திருட்டு

Mar 3, 2015 12 comments
இணையத்தில் திருட்டு என்பது கிட்டத்தட்ட திருட்டு வீ.ஸீ.டி க்கு இணையானது. படைத்தவனுக்குத்தான் அந்தவலி தெரியும். மற்றவன் கவலையே படுவதில்லை. நம்மில் பலருமே திருடர்கள்தான். லிங்காவில் பழைய ரகுமானை காணவில்லை என்று இணையத்தில் பாட்டை திருடிக்கேட்டுவிட்டு கொமெண்ட் போடுவோம். நகைக்கடையில் திருடிய நெக்லஸ் உனக்குவடிவா இல்லையடி எண்டு மனைவிக்கு சொல்லுவதுக்கு ஒப்பானது அது. இப்போதெல்லாம் பாடல்களை ஐடியூனில் காசு குடுத்து வாங்கலாம். ஆனால் திருட்டுப்புத்தி. பழகிவிட்டது. எம்முடைய கடைக்காரர்களுக்கும் திருடி விற்றே பழகிவிட்டது. தண்ணிமாதிரி கொப்பி, கொண்டுபோங்க என்னும்போது வெட்கமேயில்லாமல் வாங்கிவருவோம்.

பதிவுகள் எழுதும்போது நல்லபுகைப்படங்கள் தேவைப்பட்டால், கஜன் கேதாவிடம் முதலில் கேட்பேன். ஆனால் என் அவசரம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மறந்துவிடுவார்கள். வேறு வழியில்லாமல் இணையத்தில் திருடிவிடுவேன். நன்றி என்று சொல்லி போட்டாலும் திருட்டு திருட்டுத்தானே. லிங்கை ஷேர் பண்ணினால் வாசிப்பவர்கள் என் தளத்துக்கே வரவேண்டும். ஆனால் கொப்பி பண்ணிப்போட்டால் அது நடக்காது.

முக்கி முக்கி எழுதுவதை எந்தவித சங்கடமே இல்லாமல் முகநூலில் கொப்பி பண்ணுவார்கள். பெயர் குறிப்பிடமாட்டார்கள். சிலர் நல்லதுக்கு செய்வார்கள். சிலர் அறியாமல் செய்வார்கள். ஒரிரு வருடத்துக்கு முன்னர் என் கதையை யாரோ பேக் பெயரில் ஜெயமோகனுக்கு அனுப்பிவிட்டார்கள். சிலர் நானே வேறுபெயரில் அந்த கரி வேலையை செய்ததாக கூட நினைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை நான் செய்யமாட்டேன் என்பதை என் நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். நான் ஜெயமோகனுக்கு மறுப்பு கடிதம் அனுப்பியதும் அதே பேக் ஐடியில் எனக்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பினார்கள். முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள். நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்று எல்லோருக்கும் சொல்லுங்கள், மன்னிப்பு அப்புறம் என்றேன். பதில் இல்லை.

வியாழமாற்றம் எழுதினால் அதன் சில பகுதிகளை மாத்திரம் பேஸ்புக்கில் கொப்பி பண்ணி போடுபவர்கள் இருப்பார்கள். லிங்கை ஷேர் பண்ணுங்கள். கொப்பி பண்ணி போடவேண்டாம் என்று கொமெண்டு போட்டால், "நீங்கள்தான் அந்த பதிவை எழுதினீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்.

யாழ் இணையத்தளத்தில் ஆரம்பத்தில் என் பதிவுகளை இணைத்தேன். பின்னர் என் பதிவுகளை புத்தகமாக்கும் நோக்கில் இணைப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் வேறு பலர் கொப்பி பண்ணி போடத்தொடங்கினார்கள். போடாதீர்கள் என்றேன். கொப்பிபண்ணக்கூடாது என்று படலையில் குறிப்பிட்டால் கொப்பிபண்ணமாட்டோம் என்றார்கள். செய்தேன். தொடர்ந்தும் நடக்கிறது. என்ன செய்ய? அயர்ச்சியாக இருக்கிறது.

சுடரொளியில் கந்தசாமியும் கலக்சியும் தொடர் ஆரம்பித்தார்கள். ஐந்து பாகங்கள் எழுதிக்கொடுத்தேன். ஒவ்வொரு பாகம் வெளியானதும் பிடிஎப் அனுப்புவார்கள். பின்னர் அனுப்பவில்லை. நானும் எழுதிக்கொடுக்கவில்லை. அவர்களும் கேட்கவேயில்லை. தொடருக்கு என்னானது? கேட்டேன். படலையில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டோம் என்றார்கள். ஒருத்தன் தொடர் எழுதினால், குறைந்தபட்சம் வெளியான கொப்பியாவது கொடுக்கவேண்டாமா? நானா என் நாவலை வெளியிடக்கேட்டேன். இல்லையே?

மண்ணெண்ணெய் என்ற சிறுகதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தேன் (அதுகூட நண்பர் ஒருவர் கேட்டதுக்கு இணங்க). வாமுகோமு என்ற நடுவர் சொன்னார், அந்தக்கதை எப்போதோ தமிழ்நாட்டில் வெளியானதாம். மண்ணெண்ணெய் என் சொந்த அனுபவம், வேண்டுமானால் என் அக்காவிடம் கேட்டுப்பாருங்கள் என்று வாமுகோமுவிடம் எப்படி சொல்லுவது? போட்டிக்கு சிறுகதையை அனுப்பியது என் மடத்தனம். 

பலர் என்னை அதுக்கு எழுது, இதுக்கு எழுது என்பார்கள். எழுத்துலகில் சும்மாவிருந்தாலே தேடிவந்து அவமானப்படுத்துவார்கள். தேடிப்போக நான் தயாரில்லை. படலை. அதன் வாசகர்கள். இதுவே என் உலகம்.

யசோ அக்காவுடன் பேசும்போது அவர் சொன்னார். கொப்பி பண்ணினாலும் "நன்றி படலை" என்று போடுகிறார்கள்தானே. அதுக்குமேலே என்னவேண்டும்? நான் சொன்னேன்.

ஆச்சியின் தாலிக்கொடியை திருவிழாவில் திருடிவிட்டு "நன்றி அன்னலட்சுமி ஆச்சி" என்று சொல்லி தெருவிலே விக்கலாமா?

அக்கா எதுவுமே பேசவில்லை.

Comments

 1. நியாயமான ஆதங்கம்
  இப்படியான பதிவுகளை அண்மைக்காலமாக வாசிக்கின்றேன்
  விரைவில் இதற்கொரு மாற்றுவழி செய்யவேண்டும்

  ReplyDelete
 2. உங்கள் ஆதங்கம் 100% புரிகிறது - மனம் வருந்தும் அதேநேரம் இறுதியில் சொன்னதை வாசித்து மனம் விட்டு சிரித்ததையும் இதில் பதிவுசெய்கிறேன்!! Uthayan.

  ReplyDelete
  Replies
  1. நன்றி உதயன். இது அழுகாச்சி பதிவில்லை. சிரிக்கிறதில பிழையில்ல.

   Delete
 3. இந்த ஆதங்கத்திற்கு விடிவு ஏற்படாது.

  ReplyDelete
 4. ஓர் படைப்பாளி என்றவகையில் நான் உங்கள் பக்கமே. ஒருவன் எழுதுவதற்கு எவ்வளவு தூரம் தன்னை வருத்துவான் என்பதை இந்த நோகாமல் நொங்கெடுக்கும் கிரகங்கள் விளங்கியும் விளங்காத மாதிரி நடிப்பதுதான் எனக்கு இன்னும் கோபத்தை வரவழைக்கும். ஆனால் எப்பிடித்தான் இவர்கள் உல்ட்டா பண்ணினாலும் படலை பாடலைதான். கோமகன் கோமகன் தான் .

  ReplyDelete
  Replies
  1. உண்மை அண்ணே. அதிலும் காட்டுகிற தெனாவட்டு தாங்கேலாது. அமுதவாயந்தான் சரி.

   Delete
 5. "லிங்கை ஷேர் பண்ணுங்கள். கொப்பி பண்ணி போடவேண்டாம் என்று கொமெண்டு போட்டால், "நீங்கள்தான் அந்த பதிவை எழுதினீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்".....Sivaji padathile varra mathiriya? Nice rejoinder. I could not help smirking at your frustration and anger

  ReplyDelete
 6. "பதிவுகள் எழுதும்போது நல்லபுகைப்படங்கள் தேவைப்பட்டால், கஜன் கேதாவிடம் முதலில் கேட்பேன். ஆனால் என் அவசரம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மறந்துவிடுவார்கள். வேறு வழியில்லாமல் இணையத்தில் திருடிவிடுவேன். "

  இதையும் சொல்லிவிட்டு "ஆச்சியின் தாலிக்கொடியை திருவிழாவில் திருடிவிட்டு "நன்றி அன்னலட்சுமி ஆச்சி" என்று சொல்லி தெருவிலே விக்கலாமா?" என்று நியாயம் வேறே.

  நீங்களும் படங்களை லிங்க் பண்ணி அதனை மட்டும் காட்ட frame போட்டு code எழுதிப் பாருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கேள்வி ஞாயமானதே. இது ஆரம்பம்தொட்டு எனக்கு இருக்கும் சங்கடம். இப்போது மிகவும் அதனை குறைக்கத்தொடங்கியிருக்கிறேன்.

   பொதுவாக பாவிப்பது

   1) நண்பர்களின் படங்கள். முகநூலில் எடுத்தால் எப்போதும் முன் அனுமதி கேட்பேன்.
   2) Creative Commons License உள்ள படங்களுக்கு அது தேவையில்லை.
   3) கூகிள் இமேஜில் சேர்ச் பண்ணும்போது யூசேஜ் பில்டர் பயன்படுத்தல்.
   4) படப்போஸ்டர்கள், விளம்பர படங்கள், நடிகர் படங்கள் மீடியா ரிலீசாக வெளியாகும் விஷயங்கள்.

   இவை எல்லாம் தாண்டியும் ஓரிரு படங்கள் தவறிவிடும். அதனையும் நிவர்த்தி செய்வேன். இவ்வளவு ஓபனாக எழுதியவன் இவற்றையெல்லாம் யோசிக்கமாட்டான் என்று நினைத்து நீங்கள் ஏளனம் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது. புதிதில்லை. இன்னுமொன்று. திருட்டு வீசிடியில் படம் பார்ப்பவன் வீட்டில் திருட்டுப்போனால் அவன் புலம்புவானா இல்லை பேசாமல் இருப்பானா? புரிந்துகொள்ளுங்கள்.

   (அடுத்தமுறை இயலுமாயின் பெயரை குறிப்பிடுங்கள்)

   Delete

Post a comment

Contact form