ஷண்முகி

Jan 16, 2014 19 comments

 

1089730-Clipart-Girl-Under-A-Colorful-Umbrella-Royalty-Free-Vector-Illustration (1)

வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.

“பாமினி மேடம் … இருக்காங்களா?”

ராஜா அண்ணா கேட்க, பதிலுக்கு அந்த முகம் “வணக்கம் வாங்க” என்று சொல்லி சிரித்தது. அவள் கேட்டை இப்போது நன்றாக திறந்துவிட “வணக்கம் .. எப்பிடி இருக்கிறீங்கள்” என்றபடி நான் உள்ளே நுழைந்தேன். இரண்டு அடி எடுத்து வைத்திருக்கமாட்டேன். “டொக்” என்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது.

“கண் என்ன பிடரியிலயா இருக்கு? கோலத்தை மிதிச்சுப்போட்டியள்”

மனைவி திட்ட, “கிளுக்” என்று அந்த சிறுமி சிரித்தாள். அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். மூன்றடி மெலிந்த தேகம். உடல் சைஸுக்கும் மீதமான தொங்கட்டான் பாவாடை சட்டை. நெற்றி முழுக்க வீபூதி, கறுத்தபொட்டு, நடு உச்சி இரட்டைப்பின்னல், சிரிக்கும் போது செந்தழிப்பாக இருந்தாள்.

“அது .. வந்து … கவனிக்க இல்ல .. சொறி .. இந்த புள்ளி கோல டிஸைன் .. நல்லா இருக்கு .. நீங்களா போட்டது?”

இம்முறை கொஞ்சம் வெட்கமும் கூட்டுச்சேர அந்த சிறுமி உள்ளே ஓடினாள்.  அவளை நாங்கள் பின் தொடர, வாசலில் “மலையக இல்லம் உங்களை அன்புடன் வரவேற்..”. சுவரில் எழுதி இருந்ததை வாசித்து முடிக்க முன்னமேயே “வணக்கம் .. உள்ள வாங்களேன்” என்று சிரித்தபடியே வரவேற்றார் ஒரு பெண்மணி. “உட்காருங்க” என்று ஹோல் சோஃபாவை காட்டினார்.

“பாமினி மிஸ் … இவிங்க டான்ஸ் டீச்சரிண்ட மகளும் மருமகனும் … இல்லத்துக்கு எதுனாச்சும் செய்யணுமாம் .. கூட்டிக்கிட்டு வந்திட்டன் ”

“அப்பிடியா .. சந்தோஷம் … என்ன மாதிரி செய்யப்போறீங்க?”

பாமினி கண்ணாடி போட்டிருந்தார். இருபத்தைந்து வயது இருக்கலாம். சத்தமாக பேசினால் நொந்துவிடுமோ என்ற மாதிரிக்கு மிக மென்மையாக பேசினார்.

“எதாவது .. உங்களுக்கு .. என்ன தேவை எண்டு சொன்னீங்கள் எண்டால்”

மனைவியும் பாமினியும் பேச ஆரம்பிக்க நான் ஹோலை நோட்டம் விட்டேன். ஹோலிலேயே சாமித்தட்டு. பூ வைத்து பூசை செய்யும் அடையாளம் இருந்தது. ஒரு பக்கம் தையல் மெஷினில் அரைவாசி தைத்த சட்டையோடு பக்கத்து கதிரை முழுக்க சட்டைகள் நிரம்பிக்கிடந்தன. ஒரு வைட்போர்டில் அந்த இல்லத்துக்கான மாதாந்திர தேவைகளும் உபயகாரர்கள் பெயரும் எழுதியிருந்தது. அரிசி, சீனி, சொயாமீட், பருப்பு, எண்ணை, சவர்க்காரம் என்று சாமான்களும் அதை கொடுத்துதவும் கடைக்காரர் மற்றும் பொதுமக்கள் பெயர்களும். பால்மாவுக்கு மாத்திரம் தனித்தனியாக இரண்டு பெயர்கள். ஆளுக்கு ஒரு கிலோ வீதம் கொடுத்திருந்தார்கள். இரண்டு கிலோ பால்மா பற்றாக்குறை. இன்னமும் உபயகாரர் கிடைக்கவில்லை.

“அதென்ன மில்க் பவுடருக்கு மட்டும் தனித்தனியா டோனர்ஸ் இருக்கு”

”அதுங்களா? இப்ப இந்த மில்க் பவுடர் ஸ்ட்ரைக் தானே … சரியான தட்டுப்பாடு .. இத்தினி நாளா குடுத்தவிங்க இந்த சமயம் ஒண்ணு மட்டும் தான் குடுக்கிறாங்க … ”

”என்ன ஸ்ட்ரைக் .. யாரு …” என்று கேட்க முதல் மீண்டும் “டொக்”. இம்முறை காலில் மிதி விழுந்தது. “வந்த வேலையை பார்க்காம இந்த துலாவாரம் என்னத்துக்கப்பா”.

பாமினி அத்தனை குழந்தைகளையும் கூப்பிட்டார். அனைவரும் ஹோலுக்குள். நான்கு வயதில் இருந்து இருபது இருபத்துநான்கு வயது வரை உள்ள குழந்தைகள். அநேகமானோர் பதுளை தமிழ் பெண்கள் மகாவித்தியாலயத்தில் படிக்கிறார்கள். ஒரு சிலர் உயர்தரம் முடித்து ஆசிரியப்பயிற்சி எடுக்கிறார்கள். அத்தனை பெரும் வரிசையில் வந்து வணக்கம் சொல்லி, காலில் விழ ஆரம்பிக்க திடுக்கிட்டு போனேன். “வேண்டாமே .. யார் காலிலையும் விழாதையம்மா” என்று முதலில் விழ வந்த சுட்டிப்பெண்ணை தூக்கினேன்.

canstock6502700“கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சேர்”

“பெயர் என்ன?”

“ஜூலி”

“ஜூலிக்கு எத்தினை .. ”

நான் முடிக்க முதலேயே உள்ளே நழுவிவிட்டாள்.  எல்லோரும் பொதுவாக வணக்கம் சொன்னார்கள். ஆசிரியப்பயிற்சியில் இருக்கும் பெண் கொஞ்சம் கதைத்தார். விடுமுறையில் வந்திருக்கிறாராம். அங்கே ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். அடிக்கடி வருவார்கள் என்பது அந்த சிறுவர்கள் அவர்களோடு பரிச்சயமாக பேசிக்கதைத்ததில் இருந்து தெரியவந்தது.

“பிள்ளைங்களுக்கு சொக்ஸ் தேவையா இருக்கு .. வாங்கி குடுக்கிறீங்களா?”

அத்தனை பிள்ளைகளின் பெயர், சொக்ஸ் சைஸ் என்று எல்லாமே விறு விறு என்று பாமினி எழுதித்தந்தார். மனைவி அதை வாங்கிப்பார்த்தாள். மனதுக்குள் ஏதோ கணக்கு ஓடியிருக்கவேண்டும்.

“அவ்வளவு தானா .. வேற ஒண்டும் இல்லியா?”

பாமினி தயங்கினார்.

“ஒருதங்கிட்டயும் சோப் கேஸ் எதுவும் கிடையாது  .. முடியுமா?”

”ஓ ஷுவரா… வேற ஏதாவது ..”

”இல்ல.. நீங்களே ஒங்கட வசதிக்கு வாங்கித்தாங்க .. பென்.. பென்சில் எதுனாச்சும்”

”ஓகே .. அவ்வளவு தானா … ஏதாவது எண்டால் சொல்லுங்க .. கையோட வாங்கிக்கொண்டு வாறம்”

மனைவி சொல்ல பாமினி “இப்போதைக்கு இதான்” என்று அதே மென்மையான குரலில் கூறினார்.

“கொடை”

உள்ளே இருந்து பெரிதாக குரல் வந்தது.

“என்னம்மா?”

பாமினி கொஞ்சம் உரத்து கேட்டார்.

“யெனக்கு கொடை வேணும்”

“கொடை எல்லார்கிட்டயும் இருக்கே”

“எங்கிட்ட இல்ல”

பாமினி சங்கோஜப்பட்டு நெளிந்தாற்போல தெரிந்தது. மனைவி கேட்டாள்.

“யார் அந்த பொண்ணு?”

“அதுவா … சண்முகி … ”

பாமினி சொல்ல உள்ளிருந்து மீண்டும் அந்த குரல். இம்முறை குரலில் விசனம் தெரிந்தது.

“சண்முகி இல்ல … ஷண்முகி”

“சொறி .. ஷண்முகி .. அவவுக்கு அப்பிடி சொன்னா தான் பிடிக்கும்”

பாமினி கண்ணடித்து சிரிக்க, புன்னகைத்தோம்.

“ஷண்முகி .. முன்னுக்கு வரமாட்டீங்களா? உங்களுக்கு என்ன வேணும்னு ஹோலுக்கு வந்து சொல்லுங்களேன் ?”

சத்தம் இல்லை. பாமினியிடம் சொன்னேன்.

“குடை இல்லையா?… இல்லாட்டி வாங்கிறம்.. பிரச்சினை இல்ல”

“இல்ல வேண்டாம் .. மளை பெஞ்சுதுன்னு போன மாசம்தான் இவிங்களுக்கு கொடை வாங்கி குடுத்தோம்..”

பாமினி சொல்ல மீண்டும் ஷண்முகி உள்ளிருந்து சொன்னாள்.

”யெனக்கு கெடைக்கல”

”அதை ஏன் அங்கிட்டு உள்ள இருந்து சொல்லுறீங்க .. இங்கிட்டு வாங்களேன்”

இம்முறை நான் அவர்கள் பாணியில் உரத்து சொல்ல, மனைவியிடமிருந்து மீண்டும் ஒரு டொக். உள்ளிருந்து ஒரு சத்தத்தையும் காணும். ஒரே அமைதி. “ச .. ஷண்முகி … ” என்றேன். ”அவுங்களுக்கு கூச்சம்” என்று ஹோலில் இருந்த இன்னொரு பெண் சொல்ல, சிரித்துக்கொண்டே வணக்கம் சொல்லி விடைபெற்றோம்.

“ஷண்முகி .. நாங்க போயிட்டு வாறம்”

பதிலில்லை. சிரித்துக்கொண்டே வெளியேறி நேரே ஒரு மொத்த வியாபார நிலையத்துக்கு சென்று அத்தனை பேருக்கும் விதம் விதமான அளவுகளில் சொக்ஸ் வாங்கினோம். இன்னொரு கடையில் சோப் கேஸ் கட்டு, பேபி சோப், பென்சில், பேனா என்று பொருட்கள் வாங்கி முடிக்கையில்,

“சண்முகிக்கு குடையப்பா”

”..ஷண்முகி”

“ஒண்டு வாங்குவமா?”

”அந்த பொண்ணுக்கு மட்டும் வாங்கி குடுக்கிறது சரியா?”

”அது தானே வாய் விட்டு கேட்டுது ..வாங்காம போகேலாது”

குடை விற்கும் பிரிவுக்கு சென்று, சிறுவர்களுக்கான வானவில் நிற குடை வாங்கி அழகாக பை செய்தோம். திரும்பி போகும்போது “யோவ்.. அந்த கண்டோஸ் பிஸ்கட் எல்லாம் வீட்ட கிடக்கு, எடுத்துக்கொண்டு போவமா” என்று மனைவி கேட்க, ஓட்டோ மீண்டும் வீட்டுக்கு போனது. பிரிட்ஜில் இருந்த கண்டோஸ், பிஸ்கட் எல்லாவற்றையும் பையில் போட்டு கட்டி, திரும்பவும் மலையக இல்லத்துக்கு சென்றோம். அதே சாத்தப்பட்ட உயர கேட். தட்டினோம். அதே பெண். முகம் சிரிக்க திறந்துவிட்டாள். நான் உள்ளே நுழைய, கோலத்தையும் பார்த்து என்னையும் பார்த்து “கிளுக்” என்றாள். அட, நான் மிதித்து கலைந்திருந்த இடம் சரி செய்யப்பட்டிருந்தது. கோலத்தை சுற்றியவாறே உள்ளே நுழைய பாமினி வாசலுக்கு வந்தார்.

“ஓ ஒடனயே வாங்கிட்டு வந்துட்டீங்களா?”

சிரித்தோம்.

“நீங்களே ஓங்க கையால கொடுங்க… பிள்ளைங்க எல்லாம் முன்னே வாங்க”

ஒவ்வொருவராக வந்தார்கள். நன்றி, தாங்க்ஸ், தாங்க்யூ, வெட்கம் .. எல்லாமே வந்தன. வாங்கிவிட்டு எல்லோரும் ஹோலிலேயே கூடி நின்றார்கள். ஒவ்வொருவராக பெயர் கேட்டு விசாரித்தோம்.  ஷண்முகியை தேடினேன். அவள் வெளியே வரவில்லை. வெட்கப்பட்டு உள்ளேயே இருக்கிறாள் என்றார்கள்.

“ஷண்முகி உங்களுக்கு குடை கொண்டு வந்திருக்கோம்.. வந்து வாங்கிறீங்களா?”

”மிஸ்ஸுகிட்ட கொடுங்க .. நான் அப்புறமா வாங்கிக்கறேன்”

உள்ளிருந்து குரல் வந்தது.

”இல்ல ஷண்முகி வந்தா தான் நாங்க குடுப்போம்”

அந்தப்பக்கம் எந்த சத்தமும் இல்லை. “அதுக்கு கொஞ்சம் கூச்சம் அதிகம்” என்றார் பாமினி. “பரவாயில்ல இதை குடுத்துவிடுங்க” என்று மனைவி குடையை நீட்டும்போதே, “நான் கொடுக்கறேன்” என்று இன்னொரு சிறுமி அதை பறித்துக்கொண்டு உள்ளே ஓடினாள். சிரித்தபடியே மற்ற பிள்ளைகளை “அப்புறம் .. சனி ஞாயிற்றுக்கிழமைல என்னெல்லாம் செய்வீங்க?” என்று மனைவி கேட்க, முன்னுக்கு நின்றவர்கள் பேசாமல் நிற்க, பின்னுக்கு நின்றவர்கள் சிரித்தார்கள். ஒரு சிறுமி “படிப்போம்” என்றாள். அதற்கும் சிரிப்பு. இனி என்ன புறப்படலாமா, என்று நினைத்து எழும்போது தான், “பவித்ரா சூப்பரா ஆடுவா” என்று ஒரு குரல் வந்தது. “இன்னிக்கு எத்தினையாவது?” என்று இன்னொரு குரல் கேட்க, மீண்டும் சிரிப்பு.

பவித்ரா என்ற ஐந்து வயது பெண் முன்னே வந்தாள். சிணுங்கினாள். சம்பிரதாய பஃஸ், வெட்கம் எல்லாம் பண்ணி, பின்னர் மொபைல் போனில் பாட்டுப்போடப்பட, ஆட்டம் ஆரம்பித்தது.  “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”.  டீ வந்தது. நன்றாக இனித்தது. கூடவே கேக், வாழைப்பழம். எல்லோரும் கைத்தட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உடை. சிலர் சுடிதார். சிலர் பாவாடை சட்டை. சிலர் புரோக். யாரோ கொடுத்த உடுப்புக்கள். ஒருத்தருக்கும் சட்டை சரியான அளவில் இருக்கவில்லை. பவித்ராவின் ஆட்டத்துக்கு அவள் உடையும் ஒத்துழைக்கவில்லை. வியர்த்து வழிந்தது. “குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா, கொட்டுது காதல் தத்துவம் தான்”. “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”. பவித்ரா தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

தேநீர்  கோப்பையுடன் முற்றத்துக்கு வந்தோம். பாமினியும் வந்தார்.

“நீங்க இங்க வேலை செய்யுறீங்களா?”

பாமினியை கேட்டேன்.

”இல்ல .. என்னோட அப்பா தான் இந்த இல்லத்து பிரசிடெண்ட் .. நான் சும்மா..”

சிரித்தார். பாமினியை ஆச்சரியமாக பார்த்தேன்.

“இந்த குழந்தைகளுக்கு சின்னதா ஒரு ஹெல்ப் பண்ண சான்ஸ் தந்ததுக்கு தாங்க்ஸ்”

அதற்கும் சிரிப்பு தான்.

“நீங்கள் இப்படி வந்து போறதே அவுங்களுக்கு மெத்த சந்தோசம் தெரியுமா?”

“ஓ .. இவையள் தங்கட அப்பா .. அம்மா .. குடும்பத்தை மிஸ் பண்ணுவினமா? .. எப்பவாவது ஏதாவது உங்களுக்கு சொல்லுவினமா?”

“ அப்படி பெரிசா .. இல்ல”

நான் எதிர்பார்த்த விடை அதுவல்ல. வியப்பாக இருந்தது.

“என்ன சொல்லுறீங்க .. ஒருத்தரையுமே மிஸ் பண்ணுறதில்லையா?”

“இல்ல சேர் .. இந்த குழந்தைகளுக்கு தாங்க எத மிஸ் பண்ணறோம் எங்கிறது கூட தெரியறதில்ல .. எல்லாரும் ஆறு மாசம் .. ஒரு வயசில இந்த இல்லத்துக்கு வந்தவைங்க .. அம்மா அப்பா .. குடும்பம் .. எல்லாமே இதுகளுக்கு இந்த இல்லம் தான்”

ஒருவித வெறுமை வந்து முகத்தில் அடித்தது.

“அந்தப்பொண்ணு ஷண்முகி?”

“பாவம் சேர் அவ .. நல்ல பொண்ணு அது .. ஒரு மாசம் .. ஹாஸ்பிட்டல்ல .. பொறந்த உடனேயே தாய் வுட்டுட்டு போயிடிச்சு .. போலீஸ் கேஸ் ஆகி, கோர்ட்டு அந்த பொண்ணை இல்லத்தில சேர்த்து வளர்க்க சொல்லிடித்து”

குடித்த தேநீர் மிடறு தொண்டை குழியிலேயே தங்கியது. மீண்டும் பாமினிக்கு நன்றியை சொல்லிவிட்டு, அந்த ஊவா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு, அத்தனை பிள்ளைகளுக்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றோம். குழந்தைகள் எல்லோரும் “தாங்க்யூ அக்கா .. தாங்க்யூ அண்ணா … ஹாப்பி நியூ இயர்” என்றார்கள். சிரித்துக்கொண்டே முற்றத்தில் கால்வைக்க ஒரு சிறுமி ஓடிவந்து என் கையை பிடித்தாள். ஷண்முகியின் குடையை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடின அதே சிறுமி

“என்ன….”

“உஷ்ஷ்…!”

என்று வாயை ஒருவிரலால் மூடி சைகை காட்டியவாறு, என் கையை பிடித்து, இல்லத்து வெளிப்புற யன்னல் பக்கம் கூட்டிச்சென்றாள். “என்னம்மா?” என்று நான் கேட்க மீண்டும் “உஷ்ஷ்..” என்றபடி யன்னலை காட்டினாள். என்னடா என்று எட்டிப்பார்த்தேன்.

நான்கு வயசு இருக்கும். பாவாடை சட்டை. இரட்டை பின்னல் ஜடை. கொஞ்சம் கறுப்பு. அந்த வானவில் நிற குடையை விரித்து பிடித்து சுழற்றிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றபடி தானும் சுழன்றாள். சுழற்றிய வேகத்தில் ஏழு நிறமும் ஒரே நிறமாய் தெரிய, வாயெல்லாம் விழுந்தும் விழாததுமான பற்களோடு அதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். குட்டியாய் பாட்டு வேறு வந்தது. அட இவள் தானா அது. ஆர்வம் பிடிபடவில்லை.

“ஷண்…”

என்று கூப்பிட நான் விழைகையில், “டொக்” என்று காலை மிதித்தாள் என் மனைவி.

“உஷ்ஷ்…!”

kid-girl-umbrella-drawing-12785108

***************

படங்கள் :
www.clipartof.com
www.canstockphoto.com
http://www.dreamstime.com

Comments

 1. இது கதை இல்லை நிஜம்

  ReplyDelete
 2. நானும் ஒரு இல்லத்திற்குச் சென்றேன். சில பிள்ளைகளை ஆவது சந்திக்கலாமா? என்று கேட்டால் "ஜென்ஸ் பார்க்க முடியாது" என்று தயக்கமாகக் கூறினார் அந்த எக்கௌண்டன். அது பெண் பிள்ளைகள் இல்லமாம்....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அந்த தயக்கம் இருந்தது. மனைவியோடு போனதால் பிரச்சினையில்லை. சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமுள்ள நாடு ஆதலால் இந்த வகை கட்டுபாடுகள் அவசியமாகிறது. ஆனால் மலையக இல்லம் சாதாரணமாக எங்கட வீடுகள் மாதிரி. லண்டனில் இருக்கும் இந்து கோயில் ஒன்று இதன் பிரதான டோனர் என்று சொன்னார்கள். (இந்த கதை பல கற்பனைகள் கலந்த உண்மை சம்பவம்)

   Delete
  2. நான் மனைவி, பிள்ளைகளுடன்தான் போனேன். முடிவாக மனைவியும் பிள்ளைகளும் உள்ளே சென்று பிள்ளைகளைச் சந்தித்தார்கள். உண்மையில் அது இரு பாலாரும் வசித்த ஒரு இல்லம். சில 'டீன் ஏஜ்' பிள்ளைகளின் பிரச்சினையால் ஆண் குழந்தைகளும் சிறுவர்களும் சில காலம் முந்தான் தனியிடத்திற்கு மாற்றப்பட்டார்களாம்.

   Delete
 3. கேதாவின் ஒரு பிறந்த நாளுக்கு வெள்ளவத்தை ஹய் ஸ்ட்ரீட்ல இருக்கிற ஒரு இல்லத்துக்கு கொஞ்ச நண்பர்களை கூட்டிக்கொண்டு போனது. இன்றை வரை கேதாக்கு மிகவும் பிடித்த நாள் அது. மிகவும் அழகான உலகம் அது. வெளியில் இருந்து பார்த்தால் இவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும், அவர்களோடு நேரம் செலவிட்டால் எங்களை பார்க்க தான் பரிதாபமாக இருக்கும். கதையில் பாமினி சொல்வது போல் அவர்கள் மிஸ் பண்ணுவது குறைவு மாதிரி தான். தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவாக இருப்பது போல் இருக்கும். உண்மையில் அவர்கள் நினைப்பது என்ன என்பது தெரியாது. அழகாக பதிவு செய்திருகிறீர்கள். நன்றி JK

  ReplyDelete
  Replies
  1. நன்றி வீணா .. இது ஜீவிகாவின் ஐடியா தான். கதையின் 85 வீத சம்பவங்கள் உண்மை. 15வீதம் புனைவு. எது எதுவென்று தேவையில்லை தானே.

   Delete
 4. சில இல்லங்களுக்கு போகும் போது மன நிறைவு , சிலது திருப்தி ,சிலது காட்சிப்பொருள் . எதுவோ நாம் செய்த புண்ணியம் எங்களால் முடிந்தது செய்தோம் என்ற மனநிறைவுடன் சந்தோஷத்துடன் திரும்புவோம் பாருங்கள் ......அது போதும் .
  இந்த கதையை எழுத ஆர்வம் கொடுத்தவருக்கு நன்றி. மனம் போல வாழ்க்கை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா .. சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு.

   Delete
 5. நெகிழ்ச்சியான உங்கள் அனுபவத்தை ஒரு அருமையான கதைவடிவில் சொல்லியிருக்கிறீர்கள். புனைவு கலக்காத இறந்தகாலம் சாத்தியமில்லை. சம்பவங்கள் நினைவுகளாக பதியப்படும்பொதும் அவை மீண்டும் மீண்டும் மீட்டி பார்க்கப்ப்படும்போதும் அவற்றில் புனைவுகளும் கற்பனைகளும் கலந்துவிடுகின்றன. இந்த கதையில் இழையோடியிருக்கும் புனைவு சுவையையும் ஆழத்தையும் கூட்டி ஒரு உன்னத அனுபவத்தை வாசகனுக்கு தந்துவிடுகிறது. உங்கள் எழுத்துக்கள் வாசாகனின் நினைவோடைகளை கிளறி, பல சொந்த கதைகளை மீட்டிப்பார்க்க வைத்து விடுகிறது. விரசம் வழியும் பாடலுக்கு ஒரு சிறுமி அதன் அர்த்தத்தை அறியும் முதிர்ச்சி இல்லாமல் நடனமாடுவதை விவரிப்பது அருமை. சுஜாதாவின் கதைகளில் படித்து சுவைத்த இந்த உள்ளார்ந்த எழுத்தோட்டம் உங்களுக்கு வசப்படுகிறது. இந்த வாழ்க்கை எமக்கு வெகு அருகில் இருந்தாலும் நாம் பலவேளைகளில் கண்டுகொள்வதில்லை, காண விரும்புவதும் இல்லை. உங்கள் சிறிய விடுமுறை நிறைவான அனுபவங்களால் நிறைந்திருக்கிறது என்பது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கேதா. பத்து நாள் விடுமுறை தான். ஆனால் பூரண திருப்தியை தந்த விடுமுறை அது. எதை எண்ணி எழுதுகிறோமோ அது வாசிப்பவரை சேர்ந்தடையும் போதும், அது எனக்கு தெரியவருவதும் மகிழ்ச்சி. எழுத மேலும் தூண்டும் ஊக்குவிப்பான்கள்.

   Delete
 6. We have been to Sri Lanka children home in Bangalore. Our Sri Lankan friend married to Bangalore person came to know abot this home in the local paper.
  So we all went there and spent half day.
  When I read ur story I was recalling that. God job.
  siva

  ReplyDelete
 7. அன்புள்ள ஜே.கே. ஷண்முகியை படித்தேன்.
  குடைக்கு ஆசைப்பட்ட ஷண்முகி ஏன் வெளியே வராமல் உள்ளிருந்தே பேசினாள் என்பது என்னை யோசிக்கவைக்கிறது. அவளது தாயும் நவீன உலகத்து குந்திதேவிதான். பரவாயில்லை. ஆற்றிலே குழந்தையை விட்டுவிடாமல் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள். அவுஸ்திரேலியா டன்டினொங்கில் ஒரு பெண் கார்ட்போர்ட் பெட்டியில் தனது குழந்தையை விட்டுச்சென்றாள். ஜே.கே. அனுபவமும் கற்பனையும் உண்மையும் கலந்ததுதான் புனைவு. நீங்களும் இலங்கையில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு சென்று திரும்பிய மனிதநேயம் சிறப்பானது. வடக்கு, கிழக்கில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் பராமரிக்கும் நூற்றுக்கணக்கான போரில் பெற்றவர்களை இழந்த பிள்ளைகளை வருடந்தோறும் சந்தித்து வரும் எனக்கு தங்கள் மலையக இல்லமும் நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். இயங்குங்கள்.
  உங்களுக்கும் ஷண்முகிக்கும் வாழ்த்துக்கள்.

  முருகபூபதி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. ஆசையும் அதே வெளியுலக கூச்சமும் ஒருசேர அமைந்தவள் ஷண்முகி. இல்லத்துக்கு சென்ற அனுபவம் அலாதியானது. உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ச்சி.

   பொங்கல் விழாவில் முடிந்தால் சந்திப்போம்.

   Delete
 8. இந்த கதையை பல நாட்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். இன்று நண்பர் ஒருவர் பாசெபூக் இல் போட்ட பதிவு, பதில் எழுத்த தோன்றியது..

  தனிப்பட்ட ரீதியில் இந்தகைய கொடைகள் கொடுக்கிற சந்தோசம், சிறிய நேரத்திக்குதன்னும், மிகவும் இனிமையானது. அதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும். உண்மையில் , நீங்கள் இந்த பதிவு பதிந்த பிற்பாடும் எங்களது உறவினர் ஒருவர் , தங்களது வீட்டில் நடந்த நிகழ்வை முதியோர் இல்லத்தில் கொண்ட்டாடிய பின்பும் இதை பற்றி மனைவியுடன் கதைத்திருந்தேன். - எங்களுது அலம்பல்களை வேறு யாருக்கு சொல்ல முடியும்.

  அதே நேரத்தில், இதில் உள்ள "கதை சொல்லும் தன்மையையும் , தங்களை பற்றி புளுகும் தன்மையையும் " வேறு பிரித்து கொள்ளவதில் உள்ள -வாசகருக்கு / இந்த கதைகளை ேட்பவர்களுக்கு உரிய , கடினத்தை இந்தகைய செய்திகளை சொல்லுபவர்கள் உணர வேண்டும் என்றும் விரும்புகிறேன்- அவர்களும் என்னை போன்றவர்கள் என்பதால் உணர்வார்கள் என்று தெரிந்தாலும் எதோ ஒரு வினோதமான உணர்வு ...அதை எப்படி சொல்லுவது என்று கூட தெரியவில்லை ...

  இதைத்தான் அந்த காலத்தில் ஒரு கையால் செய்தால் மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொன்னார்களோ தெரியவில்லை .

  இதை எனது உணர்வை நீங்கள் பிழையா விளங்க மாட்ட்டீர்கல் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
  -
  இதோடு தொடர்புபட்ட நிகழ்வு- அதற்காக எல்லாம் ஒன்று அல்ல .
  எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பிள்ளை , பாடசாலை இல் பென்னி சேர்த்து - ஒரு சத குற்றி , யாரும் இங்கே பாவிப்பது இல்லை - போரிலே பாதிக்கபட்ட பிள்ளைகளுக்கு அந்த 9/10 வயது பிள்ளையால் புத்தமும் பென்சில் வாங்கி கொடுத்தார்கள். அந்த படமும் , இலங்கை "முழுக்க" சுத்தி பார்த்த படமும் போட்டிருக்கிறார்கள் ..அந்த தான தருமத்திர்ற்கும் , மிச்ச கொண்டாண்டன்கலுக்கும் தொடர்பே இல்லை .

  இந்த இடத்தல் நான் மகிந்த ராஜா பக்சாவுண்டன் ஒத்து போகிறேன் , போரில் பாதிக்கபட்டவர்கள் என்போர் மிருக காட்சியில் உள்ள மிருகங்கள் அல்ல . ?10000 ஆயிரம் டாலருக்கு இலங்கை போறவர்களுக்கு , ?20/30/50 டாலர் செலவழித்து புத்தகம் வாங்கி கொடுக்க முடியாதா ? அதை ஏன் படாசாலையில் சேர்த்து கொடுக்க வேண்டும் ? - இதும் ஒரு பரப்புரைதான் என்று வராவிட்டால் சரி -

  யாரும் வருவார்கள் நீ என்ன செய்தாய ?அவர்களாவது பென்சில் பேனை கொடுத்தார்கள் என்று அதற்கு என்னிடம் ஆயிரம் பதில் இருந்தாலும் மௌனமே பதில் .

  திருப்பவும் சொல்லுகிறேன் எனக்கு இருக்கிற உணர்வை சொல்லத்தெரியாமல் தான் இப்படி எழுதுகிறேன் . 100 வீதமும் பிழையாக இருக்கும்
  Gopalan

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணே. இது சிறுகதை தான். சிறுகதையாக தான் எழுதியும் இருக்கிறேன். நான்/நாங்கள் செய்ததை சொல்ல விழையவில்லை (தனிமடல் வருகிறது), அன்றைக்கு போயிட்டு வந்தவுடனேயே மனைவியிடம், இதிலே ஒரு சிறுகதை இருக்கிறது. எழுதப்போகிறேன் என்றேன். ஷண்முகி பாத்திரத்தின் சில இயல்புகளை மாற்றியது அவளுக்கு பிடிக்கவும் இல்ல. ஆனால் சிறுகதையாக இதை மிஸ் பண்ண மனம் இல்ல. மற்றும்படி உதவி/சேவை மற்றவர்களுக்காக செய்யாமல் தங்கள் சந்தோஷத்துக்காகவே செய்கிறோம் என்ற எண்ணம் கொண்டதால் அதில் பெருமை ஒன்றும் இல்ல. பாட்டு கேட்பதில் கிடைக்கும் சந்தோசம் போலவே இதுவும். அதனால் நன்றி என்று ஒன்றென்றால் அது அந்த பிள்ளைகளுக்கே சொல்லவேண்டும் (சொன்னேன்).

   மகிந்த பற்றிய உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். சிலவிஷயங்களை அரசியலை தான் அணுகவேண்டும். அரசியலில் இருக்கும் பலர் அதை இப்போது செய்கிறார்கள் என்பது என் எண்ணம். முகநூல் புரட்ச்சியாளர்களை விட்டுவிடுவோம்.

   Delete
 9. Sir, can I find you on FB?

  ReplyDelete

Post a comment

Contact form