Skip to main content

ஐம்பதிலும் ஆசை வரும்!

 

இன்றைக்கு ஐம்பதாவது பதிவு!

thanks3 (1)

அரங்கேற்ற வேளையில் விளையாட்டாய் ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் போது செய்த ஒரே ஒரு தீர்மானம், இனி மேல் மற்றவர்களுக்காக, நான் ஏங்கும் விஷயங்களில் சமரசம் செய்வதில்லை என்பது. திகட்ட திகட்ட வாசிக்கவேண்டும் என்பது அதில் ஒன்று. எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது இன்னொன்று. சிங்கபூரின் மெஷின் வாழ்க்கை அதற்கு காரணம் என்று நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டேன். இனி சொல்வதாயில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் இருந்து எழுதிய பதிவு இங்கே.

 

எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்.

 

ஆரம்பித்த உடனேயே எழுதிய அக்கா சிறுகதை, கௌரி போட்ட கமெண்ட் உடன் செல்ப் பிக்கப் ஆகியது.  என் கதையில் அரசியல் பார்வைகளை நான் திணிப்பதில்லை. அந்த கதைக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை எழுதுவேன். வாழ்க்கையில் எமக்கு பிடித்ததும் பிடிக்காததும் நடக்கிறது இல்லையா? என் கதையிலும் அது நடக்கும். எனக்கும் எழுதும்போது பிடிக்காது தான். பிடித்ததை மட்டும் எழுதினால், அது பச்சோந்திதனம். யோக்கியனாக எழுத்தில் ஆவது இருந்து பார்ப்போமே!

 

சவால் சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது ஒரு அங்கீகாரம் தான். வெத்துக்கு எழுதும் விசரன் என்று எண்ணியவர்களை கூட atleast அடிக்கடி என்னை வாசிக்கவைத்த அங்கீகாரம். அப்புறம் “உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம்”,  எங்கு இருந்து இப்படி ஒரு கதை வந்தது என்று இன்றைக்கும் வியக்கிறேன். காலை ரயிலில் போகும் போது தோன்றிய எண்ணம், அன்றிரவே சிறுகதையானது. ஒரு நண்பன், பொதுவாக விமர்சனமே செய்வதில்லை. Touched my heart என்று தனி மடலே எழுதி இருந்தான். வாசகர்கள் நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் வாசகர்கள் ஆனார்கள்.  தொடர்ந்து ஊக்கம் தருகிறார்கள். மன்மதகுஞ்சு என்ன அலுவல் இருந்தாலும் கமெண்ட் போட தயங்க மாட்டான். ஒரு சின்ன கமெண்ட் தான். எத்தனை சந்தோசம் அது கிடைக்கும்போது!  சலங்கை ஒலியில் அந்த பாலகிருஷ்ணா, இறுதிக்காட்சியில் கூட்டம் கைதட்டும் போது ஏங்குவாரே! ஞாபகம் இருக்கறதா? பிடித்தால் கமெண்ட் போடுங்கள்!

 

எனக்கு மிகப்பிடித்த பதிவுகள் என்றால் அது குட்டியும் சுந்தரகாண்டமும் தான். அதில் குட்டி அதிகம் வாசிக்கப்பட்டது. குட்டியின் அண்ணா கதைத்தபோது குரல் ஆங்காங்கே குழறியது. ஏண்டா எழுதினோம் என்று இருந்தது. சுந்தரகாண்டம் நான் நினைத்த அளவு வாசிக்கப்படாதது என் துர்பாக்கியமே. புனைவு எழுத்துகளை நிஜத்தில் நடந்த சம்பவங்களுடன் இணைக்கும் போது அதற்கு வரவேற்பு இருக்கிறது. ஆனால் அப்படியே எழுதுவது புனைவு ஆகாது. பார்ப்போம்.

 

பதிவு எழுதிய அனுபவங்களை பற்றி இன்னும் நிறைய எழுதலாம். வியாழ மாற்றம் தொடர் அநியாயத்த்துக்கு அதிக ஹிட்ஸ் வாங்குகிறது. அதில் வரும் கலாய்த்தல் பலருக்கு பிடிக்கும் போல. பிட்டு படம் தான் பிடிக்கும் என்றால் பிட்டு பதிவு கூடவா பாஸ்? ம்ஹூம். கொல்லைப்புறத்து காதலிகள் தொடருக்கு என்றே தனி வாசகர்கள் இருக்கிறார்கள். என் பிரச்சனை, காதலிகளை எழுத்தில் கொண்டுவருவது தான். சும்மா just like that ஆக எழுத முடியாது தானே. குட்டியை எழுதும்போது கூட, அந்த play தேவையாய் இருந்தது. சுஜாதாவில் அது கம்மி. பதிவும் அத்தனை பேரை கவரவில்லை.

 

ஊ உ ம ப த ப மா, இசை பதிவு எதிர்பார்க்காத அளவுக்கு flop. எப்படி ரசித்து எழுதியும் ரசிக்கவே மாட்டேன்கிறார்கள். நம்ம ரசனை அத்தனை மட்டம் என்று லேட்டாக தான் புரிகிறது. மட்டம் என்றாலும் என் ரசனை என்னது தானே! அப்பா தான் இப்படியெல்லாமா நீ ரசிப்பாய்? என்று ஆச்சரியப்பட்டார். நான் மாய்ந்து மாய்ந்து காதலிப்பவன். அதனால் தானோ என்னவோ அந்த தொடர் பெரும் flop ஆக போய்விட்டது போலும்!

 

எதை எழுதுவது என்பது தான் ஆரம்பத்தில் இருந்த பிரச்சனை. பக்கம் சார்ந்த முன்முடிபுகள் எழுத்தில் வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். ஓரளவுக்கு இன்னமும் கடைப்பிடிக்கிறேன். நண்பன் ஒருவர் சொன்ன மாதிரி, நீங்கள் யார் என்பது உங்கள் எழுத்தில் புலப்படவில்லை. அதனால் தப்பாக புரிந்த்துகொள்ளப்படும் அபாயம் ஏற்படுகிறது என்று. இந்த புரிதலின்மை மேம்போக்கு வாசகர்களிடம் இருந்தே வருகிறது. ஆனால் சொல்லும் வார்த்தையும், எழுதும் எழுத்தும் பிரிந்த பின் எனக்கு சொந்தமில்லை. நான் சொல்வது ஒருவருக்கு புரியாமல் போவதில் என் பங்கு தான் அதிகம் என்பதால் அந்த தோல்வியில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்று தெரியவில்லை. தப்பாகும் போது குட்டுங்கள். ஆனால் தலையுள் ஆணி அறைந்து விடாதீர்கள். ஏற்கனவே அறைந்த ஆணிகள் புடுங்க முடியாமல் கிடக்கிறது!

 

எழுத்தில் அதிகப்பிரசிங்கிதனம், சிலவேளைகளில் ஜெயமோகன் தனம் இருக்கிறதோ என்ற விமர்சனம் நானே எனக்கு கொடுத்து கொள்கிறேன். ஆபத்தான எழுத்து நடை இது. இதை விட்டு விலகவேண்டும். யசோ அக்கா ஒரு பத்திரிகைக்கு ஆக்கம் ஒன்று எழுதித்தருமாறு கேட்டபோது உடனடியாகவே மறுத்து வேண்டுமானால் சிறுகதை தருகிறேன் என்றேன்.  என் பத்தி எழுத்துக்களில் ஒரு வித அப்படாக்கர் தனம் இருக்கிறது. நான் பெரிய “இவன்” போல எழுதுகிறேனோ? அது நான் இல்லை. எனக்கு சிவனே என்று எழுதுவது தான் safe. சிக்கலுக்குள் மாட்டி சின்னாபின்னமாக வேண்டாமென்று தோன்றுகிறது.

 

தமிழில் எழுத ஆரம்பித்ததும் இரண்டு ஆபத்துகள் வந்தது. முதலாவது சுற்றம் மற்றும் நண்பர் வட்டாரங்களில் வெட்டியாக இருக்கிறேன் என்ற விமர்சனம். எனக்கெல்லாம் இப்போது ரொம்ப டைம் கிடைக்கிறதாம்! என்னத்த சொல்ல? அவர்களுக்கு இருக்கும் அதே இருபத்து நாலு மணிகள் தான் எனக்கும். ஒன்பது தொடக்கம் பத்து மணி நேர வேலை. நேரம் இல்லாமல் போகும்போது நான் கை வைப்பது நித்திரையில் தான். எட்டு மணி நேர தூக்கம் இப்போது எல்லாம் ஐந்தாக சுருங்கிவிட்டது. அதே இருபத்து நான்கு மணிநேரம் தான். முன்னர் எல்லாம் அதிகம் படம் பார்ப்பேன். இப்போதெல்லாம் கடைசியாக நான் பார்த்த இங்கிலீஷ் படம் ஷோலே என்று சொல்லும் ரேஞ்சுக்கு போயாச்சு!

 

அடுத்தது வாசிப்பு. வாழ்க்கையின் கனவு என் வீட்டில் அழகிய ஒரு books collection, வீட்டின் முன் அறையிலேயே இருக்கவேண்டும்.  ஒரு வீட்டில் காலடி வைத்தவுடனேயே அந்த வீட்டுக்காரனின் வாழ்க்கை தெரியவேண்டும் என்று சொல்வார்களாம். என் வீட்டு முன்னறையை எட்டிப்பார்க்கிறேன். வெற்றிடம் தான். என் வாழ்க்கையை போல! அதை புத்தகங்களால் நிரப்பப்போகிறேன். காலடி வைப்பவனுக்கு “The Namesake” உம் “Terry Prachchet” உம் சுஜாதாவும் கண்களில் தெரியட்டும். அந்த அறையின் நடுவே Ottoman இல் கால் மேல் கால் வைத்து “Small Gods” வாசித்து முடிக்கவேண்டும். வெற்றிடம் குட்டி குட்டி கடவுள்களால் நிரம்பி வழியவேண்டும். டேய் ஜேகே, மீண்டும் அதிகப்பிரசிங்கிதனம், அடக்கி வாசி!

 

எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் அந்த அக்கா என் வாழ்க்கையில் வந்தார். அப்போது அவர் வரலாற்று துறையில் விரிவுரையாளர். நான் சிறுவன். எனக்கு சுஜாதா, ரோஜா முதல் செஸ் செல்வநாயகம் வரை அறிமுகப்படுத்தியவர். வன்னி இடம்பெயர்வோடு சிதறிவிட்டோம். அவர் இல்லாவிடில் வாசிப்பிலும் இலக்கியத்திலும் இத்தனை ஈடுபாடு வந்திருக்குமா? நான் ரகுமான் இல்லை தான். ஆனால் அந்த அக்கா தான் எனக்கு மணிரத்னம்.  அவருக்கு அது தெரியாது. பதினாறு வருஷங்களுக்கு பிறகு இந்த எழுத்து அவரை கண்டு பிடித்துக்கொடுத்தது. வாரம் தவறாமல் பேசுவார். எங்கு குறை, நான் இதை எங்கே கொண்டு செல்லவேண்டும். எல்லாமே சொல்லுவார். எனக்கு ஒரு கை கிடைத்தது போல இருக்கிறது. இப்போது புரிகிறதா? இது தான் நான் ஐம்பது பதிவுகளில் சம்பாதித்தது. தொலைந்துபோன அர்த்தமுள்ள உறவுகள்! சிலரை சந்திக்கும்போது அடடா இனி நாம் தனியே இல்லை என்று எண்ண தோன்றும் இல்லையா? இந்த மூன்று மாதங்களில் நான் பலரை சந்தித்துவிட்டேன். இனியும் என் முன்னறை வெற்றிடமாக இருப்பது அழகில்லை.

 

சந்தோஷம் தாங்கமுடியவில்லை. நான் சாகும் போது லங்காசிறியில் வெறும் நாலு வரி மரண அறிவித்தலோடு காணாமல் போய்விடுவேனோ என்ற ஒரு பயம் இனி இல்லை! என் பெற்றோர் சகோதரர்களுடன் சேர்ந்து இரண்டு சொட்டு கண்ணீர் விடவேனும் நான்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அது போதும். மேலும் மேலும் எழுதி அவர்கள் எனக்காக அழுவார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்! கவலைப்படாதீர்கள். நிச்சயம் அழவைப்பேன்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக