ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி

Nov 10, 2016 2 comments
"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்"


நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார்.

அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது.

ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று.

ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.

இன்றைய திரைப்படங்களும் நேர்கோட்டுத்தன்மையில் வெளியாவதில்லை. அதனால் 1950 - 60 களில் வெளியான தமிழ்ப்படங்களின் கதைகளை அம்மாவின் வாயால் கேட்டதுபோன்று தற்காலப்படங்களின் கதைகளை கேட்கமுடியவில்லை. 

இந்த நாவலின் வாசிப்பு அனுபவத்தையும் ஒரு நேர்கோட்டில் பதிவுசெய்ய இயலவில்லை. 

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அந்தக்காலைப்பொழுது புலரும் வேளையில், அவ்வூர் கந்தசாமி சுருட்டைப்புகைத்துக்கொண்டு வீட்டின் பின்வளவுக்குச்செல்லும் காட்சியுடன் நாவல் தொடங்குகிறது.

பின்னணியில் தூரத்துக்கோயில் ஸ்பீக்கர் " சஷ்டியை நோக்க" ஆரம்பிக்கிறது. 

உலகெங்கும் கந்தசஷ்டியை எம்மவர்கள் சூரன்போருடன் கொண்டாடி முடித்த தருணத்தில் ஜே.கே.யின் படைப்பிற்குள் பிரவேசிக்கின்றேன்.

இத்தருணம் இலங்கையில் ஒரு தமிழ்க்குடும்பத்தலைவன், " தனக்கு மனைவி மீன் கறி சமைத்துத்தரவில்லை என்ற கோபத்தில் அடித்துவிட்டான் " என்ற செய்திவருகிறது. காரணம் மனைவி கந்தசஷ்டி விரதத்தில் இருந்தவள். கணவனின் அடி ஆக்கினை பொறுக்காமல் பொலிஸ்நிலையம் வரையில் சென்றதால் செய்தி ஊடகத்திற்கு கசிந்திருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க்குடும்பப்பெண்கள் இதுவிடயத்தில் பாக்கியசாலிகள். கணவர்மார் அவர்களுக்கு விதம் விதமாக சமைத்தும் கொடுத்து, பெட்கோப்பி தந்தும் துயில் எழுப்புவார்கள்.

ஆனால், கதையின் நாயகன் கந்தர்மடம் கந்தசாமிக்கு அந்தப்பாக்கியம் ஏதும் இல்லை. மனைவி செல்வராணி, கனடாவுக்கு குடிபெயர்ந்து சென்று அகதி கேஸ் போட்டு அங்கேயே செட்டில். அதனால் மனைவிக்கும் அந்தப்பாக்கியம் கிட்டவில்லை. 

கந்தசாமிக்கு கனடா செல்லும் பாக்கியம் இல்லை. 

ஏன்....?

கந்தர்மடத்தில் வீட்டுக்குப்பக்கத்திலிருந்தது ஆர்மி காம்ப். கணவர் கந்தசாமி கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். அதனால் மனைவி திரும்பிச்சென்றால் உயிருக்கு ஆபத்து. அகதி வழக்கறிஞர் செல்வராணிக்கு கதை சோடிக்க கந்தசாமி காணாமலாக்கப்பட்டார்.

ஆனாலும் மனைவியின் டோல் காசில் மாதாந்தம் கந்தசாமிக்கு இருநூறு டொலர்கள் வருகின்றன.

கையில் சுருட்டுடன் காலைக்கடன் கழிக்கச்செல்லும்போதும், கந்தசாமிக்கு, அந்த வாழ்வில் விரக்தி வருகிறது. தன்மீதே கழிவிரக்கப்படும் அப்பாவியாக " என்ன சீரழிஞ்ச சீவியம் இது. இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இப்படி தனியக்கிடந்து சில்லுப்படோணுமோ தெரியேல்லை. பேசாமப் போய்ச்சேர்ந்துட்டாலும் காரியமில்லை" என்று அலுத்துக்கொள்கிறார்.

அவரை வழக்கமாக நாம் சொல்லும் மேல் உலகத்திற்கு அனுப்பாமல், கலக்சிக்கு அனுப்பி வேடிக்கை காட்டுகிறார் ஜே.கே. உடன் செல்வது சுமந்திரன்.

இதில் வரும் பெயர்களும் ஊர்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே என்று கதிர்காமக்கந்தன் மீதும் சத்தியம் செய்கிறார் இதனை எழுதிய படைப்பாளி ஜே.கே.

சாருநிவேதிதாவும் பிரச்சினைக்குரிய தமது ராஸ லீலா நாவலின் முகப்பு அட்டையிலேயே, " இந்த நாவலில் வரும் பெயர்கள், சம்பவங்கள், யாவும் கற்பனையே, யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல" என்று சத்தியவாக்களிக்கிறார்.

ஜே.கே. சொல்லத்தொடங்கிய கந்தர்மடம் கந்தசாமியின் கதை, இறுதியில் முருகனும் குவேனியும் சல்லாபத்திலிருக்கும் வேளையில் அண்டை நாடு இந்தியாவிலிருந்து விஜயன் தன்னுடைய எழுநூறு சாகக்களுடன் கப்பலில் வந்து ஈழத்துக்கரையை அண்மித்துக்கொண்டிருப்பதில் முற்றுப்பெருகிறது.

முருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள். குவேனி இலங்கைக் கானகத்தின் ராணி என்கிறது மகாவம்சம். விஜயன் வருகிறான்.

இப்படி இருக்கையில் பாரதியார், ஏன் " சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று பாடினார் என யோசிக்கத்தோன்றுகிறது.

கந்தர்மடம் கந்தசாமியும் அவர் நண்பன் சுமந்திரனும் அடிக்கும் லூட்டி நாவல் முழுவதும் விரவிக்கிடக்கிறது. சிரித்துக்கொண்டே வாசிப்பு பயணத்தை தொடருகின்றோம்.

"ஜே.கே." என்ற ஜெயகாந்தனிலிருந்து எனது இலக்கிய வாசிப்பு அனுபவம் தொடங்கி, இன்று அவுஸ்திரேலியாவில் மற்றும் ஒரு "ஜே.கே." என்ற ஜெயக்குமாரனில் வந்து நிற்கிறது.

இது தொடரும் பயணம். நாளை மற்றும் ஒரு தீவிரமான எனக்குப்பிடித்தமான படைப்பாளியை நான் சந்திக்கலாம்.

அவுஸ்திரேலியா ஜே.கே. எழுதிய கொல்லைப்புரத்துக்காதலிகள் படித்ததிலிருந்து தொடர்ந்து இவருடைய படலை வலைப்பதிவு மற்றும் புதிய சொல் என்ற காலாண்டிதழில் வெளியாகும் இவரது படைப்புகளையும் ஆர்வமுடன் படித்துவருகின்றேன். 

வாசகர்களை முற்றிலும் புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும் கலையில் தேர்ந்தவர் இவர்.

சமகாலத்தில் எனக்குப்பிடித்தமான படைப்பாளிகளில் ஜே.கே.யும் ஒருவர்.

கந்தசாமியும் கலக்சியும் வாசித்துக்கொண்டிருந்தபோது, "மற்றொருவரின் ஆளுமையில் புகுந்து கற்பனையாக அவரது அனுபவத்தை அனுபவித்தல்" என்ற சாருநிவேதிதாவின் ஒரு கூற்று நினைவுக்கு வந்தது.

எனது வாசிப்பு பெரும்பாலும் ரயில்பயணங்களில்தான் சாத்தியம். அதனால் சிலருடைய படைப்புகளை மிகுந்த எச்சரிக்கையுடன்தான் வாசிப்பேன்.

மௌனவாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைகளை அடக்குவது ரயில்பயணத்தில் சிரமம். வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது எமது முன்னோர் வாக்கு. விஞ்ஞானபூர்வமாகவும் சிரிப்பு நல்ல மருந்து என ஆராய்ந்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் மீதான பழிவாங்கும் குணம், கோபம், பொறாமை, எரிச்சல் என்பன உடனிருந்து கொல்லும் நோய். ஆனால், புன்னகையும் பல்லுத்தெரிய மலரும் சிரிப்பும் ஆரோக்கியம் தருவது.

அ.முத்துலிங்கத்தின் படைப்புகளுடன் ஒன்றிக்கும்பொழுது புன்னகை உடன் பயணிக்கும். அதுபோன்று ஜே.கே.யின் எழுத்துக்களை படிக்கும்போது வெடித்துச்சிரிக்கும் அனுபவம் வந்திருக்கிறது. அதனாலும் ஜே.கே. எனக்கு பிடித்தமான படைப்பாளியாகிவிட்டார். 

அறிவியல் கதைகளினூடு சமூக நையாண்டிகளைப் புதுமையாகக்கொடுத்த ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் அடம்சுக்கு இந்த நூலை ஜே.கே. சமர்ப்பித்திருக்கிறார். அந்த ஆதர்சத்திலிருந்துதான் இவரின் படைப்புகளை தரிசிக்க முடிகிறது. 

சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய மேடைப்பேச்சுக்கள் இரண்டு ஆதர்சங்களின் பெயர்களிலிருந்தே தொடங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஆனால், காலம் இவரை மாற்றியிருக்கிறது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பற்றிய அறிமுகம் வாசகர்களுக்கு அவர் மீது அனுதாபத்தையே வரவழைக்கிறது. கச்சேரியில் காணிப்பதிவு பிரிவிலே ஒரு கிளார்க்காக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு, ஊரில் தனி மரியாதை. அங்கீகாரம். செல்வாக்கு. பதவிகள் தேடி வருகின்றன. பதவிகளை தேடிச்செல்லும் இயல்பும் உருவெடுக்கிறது. பாராட்டு , பூமாலை, பொன்னாடை, வாழ்த்துக்கவிதை யாவும் கிடைக்கின்றன. பத்திரிகைகளிலும் அவரது படம் அவ்வப்போது வருகிறது. ஆனால் , இந்த வசந்தகாலக்காட்சிகளை பார்த்து உள்ளம் பூரிக்க மனைவி செல்வராணியும் பிள்ளைகளும் அருகில் இல்லை.

செல்வராணியுடன் தொலைபேசியில் பேசுவதும் அவருக்கு அபூர்வமான தருணங்களாகிவிட்டன. அவவுக்கு இவர் தொலைபேசி எடுக்கும் நேரத்தில் கனடாவில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்நாடகம் பார்க்கும் வேளை அவளுக்கு வருகிறது. 

கந்தசாமி ஒரு பாடசாலையில் பேசவேண்டிய உரையை மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் போது - அடுத்த அத்தியாயம், அவர் பற்றியல்ல, மன்னார் நானாட்டான் பகுதியைச்சேர்ந்த அச்சன்குளம் என்னும் குக்கிராமத்தைச்சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் மனோதத்துவப்பிரிவில் மூன்றாம் வருடம் பயிலும் மாணவி மைதிலி பற்றிய கதைதான் வருகிறது.

அவளது மனக்குழப்பங்களுக்கு தீர்வு கிட்டுவதற்கு முன்னர், அடுத்த அத்தியாயம், கந்தசாமி தேநீருக்காக கேத்திலை அடுப்பில் வைப்பதில் தொடங்குகிறது.

இவ்வாறு இந்த நாவல் நேர்கோட்டிலிருந்து விலகி திசை மாறிக்கொண்டிருக்கிறது. கதைசொல்லும் உத்தியில் இந்தப்பாணியில்தான் இன்றைய இலக்கியங்கள் வாசகர்களின் சிந்தனையில் ஊடுறுவுகின்றன.

அறுபத்தாறாம் ஆண்டில் கந்தசாமியின் திருமணம் ஒரு இரவுவேளையில்தான் நடந்திருக்கிறது. அவர்களின் முதல் இரவு காட்சிகள் சுவாரஸ்யமானவை. புதுமாப்பிள்ளைக்கணவன் தரும் வெட்கம் ததும்பும் முத்தத்தை ஏற்கையில், மனைவி செல்வராணிக்கு மெயில் டிரெயினில் கொழும்புக்கு போகிற பீலிங்தான் வருகிறது.

அது என்ன பீலிங்...? அனுபவித்தவர்களிடம்தான் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும். 

கந்தசாமியையும் அவர் மனைவி செல்வராணியையும் பல்கலைக்கழக மாணவி மைதிலியையும் முதல் அத்தியாயங்களில் அறிமுகப்படுத்தும் ஜே.கே., அடுத்து நல்லூரடி ஆர்மி கொமாண்டர் சோமரத்னவை அறிமுகப்படுத்துகிறார்.

அவன் உடுகமவில் ஒன்பது பேருள்ள வறிய விவசாயக் கூலிக்குடும்பத்தில், நான்காவது மகன். ஓ.எல். படிக்கும்போதே, கூடப்படித்த துலிக்காவுடன் அவனுக்கு காதல் மலருகின்றது. கள்ள சேர்டிபிக்கேட் தயார் செய்து ஆர்மியில் இணையும் அவன், மேஜர் தரத்திற்கும் உயருகின்றான். 

இவ்வாறு ஒவ்வொரு பாத்திரங்களையும் புள்ளிகளாக்கிவிடும் ஜே.கே. எப்போது எல்லாப்புள்ளிகளையும் மொத்தமாக இணைப்பது என்று யோசிக்கிறார். அதற்கு இந்த நாவல் நிகழ்த்தப்படவேண்டும் என்ற முடிவோடு, கந்தசாமியின் சீதன வீட்டை இடிப்பதற்கு மேஜர் சோமரத்னவை ஒரு புல்டோசருடன் அழைக்கிறார். 

வீட்டை இடிக்க வந்துள்ள புல்டோசருக்கு முன்னால் படுத்து அகிம்சைப்போராட்டத்தை கந்தசாமி தொடங்கும்போது அவருடைய நண்பர் சுமந்திரன் ஒரு சைக்கிளில் வந்திருங்குகிறார்.

இங்கிருந்து சுமந்திரனுக்கும் கந்தசாமிக்கும் மேஜர் சோமரத்னவுக்கும் இடையே நடக்கும் உரையாடலைப்படித்தபோது வயிறு குலுங்க சிரிக்கநேர்ந்தது.

கந்தசாமிக்குச் சுமந்திரன் ஒரு மெண்டலா என்ற சந்தேகம் நீண்டநாட்களாகவே இருந்தது. கந்தசாமிக்கு என்றில்லை சுமந்திரனைத்தெரிந்த பலருக்கும் இதே சந்தேகம்தான் என்று தொடங்குகிறது ஒரு அத்தியாயம்.

இந்த இடத்தில் சுமந்திரன் என்ற பாத்திரம் ஒரு குறியீடாகிறது. 

மேஜர் சோமரத்னவையும் சமாளிக்கவேண்டும். கந்தசாமியின் சீதன வீட்டையும் புல்டோசரிடமிருந்து காப்பாற்றவேண்டும், கந்தசாமிக்கும் மூளைச்சலவை செய்யவேண்டும். முத்தரப்புடனும் சமரசத்திற்காக இயங்கும் சுமந்திரன் ஒரு விடயத்தை எனக்கு நினைவூட்டிய பாத்திரம்.

" இலங்கைத் தமிழரின் இனவிடுதலைப்பாதையின் தொடக்கத்தில் அகிம்சைப்போராட்டம் நடந்தது. பின்னர் ஆயுதப்போராட்டம். தற்பொழுது இராஜதந்திரப்போராட்டம்." என்று அந்தப்பெயருள்ள ஒரு தமிழ்த்தலைவர் மெல்பனில் சொன்னது நினைவுக்கு வந்தது.

இந்நாவலில் மிகிந்தர்களும் வருகிறார்கள். அன்பு அறிவிப்பாளர் பி.எம். ரியாஸ் ஹமீதும் வருகிறார். கலக்சியில் சங்கமிக்கும் ஐதீகம், புராணம், வரலாறு, பிரகராதி என்னும் தகவல் களஞ்சியம் என்று கதை எங்கெல்லாமோ சுற்றிச்சுழன்று வருகிறது.

இடையில் பிரம்மாவும் விஷ்ணுவும் அடி முடி தேடும் படலமும் வருகிறது. எதனையும் அங்கதச்சுவையுடன் சித்திரிப்பதில் ஜே.கே. சமர்த்தர். இந்நாவல் முழுவதும் விரவிக்கிடப்பது அங்கதம்தான். சாதராண மொழியில் நையாண்டி, நக்கல், கேலி, குசும்பு என்கின்றோம். 

தமிழில் இவ்வகைப்படைப்புகளில் புதுமைப்பித்தன் முதன்மையானவர். பாரதியும் தமது உரைநடை இலக்கியத்தில் இத்தன்மைகளை கொண்டிருந்தவர்.

வாசிப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் எழுத்துக்களை எழுதிவரும் ஜே.கே. , சமூகம் குறித்த விமர்சனத்தை ஆத்திரத்தோடு முன்வைக்காமல் அதிலிருக்கும் அபத்தங்களை விமர்சிக்காமல், அங்கதச்சுவையுடன் சித்திரிக்கிறார். 

மனிதவாழ்க்கையே அபத்தங்களின் சாக்கு மூட்டை என்றே தமது முன்னுரையையும் தொடங்கியிருக்கிறார். மனிதர்கள் தமக்குள் நாடு பிரித்து, இனம் பிரித்து , சாதி பிரித்து பல்வகை இயல்புகளுடன் உணர்ச்சிவயப்பட்டு, நாட்டுக்காக வீட்டுக்காக காதலுக்காக அடிபட்டு இருக்கின்ற ஒரே ஒரு உயிரையும் துறக்கத்துணிந்து, பதவிப்போட்டியில் சுகம் கண்டு, ஏதேதோ செய்கின்றார்களே...!!! எதற்காக...?

இறுதியில், ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கட்டிலில் ஓக்சிஜன் முகமூடி, சேலைன், சுற்றிவர கண்ணைக்கசக்கி நிற்கும் சுற்றத்தையெல்லாம் விட்டுவிட்டு டிக்கட் எடுத்துவிடுகிறோமே... அதன் பிறகு எங்கே போகிறோம்....? தெரியாது...! எங்கேயாவது நிச்சயமாகப்போவோமா...?

இந்தக்கேள்விகளுக்கு பதில் அனைத்துமே அபத்தம் என்பதுதான். கலக்சியில் தோன்றும் அமானுஷ்ய சக்திகளுடன் மனித குலத்தை இணைத்து வாழ்வின் அபத்தத்தை அம்பலப்படுத்துகிறது இந்த நாவல்.

இந்த நாவலைப்படித்து முடித்தவேளையில், எங்கோ அமெரிக்காவில் வசிக்கும் ஹிலரி கிளின்டன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, ஈழத்தில் நல்லூரில் ஒரு தமிழ்த்தலைவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை அடித்து உடைத்து நேர்த்திவைத்த அபத்தம் நடக்கிறது.

கிளிநொச்சியில் அதேகாலப்பகுதியில் ஒரு இளம்தாய் கடன் தொல்லையால் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யும் செய்தியும் வருகிறது.

நல்லூரில் உடைத்த தேங்காய்களின் பெறுமதி என்ன...? என்ற கேள்வி சமகால அரசியல் அபத்தங்களில் தொனிக்கிறது. 

இந்த வாழ்வியல் அபத்தங்களை ஒரு படைப்பாளியினால் அங்கதச்சுவையில்தான் சொல்ல முடிகிறது. அதனால்தான் யாவும் கற்பனை என்ற ஒற்றை வார்த்தையை படைப்பாளி உச்சரிக்கின்றான்.

கந்தர் மடம் கந்தசாமியும் அவரால் நம்ப முடியாதிருக்கும் சுமந்திரனும், கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் காணாமல் போய்விட்டதாகச்சொல்லி அந்நிய தேசத்தில் அடைக்கலம் தேடி தொலைபேசியிலும் இல்லறத்தாம்பத்தியம் பேணாமல் தொலைக்காட்சி தொடரில் மனைவி மூழ்குவதும் வாழ்வியலின் அபத்தத்தில் ஒரு பதச்சோறுதான். 

விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர் வல் அன்று செய்ததை இன்று ஜே.கே. செய்துள்ளார்.

இந்நாவலை கிளிநொச்சி மகிழ் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

- முருகபூபதி

Comments

  1. Our calla eluththaalan theerntha vaasakan enpathai unarthukiraar murukapoopathi. vaalththukkal jk , nanri murukapoopathi pookira vekaththil summa kadakkaamal jk vin padalayil pootha mallikai nithanamaai rasiththu irukkureerkal.

    ReplyDelete
    Replies
    1. I will convey the message. He is a versatile open minded reader.

      Delete

Post a comment

Contact form