அன்பின் ஜெயக்குமரன்!
நான் உங்கடை எழுத்தை எண்டைக்கு வாசிக்கத் துவங்கினநானோ அண்டைக்கே அந்த எழுத்திலை எடுபட்டுப் போனன். முதல் விழுந்த இடமே பதுங்குகுழிதான். பதுங்குகுழியிலை தடக்கி விழுந்த நான்,பேந்தென்ன அடிக்கடி படலைக்குள்ளாலை இடைசுகம் எட்டியெட்டி விடுப்புப் பார்க்கிற பழக்கமாய்ப் போச்சு. நீங்கள் உங்கடை பதுங்குகுழி பற்றிச் சொன்னது போலை ஒவ்வொருத்தரும் தங்கடை கதைகளைக் குறைஞ்ச பட்சம் தங்கடை பிள்ளைகளுக்கு எண்டாலும் சொல்லி வைக்க வேணும்.
நானும் ஒரு காலத்திலை மணி கிலுக்கி தூவதீவம் காட்டி பக்தியிலை உருகி வழிஞ்சவன் தான். முந்தினமாதிரி சாமிபூதம் எண்ட ஈடுபாடு விட்டுப் போச்சு. கண்கெட்ட சாமியும் தெய்வமும் எண்டு திட்டியிருக்கிறன். கன தரம் கடவுள் எண்டது என்ன? இருந்து என்னத்தைச் சாதிக்குது? எண்டு இன்னுந்தான் வந்து வதில் கிடைக்காத கனக்கக் கேள்விகள் மண்டைக்குள்ளை இருக்குது. இருந்தும் ஊருக்குப் போனநேரங்களிலை ஒவ்வரு கோயிலாய்த் தேடித்தேடிப் போய் பிறந்த நாள் தொட்டு 29 வரிய காலம் பேசிப் பறைஞ்ச அந்தச் சொந்தங்களை கண்டு கண்ணீர் வடிச்சதும் மெய். பல இடங்களிலை என்னை நானே ஆராயுமாப் போலை உங்கடை எழுத்து அமைஞ்சு இருக்கு.
நீங்கள் காட்டித்தான் உங்கடை கம்பவாரிதியைப் பற்றித் தெரிஞ்சு கொண்டன். கண்ணனை தன்ரை காதலியாகக் கண்டார் பாரதியார். அந்த மாதிரி பால் மாற்றம் செய்யத் தேவையில்லாமல் கம்பவாரிதியின் தமிழ் அவரை அப்படியே காதல் செய்ய வைக்குது தான். யூ ரியூப்பில் அவரது பேச்சுக்களைத் தேடிப் பார்த்து இரசிக்கிறன்.
ஆரெண்டாலும் சங்கடத்துடன் கதைக்கிற ஒரு கருப்பொருளை அதுதான் அந்தக் கக்கூசை வைச்சு ஓங்காளம் வர அதாவது வயிறு குலுங்க சிரிக்கச்செய்து ஓங்காளம் வர வைச்சிட்டீங்கள். அந்தக் காலத்துச் சுழல் கக்கூஸ் முதல் இப்போதைய காலத்திலை இருக்கின்ற வளையத்தையும் நனைச்சடிக்கிற நம்ம ஆக்களுக்கு நக்கலும் புத்தியும் சொன்னது நல்லாயிருக்கு.
உங்கடை அம்மாவைப் பற்றி வாசிக்கேக்குள்ளை ஒரு சில சாங்கத்திலை மூண்டு வரியத்துக்கு முன்னாலை போய்ச்சேர்ந்த என்ரை அம்மா வந்து போனா.
சுஜாதாவைப் பிடிக்கும். கரையெல்லாம் செண்பகப்பூவை கிழமைக்குக் கிழமை பரபரப்போடை வாசிச்சனான். மற்றும்படிக்கு இளையராஜா, ரஹ்மான், மணிரத்தினம் இவையளைப்பற்றி தெரியும். உங்கடை காதலைக் கண்டு எட! உந்த வளைவு நெளிவு சுழிவெல்லாம் இரசிக்கிற கெட்டித்தனம் நமக்கில்லாமல் போச்சே எண்டு கிடக்கு.
கிறிக்கெற்றை இரசித்திருக்கிறன். படிச்ச பள்ளிக்கூடச் சூழல் அப்படி அமைஞ்சது. "அட்றா மச்சான் பௌண்ட்றி சிக்சர்! போட்றா மச்சான் பொல்லுப் பறக்க!" எண்ட சுலோகங்கள் காதுக்குள்ளை கேள்க்க வைச்சிட்டீங்கள். வளர்த்த ஆடு, கோழி, நாய் எல்லாம் ஞாவகத்துக்கு வந்து போனது. ரியூசன் கொட்டிலுகளின்ரை அனுபவங்களும் மறக்க முடியாதது. மற்றவங்கள் வெளிவெளியாய்த் தன்னோடை சேர்த்து இனங் காட்ட விரும்பாத அந்தச் சந்திரன் மாஸ்ரரை நினவு கூர்ந்த வண்ணம் வாசிக்கக் கூடியதாய் இருக்கு.
போரின் சூழலில் கண்ட பல அனுபவங்களை மீட்டிப் பார்க்க உங்கடை எழுத்தும் தன்னுடைய பங்கை செய்திருக்கு. தானாக விரும்பியும், விரும்பாமலும் எங்களுக்காய் மாண்டுபோன எங்களுக்கு உறவான, நெருக்கமான, பழக்கமான, தெரிந்திருந்த மாணிக்கங்களையும் நினைவுத்திரையிலை கூட்டி வந்தது உங்கடை எழுத்து.
கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் சரித்திரப் பதிவுகளாய், மனசிலை ஆள்குமிச்சு நிற்கினம் உங்கடை கொல்லைப்புறத்துக் காதலிகள். வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி!
அன்புடன்
ந.குணபாலன்
nada.gunapalan@gmail.com
Comments
Post a Comment