Skip to main content

தமிழில் ஒலிப்புத்தகங்கள்

வேலை மாறியதன் விளைவாக ரயில் பயணங்களில் புத்தகம் வாசிப்பதை வெகுவாக மிஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ஆபத்பாந்தவராக எனக்கு ஒலிப்புத்தகங்கள் வந்துசேர்ந்தன. நான் முதலில் கேட்க ஆரம்பித்தது தாஸ்தாயேவ்ஸ்கியின் இடியட் நாவலை. மொத்தமாக நான்கு பாகங்கள். புத்தகமாக வாசித்தால் எழுநூறு பக்கங்கள்தான் வந்திருக்கும். ஆனால் அந்த ஓலிப்புத்தகம் முப்பது மணித்தியாலங்கள் நீளமானது. கொஞ்சம் அகலக்கால்தான். நட்டாசியா பிலிப்போவ்னா மாதிரியான ஒரு பெண் பாத்திரத்துக்காகவே பொறுமையாகக் கேட்டு முடித்தேன். ஒரு மாதம் எடுத்துவிட்டது. அச்சடித்த புத்தகங்களை மடியில் வைத்து வாசம் பிடித்து வாசித்தவனுக்கு இடியட் நாவலைக் கேட்ட அனுபவம் ஒலிப்புத்தகங்கள் மீது நம்பிக்கையை வரவழைத்தது.
Amazon நிறுவனம் audible.com என்று ஒலிப்புத்தகங்களுக்கு என்றே தனியாக சேவை ஒன்று வைத்திருக்கிறது. மாதம் பதினைந்து டொலர்கள் கட்டணம் கட்டவேண்டும். மாதாமாதம் ஒரு ஒலிப் புத்தகத்தை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். கேட்டு முடிந்தால் அதனை ரிட்டேர்ன் பண்ணிவிட்டு இன்னொரு ஒலிப்புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை வாசித்துக் குவித்து வைத்திருக்கிறார்கள். அன்டன் செக்கோவ் முதல் அசோகமித்திரன்வரை வாசிக்கலாம். ஐ மீன், கேட்கலாம். மகிழுந்து ஓட்டும்போது, உடற்பயிற்சியின்போது, சமைக்கும்போது, இலக்கிய விழாக்களின்போது, யாராவது போன் எடுத்து அட்வைஸ் பண்ணும்போது ... கேட்பதற்கு ஒலிப்புத்தகம் டெய்லர் மேட்.
ஓடிபிலில் சந்தாதாரராகி பிள்ளையார் சுழி போட்டது அசோகமித்திரன் சிறுகதைகளில்தான். மூன்று மணிநேரம் புத்தகம். தன் குரு இறந்துவிட்டார் என்று அவருடலை மலையடிவாரத்துக்குக் கொண்டுசெல்லும் சீடனின் கதையொன்று உளது. மரணம். “அப்பாவின் சினேகிதர்” என்று ஒரு கதை. அலட்டல் இல்லை. அதிகாரம் இல்லை. உரத்துப்பேசும் நடை இல்லை. ஆனால் அப்படியே உள்ளிழுக்கும் மொழி. மொழி சுமந்துவரும் உணர்ச்சி. உணர்ச்சி உள்ளிருந்து கொடுக்கும் அலைக்கழிப்பு. தன்னைச் சுற்றிவளைத்துத் தாக்கத்தயாராகும் ஓநாய்களோடு தத்துவவிசாரணை செய்யும் பாத்திரங்களை உருவாக்கும் தைரியம் அசோகமித்திரனுக்கு எங்கிருந்து வந்தது? அசோகமித்திரன் சிறுகதைகளை முடிக்கும் பாங்கு இருக்கிறதே; அவரை வாசித்துவிட்டு எழுத உட்கார்ந்தால், “அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிடப்போகிறீர்? சொல்லுங்காணும்?”.
அசோகமித்திரன் முடிந்ததும் நான் தாவியது இந்திரா பார்த்தசாரதியிடம். அநேகமான கதைகள் பிராமணச் சாதி சார்ந்தவை. அச்சாதிக்குள்ளேயே உள்ள ஏற்ற இறக்கங்கள், பிராமணத் தலித்துகளின் அவலம் பற்றிப் பேசுபவை. எப்போது ஒரு வீட்டில் இழவு விழும் என்று காத்திருக்கும், வைதீகம் செய்கின்ற வைணவப் பிராமணர் ஒருவரின் கதை. நாட்கணக்கில் ஒழுங்கான சாப்பாடு இல்லை. அவருடைய அழுக்குப் பூணூல் முதுகில் கடித்துக் கடித்துச் சொறி வந்துவிட்டது. ஆனால் அம்மா சொன்னாரே என்பதற்காக அதனைக் கழட்டாமல் சமாளித்து வருகிறார். பிச்சை எடுக்காமல் வாழவும் தலைப்படுகிறார். ஆனால் ஏழைத் தலித்துகளுக்கு அரசியல்வாதி இலவசமாகச் சாப்பாடு போடுகிறார் என்றதும் பசி எல்லாவற்றையும் மறக்கடிக்கப்பண்ணிவிடுகிறது.
ஈழத்து எழுத்தாளருக்குப் போர்போல, ரமணிச்சந்திரனுக்கு ரொமாண்டிசிசம்போல, தமிழ்நாட்டுக்காரருக்கு ஆஸ்பத்திரி என்று நினைக்கிறேன். அடித்தாளும் களம். நானறிந்து எல்லா எழுத்தாளர்களும் ஒரு ஆஸ்பத்திரிக்கதை எழுதியிருக்கிறார்கள். எல்லாமே சிறப்பாகவே வந்திருக்கின்றன. அசோகமித்திரனும் எழுதியிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருக்கிறார். சுஜாதாவுக்கு நகரம் இருக்கிறது. ஐம்பது வருடங்களில் ஆஸ்பத்திரிக்கதைகள் எப்படி உருமாறியிருக்கின்றன என்று அ. இராமசாமியின் மாணாக்கர் யாராவது கூடிய விரைவில் ஆராய்ச்சி செய்வார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்பத்திரி இலக்கியங்கள் என்று தனியாக ஒரு கூட்டம் போடலாம்போல இருக்கிறது. அல்லது குளிக்கும்போது பேசிக்கொள்ளலாம். இரண்டுமே ஒன்றுதான்.
அசோகமித்திரனின் சிறுகதைகளை வாசித்தளித்தவர் திருப்பூர் கிருஷ்ணன். கதை சொல்லி என்ற பதத்தின் வரைவிலக்கணத்தை மாற்றியமைத்திருக்கிறார் கிருஷ்ணன். அவரே ஒரு பாத்திரமாகி உணர்ச்சிகாட்டி ஆனால் மேலிடாமல் ஒரு மெல்லிய நீரோடைபோல வாசித்திருப்பார். இந்திரா பார்த்தசாரதியை வாசித்தவர் அனுராதா. இன்னொரு சிறந்த கதை சொல்லி. தொடர்ச்சியாகப் பிராமணக் கதைகளையும் உச்சரிப்புகளையும் கேட்டதோ என்னவோ, ஒரு ஸ்டீரியோ டைப்பிங் தொற்றிக்கொண்டுவிட்டது. போன்பண்ணி “இன்னிக்கு நா ஆத்துக்கு வர ரொம்ப லேட்டாகும்னு நினைக்கறேன். வேலை, வேலைன்னு படுத்தறா, பசிக்கறது, நீ அந்த வத்தக்குழம்பு செஞ்சு வைக்கிறியா? நெனைக்கும்போதே கமகமக்கறது பாரு” என்றேன். பாரு கட் பண்ணிவிட்டாள்.
ஒலிப்புத்தகங்கள் தமிழில் மிகச்சிலவே கிடைக்கின்றன. கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஆதவன் என்று சில கிளாசிக்குகள், மற்றும்படி "காம்ரேட் பிடல் காஸ்ட்ரோ", "மிட்டல்" வகைப் புத்தகங்கள். Contemporary எழுத்துகள் எதையும் காணக்கிடைக்கவில்லை. அவற்றை ஒலிப்புத்தகமாக்குவதும் அவ்வளவு இலகுவான காரியமாகத் தோன்றவில்லை. வெண்முரசு கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுவதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. சாரு நிவேதிதாவை எப்படி ஒலிப்புத்தமாக வாசிப்பார்கள்? "பெருமாள் மேசையில் கைகளை ஊன்றியவாறு குனிந்து நின்றான்" , அதற்கப்புறம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கொடுத்தாலும் அனுராதா வாசிக்கப்போவதில்லை. இதில் குற்றம் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. ஒலிப்புத்தகங்களை எத்தனைபேர் கேட்பார்கள் என்பதுஞ் சந்தேகந்தான். இந்த முயற்சியைச் செய்யும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் சுயநலம் சார்ந்த நன்றிகள்.
இதை வாசிக்கும் ஒரு சிலரேனும் audible ஐத்தொடருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன். கேதாவுக்கு அறிமுகப்படுத்தியதும் சிக்கெனப் பிடித்துக்கொண்டான். எப்.எம்மில் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”, “பிராட்பிட் அன்ஜெலினா பிரிவுக்கு பிரெஞ்சு அழகிதான் காரணமா?” போன்ற முக்கிய லோகியல் விடயங்களிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புபவர்கள் ட்ரை பண்ணலாம். மகிழுந்தில் பாட்டுக் கேட்பது இன்பம்தான். ஆனால் ஒலிப்புத்தகங்கள் கேட்பதற்கு அவை ஒருபோதும் ஈடாகா.
முதல்மாதம் ட்ரையல். இலவசம். ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.