Skip to main content

And the mountains echoed


brother-and-sister-gladiola-sotomayor
நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா?
கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

 சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களை கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்தது கமம்; பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும் தான் செய்வார்கள். அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைக்கவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும்... பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்கு போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளை வெள்ளம் பயிரை மூடிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. வாழ்க்கை பஞ்சப்பாடு தான். ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை அரசனுக்கு கொடுக்கும் திறை தவிர்த்து மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள் இந்த விருத்தேஸ்வர தேசத்து மக்கள்.

இந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு துன்பமும் இருக்கிறது. அங்கிருந்து எட்டு மலை தாண்டி ஒரு தொங்கு தோட்டத்து அரண்மனையில் பூதம் ஒன்று வசித்து வந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்கு வந்துவிடும். வந்து ஏதாவது ஒரு வீட்டுக்குள் சட்டென்று புகுந்து குடும்பத்தில் “ஒரு பிள்ளையை தந்துவிடு, போகிறேன்” என்று சொல்லும். “கொடுக்கமாட்டேன் போ” என்று பூதத்துடன் சண்டை பிடித்தால், பூதம் வீட்டில் இருக்கும் எல்லா பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போய்விடும்.  ஒரு பிள்ளையை தா என்றால் எந்த பிள்ளையை கொடுப்பது. பெற்றோர்கள் ஒருவரையும் கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடித்து அழுவார்கள். பூதம் எல்லா பிள்ளைகளையும் தூக்கிப்போய்விடும்.

1325139455_1-2

விருத்தேஸ்வரம் தேசத்தின் கிழக்கு கோடியில் இருக்கு தாயாற்றுக்கு அருகே பல்லவபுரம் என்ற சிற்றூர் இருக்கிறது.  கந்தனும் அவன் மனைவி காமாட்சியும், அவர்களின் ஐந்து பிள்ளைகளும் அங்கே தான் வசித்துவந்தார்கள். மற்றவர்களை போலவே கமம் செய்து பிழைத்து வந்தார்கள். ஐந்துமே சின்னதுகள். மூத்தவனுக்கு எட்டு வயது. ஐந்தாவது கடைக்குட்டி சாரதாதேவிக்கு மார்கழி கழிந்தான் ரெண்டு வயசு. சாரதாதேவி வெறும் குழந்தை அல்ல. ஒரு தேவதை. தூளியிலே அவள் அழும்போது கேட்கவேண்டுமே. அவள் அழுகை தேனாக காதிலே வந்துவிழும். அந்த அழுகை இசையில் மயங்கி காமாட்சி அவளுக்கு பால் ஊட்ட கூட மறந்துவிடுவாளாம். அண்ணன்மார்களுக்கும் சாரதாதேவி என்றால் உயிர். குட்டி குட்டி என்று தூளி ஒரு கணம் ஓய்ந்திருக்க விடமாட்டார்கள். எங்கிருந்தோ இருந்தெல்லாம் மயிலிறகு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். கந்தனோ சாரதாதேவி ஒரு சின்ன அணுக்கம் காட்டினாலேயே எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான். செல்லக்குட்டிக்கு கொஞ்சும்போது குத்தக்கூடாது என்று மீசை வழித்து சவரம் செய்திருந்தான். பாசம் அந்த வீட்டில் தாயாற்று நீர்மட்டத்தை மீறி பாய்ந்துகொண்டிருந்தது.

கந்தன் வீட்டுக்கு ஒருநாள் அந்த சனியன் பிடிச்ச பூதம் வந்துவிட்டது.

ஒரு பிள்ளையை பூதத்துக்கு விடிவதற்குள் தாரை வார்க்கவேண்டும். இல்லாவிட்டால் பூதம் அத்தனை பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு போய்விடும். எல்லா பிள்ளைகளுமே சிறுவர்கள். யாரை என்று கொடுப்பது? கந்தன் இரவு முழுதும் தூக்கம் வராமல் தவித்தான். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தாயம் விளையாடுவோமே சோகி, அதில் ஐந்தை எடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஒரு கிண்ணிக்குள் போட்டான். கிண்ணியை கொண்டுபோய் சாரதாதேவியிடம் கொடுத்து “ஒண்டை எடு கண்ணம்மா” என்று கண் கலங்கிக்கொண்டே சொன்னான். சாரதாதேவி “அப்பா” என்று மழலை வழிய சொல்லிக்கொண்டே ஒரு சோகியை எடுத்தாள். அந்த சோகியில் இருந்த பெயரை பார்த்தால்
“சாரதாதேவி”..
பூதம் அவளை பிடித்துக்கொண்டு போய்விட்டது. கந்தன் அன்றைக்கு பைத்தியமானவன் தான். “என்ன ஒரு அப்பன் நான், என் பிள்ளையை பூதம் பிடித்துக்கொண்டு போக பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேனே” என்ற குற்ற உணர்வு. நாட்கள் கழிந்தன. கமத்துக்கு போகிறான் இல்லை. வயல் முழுதும் களை மெத்திப்போய் கிடக்கிறது. இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே கிடக்கிறான். ஊர் முழுக்க பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள்.  கந்தன் இதை ஒன்றுமே கவனத்தில் எடுக்கவில்லை.  தினமும் சாவு விழும் வீடு போல ஆகிவிட்டது கந்தனின் வீடு.

ஒருநாள் அதிகாலையில் திடீரென்று கந்தன் பூதத்தை தேடி புறப்பட்டு விட்டான். பூதத்தை கொன்று சாரதாதேவியை மீட்டுவருகிறேன் என்று சூழுரைத்தான். வழியில் கண்டவர்கள் எல்லாம் இவனை ஏளனம் செய்தார்கள். இரண்டு மலைகள் தாண்டும் முன்னரேயே காலணி தேய்ந்து அறுந்துவிட்டது. நான்கு மலைகள் தாண்டும்போது உடுத்த உடை கந்தலாகி உக்கி உதிர்ந்துவிட்டது. இவன் நடந்தான். நடந்து இறுதியில் பூதம் இருக்கும் தொங்குதோட்டத்துக்கு போய்விட்டான். இப்போது தொங்குதோட்டத்தில் ஏறவேண்டும். எப்படி ஏறுவது? கள்ளப்பூதம் தோட்டத்தை சந்திரனில் கயிறு கட்டி தொங்கவிட்டிருந்தது.

கந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  கத்தினான்.
“சனியன் பிடிச்ச பூதமே .. நீ உண்மையான வீரனாக இருந்தால் வந்து என்னோடு மோது பார்ப்போம்.. ”
இவன் சத்தம் கேட்டு பூதம் வெளியே வந்தது. இவ்வளவு காலத்தில் ஒரு அப்பன் துணிந்து தன்னை தேடி வந்திருக்கிறானே என்று பூதத்துக்கு ஆச்சர்யம்.
“உன்னோடு எதுக்கு நான் சண்டை பிடிக்க வேணும்?”
“நீ என் கடைக்குட்டி தேவதையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். அதற்காக உன்னை கொல்லப்போகிறேன்.”
“ஹ ஹா ஹ .. நான் இப்படி நிறைய பேரின் தேவதைகளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேனே”
“தெரியும் .. அவர்கள் எல்லோர் சார்பிலும் நான் உன்னை கொல்லப்போகிறேன்”
பூதத்துக்கு கந்தனின் துணிச்சலும் ஓர்மமும் பிடித்துவிட்டது. ஒரு நூலேணியை கீழே இறக்கியது. கந்தன் வேக வேகமாக ஆத்திரத்தோடு அந்த ஏணியில் ஏறினான். ஏறி தொங்குதோட்டத்தில் காலடி வைத்தகணமே சுற்றும் முற்றும் பார்க்காமல் பூதத்தை அடிக்க போனார்.

“பொறு பொறு .. அங்கே பார்” என்றது பூதம். கந்தன் திரும்பிப்பார்த்தான். அங்கே சாரதா தேவி. நிஜமாகவே தேவதை போல, அவளை ஒத்த குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். எந்நாளும் காணாத சந்தோஷ சிரிப்புடன் இருந்தாள். மற்ற ஊர்களில் பிடிக்கப்பட்ட குழந்தைகளும் அப்படியே. அவர்களுக்கு அங்கே எல்லாமே இருந்தது. உணவு, உடை, இருக்க இடம், கல்வி .. எல்லாவற்றுக்கும் மேலே பாசம். கிடைத்தது.
“யோசிச்சு பார், இந்த குழந்தையை நீ திரும்ப கூட்டிக்கொண்டு போனால், மீண்டும் இங்கே திரும்பிவர முடியாது… இப்படி உன்னால் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா .. சொல்லு? இப்படி ஒரு வாழ்க்கையை அந்த குழந்தைக்கு உன்னாலே கொடுக்கமுடியுமா சொல்லு?”
கந்தன் யோசித்தான்.
“ஆனா என்னால அவளை மறக்கவே முடியாதே .. அவள் என் குழந்தை ஆயிற்றே .. அவள் இல்லாம ஒவ்வொரு நாளும் உயிர் போகுதே .. ”
பூதம் சிரித்தது.
“பார்த்தியா பார்த்தியா .. அவளுடைய சந்தோசமான வாழ்க்கை உனக்கு முக்கியமா? இல்லை அவள் உன்னோடு இருக்கிறபோது கிடைக்கும் உன்  சந்தோசம் உனக்கு முக்கியமா?”
பூதம் கேட்டுவிட்டு கந்தன் முன்னே ஒரு மணல் கடிகாரத்தை வைத்தது. மேல் பாதி மணல் கீழ் பாதிக்குள் கொட்டி முடியும் முன்னர் நீ முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. கந்தன் தலையில் கைவைத்து யோசிக்க தொடங்கினான்.

மணல் கடிகாரத்தில் மண் சொட்டு சொட்டாக கீழ்ப்பாதிக்கு கொட்ட ஆரம்பித்தது.

And the mountains echoed

ஒரு நாவல், அதுவும் அரசியல் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு இயல்பாக, இப்பிடித்தான் வாழ்ந்தோம், இப்பிடித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, என் அக்காவின் பிள்ளைகள் ஆங்கிலத்திலேனும் வாசிக்க ஒன்றை எழுதவேண்டாமா? என்ற கேள்வியை கேட்கவைத்தவர் காலித் கூசைன். அவரும் லாகிரியும் இல்லை என்றால் இன்றைக்கு படலை இல்லை …ஏன் நானே இல்லை. சக்திவேல் அண்ணா வீட்டுக்கு முதன்முதல் போனபோது கூட கொடுத்தது The Kite Runner தான். எனக்கு அதன் மதிப்பும் மரியாதையும் அலாதியானது. இப்படி ஒன்றை எழுதினால் அது சும்மா பிச்சி உதறும் என்று நான் ஒரு ஸ்கெட்ச் போட்டால், தலைவர் அதில் வீடு கட்டி குடிபூரலே பண்ணுவார். அப்பிடி ஒரு உறவு அவர் புத்தகங்களுக்கும் எனக்கும் இருக்கும்.

8347051_0_9999_med_v1_m56577569853216552அப்படி அவர் கட்டின வீடு தான் “And the mountains echoed”

சென்ற மாதம் தான் வெளியான புத்தகம். ஆப்கான் வாழ்க்கையோடு ஒன்றிய கதைக்களம். ஐம்பதுகளில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு தந்தை தனது நான்கு வயது மகளையும் அவள் அண்ணனையும் கூட்டிக்கொண்டு கால்நடையாக காபுலுக்கு போகிறார். போகும் வழியில் ஒரு பூதக்கதை சொல்லுகிறார். காபுலில் மகளை ஒரு பணக்கார குடும்பத்துக்கு தத்துக்கொடுக்கிறார். பாசமுள்ள அண்ணனும் தங்கையும் இப்படித்தான் பிரிகிறார்கள். தங்கை பேர் பாரி. அண்ணன் பேர் அப்துல்லா.

பாரி அந்த வீட்டில் வளர்ந்து, தத்தெடுத்த தாய் அவளை பிரான்ஸ் கூட்டிப்போய்விட, பின்னர் பிரான்சிலேயே வளர்கிறாள். அவள் வாழ்க்கை. தாய் பிரபல கவிஞர். குடிப்பழக்கத்தில் தன்னை தொலைத்தவள். பாரி கணித்ததில் மிளிர்ந்து பேராசிரியர் ஆகிறாள். அவளுக்கு நண்பர்கள். குடும்பம். பிள்ளைகள். பிள்ளைகளுக்கு பிள்ளைகள். எத்தனை வாழ்க்கைகள். ம்ஹூம்.

அப்துல்லா கஷ்டப்பட்டு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து அமெரிக்கா போய் அங்கே ஒரு ரெஸ்டோரன்ட் வைத்து செட்டில் ஆகிறான். காபுலில் பாரி இருந்த வீட்டில் இருக்கும் நபியுடைய வாழ்க்கை இன்னொன்று. நாட்டுக்கு வந்த NGO சேவையாளரான மார்க்கஸின் வாழ்க்கை இன்னொன்று. மார்க்கஸ் கிரீசை சேர்ந்தவர். அவருக்கு ஒரு அம்மா. ஒரு உடன் பிறவா சகோதரி.

hosseini-khlaled404 பக்க நீண்ட நாவலை நாற்பது வரியில் எழுதிவிட முடியாது. காலித் பாத்திரங்களை செதுக்கும் முறையில் ஆச்சர்யப்படுத்துகிறார். பாரியும் அப்துல்லாவும் சந்திக்கும் இறுதி அத்தியாயம் நம்மை விசர் பிடிக்கவைக்கும். அதற்கு காரணம் உணர்ச்சிவசப்படாமல் இயல்பாக அந்த சந்திப்புகளை நிகழ்த்துவார். பாத்திரங்கள் தங்கள் அன்பை, கோபத்தை, விரக்தியை வெளிக்காட்டும் விதம் பயங்கர ஷட்டலாக இருக்கும். அழுது தொலையுங்களேன் என்று எங்கள் மனம் சொல்லும். அவர்கள் அழமாட்டார்கள். அது எங்களை அழ வைக்கும். அது தான் எழுத்தாளனின் வெற்றி. காலித்தோடு ஒரே வண்டியில் சேர்ந்து பயணித்தால் தான் நம்மால் அதை உணரமுடியும். உணர்ந்தேன். வண்டில் நிறைய பொறாமையுடன்!

இது The Kite Runner ஆ? என்றால் இல்லை. A Thousand Spelendid Suns ஆ? என்றால் இல்லை. அவை இரண்டும் ஆப்கானை சுற்றிவரும் கதைகள். இந்த நாவல் உலகெங்கும் வாழும், ஆப்கானோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்ட மக்களின் கதை. இடம்பெயர்ந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள்… ஆப்கான் என்றாலே என்ன என்று தெரியாத, அந்த மொழி தெரியாமல் பிரஞ்சும் ஆங்கிலமும் பேசும் தலைமுறையின் வாழ்க்கையை சொல்லும் கதை. இந்த வாழ்க்கையோடு தொடர்புபட்ட வெளிநாட்டு உதவி நிறுவனங்களை சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இங்கே புகுத்தியது தான் காலித்தின் சிறப்பு. நாவலின் எந்த இடத்திலும் தலிபான் பெண்களை சிரச்சேதம் செய்யவில்லை. அமெரிக்காகாரன் குண்டுபோடவில்லை. அல்லாஹு அக்பர் என்று இஸ்லாமியர்கள் தொழுதுவிட்டு குண்டுவைக்கவில்லை. அதுவல்ல ஆப்கானிஸ்தானின் ஒரே முகம். அதற்கு நிஜமான உணர்வும் உயிரும் உள்ள மக்கள் கூட்டம் இருக்கிறது. People என்று சுமந்திரன் சொல்லுவார். அது. அதை சொல்லவேண்டும். இதைவிட யதார்த்தமாக அதை சொல்லமுடியாது என்னுமளவுக்கு பாத்திரங்களால் கதை சொல்லுகிறார் காலித். 

In one word, he is a genius.

பலதரப்பட்ட பாத்திரங்கள் வருவதாலும், நீண்ட நாவல் என்பதாலும் ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பு, குழப்பங்கள், பக்கங்களை பர பரவென்று தாவுதல்கள் எல்லாம் செய்யவேண்டியிருந்தது. ஆனால் வயோதிப பாரி அப்துல்லாவின் மகள் பாரியுடன் தொடர்பு கொள்வது முதல் நாவல் சுப்பர்சோனிக் வேகம் பிடிக்கும். சில இடங்களில் குண்டு போடும். பல இடங்களில் அழுவீர்கள். பல தடவை நல்லவர்கள் ஆவீர்கள்!

பல இடங்களில் உங்கள் வாழ்க்கையின் எதிரொலிகளே  கேட்கும். அதுதான் 

And the mountains echoed.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக