடுமாம்

குறுகத்தறித்த குறள்நெறியும் சுவையில்திளைத்த பாரதியும்
கம்பன் காளிதாசனோடு பைரன் ஷெல்லி கவிதைகளும்
காதலியின் கோபங்களில் கதகதக்கும் ஊடல்களும் – மறுகணமே
கடுகதியில் ஓடிவந்து தடுத்தாளும் கடவுள்களும்

கரும்பிடைஇச்சாறு என இவையெல்லாம் பறைஞ்சிடவே
என் தோழர் இருவருமே இறுமாப்பாய் இருக்கிறரே
இதனிடையே புகுந்து இங்கு எதை நானும் சொல்லிடவே
எண்ணுகையில் என் உயிரில் பொதிந்த ஊரு வருகிறதே

அந்த ஊருக்கு என்ன பேரு?
பேருக்கல்ல சொல்லும் ஊரு – பெரும்
நிலப்பரப்பு அதன் மேரு,
வன்னிஎன் றிடுவார் பலபேரு!

பண்ணங்கண்டிப்பாலம் தாண்ட வந்துவிடும் வட்டக்கச்சி
அந்தாண்ட வழ்ந்தவரோ வளமான வயக்காச்சி
வருந்தி வந்த யாவரையும் வரவேற்கும் தாயம்மா
வயித்துக்கும் வழங்கிடுவாள் வக்கனையா சோறம்மா

ஓரிரவு ஊரடங்கு ஒரு மூச்சில் பல குண்டு
நடு நடுங்கி புறப்பட்டம் நடு இரவில் வீடு விட்டு
சாடி மூடி, சட்டி முட்டி தாலிக்கொடி எடுத்து கட்டி
ஊரு விட்டு ஊரு மாறி ஓடியவர் நாம் அன்றாடங் காய்ச்சி

காய்ந்து கருத்து உடம்பு தேய்ஞ்சு கட்டெறும்பு ஆகிப்போச்சு
சைக்கிள் மிதிச்சி உருட்டி உழக்கி அடிக்காலு நல்லா மரத்து போச்சு
ஆச்சு எங்க வாழ்க்கை இனி அவ்வளவெண்டு நினைச்சபோது
ஆதரவாய் கைகொடுத்து அள்ளி அணைச்சுது வட்டக்கச்சி

அந்த ஊரு பொங்கல் கதை சொல்ல வந்தேன் கேட்டிடுவீர்
அன்பு பாசம் உறவு கூடல் அத்தனையும் பார்த்திடுவீர்
உங்க ஊரில் பொங்கல் என்றால் பானை ரொம்ப சின்னதாகும்
இந்த ஊரில் யானை வந்தால் பானை முன்னே சின்னதாகும்

எந்த வீட்டு பொங்கலுமே எட்டூருக்கும் சேர்த்து பொங்கும்
எட்டாத ஊரிலிருந்தும் வண்டில் கட்டி பொங்கல் வரும்
பொங்கலன்று விடியுமுன்னே பெண்கள் கூட்டம் எழுந்துவிடும்
தொழுவத்து சாணியிலே முற்றத்தை மெழுகிவிடும்

நீராடி பூச்சூடி புத்தாடை அணிந்துவிடும்
மாவுலக்கை அடி எடுத்து அழகழகாய் கோலமிடும்
கோலமதை காண்பதற்கே காலைப்பனி காத்திருக்கும்
கதிரவனும் களவோடு இலையூடே எட்டு எட்டும்

பூத்தகொடி பூத்திருக்கும் மொட்டுஅது மெட்டமைக்கும்
தேன்வண்டு அதை மறந்து, பெண்ணின் முடியிடையில் முகம் புதைக்கும்
கோலம்மாவு தேடிவரும் எறும்புக்கும் காதல் வரும்
காதல் கொண்ட இளசுகளின் வாயில் நாலு ஈநுழையும்

இது யாவும் அறிந்தாலும் அறியாத களவோடு
எம்பெண்டிர் குலுக்கிவிடும் இரு கவிதை புரவிகளும்
கொடியிடையும் சடைமுடியும் தமிழ் கொஞ்சும் உதடுகளும்
இவை எதிலும் சிக்காதார் எவருண்டோ எண்ணிச்சொல்லிவிடும்

அடுப்புக்கு மூண்டு கல்லு, விறகு, தேங்காய் மட்டைவேணும்
தோட்டத்து மஞ்சள் இலை பானைக்கு சுத்தவேணும்
சாணத்தில் அருகம்புல், பிள்ளை யாருக்குகுத்த வேணும்
கும்பம் யாரு வைப்பது எண்டு சண்டை வேறு தீர்க்கவேணும்

அடுப்புக்கு தாய்மாமன் அரிசிக்கு அப்பங்காரன்
தோரணங்கள் தூக்கிடவே தூரத்து சித்தப்பன்
உற்றத்து உறவுக்கொரு உரிமை ஏதும் குடுக்காட்டி
அந்த சில்லு எடுப்பதற்கு காவல்துறை அழைக்கவேணும்

குசினிக்கு உள்ளிருந்து பொரிக்கும் வடை வாசம் வரும்
மோதகமும் கொழுக்கட்டையும் பிடிக்க ஒரு கூட்டம் வரும்
இடையிடையே குண்டு வரும் பொம்பர் வரும் ஷெல்லு வரும்
பங்கருக்குள் போய் வரவே வடை எல்லாம் தீய்ந்துவிடும்

