Skip to main content

ஷண்முகி

 

1089730-Clipart-Girl-Under-A-Colorful-Umbrella-Royalty-Free-Vector-Illustration (1)

வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.

“பாமினி மேடம் … இருக்காங்களா?”

ராஜா அண்ணா கேட்க, பதிலுக்கு அந்த முகம் “வணக்கம் வாங்க” என்று சொல்லி சிரித்தது. அவள் கேட்டை இப்போது நன்றாக திறந்துவிட “வணக்கம் .. எப்பிடி இருக்கிறீங்கள்” என்றபடி நான் உள்ளே நுழைந்தேன். இரண்டு அடி எடுத்து வைத்திருக்கமாட்டேன். “டொக்” என்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது.

“கண் என்ன பிடரியிலயா இருக்கு? கோலத்தை மிதிச்சுப்போட்டியள்”

மனைவி திட்ட, “கிளுக்” என்று அந்த சிறுமி சிரித்தாள். அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். மூன்றடி மெலிந்த தேகம். உடல் சைஸுக்கும் மீதமான தொங்கட்டான் பாவாடை சட்டை. நெற்றி முழுக்க வீபூதி, கறுத்தபொட்டு, நடு உச்சி இரட்டைப்பின்னல், சிரிக்கும் போது செந்தழிப்பாக இருந்தாள்.

“அது .. வந்து … கவனிக்க இல்ல .. சொறி .. இந்த புள்ளி கோல டிஸைன் .. நல்லா இருக்கு .. நீங்களா போட்டது?”

இம்முறை கொஞ்சம் வெட்கமும் கூட்டுச்சேர அந்த சிறுமி உள்ளே ஓடினாள்.  அவளை நாங்கள் பின் தொடர, வாசலில் “மலையக இல்லம் உங்களை அன்புடன் வரவேற்..”. சுவரில் எழுதி இருந்ததை வாசித்து முடிக்க முன்னமேயே “வணக்கம் .. உள்ள வாங்களேன்” என்று சிரித்தபடியே வரவேற்றார் ஒரு பெண்மணி. “உட்காருங்க” என்று ஹோல் சோஃபாவை காட்டினார்.

“பாமினி மிஸ் … இவிங்க டான்ஸ் டீச்சரிண்ட மகளும் மருமகனும் … இல்லத்துக்கு எதுனாச்சும் செய்யணுமாம் .. கூட்டிக்கிட்டு வந்திட்டன் ”

“அப்பிடியா .. சந்தோஷம் … என்ன மாதிரி செய்யப்போறீங்க?”

பாமினி கண்ணாடி போட்டிருந்தார். இருபத்தைந்து வயது இருக்கலாம். சத்தமாக பேசினால் நொந்துவிடுமோ என்ற மாதிரிக்கு மிக மென்மையாக பேசினார்.

“எதாவது .. உங்களுக்கு .. என்ன தேவை எண்டு சொன்னீங்கள் எண்டால்”

மனைவியும் பாமினியும் பேச ஆரம்பிக்க நான் ஹோலை நோட்டம் விட்டேன். ஹோலிலேயே சாமித்தட்டு. பூ வைத்து பூசை செய்யும் அடையாளம் இருந்தது. ஒரு பக்கம் தையல் மெஷினில் அரைவாசி தைத்த சட்டையோடு பக்கத்து கதிரை முழுக்க சட்டைகள் நிரம்பிக்கிடந்தன. ஒரு வைட்போர்டில் அந்த இல்லத்துக்கான மாதாந்திர தேவைகளும் உபயகாரர்கள் பெயரும் எழுதியிருந்தது. அரிசி, சீனி, சொயாமீட், பருப்பு, எண்ணை, சவர்க்காரம் என்று சாமான்களும் அதை கொடுத்துதவும் கடைக்காரர் மற்றும் பொதுமக்கள் பெயர்களும். பால்மாவுக்கு மாத்திரம் தனித்தனியாக இரண்டு பெயர்கள். ஆளுக்கு ஒரு கிலோ வீதம் கொடுத்திருந்தார்கள். இரண்டு கிலோ பால்மா பற்றாக்குறை. இன்னமும் உபயகாரர் கிடைக்கவில்லை.

“அதென்ன மில்க் பவுடருக்கு மட்டும் தனித்தனியா டோனர்ஸ் இருக்கு”

”அதுங்களா? இப்ப இந்த மில்க் பவுடர் ஸ்ட்ரைக் தானே … சரியான தட்டுப்பாடு .. இத்தினி நாளா குடுத்தவிங்க இந்த சமயம் ஒண்ணு மட்டும் தான் குடுக்கிறாங்க … ”

”என்ன ஸ்ட்ரைக் .. யாரு …” என்று கேட்க முதல் மீண்டும் “டொக்”. இம்முறை காலில் மிதி விழுந்தது. “வந்த வேலையை பார்க்காம இந்த துலாவாரம் என்னத்துக்கப்பா”.

பாமினி அத்தனை குழந்தைகளையும் கூப்பிட்டார். அனைவரும் ஹோலுக்குள். நான்கு வயதில் இருந்து இருபது இருபத்துநான்கு வயது வரை உள்ள குழந்தைகள். அநேகமானோர் பதுளை தமிழ் பெண்கள் மகாவித்தியாலயத்தில் படிக்கிறார்கள். ஒரு சிலர் உயர்தரம் முடித்து ஆசிரியப்பயிற்சி எடுக்கிறார்கள். அத்தனை பெரும் வரிசையில் வந்து வணக்கம் சொல்லி, காலில் விழ ஆரம்பிக்க திடுக்கிட்டு போனேன். “வேண்டாமே .. யார் காலிலையும் விழாதையம்மா” என்று முதலில் விழ வந்த சுட்டிப்பெண்ணை தூக்கினேன்.

canstock6502700“கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சேர்”

“பெயர் என்ன?”

“ஜூலி”

“ஜூலிக்கு எத்தினை .. ”

நான் முடிக்க முதலேயே உள்ளே நழுவிவிட்டாள்.  எல்லோரும் பொதுவாக வணக்கம் சொன்னார்கள். ஆசிரியப்பயிற்சியில் இருக்கும் பெண் கொஞ்சம் கதைத்தார். விடுமுறையில் வந்திருக்கிறாராம். அங்கே ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வந்திருந்தார்கள். அடிக்கடி வருவார்கள் என்பது அந்த சிறுவர்கள் அவர்களோடு பரிச்சயமாக பேசிக்கதைத்ததில் இருந்து தெரியவந்தது.

“பிள்ளைங்களுக்கு சொக்ஸ் தேவையா இருக்கு .. வாங்கி குடுக்கிறீங்களா?”

அத்தனை பிள்ளைகளின் பெயர், சொக்ஸ் சைஸ் என்று எல்லாமே விறு விறு என்று பாமினி எழுதித்தந்தார். மனைவி அதை வாங்கிப்பார்த்தாள். மனதுக்குள் ஏதோ கணக்கு ஓடியிருக்கவேண்டும்.

“அவ்வளவு தானா .. வேற ஒண்டும் இல்லியா?”

பாமினி தயங்கினார்.

“ஒருதங்கிட்டயும் சோப் கேஸ் எதுவும் கிடையாது  .. முடியுமா?”

”ஓ ஷுவரா… வேற ஏதாவது ..”

”இல்ல.. நீங்களே ஒங்கட வசதிக்கு வாங்கித்தாங்க .. பென்.. பென்சில் எதுனாச்சும்”

”ஓகே .. அவ்வளவு தானா … ஏதாவது எண்டால் சொல்லுங்க .. கையோட வாங்கிக்கொண்டு வாறம்”

மனைவி சொல்ல பாமினி “இப்போதைக்கு இதான்” என்று அதே மென்மையான குரலில் கூறினார்.

“கொடை”

உள்ளே இருந்து பெரிதாக குரல் வந்தது.

“என்னம்மா?”

பாமினி கொஞ்சம் உரத்து கேட்டார்.

“யெனக்கு கொடை வேணும்”

“கொடை எல்லார்கிட்டயும் இருக்கே”

“எங்கிட்ட இல்ல”

பாமினி சங்கோஜப்பட்டு நெளிந்தாற்போல தெரிந்தது. மனைவி கேட்டாள்.

“யார் அந்த பொண்ணு?”

“அதுவா … சண்முகி … ”

பாமினி சொல்ல உள்ளிருந்து மீண்டும் அந்த குரல். இம்முறை குரலில் விசனம் தெரிந்தது.

“சண்முகி இல்ல … ஷண்முகி”

“சொறி .. ஷண்முகி .. அவவுக்கு அப்பிடி சொன்னா தான் பிடிக்கும்”

பாமினி கண்ணடித்து சிரிக்க, புன்னகைத்தோம்.

“ஷண்முகி .. முன்னுக்கு வரமாட்டீங்களா? உங்களுக்கு என்ன வேணும்னு ஹோலுக்கு வந்து சொல்லுங்களேன் ?”

சத்தம் இல்லை. பாமினியிடம் சொன்னேன்.

“குடை இல்லையா?… இல்லாட்டி வாங்கிறம்.. பிரச்சினை இல்ல”

“இல்ல வேண்டாம் .. மளை பெஞ்சுதுன்னு போன மாசம்தான் இவிங்களுக்கு கொடை வாங்கி குடுத்தோம்..”

பாமினி சொல்ல மீண்டும் ஷண்முகி உள்ளிருந்து சொன்னாள்.

”யெனக்கு கெடைக்கல”

”அதை ஏன் அங்கிட்டு உள்ள இருந்து சொல்லுறீங்க .. இங்கிட்டு வாங்களேன்”

இம்முறை நான் அவர்கள் பாணியில் உரத்து சொல்ல, மனைவியிடமிருந்து மீண்டும் ஒரு டொக். உள்ளிருந்து ஒரு சத்தத்தையும் காணும். ஒரே அமைதி. “ச .. ஷண்முகி … ” என்றேன். ”அவுங்களுக்கு கூச்சம்” என்று ஹோலில் இருந்த இன்னொரு பெண் சொல்ல, சிரித்துக்கொண்டே வணக்கம் சொல்லி விடைபெற்றோம்.

“ஷண்முகி .. நாங்க போயிட்டு வாறம்”

பதிலில்லை. சிரித்துக்கொண்டே வெளியேறி நேரே ஒரு மொத்த வியாபார நிலையத்துக்கு சென்று அத்தனை பேருக்கும் விதம் விதமான அளவுகளில் சொக்ஸ் வாங்கினோம். இன்னொரு கடையில் சோப் கேஸ் கட்டு, பேபி சோப், பென்சில், பேனா என்று பொருட்கள் வாங்கி முடிக்கையில்,

“சண்முகிக்கு குடையப்பா”

”..ஷண்முகி”

“ஒண்டு வாங்குவமா?”

”அந்த பொண்ணுக்கு மட்டும் வாங்கி குடுக்கிறது சரியா?”

”அது தானே வாய் விட்டு கேட்டுது ..வாங்காம போகேலாது”

குடை விற்கும் பிரிவுக்கு சென்று, சிறுவர்களுக்கான வானவில் நிற குடை வாங்கி அழகாக பை செய்தோம். திரும்பி போகும்போது “யோவ்.. அந்த கண்டோஸ் பிஸ்கட் எல்லாம் வீட்ட கிடக்கு, எடுத்துக்கொண்டு போவமா” என்று மனைவி கேட்க, ஓட்டோ மீண்டும் வீட்டுக்கு போனது. பிரிட்ஜில் இருந்த கண்டோஸ், பிஸ்கட் எல்லாவற்றையும் பையில் போட்டு கட்டி, திரும்பவும் மலையக இல்லத்துக்கு சென்றோம். அதே சாத்தப்பட்ட உயர கேட். தட்டினோம். அதே பெண். முகம் சிரிக்க திறந்துவிட்டாள். நான் உள்ளே நுழைய, கோலத்தையும் பார்த்து என்னையும் பார்த்து “கிளுக்” என்றாள். அட, நான் மிதித்து கலைந்திருந்த இடம் சரி செய்யப்பட்டிருந்தது. கோலத்தை சுற்றியவாறே உள்ளே நுழைய பாமினி வாசலுக்கு வந்தார்.

“ஓ ஒடனயே வாங்கிட்டு வந்துட்டீங்களா?”

சிரித்தோம்.

“நீங்களே ஓங்க கையால கொடுங்க… பிள்ளைங்க எல்லாம் முன்னே வாங்க”

ஒவ்வொருவராக வந்தார்கள். நன்றி, தாங்க்ஸ், தாங்க்யூ, வெட்கம் .. எல்லாமே வந்தன. வாங்கிவிட்டு எல்லோரும் ஹோலிலேயே கூடி நின்றார்கள். ஒவ்வொருவராக பெயர் கேட்டு விசாரித்தோம்.  ஷண்முகியை தேடினேன். அவள் வெளியே வரவில்லை. வெட்கப்பட்டு உள்ளேயே இருக்கிறாள் என்றார்கள்.

“ஷண்முகி உங்களுக்கு குடை கொண்டு வந்திருக்கோம்.. வந்து வாங்கிறீங்களா?”

”மிஸ்ஸுகிட்ட கொடுங்க .. நான் அப்புறமா வாங்கிக்கறேன்”

உள்ளிருந்து குரல் வந்தது.

”இல்ல ஷண்முகி வந்தா தான் நாங்க குடுப்போம்”

அந்தப்பக்கம் எந்த சத்தமும் இல்லை. “அதுக்கு கொஞ்சம் கூச்சம் அதிகம்” என்றார் பாமினி. “பரவாயில்ல இதை குடுத்துவிடுங்க” என்று மனைவி குடையை நீட்டும்போதே, “நான் கொடுக்கறேன்” என்று இன்னொரு சிறுமி அதை பறித்துக்கொண்டு உள்ளே ஓடினாள். சிரித்தபடியே மற்ற பிள்ளைகளை “அப்புறம் .. சனி ஞாயிற்றுக்கிழமைல என்னெல்லாம் செய்வீங்க?” என்று மனைவி கேட்க, முன்னுக்கு நின்றவர்கள் பேசாமல் நிற்க, பின்னுக்கு நின்றவர்கள் சிரித்தார்கள். ஒரு சிறுமி “படிப்போம்” என்றாள். அதற்கும் சிரிப்பு. இனி என்ன புறப்படலாமா, என்று நினைத்து எழும்போது தான், “பவித்ரா சூப்பரா ஆடுவா” என்று ஒரு குரல் வந்தது. “இன்னிக்கு எத்தினையாவது?” என்று இன்னொரு குரல் கேட்க, மீண்டும் சிரிப்பு.

பவித்ரா என்ற ஐந்து வயது பெண் முன்னே வந்தாள். சிணுங்கினாள். சம்பிரதாய பஃஸ், வெட்கம் எல்லாம் பண்ணி, பின்னர் மொபைல் போனில் பாட்டுப்போடப்பட, ஆட்டம் ஆரம்பித்தது.  “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”.  டீ வந்தது. நன்றாக இனித்தது. கூடவே கேக், வாழைப்பழம். எல்லோரும் கைத்தட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உடை. சிலர் சுடிதார். சிலர் பாவாடை சட்டை. சிலர் புரோக். யாரோ கொடுத்த உடுப்புக்கள். ஒருத்தருக்கும் சட்டை சரியான அளவில் இருக்கவில்லை. பவித்ராவின் ஆட்டத்துக்கு அவள் உடையும் ஒத்துழைக்கவில்லை. வியர்த்து வழிந்தது. “குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா, கொட்டுது காதல் தத்துவம் தான்”. “வாங்கண்ணா வணக்கங்கண்ணா .. மை சாங்க நீ கேளுங்கண்ணா”. பவித்ரா தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள்.

தேநீர்  கோப்பையுடன் முற்றத்துக்கு வந்தோம். பாமினியும் வந்தார்.

“நீங்க இங்க வேலை செய்யுறீங்களா?”

பாமினியை கேட்டேன்.

”இல்ல .. என்னோட அப்பா தான் இந்த இல்லத்து பிரசிடெண்ட் .. நான் சும்மா..”

சிரித்தார். பாமினியை ஆச்சரியமாக பார்த்தேன்.

“இந்த குழந்தைகளுக்கு சின்னதா ஒரு ஹெல்ப் பண்ண சான்ஸ் தந்ததுக்கு தாங்க்ஸ்”

அதற்கும் சிரிப்பு தான்.

“நீங்கள் இப்படி வந்து போறதே அவுங்களுக்கு மெத்த சந்தோசம் தெரியுமா?”

“ஓ .. இவையள் தங்கட அப்பா .. அம்மா .. குடும்பத்தை மிஸ் பண்ணுவினமா? .. எப்பவாவது ஏதாவது உங்களுக்கு சொல்லுவினமா?”

“ அப்படி பெரிசா .. இல்ல”

நான் எதிர்பார்த்த விடை அதுவல்ல. வியப்பாக இருந்தது.

“என்ன சொல்லுறீங்க .. ஒருத்தரையுமே மிஸ் பண்ணுறதில்லையா?”

“இல்ல சேர் .. இந்த குழந்தைகளுக்கு தாங்க எத மிஸ் பண்ணறோம் எங்கிறது கூட தெரியறதில்ல .. எல்லாரும் ஆறு மாசம் .. ஒரு வயசில இந்த இல்லத்துக்கு வந்தவைங்க .. அம்மா அப்பா .. குடும்பம் .. எல்லாமே இதுகளுக்கு இந்த இல்லம் தான்”

ஒருவித வெறுமை வந்து முகத்தில் அடித்தது.

“அந்தப்பொண்ணு ஷண்முகி?”

“பாவம் சேர் அவ .. நல்ல பொண்ணு அது .. ஒரு மாசம் .. ஹாஸ்பிட்டல்ல .. பொறந்த உடனேயே தாய் வுட்டுட்டு போயிடிச்சு .. போலீஸ் கேஸ் ஆகி, கோர்ட்டு அந்த பொண்ணை இல்லத்தில சேர்த்து வளர்க்க சொல்லிடித்து”

குடித்த தேநீர் மிடறு தொண்டை குழியிலேயே தங்கியது. மீண்டும் பாமினிக்கு நன்றியை சொல்லிவிட்டு, அந்த ஊவா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு, அத்தனை பிள்ளைகளுக்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றோம். குழந்தைகள் எல்லோரும் “தாங்க்யூ அக்கா .. தாங்க்யூ அண்ணா … ஹாப்பி நியூ இயர்” என்றார்கள். சிரித்துக்கொண்டே முற்றத்தில் கால்வைக்க ஒரு சிறுமி ஓடிவந்து என் கையை பிடித்தாள். ஷண்முகியின் குடையை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடின அதே சிறுமி

“என்ன….”

“உஷ்ஷ்…!”

என்று வாயை ஒருவிரலால் மூடி சைகை காட்டியவாறு, என் கையை பிடித்து, இல்லத்து வெளிப்புற யன்னல் பக்கம் கூட்டிச்சென்றாள். “என்னம்மா?” என்று நான் கேட்க மீண்டும் “உஷ்ஷ்..” என்றபடி யன்னலை காட்டினாள். என்னடா என்று எட்டிப்பார்த்தேன்.

நான்கு வயசு இருக்கும். பாவாடை சட்டை. இரட்டை பின்னல் ஜடை. கொஞ்சம் கறுப்பு. அந்த வானவில் நிற குடையை விரித்து பிடித்து சுழற்றிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றபடி தானும் சுழன்றாள். சுழற்றிய வேகத்தில் ஏழு நிறமும் ஒரே நிறமாய் தெரிய, வாயெல்லாம் விழுந்தும் விழாததுமான பற்களோடு அதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். குட்டியாய் பாட்டு வேறு வந்தது. அட இவள் தானா அது. ஆர்வம் பிடிபடவில்லை.

“ஷண்…”

என்று கூப்பிட நான் விழைகையில், “டொக்” என்று காலை மிதித்தாள் என் மனைவி.

“உஷ்ஷ்…!”

kid-girl-umbrella-drawing-12785108

***************

படங்கள் :
www.clipartof.com
www.canstockphoto.com
http://www.dreamstime.com

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக