Skip to main content

ஈழத்து இராமாயணம்.

 

மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன்.


நன்றி கேதா

அவை வணக்கம்

கம்பநாடன் கவிதையிற் போல
கற்றோர்க்கிதயம் களியாதே - என்று
வந்திருக்கும் அனைவருக்கும்
அன்பு வணக்கங்கள்.

இன்றைக்கு இங்க வந்து
மன்றத்தில் பேச சொல்லி
பொங்கல் தந்த சடையப்ப
வள்ளலுக்கும் வணக்கங்கள்!

காலத்தை வென்று வாழும்
காவிய நாயகர்கள்
நால்வருக்கும்
தமிழில் ஒரு
ஹாய்!

பண்டார வன்னியரே.
அண்ணர் வெளியில பெரும் வீரம்.
ஆனா வீட்டில வெறும் ஜில்லா!
வன்னியன் உம்மை
முன்னேயே கண்டிருந்தால்
ஆரியனை எதுக்குவீணா
ஹீரோவா போட்டிருப்பேன்?

a01123u2கோவலனின் காதலியே.
உன் காவலனுக்கு,
கண்ணகியும் நீயே
மாதவியும் நீயே!
அப்படிப்பார்க்காதே.
கவியரங்கில் கடுஞ்சமர்
மூள்வது ஜகஜம் – அதற்காக
சமர் டைமில்
காட்டுத்தீயை
சாபம் இடாதே.

பாரதியே.
உன் கண்ணம்மா கவிதைகளை
கண்டதுமே உளம் மகிழ்ந்தேன்- ஆனாலும்
கண்ணகியை பார்த்து
சின்னஞ் சிறு கிளி எண்டால்
தென்னந்தோப்பு கிளியெல்லாம்
டென்ஷன் ஆகிப்போகாதோ?

பெரியாரே.
நித்தியானந்தருக்கு எதற்கு பெரியார் வேடம்?
கடவுள் இல்லை என்று சொன்னீராமே.
அதையே தான் நானும் சொன்னேன்.
'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;
'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;
'அன்றே' என்னின், அன்றே ஆம்;
'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
என்று அன்றே எழுதினேன் நான்.
அதுதானே பகுத்தறிவு?
அதை அறிந்திடுவார்
எவருமே பெரியாரே!

அவையடக்கம்

இனி என்கவிக்கு வருகின்றேன்.
கவிதை என்று எழுதி நானும்
கனகாலம் ஆகிப்போச்சு.
கலியாணம் முடிச்சதுல
டச்சும் கொஞ்சம் விட்டு போச்சு.
விட்டத்த பார்த்தபடி
நீங்க வேற இருப்பதால
மிச்சமா இருந்தவரியும்
சுத்தமா ஓடிப்போச்சு.

தட்டுங்களேன்.
இங்கனம் கவிதைகளும்
சமயத்தில் திறக்கப்படும்.

கம்பனென்ற காரணத்தால்
பண்டைத்தமிழ் கவிபாடி
சங்கடத்தில் நெளியவைக்கும்
எண்ணமேதும் எனக்கில்லை.

கவிதை பாடி அடுத்தவரியில்
பொருளும் கூட உரைக்கின்ற
விளங்காத வேலையை – நான்
செய்யவும் போவதில்லை.

புறநானூறில் கவி வடித்தால் – கேவலம்
முகநூலில் கூட லைக் இல்லை

எதுக்கு வீண் பொல்லாப்பு?

கூவத்திலே குதித்தபின்னர்
கோவணம் என்ன வேண்டியிருக்கு?

புரியாத தமிழிலே
இன்னமும் பறை தட்ட
நான் என்ன
வெண்முரசு எழுதும் ஜெயமோகனா?
இல்லை,
ஈழத்து இலக்கியம் படைக்கும்
இணையத்து எழுத்தாளனா?

நான் கம்பன்.
காலத்தை வென்ற காவியம் படைக்க
காலத்தில் நின்று கவிதை எழுதும்
வித்தை வரம் பெற்றவன்.

வெண்பாவும் விருத்தப்பாவும் இன்று
காலாவதியான பால்மாக்கள்.
நான்
புதுக்கவிதை எனும் மொந்தையிலே
பழங்கதையை பகரப்போகிறேன்.
இது
பாற்கடலை பருக துடிக்கும்
சுண்டெலியின் ஆசை.
பழைய மெட்டின்
ஜீவன் கெடுக்கும்
ரீமிக்ஸு ஓசை.
மொக்கை என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி நான்எழுதும்
வெறும் எழுத்து குப்பை.

முன்னுரை

mg_5421-1024x768-1பாமரனை இராமனாக
மாற்றிவிட்டா என்ன ஆகும்?
பக்கத்துவீட்டு பொண்ணு
சீதையானா என்ன ஆகும்?

லட்சத்து விந்துகளில்
ஒற்றை விந்தாய் முந்திநின்ற
ஒவ்வொரு மனிதனுமே
அவதார புருஷன் தானே..

ஆரியன் தான் இராமன் என்ற
வேலியினை உடைந்து இன்று – நம்
ஊரவனை காவியத்து
தலைவனாக ஆக்கப்போறேன்.

பால காண்டம்

தாழையடியில் வாழ்ந்துவந்த
தமிழ்வாத்தி
தசரதன்.
வாத்திக்கு வாய்த்த
பொண்டாட்டி கைகேயி.
ஒத்தையா கட்டினாலும்
எட்டு பேருக்கு ஈடு அவள்.
கத்தியே சாதிக்க தெரிந்த
வித்தை ஆற்றும் காரியவாதி.

வாத்திக்கும் இவளுக்கும்
ஆஸ்த்திக்கு ஒரு புள்ள.
அவன் பேரு இராகவன்.
நம் காப்பியத்து தலைவன்.
வில்லு வித்தை
சொல்லு வித்தை
எதுவுமே எட்டாத
விரல்வித்தை இராமன்..

விசுவா மித்திரரும்
இராகவாச் சாரியாரும்
நல்லூரு திருவிழாவுக்கு
ஒன்றாக போகிறினம்.

சிஷ்ஷை ஏதும் மாட்டும் என்று
சாமியாரின் வேண்டுதலு.
திரிஷா தான் வேணுமெண்டு
இராமனது தேடலது.

பச்சை சாத்தி இறக்கையில
பார்த்தபொண்ணு எல்லாமே
மொத்தமாக எலிமினேட்டு.
சுப்பர்பொண்ணு ஆரெண்டு
தேடிக்கொண்டு இருக்கையிலே
வைல்ட் கார்டு ரவுண்டுல
தான் வந்து சேர்ந்தா சீதா.

loveஆத்தாடி கண்ணு அவ்வளவு அழகு.
யாழ்ப்பாணம் ஒருகாலும்
காணாத பொண்ணு.
நானூறு லைக்கு வாங்கும்
பேஸ்புக்கு போட்டோ போல
அவ குடுத்த போசுக்கு
சரிஞ்சான் நம்மாளு.

கவிதை ஒன்று சேலை கட்டி
புவியில் வந்து நின்றதடி – நெஞ்சு
குழியம் வரை வந்த வரி
புரவியேறி பறந்ததடி.
பறவை நீ பாடிபறக்க
நானுனக்கு வானமடி.
வானமே நீயானால்
நிறமாவேன் நீலமடி.

கச்சான் பாக்கு பேப்பரில்
கடிதம்எழுதி சுருட்டிவைத்து
ஜனகனாரு அசந்த சமயம்
ஜானகியிடம் கொடுத்தானே.

கொடுத்தவனின் கவிதையிலே
அகமகிழ்ந்து நிமிர்கையிலே - இவள்
கண்ணோடு கண்கவ்வி
அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்.
இருவரையும் தூரநின்ற
வாத்தியாரும் நோக்கினார்.

ஆரணிய காண்டம்

ஏஎல் எக்ஸாம் நேரத்திலும்
வாலை சுருட்டி இருக்காம
மிஸ்டு கோலும் எஸ்எம்எஸ்ஸும்
வாழ்க்கையாகி போனதில,
மூணு தரம் முக்கிப்பார்த்தும் – முழுசா
மூணு எஸ்ஸு தாண்ட இல்ல.

வெட்டியா இந்தப்பெடி வீதியில திரிஞ்சுதெண்டா
கொட்டியா எண்டு சொல்லி ஆர்மி உள்ள போடுமென்று
வட்டிக்கு பணம் குடுக்கும் கூன்முதுகு பாட்டி ஒன்று
இட்டு கட்டி சொன்னதில தாய்மனிசி பயந்து போட்டு.

amayanam cartoon (4)நாட்டை விட்டு இராகவனும்
போட்டில்ஏறி போகவேண்டும்.
ஆஸியில குடியமர்ந்து
காசுநல்லா சேர்க்கவேணும்.
கேஸு வென்ற பின்னால
நாடு திரும்பி வந்து – நீயும்
காட்டாத காட்டெல்லாம்
ஊருக்கு காட்டவேணும்.

கைகேயி இராமனுக்கு கட்டளையை போட்டுவிட்டு
காணியை அடகுவச்சு காச கையில் குடுத்திட்டாள்.
அன்னையிண்ட வாக்கினையும் மறுக்காம இராகவனும்
அவதார நோக்கிற்கு துணையாக இருந்திட்டான்.

சுதியோட தாளத்தை பிரிப்பதுவும் நன்றன்று.
பிரிவாலே சுடுகின்ற பெருங்காடு இலதென்று
விதியோட சதியால மனையாளும் சொல்லிடவே.
மதியாளை கூட்டிக்கொண்டு சதிபதியும் சென்றானே.

கப்பலுக்கு கட்டவென்று பத்து லட்சம் ரொக்கமாக
மன்னரோட மகனிண்ட முகவரிடம் கொடுத்தானே.
நாளைக்கு காலையில நீர்கொழும்பு வாருமென்று
ஊமல் தம்பி சொன்னவாக்கை வேதவாக்காய் எடுத்தாரே.

அடுத்தநாள் காலையில ஐஞ்சுலாம்பு சந்தியில
பஸ்சுக்கு நிக்கையிலே எல்லாமே முடிஞ்சு போச்சு.
வெள்ளைவான் வண்டிஒண்டு வேகமாக ஓடிவந்து
விசுக்கென்று ஜானகியை இழுத்துப்போட்டு ஓடிப்போச்சு.

சுந்தர காண்டம்

இல்லாளும் ஒருகணத்தில் இல்லாம போனதில
சொல்லொன்றும் சிக்காம விக்கித்து நின்றானே.
பொல்லாத மைந்தரிடம் சிக்கிவிடும் முன்னாலே.
நல்லாளை மீட்கவழி தெரியாம திகைத்தானே.

முறைப்பாடு போடவென
போலீசிட்ட போனாலோ
மொழியேதும் புரியாம
முழிஞ்சிட்டு நிற்கோணும்.

காணாமல் போனோரின்
ஆணையத்தில் பதிஞ்சாலும்
நட்டஈட்டை வாங்கிக்கொண்டு
செத்தவீடு செஞ்சிடோணும்.

பாதையது தெரியாமல்
சேதுவான இராமனிடம்
கோதையதை கடத்தியது
கோத்தாவின் ஆள்என்று
சுட்டு விழுந்த பட்சி ஒன்று
சூசகமாய் சொல்லியது.

கோதண்டராமனுக்கு
அஞ்சும் கெட்டு
அறிவும் கெட்டு
போயிட்டுது.
கெட்ட வார்த்தையை
பட்டை நாமமாய்
கொண்டவனை
தட்டி கேட்பது எப்படி?
சாத்தானுக்கு எப்படி
வேதம் ஓதுவது?
தூது ஒன்று வேண்டுமே.
வாயு புத்திரனுக்கு யாரு தோது?

யோசித்து பார்த்ததில யூகேயின்
பிரதமரே ஆஸ்தான தூதர் என்று
மகஜர் ஒன்று கொடுத்தாச்சு.
அனுமாரும் இலங்கை போயி
பேச்சுவார்த்த செஞ்சுபார்த்தார்.
அலைவரிசை முன்னாலே
நெருப்பெடுத்து ஏசியிட்டார்.
சீதையினை இராமனிடம்
சீக்கிரமே சேக்காட்டி
சீமை எல்லாம் சேர்ந்துநின்று
சாத்திடுவோம் என்றுசொன்னார்.

ஈழத்து உறவுக்கு இன்னல் எண்டு கண்டவுடன்
ஐயாவும் அரைநாளு உண்ணாம இருந்தாரே.
வேலைநாளு இல்லாத வீக்கெண்டில் ஒருநாளு
வெளிநாட்டு தமிழர்கூடி ஆர்ப்பாட்டம் செய்தாரே.

ஈஸ்வரனின் தேவியிடம்
ஞானப்பால் குடித்திட்ட
திருஞான சம்பந்த
மூர்த்தியிடம் போய்கேட்டால்
இராசதந்திர போர் ஒன்றே
இனி எங்கள் கதிஎன்று
போகாத ஊருக்கு
நோகாம வழி சொன்னார்.

ஜானகியை எண்ணிவாடி
இராகவனும் தேய்ந்துபோனான்.
வெஞ்சிறையில் இந்த கணம்
என்னை எண்ணி வெம்புவாளோ?
பஞ்சுவிரல் பட்டுஉடல்
செந்தணலில் பொசுங்கிடுமோ?
இரக்கமற்ற கூட்டத்திண்ட
அரக்கபசிக்கு இரைஅவளோ? – இல்லை
இருந்து என்ன பயன் என்று
இறந்து பட்டு போனாளோ?

யுத்தகாண்டம்

இன்ன பிற எண்ணங்கள்
வந்து போன பிற்பாடு
சாட்சிகாரன் காலைவிட
சண்டைக்காரன் மேல் என்று
ஆட்சிக்கார ஆக்களிண்ட
பந்தங்களை பிடிச்சுபார்த்து
எந்தச்சிறை என்றறிந்து
தன்னந்தனியே சென்றானே.

வில்லேந்தா இராமனிடம்
வெஞ்சிறையின் காவலரும்
இன்று போய் இனி நாளைவா
என நாள்தோறும் சொல்லிட்டார்.

போனவனும் பொறுக்காமா
சிறைவாசல் முன்னாலே எம்
முன்னோர்கள் போல
முறைப்பாக நின்றானே.

Mar152013_3இரண்டு நாளா நின்றவனை
மூன்றாம் நாள் காணவில்லை.
தேடிப்போன வாத்தியாரும்
நாலுநாளா திரும்பவில்ல.
இராகவனும் ஜானகியும்
என்றைக்குமே திரும்பாத
ஏராளம் தமிழர்களில்
ஓராளாய் போயினரே.
இந்தக்கதை இதற்கு மேலே
சொல்லும் வலு எனக்கு இல்லை.

காவியமா சொன்னதுவோ
நம் தேசத்தின் சோகக்கதை.
அங்கே புதைகுழிகளை
தோண்டிப்பார்த்தால்
சீதைகளும் இராமர்களும்
எலும்புகூடுகளாக வெளிவருவர்.
அவர்கள் விரல் இடுக்கில்
சமயத்தில்
கணையாழிகளும்
மங்கிப்போய் கிடக்கும்.

வெற்றிகொண்ட வீரரிண்ட
சரித்திரத்த மட்டுமின்றி
சாதாரண மனிதரோட
கதையினையும் சொல்லவேணும்.
முடிவில்லா தொடருமிந்த
அடிவாங்கும் கதைகள் இனி
தொடராம இருப்பதற்கு
என்னவாச்சும் செய்யவேணும்.

முடிவில்லா தொடருமிந்த
அடிவாங்கும் கதைகள் இனி
தொடராம இருப்பதற்கு
என்னவாச்சும் செய்யவேணும்.

நன்றி வணக்கம்.

*************************

படங்கள்
www.sooddram.com/
www.ujiladevi.in
www.4tamilmedia.com
http://gloriousjaffna.wordpress.com/
http://www.tamilvu.org/