பலரோட கவனமும் பால் பொங்கும் பானையிலே
பட்டாசு கொழுத்தவும் படக்கென்று பயந்திடுவார்
பூந்திட்டான் ஆமி எண்டு புரக்கேறி விக்கிடுவார்
வந்திட்டான் ஐயோ எண்டு ஒண்டுக்கு போயிடுவார்

காலுக்குள் போடாம தூரேத்தே வெடி எண்டு
அடிபோட்டு அப்பாவும் தடியெடுத்து துரத்திடுவார்
பானையது பொங்கிடவே பச்சரிசி போட்டிடுவார்
பாகோடு பருப்புஇன்ன பிறவெல்லாம் சேர்த்திடுவார்

பதம் பார்த்து இதம் பார்த்து பருமட்டாய் இறக்கிடுவார்
கல்லுக்கு ஒன்றாக, பொங்கல் காணிக்கை வைத்திடுவார்
வாழையிலை எடுத்து அதில் மீதியெல்லாம் குவிச்சிடுவார்
கரும்போடு கோழிக்கூடு மாம்பழங்கள் அடுக்கிடுவார்

வடையோடு மோதகமும் ஒருசேர நாவூறும்
படையல்கள் பல பார்த்து பகலவனின் வாயூறும்
சாதகமே பண்ணாம தாத்தா தேவாரம் பாடிவிடும்
அவர்பாட்டை கேட்பவரின் படும்பாடு சிரிப்பாகும்

தேவாரம் திருமுறைகள் பல்லாண்டு பலபாட்டு - ஆச்சி
கல்வெட்டில் பதிச்சிருக்கும் பாடுவார் அதைபார்த்து
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் சூரியனை
பசி வந்தும் பறையாமல் பணிவோடும் தொழவேணும்

வெட்டிவச்ச கரும்போடு கதலிவாழை பழம்சேர்த்து
கொழுக்கட்டை வடைய கொஞ்சம் பிச்சிவாயில் போட்டுக்கொண்டு
தட்டில் ஒரு இலைபோட்டு பொங்கலிட்டு உண்டாலே
ஈடு இணை இவ்வுலகில் இச்சுவைக்கு அண்டாதே!

வானொலியை திருகிடவே பொங்கிடுமே பூம்புனலே
புதுப்பாட்டு எண்டு சொல்லி விண்ணை தாண்டி வந்திடுமே
ஆல் இந்திய ரேடியோவின் தென்கச்சி சுவாமியாரும்
இன்று ஒரு தகவல் என்று பொங்கலதை விளக்குவரே

ஈழநாதம் பேப்பரில எட்டுப்பக்க வாழ்த்துவரும்
இரண்டாவது பக்கத்திலே என் கவிதை ஒன்று வரும்!
கிட்டிப்புள்ளும் பம்பரமும் பேணி பந்தும் அடுத்துவரும்
பெடியள் பெட்டை ஆடும் தாச்சி சச்சரவில் முடிந்துவிடும்!

கவி இல்லை என்றாலும் காலத்தின் கதையிதுவாம்
கடி கொஞ்சம் சுவைத்தாலே கரும்பினிலும் இனித்திடுமாம்
சொன்ன கதைகள் எதுவும் இங்கே கட்டுக்கதைகள் இல்லையடி
கட்டபொம்மன் மீண்டும் பிறந்து வாழ்ந்து ஆண்ட ஊரு அடி

அந்த ஊரை விட்டு வந்து இந்த ஊரில் இருந்தபடி
பொங்கல் வைத்து உண்டபோது வயிறு செரிக்குதில்லையடி
வேலைவிட்டு வீடு வந்து மாலை நேரம் பொங்கும்வேளை
ஆதவனும் அந்திசாய்ந்து அடுத்த நாடு போயினனே

ஏலமது போடாத பொங்கலிலே, கமகமவும் போனதுவே
போட நீயும் மறந்தனையோ, கேட்டாலே கடுகடுப்பார் வீட்டினிலே
பொங்கல் வேண்டாம் ஜக்கி எண்டு பேர்கர் நாடி போற – எங்க
பிள்ளைகளை பார்த்தாலே பித்து தலைக்கேறுதடி

இந்தநிலை வந்தமைக்கு என்னை நொந்து கொள்ளுவனோ?
அந்தநிலை பார்க்க நாளை மண்ணில் போயி செருவனோ?
வெந்த மனம் ஆறி அடங்கும் வேளையினி வாய்த்திடுமோ? - அன்றேல்
இந்த வாழ்வு தீரும் வரை வேலிகள் தொலைத்த படலைதானோ?

அன்றேல் இந்த வாழ்வு தீரும் வரை இவன்
வேலிகள் தொலைத்த படலைதானோ?

&&&&&&&&&

ஊரை பற்றி எழுதலாம் என்றவுடன் உடனேயே மனதில் வந்து நின்றது வட்டக்கச்சி. நீண்ட காலமாக கொல்லைப்புறத்து காதலிகள் எழுதோணும் எண்டு நினைச்சு இன்னும் எழுதினபாடில்லை. அந்த ஊரில் பொங்கல் என்றால் அது திருவிழா தான். அதை சொல்ல இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த ஆஸ்திரேலிய தமிழாய்வு மன்றத்தினருக்கு நன்றி.. வீடியோ லிங்க் இங்கே. இதே அரங்கில் கேதா “இருளிடை ஏறிய இறையே” என்று நிறைய சிக்ஸர்கள் அடித்தான். அவன் இன்னிங்ஸ்  இங்கே!

முன்னைய கவிதைகள்.

மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக