கலட்டி

Mar 14, 2013
ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.
40039_420717206414_3583362_n

பொன்னப்பன் துலாவின் மீது
போய் வந்து கொண்டிருந்தான்;
சின்னையன் இறைத்தான்; தண்ணீர்
சென்றோடி உருகும் வெள்ளி
என்னப் பாய்ந்தது வாழைக்குள்.
“ஏனிந்த கஞ்சிக் காரி
இன்னும் வந்திறங்க வில்லை?”
என்று பொன்னப்பன் பார்த்தான்.


இரண்டாவது வரியிலேயே நான் குழம்பிவிட்டேன். துலாவில் மேல் என்னத்துக்கு பொன்னப்பன் நிற்கவேண்டும்? அம்மாவிடம் கேட்க சொன்னார். “அந்தக்காலத்தில கன நேரம் தண்ணி இறைப்பு எண்டதால அப்படித்தான்” என்று தொடர்ந்து விளக்கினார். துலாவில் ஒருவர் ஏறி, நடுக்கால் பக்கம் ஒரு கயிற்றை கட்டி பிடித்துக்கொண்டு வாளி உள்ளே போகும்போது முன்னே போய் அழுத்துவதும், அள்ளும்போது பின்னே வந்து கனம் கொடுப்பதுமாக ஓடித்திரிவாராம். அதுதான் “பொன்னப்பன் துலாவின் மீது போய் வந்து கொண்டிருந்தான்”. கீழே நின்று சின்னையன் வாளியை தூக்கி வாய்க்காலில் இறைக்கிறானாம். வெள்ளி போல வாழைக்கு தண்ணி பாய, மேலே நின்று இறைப்பவனுக்கு பசி. எங்கேடா இவளை காணேல்ல என்று தொடருகிறான்.
“உச்சிக்கு வெயில் ஏறிற்றே”
உன்னையும் மறந்தாளோ, உன்
மச்சாள்? இம்மினை கேடேனோ?
மாற்றுகின்றாளோ சேலை
அச்சிறு கள்ளி?’ என்றே
அவிழ்க்காமல் நினைத்தான் மாமன்;
மிச்சத்துக் கிவன் சிரித்தான்;
மீண்டும் அவ் வழியைப் பார்த்தான்.
என்னவாம்? பொன்னப்பன் மகள் தான் தோட்டத்துக்கு கஞ்சி கொண்டு வருபவள். இன்னும் வரவில்லை. வெயில் ஏறிவிட்டது. பொன்னப்பன் சின்னையனை சீண்டுகிறார். “என்னைத்தான் மறந்தாள், சரி, மச்சான் உன்னையுமா மறப்பாள்? என்று முதல் கேள்வி. “இல்லை இல்லை, உன்னை பார்க்க தான் இவ்வளவு நேரம் மினக்கெட்டு சேலை உடுத்துகிறாளோ?” என்று அடுத்த நக்கல். மாமன் மருமகன் உறவு, ஒரு துலாவில் நீர் இறைப்பு. மருமகனை கீழே விட்டுவிட்டு தான் துலா ஏறி மிதிக்கும் மாமன் காரன். எட்டு வரியில யாழ்ப்பாணத்து வாழ்க்கையை பட்டென்று எழுத மஹாகவியை விட்டால் யாரால் முடியும்?

ஒரு சனிக்கிழமை, வேலையில்லை, கொஞ்சம் நித்திரை கொள்ளலாம் என்றால் தூக்கம் வரவில்லை. ஏழு மணிக்கே முழிப்பும் வெளிச்சமும் வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தவாறே Facebook திறந்தால் சக்திவேல் அண்ணே இந்த ஸ்டேடஸ் போட்டிருந்தார்.
“இன்றைக்கு ஒரு சம்பாஷணையில் 'கலட்டி' என்று தமிழ் வார்த்தையைப் பாவித்துவிட்டேன். அப்போது இருந்த யாருக்கும் (எல்லோருக்கும் யாழ்ப்பாணந்தான் பூர்வீகம்) அதன் அர்த்தம் தெரியவில்லை . தனித்து விடப்பட்டேன். நிற்க "கலட்டி" என்ற சொlல் உங்கள் ஊர் வழக்கில் உண்டா? இந்த மாதிரிச் சொற்களை (அழிந்துபோகாமற்) காக்க, கி.ரா. மாதிரி இலக்கியவாதி எங்களுக்குக் தேவைப்படுகிறார்.”
வாசித்துக்கொண்டிருக்கும்போது கொஞ்சம் டென்ஷனாகிவிட்டேன். இதற்கெதுக்கு கீ.ரா? எங்கட ஆள் “கலட்டி” என்று தனியாக காவியமே வில்லுப்பாட்டாக எழுதியிருக்கிறார்.1966ம் ஆண்டு. அதிலே கலட்டி என்ற நிலத்தை விவரித்தே மூன்று பாடல்கள் இருக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று.

tamilnadu079காரை சூரை நாக தாளி
கள்ளி முள்ளி ஈச்சை மட்டும்
வேர் விடுத்து வளர லாகும்
வெட்டை; அந்த வெளியில் எங்கு
பாரை கொண்டு தொட்ட போதும்.
படுவ தொன்று-பாறை என்று!
யாரை அந்த நிலம் அழைக்கும்?
அன்பு கெட்ட மனம் நிகர்க்கும்.

அறுபதுகளில் உலகிலே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த பொதுவுடைமை தத்துவம் தான் கலட்டியின் ஆதாரமான கரு. உயர்சாதி செல்லையன், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்மணியாளை கைப்பிடிப்பது. ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக சேவைகள் செய்வது. முதலாளிகள், அரசாங்க ஊழியர்களுக்கெதிராக குரல் எடுப்பது, கலட்டி நிலத்தை பண்படுத்தி கமம் செய்வது, ஏழைகளுக்கு பிரித்துக்கொடுப்பது என்று எல்லாமே பாடல்கள்.கலட்டியின் முடிவு சந்தோஷ முடிவு. அதை பிறகு அவர் கண்மணியாள் காதை என்று மாற்றினார். பலதை வெட்டி எறிந்தார். முடிவை கவலையாக மாற்றினார். செல்லையன் இறந்துபோக கண்மணியாள் அவன் மேல் புரண்டு அரற்ற, நில முதலாளிகள் அவளை அடைய துரத்துவதாக. சோக முடிவு யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அவர் நினைத்திருக்கலாம்.

images (2)கலட்டி/கண்மணியாள் காதல் கவிதை தொகுப்பு சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையே சொல்லுகிறது. இதையே செங்கை ஆழியான் காட்டாறு என்று கதையாக சொல்லியிருப்பார். புதுவை கூட கொம்யூனிசம் பேச தவறவில்லை. அது ஒரு தலைமுறை. தமிழகத்தில் திராவிட இயக்க எழுச்சி, ஒருவித எழுத்து புரட்ச்சிக்குள் புகுந்து, மரபுடைத்து உரைநடையாக போய்க்கொண்டிருந்த காலத்தில் ஈழத்தில் மகாஹவி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் சத்தம்போடாமல் அதே புரட்சியை மரபுக்குள் நின்று மீறாமல் செய்துகொண்டிருந்தார்கள். சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் போன்ற கவிஞர்கள் அதை அடுத்த பத்தாண்டுக்கு தொடர்ந்தார்கள். பின்னர் ஈழப்போராட்டம் உருவாகி, எங்கள் கவிதையும் மரபை தாண்டி, உரைநடைக்கும், சந்தத்துக்கும் அகப்பட்டுக்கொண்டது காலத்தின் தேவை என்றாலும், மரபு எம்மத்தியில் அருகிவிட்டது கவலையே.

ஒரு காதல் காட்சி. தலைவர் இதிலே விண்ணர்! கலட்டி குடிசை தொகுதி. அங்கே கணவனும் மனைவியும் காதலோ காமமோ ஒன்றுமே “பண்ண” முடியாது. எங்கேயும் குடிசை. குடிசைக்குள்ளும் குஞ்சு குருமான் சிலது கிடக்கும். கலியாணமான பம்பாய் படத்து அரவிந்த்சாமி, மனீஷா நிலைமை. செல்லைய்யன் எட்ட நின்று குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கண்மணியாளை பார்த்து ஏங்குகிறான். “தண்ணியோ கிணற்றினில!, தாகமோ, தனிமையிடை போய்த் துயின்றால்,  போகுமோ? ” என்று புலம்புகிறான். உள்ளே தாழ்ப்பாள் போட்டு தூங்குவது போல நடிக்கும் கண்மணியாளுக்கு கேட்கிறது. அப்புறம் கவிதையை கேளுங்கள்.
Large_1835[1]

சேலை ஒன்று சரசரப் புற்றது.
திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன.
வேலியோ கறையான் படர்ந்துள்ளது;
மெல்லவே அந்த மண் உதிர்வுற்றது.
வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ?
வைத்த காலிற் சளசளப் புற்றது.
மூளை ஒன்றினில் ஓலைக் கிடுகினை
முன் விரிக்க, அது நெரிவுற்றது.

மேலோட்டமாக பார்த்தால் வெளியில் தோட்டத்தில் தான் வேலை நடந்திருக்கும் போல இருக்கும். மஹாகவியின் குறும்பை யோசித்தால், அட குடிசைக்குள்ளே கூட இத்தனையும் நடந்திருக்கும் போலவே தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்? 

Contact form