Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் - கார்த்திகா

நீண்டதொரு ரயில் பயணம், நீண்ட நாட்களின் பின்னான நல்லதொரு நாவலும்,என் தமிழ் எழுத்தும்.

கடுகதி ரயில் சேவை என்று கடைசியில் கடுகடுப்பாக்கிய 12 மணித்தியாலங்கள்,ஆபத்பாந்தனாய்
"கந்தசாமியும் கலக்சியும்"

முன் பின் தெரியாதவர்களிடம் அவ்வளவாக பேச்சுக் கொடுக்கமாட்டேன்,ஆனால் அவர்கள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் என் பூர்வீகம் முழுவதும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்,பதிலுக்கு அவர்கள் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் என்று மட்டும் தெரிந்து கொள்வேன்.அப்படிப்பட்ட சக பயணியிடம் தப்பிப்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் ஆயுதங்கள் ஒன்று புத்தகம்,இன்னொன்று நல்ல மலையாளப்படம். அச் சகபயணி கொழும்பு பயணத்தை ரத்து செய்து இன்னுமொரு அரைமணித்தியாலதில் அநுராதபுரத்தில் இறங்கிவிடுவார் என்ற செய்தி லாட்டரிச்சீட்டு விழுவதைப்போல.லாட்டரிச்சீட்டு விழுகிறதோ இல்லையோ எனக்கு அவாட ஜன்னல் சீட்டு confirm.பிறகென்ன , ஜன்னலோரம் ,ரயில் பயணம், தனிமை,புத்தகம்,கையில் ஒரு hot coffee இல்லாததுதான் குறை.ஸ்டார்ட் த மியூஜிக்.

ஜேகே அண்ணா,உங்களுடைய "கொல்லைப்புறத்து காதலிகள்" பற்றியே முதல் பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஏதேதோ காரணங்களால் அது முடியாமற் போனது.கொல்லைப் புறத்துக் காதலிகளின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும் உள்ளூரப்பூரிப்பு.நீங்கள் பயணித்த இடங்களில்,பழகிய மனிதர்களில்,விளையாட்டுகளில்,பழக்க வழக்களில்,மொழியாடல்களில் என எல்லாவற்றிலும் எனக்கும் பரிச்சயமுண்டு.That "same blood"moments.உங்களின் சில காதலிகளை நானும் சைட் அடித்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்."காதலிகள்" என்று சொல்லமுடியாது,உங்கள் கதைக் களம் அமைந்த காலப்பகுதிகளில் எனக்கு 8/9 வயதிருக்கும் என நினைக்கிறேன்.ரங்கனைப் பற்றிய சில ரகசியங்களைக்கூட உங்கள் புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.நான் சொல்ல வந்தது என்னவென்றால் அன்றிலிருந்து நான் உங்கள் எழுத்துகளின் விசிறி.

கொல்லைப்புறத்து காதலிகளில் முழுக்க முழுக்க யாழ்ப்பாண மண்வாசனை கமழ்கிறது. அட!யாழ்ப்பாணத்துக்கு ஒரு பாரதிராஜா சிக்கீட்டான்யா என நினைத்துத் திரும்புகையில் இந்தப்பக்கம் கந்தசாமியும் கலக்சியும் மண்ணையும் விண்ணையும் தாண்டி வேறு உலகத்திற்குக் கூட்டிச்செல்லும் யாழ்ப்பாண நெடி கலந்த ஒரு science fiction.இரண்டாவது நூலிலேயே இப்படி ஒரு versatility கொண்டு வருவது ஆச்சரியம் .

இந்த புத்தகம் படிக்க படிக்க எனது மனவோட்டம் இதுதான் ,இந்த மனிதர் எப்படி உருவாகியிருப்பார்.

என்ட சின்ன வயசில வானத்த அண்ணாந்து பார்த்து இதுக்குப் பின்னால என்ன இருக்கும்?
"சூரியன் "
அதுக்குப் பின்னால என்ன இருக்கும் என்டு கேக்க எத்தனிக்கும் நேரம் சோத்தை வாயில வச்சு அடைச்சு
"இந்தா நிலாப் பாரு, அங்க பாட்டி வடை சுடுறா" என்டு சொல்லி திசை திருப்பி
திரும்பவும் அந்தப்பாட்டி விறகுக்கும் ,நெருப்புக்கும் எங்க போ.... "களுக்" அடுத்த கவளச் சோறுடன் தொண்டையில் கேள்வியும் சிக்கிக் கொண்டது.

இதேபோல் அப்பாவோட அப்பா -தாத்தா அப்புறம் கொள்ளு தாத்தா அவேட அப்பா என முடிவிலியாய் போய்க் கொண்டிருக்கின்ற இந்த அப்பன்களுக்கெல்லாம் அப்பன் யாராய் இருக்கும்?

கடவுளுக்கு ஒரே நேரத்தில எத்தனை குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளமுடியும்?எங்கட வாழ்க்கை சீரியல் மாதிரி அவர்ட TV ல ஓடுமா?எங்கட வீட்டு சீரியல் எத்தன மணிக்கு telecast ஆகும் ?சரஸ்வதிக்கு நாலு கை என்டா எப்படி saree blouse போடுவா போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு என்றுமே விடை காணாமல்,கற்பனைகளை அங்கேயே கழட்டிவிட்டு,school,படிப்பு,O/L,
A/L,college,internship,வேலை என்று அந்தச் சிறுமி செத்துச் சுண்ணாம்பாகிப் போகும் வேளையில்..........

இங்கே ஜேகே என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடி அடித்த பந்தொன்று பால்வீதியைக் கடந்து சூபி கிரகத்திலிருக்கும் சுப்பையா வீட்டின் கண்ணாடியைப் பதம் பார்த்திருக்கலாம்,அதை எடுக்கப்போகும் ஜேகே கொலை வெறியுடன் சுற்றும் சுப்பையாவைக் கண்டு நடுங்குகிறார்.இதைப் பார்த்த சுப்பையாவின் பேத்தி மேனகா,பந்தினை சுப்பையாவிற்கு தெரியாமல் இவரிடம் கொடுக்க "முன் தினம் பார்த்தேனே...பார்த்ததும் தோற்றேனே"என Harris Jeyaraj BGM உடன் காதல் அரும்புகிறது.மேனகா செல்லுமிடமெல்லாம்
பின் தொடர்கிறார்.அவர் மணி tution க்கு செல்கிறார் என்று தெரிந்து அங்கு போய் சேர்கிறார்.கவனம் சிதறுவதாக வேலாயுதம் சேரிடம் குட்டும் வாங்கிறார்,அப்புறம் என்ன அனுதாப அலைகள் மேலிட மேனகா "கண்ணும் கண்ணும் நோக்கியா எங்கப்பன் கிட்ட வந்து கேப்பியா" என்று சொல்ல காதல் கல்யாணம் இனிதாக நிறைவேறியது.December vacation க்கு மனைவியுடன் சபரிக்கிரகத்திற்குச் செல்கிறார்,அங்கு சில காலம் கழிந்த பின் தான் பெற்றஅனுபவங்களை ஒரு நூலாக வெளியிடும் நோக்கில் பூமி திரும்புகிறார்.பூமியில் தன் நாட்டுடைய போர்,அரசியல் ,விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளை update செய்து கொள்கிறார்.இந்த புத்தகத்தை எழுதும்போது அம்பியாகவும்(சிறுவன்)அந்நியனாகவும்
(வளர்ந்தவராக) இரு மனநிலைகளில் இதை எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.சிறுபிள்ளைத்தனமான அவருடைய கேள்விகளுக்கான விடைகளை யாரிடமும் கேட்காமல் தானே அதற்கான விடை தேடத்தலைப்பட்டு இந்த பிரபஞ்சம் முழுதும் தன் கற்பனைக் குதிரையை இரக்கமே இல்லாமல் ஓட வைத்திருக்கிறார்.இதுதான் இவரை சிறந்த எழுத்தாளராய் ஆக்கியிருக்க வேண்டும்.

இந்த கதை முழுக்க இழையோடிக் கொண்டிருக்கும் நக்கலும் நையாண்டியும் தான்,கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்லும் Hero.கந்தசாமியின்ட colloquial language-epic.(சில்லுப்படோணும்,சேட்டை கதை,விழல் கதை,அறளை பேந்துட்டுதா,கம்மாஸ் etc)
வடிவேலின்ட comedy scenes பார்ப்பது போல் ரயில் பயணம் முழுதும் தனியாக சிரித்துக் கொண்டே வந்தேன்.என்னைப் பார்த்தவர்கள் நான் பைத்தியம் அல்லது காதலில் திளைத்திருக்கிறேன் என ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.நகைச்சுவையுணர்வினை எழுத்துக்கள் மூலம் உணர்வது இதுவே முதல் தடவை.Hats off to your sense of humour.

சுமந்திரன்,கந்தசாமி,சோமரத்ன,
மிகிந்தர்கள்,புக்கை,சக்கை என பாத்திரப்படைப்புகள் நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் உள்ளன.நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மைச்சம்பவங்களையும் மனிதர்களையும் தான் ஞாபகப்படுத்தின.கந்தசாமிகூட ஒரு வகைல என் பெரியப்பா முறைதான் .இது இப்படி இருக்க கதிர்காமக்கந்தன் நிலை என்னாகுமோ தெரியவில்லை.

அன்றாடம் நாம் காணும் மனிதர்கள்,அரசியல்வாதிகள்,
உபகரணங்கள்,சாப்பாடு என எல்லாவற்றையும் இப்படி ஒரு கோணத்தில் பார்க்கமுடியுமா என்பது இன்னொரு ஆச்சரியம்.

அருந்ததியில எல்லாக் கலியாணங்களும் register ஆகுதல்.பரிசோதனை எலிகள் கடைசியில் எங்கள வேவு பார்க்க வந்தவை என்பதெல்லாம் வேற level.பிரகராதி ,விடுப்பு மீன்கள் உங்கள் கற்பனையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் .அவற்றின் விளக்கங்கள் அருமை.

எனக்கு இன்னுமொரு டவுட்டு வந்திச்சு.சுமந்திரன் மீண்டும் சபரிக் கிரகத்தில் ஜேகே ஆகப் பிறப்பெடுத்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டு,வாசகர்களை உருவாக்கி,வாகர்களினூடாக அந்த கேள்வியைக் கண்டுபிடிக்கும் ஒரு யுக்தியோ?அதற்கென உருவாக்கப்பட்ட கணணிகள் நாம்தானோ?

சுமந்திரன்,கந்தசாமியுடன் கண்ணுக்குத் தெரியாத கருந்துளையாக மூன்றாவதாக எங்களையும் கூட்டிச் சென்றமைக்கு நன்றி

ஒரு புத்தகத்தை வாசித்து அந்த எழுத்தாளருடைய ஏனைய படைப்புகளை வாசிப்பதைவிட.ஒரு எழுத்தாளரை அவர் பிறந்ததிலிருந்தே வாசிப்பது என்பது அலாதியான விஷயம்.நாம் பாக்கியசாலிகள்.

ஆனா கடைசிவரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்க என்ட விடை தெரியாத கேள்வி போல ,இந்தக் கேள்வி என்னவாயிருக்கும் என்டு எங்களையும் அந்த பெருச்சாளி போல முழி பிதுங்க வைத்துவிட்டீர்கள்.

"மிகச்சிறந்த கிழங்குரொட்டி கிடைக்கும் அபிராமி விலாஸ் அமைந்துள்ள இடம் எது?"

"தின்னவேலி"
(கேள்வி இதுவாயிருக்குமோ?நமக்கு சாப்பாடுதான் முக்கியம் அமைச்சரே)

௧ந்தசாமியும் கலக்சியும் -An enjoyable ride

-- கார்த்திகா முருகானந்தவேல்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக