காத்திருப்பேனடி!

Jun 20, 2013

 

601029_10151611428160791_677914073_nஎன்னைப்போல் நீயும்
எவர் அவர் என்று
எண்ணுவியோ?
எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் 
பண்ணுவியோ ?
புரியாத கவிதைகள்
மரியானின் பாடல்கள் 
புறநானூற்று சுளகாலே
பிடரியில் இட தாளங்கள்
இவை யாவும் செய்திடவே
இலவு காத்து இருக்கிறியோ?

இதுகாலும் எழுதாத
கதையொண்டு வச்சிருக்கன்.
இவரெதுவும் அறியாத
கவியொன்று முடிஞ்சிருக்கேன்.
நீ வந்து திருத்தவென
சொற்பிலைகள் பொருட்பிழைகள்
ஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும்
விட்டிருக்கன்.

காட்டாத படம் எல்லாம் காட்டுவோர் மத்தியிலே
காட்டிய என் படங்கள் காட்சிப்பிழை என்பாரே!
நீ வந்து, முன் நின்று முகம் காட்டி நகை செய்து
ஒளி வந்து உன்கன்ன குழிமீது குடி அமர்ந்து
இருக்கின்ற அக்கணமே எடுத்திட்டால் அப்படமே
எம்மோட படுக்கையறை சுவரில் அது சித்திரமே!

உன்னோடு சேர்ந்து
போகோணும் எண்டதால
எவர் கேட்டும் போகாத
இடமெல்லாம் வச்சிருக்கேன்.
ஆத்தாடி சொன்னாலும்

அதை நானும் கேட்காம
கூட்டாளி பயலோட
கூத்தாடி திரும்பையிலே
வாயாடி உன்னிடம் நான்
வாங்கிக்கட்டும் பொழுதுனிலே
நடிக்காத நடிப்பெல்லாம் நடிப்பது எப்படிண்டு
நண்பர்கள் சிலரிடம் - கொஞ்சம்
கிளாஸ் கூட படிச்சிருக்கேன்.

என் முகநூலில் உன் நட்பு எப்போது வந்திடுமோ?
உன் டைம்லைனில் புதைந்திருக்கும்  காலம் தான் கனிந்திடுமோ?
இல்லாத ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் அதை மாற்றையிலே
எண்ணற்ற லைக்குகளும் கொமெண்டுகளும் கிடைத்திடுமோ?

காலமெல்லாம் சேர்ந்து வாழும் கனவொன்று நனவாகும்
நினைப்பெல்லாம் நிஜத்தினிலே நடக்காது நாம் அறியும்.
காரிகை உன் முன்னரேயே காலன் என்னை எடுத்தாலோ
தினகரன் பேட்டியிலே என் பெயரை ப்ளீஸ் கெடுக்காதே!

சில்லறையாம் இவ்வளவு ஆசையெண்டு சொன்னாலும்
சொல்லாத ஆசையொண்டும் உள்ளொன்று இருக்குதடி

எத்திசையும் எத்திக்கும் ஏரிக்கரையோ எம்மலையோ
நான் ஏறிப்போனாலும் நீ கூட வரவேண்டும்
நீ ஏறும் வேளையிலே நான் பின்னே வரவேண்டும்
சறுக்கி விழும் நேரத்தில் எழுப்பிவிட நீ வேண்டும்.
எழுந்து நின்று செருமும் போது -  குட்டி
அடக்கும் குணம் அது வேண்டும்.

இந்த மாட்டர் எல்லாமே சாவகாசமாய் பேசிடவே
நீ முதலில் யார் என்று
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

நீ முதலில் யார் என்று - நான்
அறியும் கணம் வரவேண்டும்.

&&&&&&&&&&&&&&

முன்னைய கவிதைகள்.

உயிரிடை பொதிந்த ஊரே
மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!
கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(
ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

Contact Form