Skip to main content

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நாளைக்கு விடுமுறை.
34 செல்சியஸ் வெக்கை.
வெறிச்சோடிய கார் பார்க்குகள்.
வழமைக்கு மாறான கலகலப்பு.
புதியவர்கள் கூட
நத்தாருக்கு என்ன ப்ளான்?
ஷாப்பிங் முடிஞ்சுதா?
விசாரித்தார்கள்.
ரயிலில் ஒரு சிறுமி
லிண்டொர் தந்தாள்.
ஹாப்பி கிரிஸ்மஸ் என்றேன்.
மெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.
பார்ப்பதை மறைத்து குளிர் கண்ணாடிகள்.
பருவங்கள் காட்டும் உள்ளாடைகள்.
இராமன்கள் கூட இராவணராய்.
சில இராவணர் காமுற்றனர்.
பலர் நாணி நிலம் கிளைந்திட்டனர்.
எங்குமே கலகலப்பு.
எட்டு மணிக்கு வேலை வந்து
அரை மணித்தியாலம் சள்ளடித்து
பத்து மணிக்கு பியர் குடித்து
பதினொன்றுக்கு கட்டி கொஞ்சி
ஹாய் சொல்லி
மதியத்துக்கு வீடு செல்ல
அனைவருமே தயாரானோம்.
உங்கள் வீட்டில் கிறிஸ்மசுக்கு மரம் வச்சாச்சா?
என்றவளிடம்
பொங்கலுக்கு மட்டும் தான் பானை வைப்போம்
என்றேன்.
எங்களுக்கு அதுவே மங்கள விழா.
பானைக்கு மஞ்சள் இலையும்
மாட்டு சாணி, கல்லடுப்பும்
வெடியும் வாங்கும் உற்சாகம்
கிறிஸ்மஸில் வருது இல்ல.
பறவைகள் உயரபறந்தாலும்
வானம் அவைக்கு சொந்தமில்லை.
கூழக்கடாக்களுக்கு
நெடுந்தீவு சொந்தமில்லை.
ஆனாலும் சிறகு விரித்து,
பனை வடலியில் கிடப்பதை
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
கடல் கரையில் கிடக்கும் மீன்
கண்ணில் நீரை வார்க்குது.
பனி கொட்டி மூடின பயம்
உள் நெஞ்சில் உறைந்து கிடக்கு.
ஊரிலே இன்னும் பனி கொட்டுதா?
பதில் வேண்டாம்.
அங்கே கொட்டுது என்ற எண்ணம்
எனக்கு வெம்மையை தருது.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!